Pages

22 August 2014

உல்லாச கப்பல் பயணம்




உல்லாசம் என்கிற சொல்லுக்கான பொருளையே தினத்தந்திகாரர்கள் மாற்றிவைத்திருக்கிறார்கள். அதனால் உல்லாசம் என்கிற சொல்லை வாசித்ததுமே உள்ளுக்கு ஒரு கள்ளக்காதல்கதை இயல்பாகவே ஓட ஆரம்பிக்கிறது இல்லையா? ஆனால் அது குழந்தைகளுக்கான சொல், அச்சொல்லை குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூல்களிலும் பூந்தளிர் மாதிரியான இடங்களிலும் அடிக்கடி வாசிக்க முடியும். காமிக்ஸ் ரசிகரான கிங்விஸ்வா தான் பதிப்பித்திருக்கிற முதல் நூலுக்கு ‘’உல்லாச கப்பல் பயணம்’’ என்று வைக்காமல் இருந்திருந்தால்தான் ஆச்சர்யம்.

சிங்கப்பூரை சேர்ந்த கிருத்திகா எழுதியிருக்கிற ‘பயண நாவல்’ இது. பயண அனுபவ கட்டுரையாகவே எழுதியிருக்கலாம். ஆனால் ஏனோ அதை நாவலாக எழுதியிருக்கிறார் கிருத்திகா. தமிழில் பயணக்கட்டுரைகள் மிகவும் குறைவு. ஆனாலும் படிக்கும் போது நமக்கு நாவல் படிக்கிற உணர்வே இல்லை பயணக்கட்டுரை படிப்பதுபோலவேதான் இருந்தது இந்த நாவலின் சிறப்பு.

மன்மதன் அம்பு படத்தில் வருமே உல்லாச கப்பல் என்கிற CRUISE.. அதுதான் இந்த நூலின் பின்னணி. சிங்கப்பூரிலிருந்து கிளம்பும் ஒரு பயணக்கப்பலில் பயணிக்கும் சிலருடைய நேரடி அனுபவஙளின் தொகுப்பு இது. மையமாக ஒரு கதையும் போகிறது. உண்மையில் கதையில் இல்லாத சுவாரஸ்யம் நூல் முழுக்க தொகுக்கப்படும் கப்பல் குறித்த தகவல்களில் கிடைக்கிறது. நிறைய படங்களும் உண்டு. கப்பலுக்குள்ளேயே தியேட்டர் ,நீச்சல் குளம், மால், விளையாட்டு அரங்கம், மைதானம் என ஐந்துநாட்களும் அவர் அனுபவித்த கண்ட கேட்ட விஷயங்களை ஒன்று விடாமல்… ஐ ரீபிட் ஒன்றுவிடாமல் நேரடியாக தொகுத்திருக்கிறார். (எதையுமே விட்டுவிடக்கூடாது என்கிற வேட்கையோடு உழைத்திருப்பதை இந்நூலை வாசிக்கும்போதே உணர முடியும்)

ஒருவேளை உங்களிடம் நிறைய பணமிருந்து (எப்படியும் ஒரு குடும்பத்திற்கு இரண்டு முதல் மூன்று லட்சம் ஆகுமாம்!) நீங்களும் இதுபோல போகவிரும்பினால் கையில் இந்த நூலை வைத்துக்கொள்வது நல்லது. ஒரு கைடு போல உபயோகப்படும். இதுபோன்ற ஒரு காஸ்ட்லி பயணத்திற்கு தேவையான முன்னேற்பாடுகள், அங்கே செய்ய வேண்டியவை செய்யக்கூடாதவை ஜாக்கிரதையாக இருக்க வேண்டியவை என நிறைய தகவல்கள் உண்டு. அல்லது வாழ்க்கையில் எப்போதும் போகவே வாய்ப்பில்லையென்றாலும் படித்து மகிழலாம். நிறைய கலர் படங்கள் உண்டு.

இந்நூலை எழுதியிருக்கும் கிருத்திகாவுக்கு மொழி மிகவும் எளிமையாக கைகூடி வந்திருக்கிறது. இந்த மொழி குழந்தைகளுக்கானது. நூல் முழுக்கவே ஆங்கிலக்கலப்பின்றி தமிழிலேயே எல்லா விஷயங்களை எழுதியிருக்கிறார் என்பது முக்கியமானது. தமிழில் எழுதிய சில ஆங்கில சொற்களுக்கான பட்டியலையும் இறுதியில் இணைத்திருக்கிறார்கள்.

இதுவே படிக்க ஜாலியாக இருந்தாலும் இந்த பின்னணியில் ஒரு அற்புதமான க்ரைம் த்ரில்லர் எழுதியிருந்தால் அப்படியே காமிக்ஸ் நூலாகவே மாற்றியிருக்கலாம். அல்லது வளர்ந்த சிறார்களுக்கான (TEENS) கதையாகக்கூட எழுதியிருக்கலாம்.

நூல் – உல்லாச கப்பல் பயணம்
கிருத்திகா
தமிழ்காமிக்ஸ் உலகம் பதிப்பகம்
விலை – 200