Pages

21 August 2014

கதை திரைக்கதை வ....சனம் இயக்கம்




எப்படிப்பட்ட இயக்குனரின் படத்திலும் வெண்ணிற ஆடை மூர்த்தி தனித்து நிற்பார். ஆனால் டீஆர் படத்தில் அவராலும் கூட தப்பமுடியாது. டீஆர் படத்தில் எல்லோருமே டீஆரைப்போலவே விரலை காற்றில் ஆட்டி ஆட்டி முகத்தை அப்படி இப்படி திருப்பி அடித்தொண்டையில் வசனம் பேசிதான் நடிக்க வேண்டியிருக்கும். அவர்கள் சீரியஸாக நடித்தாலும் பார்க்கிற நமக்கு காமெடிக்கும் ஜாலிக்கும் குறைவிருக்காது. டிஆர் இப்போதெல்லாம் படமெடுப்பதில்லை.

அந்தக்குறையை போக்கும் வகையில் சமீபத்தில் ஒரு படம் திரைக்கு வந்திருக்கிறது. நியூவேவோ எதோ அந்த வகையில் வந்திருக்கும் அதிநவீன மெட்டா சினிமா இது என்று ஆளாளுக்கு அலப்பறையை கொடுக்க நானும் ஆவலுடன் வாயை ஆவென்று வைத்துக்கொண்டு படத்தை பார்த்தேன். அஞ்சானால் இது அலுப்பு மருந்தாகியிருக்கிறது போல!

படத்தின் நடித்திருக்கிற சகலரும் நடிகர் பார்த்திபனைப்போலவே நடிக்கிறார்கள். அவரைப்போலவே கஷ்டப்பட்டு பொழுதன்னைக்கும் ‘’வித்தியாசமாக’’ பேசுகிறார்கள். (டீ கேட்கும் போது கூட) பேசுகிறார்கள். பேசு…………….கிறார்கள். பே……சுகிறார்கள். பேசுகி…..றார்கள். படத்தின் பெயரை வசனம்,வசனம்,வசனம்,இயக்கம் என்று வைத்திருக்கலாம். அவ்வளவு வசனம். அதிலும் ‘’கொய்யா பழமில்ல இது கொய்த பழம்தான்’’ , வடையை கீழே போட்டு இந்தா உளுந்த வடை என்று சிரிக்கிறார்கள், அவர் பாணியிலேயே சொல்வதென்றால் காதில் ரத்தம் வர (பா)வ(ம்)சனங்கள்.

படத்தின் முதல்பாதி முழுக்க தமிழ்சினிமாவின் க்ளீஷே பற்றியே பேசிபேசிபேசி… இரண்டாம்பாதியில் அத்தனை க்ளிஷே விஷயங்களையும் வைத்து ஒரு கதை பண்ணுகிறார் படத்தில் வருகிற இயக்குநர். அந்த ரொம்ப சுமாரான கதையை…

விட்டா பேசிட்டே போறீங்க… படத்தில் ப்ளஸ்பாய்ண்டே இல்லையா?

இருக்கிறது. நிறையவே. கச்சிதமான பாத்திரங்கள், சுருளியாக வருகிற அந்த பையன், கண்களில் பிராந்தியும் குரலில் போதையுமாக ஹீரோயின்கள், ஆங்காங்கே பளிச்சிடும் ப்ரைட்டான ஐடியாக்கள், தமிழ்சினிமாவின் மீது வைக்கிற தைரியமான விமர்சனங்கள், கொரியன் ஜாப்பனீஸிலிருந்து சுடாத ஒரிஜினல் கதை, காற்றில் கதை இருக்கு என அதிரும் இசை என இருக்கு… பாஸிட்டிவ் நிறைய இருக்கு. ஆனால் 120 ரூப்பீஸ் கொடுத்து படம் பார்ப்பது என்பது எப்படி சிறப்பா படம் எடுக்கணும்னு அட்வைஸ் கேட்கறதுக்கு இல்லைதானுங்களேஜி?

படம் பார்த்துக்கொண்டிருந்த போது தியேட்டரின் ஒரு மூலையில் இருந்த குறிப்பிட்ட சிலர் மட்டும் ஜோக்குகளுக்கு சிரிக்கிறார்கள். வசனங்களுக்கு கை தட்டுகிறார்கள். மற்றவர்கள் அதை திரும்பி திரும்பி காரணம் புரியாமல் முழிக்கிறார்கள். இது சினிமாகாரர்களுக்கும் விமர்சகர்களுக்குமான படம் என்பது மட்டும் புரிந்தது. அவ்வகையில் இப்படம் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கும் கலாம்.. பிடிக்.

(எழுதியதை திருப்பி வாசிக்க ஆரம்பித்தால் அய்யோ படம் பார்த்த எனக்கே அந்த வித்யாச வசன வியாதி தொத்திக்கிச்சிபோல… டீஆரின் வீராசாமியை பார்த்து பழைய நிலைக்கு பம்ருதி ம்டுண்வே)