Pages

22 January 2015

சென்னை புத்தகக்கண்காட்சி 2015





பெருமாள் முருகன்தான் இந்த புத்தக கண்காட்சியின் சூப்பர் ஸ்டார். அவரைதான் எல்லா கண்களும் தேடின. வாசக கண்மணிகள் அத்தனை பேரும் இலக்கியவெறியோடு காலச்சுவடு ஸ்டாலுக்கே அட்ரஸ்கேட்டு அலைந்தனர். மூச்சுவாங்க கடைவாசலில் நின்று ‘’மாதொருபாகம் இருக்கா’’. ‘’மாதுளைபாகன் இருக்கா’’ ‘’மதுரையின்பாகன்’’ ‘’மாதிரைபேகன்’’ ‘’மாத்ரூபாகம்’’ என விதவிதமாக கேட்டு அது இல்லை என்று தெரிந்து சோகத்தில் அங்கிருந்து துவண்ட நெஞ்சோடு கிளம்பி லிச்சி ஜூஸ் குடித்து மனசாந்தியடைந்தனர். தமிழ் இலக்கியம் விற்கிற கடைகளிலும் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. ‘’ஏன்ங்க இந்த உயிர்மை காலச்சுவடு பாரதி புத்தகாலயம், அடையாளம், என்சிபிஎச்சு இவனுங்க எல்லாரும் ஒரே ஆளுங்கதான்ங்க நடத்துறான், பேர் மட்டும் வேற வேற வச்சு ஏமாத்துறானுங்க’’ என்று பார்க்கிங்கில் ஒரு பெரியவர் பேசிக்கொண்டிருக்க, அதை கேட்டுக்கொண்டிருந்தவர் ‘’சத்தியமான உண்மைங்க, ஒரே முதலாளிதான், நம்மளோட ஒட்டாம ஒரு கும்பலாவே திரியறானுங்க கவனிச்சிங்களா, அவனுங்க ஆளுக்கு ஒரு பிரச்சனைனதும் என்னமோ ஓவரா துள்றானுங்க இதுவே நமக்கு ஒன்னுனா வருவானுங்களா’’ என்றார். நான் நகர்ந்துவிட்டேன். அவர் சொன்னதில் ஒரு உண்மை இருப்பதாக தோன்றியது.

***

பத்து சதவீதம்தான் புக்ஃபேரில் டிஸ்கவுன்ட் கொடுக்க வேண்டும் என ஒரு விதி சென்ற ஆண்டுவரை இருந்தது என்று நினைக்கிறேன். அதை இம்முறை தளர்த்தியிருக்கிறார்களா தெரியவில்லை. எல்லா கடைகளிலும் முப்பது சதவீதம், ஐம்பது என்றெல்லாம் விற்றுத்தள்ளினர். காலச்சுவடு கடையில் சுந்தர ராமசாமியின் கடைசி நாவல் சீண்டுவாரின்றி 60சதவீத கழிவில் கிடந்ததை பார்த்தேன். ஆனானப்பட்ட சுராவுக்கே இதான் நிலைமைனா என்று நினைத்துக்கொண்டேன். காலச்சுவடு கடையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் நூல் வாங்கினால் 500ரூபாய்க்கு இலவசம் என சில பழைய கவிதைதொகுப்புகளை தள்ளிவிட்டுக்கொண்டிருந்தனர். ஒரு வாசகர் அந்த கவிதை தொகுப்புகளை எண்ணி பார்த்துவிட்டு, சார் இதை கூட்டினா 500 வரலை 350தான் வருது என்றார். காலச்சுவடு கடைக்காரர் சில விநாடிகள் யோசித்துவிட்டு "அப்படினா அந்த கவிதை தொகுப்புல எல்லாத்துலயும் ரெண்டு ரெண்டு எடுத்துக்கோங்க'' என்றார். வாசகர் பயந்துபோய் சுதாரித்துக்கொண்டு கிளம்பிவிட்டார். எல்லா கடைகளிலும் இதுபோல நூற்றாண்டுகளாக விற்காத புத்தகங்களையெல்லாம் நிறைய தள்ளுபடியில் விற்றனர்.

***

புத்தக கண்காட்சியின் முதல் நாள் எதுவுமே ஏற்பாடாகியிருக்கவில்லை. எங்கு பார்த்தாலும் சுத்தியலும் ரம்பமுமாக கரக்கரக் டொக்டொக் என்று மரத்தை அறுத்து ஆணி அடித்துக்கொண்டிருந்தார்கள். பாதைகளில் இரும்பு சட்டகங்கள் கிடக்க, அப்போதுதான் மேடை அமைப்பு, கடை அமைப்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் முதல் இரண்டு நாட்கள் வீணடிக்கப்பட்டதாகவே கருதலாம். விசாரித்ததில் புத்தகக் காட்சி நடந்த ‘’ஒய்எம்சிஏ மைதானம்’’ பத்து நாட்களுக்கு முன்புதான் ஏற்பாட்டளர் வசம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிந்தது. பத்துநாட்களுக்குள் ஏற்பாடு பண்ண முடியாது என எப்போதும் வேலைபார்க்கும் ரெகுலர் கான்ட்ராக்டர் கழண்டுகொள்ள, புது கான்ட்ராக்டரை தேடிபிடித்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். என்ன காரணம் என விசாரித்தால், ஆரம்பத்திலேயே ஒய்எம்சிஏ நிர்வாகம் மைதானம் தர மறுத்திருக்கிறது. காரணம் சென்ற ஆண்டை விட கூடுதல் தொகையை வாடகையாக கேட்டதாக சொல்கிறார்கள். எவ்வளவு தெரியுமா? சென்ற ஆண்டு கட்டணம் 10லட்சம்!. இந்த ஆண்டு ஒரு கோடி என்கிறார்கள். பபாஸிகாரர்கள் ஆடிப்போய் என்ன செய்வதென்று தெரியாமல் மந்திரிமார்களிடம் பேசி ஒருவழியாக 25லட்சங்களுக்கு பேசி முடித்திருக்கிறார்கள். கடைசியில் ஏற்பாடுகள் தாமதமாகி வாசகர்களை வருத்ததில் ஆழ்த்தியது. பபாஸி ஆள் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தபோது ‘’நமக்குனு சொந்தமா ஒரு இடம் இருந்தா இந்த பிரச்சனைலாம் இருக்காதுங்க, ஆனா அதுக்காகதான் கவர்மென்ட் கிட்ட பேசிகிட்டிருக்கோம்’’ என்றார். அரசாங்கத்திடம் சொந்த இடம் கேட்டால் செங்கல்பட்டு தாண்டி சென்னைக்கு மிக அருகில்தான் இனி நிலம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது! அங்குதான் இன்னமும் நிலம் கணிசமாக மிச்சமிருக்கிறது. மக்கள் முதல்வர் திரும்பி வந்தால் நிச்சயம் நிலம் கிடைக்கும்.

****

புத்தகக் கண்காட்சியில் டீயும் காப்பியும் எங்கும் கிடைத்தது ஆச்சர்யம். எங்கு பார்த்தாலும் பச்சையும் ஆரஞ்சுமாக இளைஞர்கள் கையில் டீகேனுடன் ஸ்டால்களுக்கு நடுவே அங்கிமிங்கும் சுற்றி சுற்றி டீ விற்றனர். இது ஒரு நல்ல ஏற்பாடாகவே தோன்றியது. காரணம் முந்தைய ஆண்டுகளில் டீ குடிக்க வேண்டும் என்று நினைத்தால் வெளியே கேன்டீனுக்கு சென்று டோக்கன் வாங்கி பில்லுப்போட்டு கூட்டத்தில் முண்டியடித்து ஒருமணிநேரத்தை வீணாக்க வேண்டியிருக்கும். இந்த முறை அந்த பிரச்சனையை ஜஸ்ட் லைக் தட் சரிசெய்திருப்பதற்காகவே அந்த கேன்டீன் காரருக்கு கோடானு கோடி நன்றிகள். நல்லதிலும் கெட்டது இருக்கும்தானே புத்தகக்காட்சியின் எல்லா மூலைகளிலும் டீக்கப்புகள்! ஆனால் அந்த குப்பைகளையும் வேறொரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இளைஞர்கள் அவ்வப்போது சுத்தமாக்கி கவனம் ஈர்த்தனர். புக்கெல்லாம் வாங்கி படிக்கிற சமூகம் குப்பையை குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என்கிற அடிப்படை நாகரீகத்தை எந்த நூற்றாண்டில் கற்றுக்கொள்ள போகிறதோ? லிச்சி ஜூஸ் கடைக்காரர் இரண்டு கடை போட்டிருக்கிறார். வர்க்கி கடைக்காரரும். இரட்டிப்பு லாபம்தான் போல!

****

சென்ற ஆண்டைப்போலவே புத்தக கண்காட்சியில் ஒதுக்குப்புறமாக சிற்றரங்கு என்று ஒரு இடத்தை ஏற்பாடு பண்ணி அதை தமிழ் இலக்கியவாதிகளுக்கென டெடிகேட் செய்திருந்தார்கள். அங்கே தினமும் ஒரு எழுத்தாளர் பேச கவிஞர் மனுஷ்யபுத்திரன் ஏற்பாடு செய்திருந்தார். முதல்நாள் அ.மார்க்ஸ் வந்திருந்தார். பார்வையாளர்க்கு முன்பே அவர் வந்து தன்னந்தனியாக தாடைக்கு முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்த காட்சி கிரேக்க ரோமானிய சிற்பங்களை போலிருந்தது. ஆரம்பத்தில் பத்துபேரோடு தொடங்கி கூட்டம் முடியும் போது ஐம்பது பேரோடு முடிந்ததே அவர் எப்படி பேசினார் என்பதற்கு சாட்சி. இங்கே நடந்த மற்ற கூட்டங்களில் நேர சிக்கலால் கலந்துகொள்ள முடியாமல் போனதில் வருத்தமே. ஆனால் மெயின் அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கும் அதன் தீவிர செயல்பாட்டிற்கும் ஒரு சிங்கிள் பர்சென்ட் கூட தொடர்பில்லாதவர்கள் பேசிக்கொண்டிருக்க மூத்திர சந்தில் அரங்கு அமைத்துக்கொடுத்து முக்கிய எழுத்தாளர்களை பேசவைத்த பபாஸியை எவ்வளவு வேண்டுமானாலும் அடித்து துவைக்கலாம். போலவே கண்காட்ச்சிக்கு ஓரமாக இருட்டான பகுதியில் ஒரு சந்துகிடைத்தால் அங்கே ஆயிரக்கணக்கான ஆண்கள் உச்சாபோய் சாதா சந்தினை உவ்வேக் சந்தாக மாற்றுகிற நம்மையும் நாலு மிதி மிதிக்கலாம். இன்று பயோடாய்லட், வாட்டர்லெஸ் டாய்லெட், மூவபிள் டாய்லெட், மைக்ரோப் டாய்லெட் என வெரைட்டி வெரைட்டியாக நடமாடும் டாய்லெட்கள் வந்துவிட்டபோதும் இன்னமும் பழைய பாணியில் தண்ணீர் வசதி சரிவர இல்லாமல் ஒரு பெட்ரமாக்ஸ் லைட் கூட இல்லாமல் கும்மிருட்டில் பாத்ரூம் கட்டிவிட்டால் யார்தான் அங்க போவான்! ஒரே கன்ஃப்யூசனாருக்கு. பத்துலட்சம் வாசகர்கள் வருகிற ஒரு திருவிழாவுக்கு ஒரே ஒரு டாய்லெட் என்பது… இந்தவாட்டியாவது இதைபற்றி எழுதக்கூடாது என்று நினைத்து.. எழுதிவிட்டேன். இந்த சிற்றரங்குக்கு செல்லும் வழி காலச்சுவடு மற்றும் கிழக்கு ஸ்டால்களுக்கு நடுவில் அமைக்கப்பட்டது என்ன மாதிரி டிசைன் என்பது தெரியவில்லை.

****

நம்ம ஆட்டோ என்கிற புது முயற்சியை முன்னெடுத்த நிறுவனம் நினைவிருக்கிறதா? அந்த நிறுவனம் ‘’பயணி’’, ‘’சின்ன நதி’’ என்று இரண்டு புதிய இதழ்களை கொண்டுவந்திருக்கிறார்கள். பயணி தமிழில் வந்திருக்கும் முதல் ட்ரவலாக் இதழ் இது. கலரில் நல்ல அச்சில் தரமான காகிதத்தில் ஏகப்பட்ட போட்டோக்களுடன் பார்க்க வெளிநாட்டு இதழ் போல வளவளப்பாக இருந்தது. வாசிக்கவும் நிறைய பயணக்கட்டுரைகள் இருந்தது. கூடவே வைகறை என்கிற இணைய ரேடியோவையும் தொடங்கியிருக்கிறார்கள். இதற்காக என்னை ஒரு பேட்டி எடுத்தார்கள். நிறைய கேள்விகேட்டார்கள், எழுத்தாளனை போலவே பதில் சொன்னேன். சின்ன நதி இதழ் ஒரு பொக்கிஷம். அப்படியே பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன். எழுத்தாளர் யூமா வாசுகிதான் ஆசிரியராம். இப்படியெல்லாம் நான் சின்னப்பையனாக இருக்கும்போது சிறுவர் இதழ் வந்திருந்தால் பிக்பாக்கெட் அடித்தாவது வாங்கியிருப்பேன். அவ்வளவு சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார்கள். இப்போதைக்கு கடைகளில் கிடைக்காது. புத்தகக்காட்சியில் வாங்கியிருந்தால் லக்குதான். கவலைவேண்டாம் விரைவில் வரும். அப்போது மிஸ்பண்ணிடாதீங்க..

****

சென்ற ஆண்டு கடைக்குள்ளேயே மரம் வைத்து அசத்திய இயல்வகை கடையில் இம்முறை விதைகள் விற்றுக்கொண்டிருந்தனர். என்னென்னவோ விதைகள். இதையெல்லாம் போட்டால் வளருமா என்று விசாரித்தேன் ஆனால் எதையும் வாங்கவில்லை. சென்னையில் வாடகைக்கு குடியிறுப்பவன் இதையெல்லாம் வாங்கிச்சென்று தன் தலையில்தான் வைத்துதான் வளர்க்க வேண்டும். ஆனாலும் அவர்களுடைய முயற்சி அருமையானது. வீட்டிலேயே சின்னதாக தோட்டம் வைக்க நினைக்கிற ஆர்கானிக்விரும்பிகளுக்கு உதவியாக இருந்திருக்கும்.

****

மருத்துவர் சிவராமனை பூவுலகின் நண்பர்கள் கடையில் சந்தித்தேன். மனிதர் நொடிக்கு நான்குபேர் வீதம் கையொப்பமிட்டுக்கொண்டிருக்கிறார். அனேகமாக இது மனுஷ்யபுத்திரனின் நொடிக்கு மூன்றுபேர் ஆட்டோகிராப் சாதனையின் முறியடிப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். மருத்துவராக இருந்தாலே அவரை நேரில் பார்த்தால் டாக்டர் லேசா முட்டி வலிக்குறாப்ல இருக்கு அதுக்கு என்ன பண்ணனும் என்று கேட்க தோன்றுமோ என்னமோ, ஆட்டோகிராபோடு இலவசமாக ஆலோசனையும் கொடுத்துக்கொண்டிருந்தார். எனக்குமே அவரை பார்த்ததும் இந்த கணுக்கால்ல லேசா ஒரு வலிஎன்று எதையோ கேக்கணும்போலிருந்தது. வாயை அடக்கிக்கொண்டேன். இந்த ஆண்டும் அவருடைய உணவு நூல்கள் சக்கைப்போடு போட்டதை கண்குளிர காண முடிந்தது. இதே மாதிரி காட்சிகளை அச்சு அசல் மாறாமல் போன முறையும் பார்த்த நினைவு. இதே வார்த்தைகளையும் எழுதிய நினைவு. சிவராமன் ஒருநாள்தான் இதை செய்துகொண்டிருந்தார். புத்தக காட்சியின் அத்தனை நாளிலும் விரல் தேய ஆட்டோகிராப் போட்டவர் மனுஷ்யபுத்திரன்தான். எப்படியும் வந்திருந்த பத்துலட்சம் வாசகர்களில் இரண்டு லட்சம் பேர் அவரிடம் நோட்டு புத்தகம், துண்டு சீட்டு, பஸ் டிக்கட் முதலான வஸ்துகளில் விதவிதமாக ஆட்டோகிராப் வாங்கினர். சளைக்காமல் போட்டுக்கொடுக்கிறார். ஒரு பையன் அவருக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டு சார் உங்க கவிதைனா எனக்கு உயிர்சார் உங்க கையை பிடிச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு, நைட்டெல்லாம் உங்களோட ஒரு கவிதைய படிச்சி அழுதுகிட்டிருந்திருக்கேன் என்றெல்லாம் கதறிக்கொண்டிருந்தான். சிலிர்ப்பாக இருந்தது. ஒரு எழுத்தாளனுக்கு இதைவிட வேற என்ன வேணும்!

****

இந்த முறை என்னுடைய நூலும் வந்திருப்பதால் எனக்கு இது ரொம்ப ஸ்பெஷலான புத்தக காட்சி. அந்த நூலை பலரும் வாங்கி வந்து என்னிடம் காட்டி கையெழுத்தெல்லாம் வாங்கி என்னை திக்குமுக்காட வைத்தார்கள். ஒருநாள் நானும் சில நண்பர்களுமாக கிளம்பி வெளியே போய்கொண்டிருந்த போது இரண்டு கல்லூரி மாணவிகள் மூச்சிரைக்க ஓடிவந்து ‘’சார் நான் உங்க பெரிய ஃபேன், உங்க புக்ல கையெழுத்து வாங்கதான் தேடிக்கிட்டிருந்தோம்’’ என்ற போது நமக்கே தெரியாமல் யாரோ பெரிய சதி செய்கிறார்கள் என நினைத்துக்கொண்டே கையெழுத்து போட்டு அனுப்பிவைத்தேன். படிக்கும்போது நம்ப முடியாமலிருக்கிற உங்களைப்போலவே நடந்தபோது என்னாலும் நம்பமுடியவில்லைதான்!

****

வாசலில் இருக்கிற பிரமாண்ட அரங்கு ஃபேஷன் ஷோ மேடைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதில் தினமும் நிறையபேர் பேசினார்கள். முதல்நாளில் நான் உள்ளே நுழைந்த நேரம் அரங்கில் உரையாற்றிக்கொண்டிருந்தவர் பெருங்குரலில் முழங்கிக்கொண்டிருந்தார். ‘’நம்முடைய ஒரு எதிரிதான் வீழ்ந்திருக்கிறான்… இன்னொரு எதிரி இந்தியா, இந்தியாவையும் நாம் தோற்கடிக்க வேண்டும்’’ என்று சொல்லிக்கொண்டிருந்தார். போஸ்டர்கள் வழி பழ.நெடுமாறனின் நூல் வெளியீடு என்பது புரிந்தது. இதே அரங்கில் ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமாரின் பேச்சை முழுவதுமாக ஒருமாலையில் கேட்டு ரசிக்க முடிந்தது. பெருமாள் முருகன் நூல் எரிப்பு விவகாரம் எல்லோர்க்கும் தெரிந்திருக்கும். அந்த விஷயத்தை பற்றி மிகுந்த கோபத்தோடு பேசினார். அன்றைய தினம்தான் கண்காட்சி அரங்கின் வாசலில் இருந்த மைதானத்தில் பெருமாள் முருகனுக்கு ஆதரவாக சிலர் போராட்டம் நடத்தி போலீஸாரால் வெளியேற்றப்பட்டனர். அதே இடத்தில் அதே விஷயத்தை அத்தனை நாசூக்காக வாழைப்பழத்தில் கடப்பாரையை சொருகுவது போல பேசினார் பாரதிகிருஷ்ணகுமார். மற்றபடி இந்த ஆண்டும் அந்த மேடையில் நூற்றுக்கணக்கான நூல்களை பல சினிமா பிரபலங்களை வைத்து ஒரே நாளில் எட்டு மணிநேரம் இடைவிடாமல் வெளியிட்டு அசத்தியது மணிமேகலை பிரசுரம். கடைசிநாளில் இருபது கவிஞர்களின் கவிதை வாசிப்பு கூட நடந்தது.

****

ஐப்பானிய எழுத்தாளர் ஒருவருடைய மொழிபெயர்ப்பு நூல்கள் கடை ஒன்றை கண்டேன். சென்ற ஆண்டும் இவர் சென்னை புக வில் கலந்துகொண்டிருக்கிறார். பெயர் ரியுவா ஒகாவா! இதுவரை 1800 நூல்களை எழுதியிருக்கிறார். ஒரே வருடத்தில் எத்தனையோ புத்தகங்கள் எழுதி கின்னஸ் சாதனைகூட படைத்திருக்கிறார். 80களில் ஜப்பானில் ஏதோ வேலை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு முப்பது வயதில் ஞானம் வந்து சுயமுன்னேற்ற புத்தகங்கள் எழுத ஆரம்பித்துவிட்டாராம். இப்போது ஊர் ஊராக போய் உரையாற்றிக்கொண்டிருக்கிறார் போல! மகிழ்ச்சி அறிவியல் என்கிற தலைப்பில் நிறைய எழுதியிருக்கிறார். தமிழில் இப்படி பேய்மாதிரி விறுவிறுவென எண்ணற்ற நூல்களை எழுதுகிற எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்றால் மூத்த எழுத்தாளர் பா.ராகவனை கைநீட்டுவேன். அவர் ஒரே நாளில் ஒரு நூற்றிருபது பக்க நூலை எழுதியவர்!. அவருக்கு இணையான இன்னொரு அதிவேக தமிழ் எழுத்தாளர் சொக்கன். அவரும் ஒரே ஆண்டில் பத்து இருபது நூல்களை எழுதி தள்ளியவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஜப்பான் காரர் கடையில் எதுவும் வாங்கவில்லை. ஆனாலும் கடைக்கார ஜப்பானியர் புன்னகையோடு தமிழில் ''திரும்பி வந்துடுங்க… நூல் வாங்கிடுங்க'' என்றார். தமிழ் கத்துகிட்டார் போல! அவரிடம் உங்களுக்கு ''ஜெயமோகனை தெரியுமா'' என்று கேட்டேன், அவர் இல்லையே என்றார். ''உங்க ஆள் ஒகாவாவோட சமகால போட்டியாளர் ஜெயமோகன்தான். அவருக்கும் உங்காள் மாதிரியே முப்பது வயசுல ஞானம் வந்துடுச்சு.. அனேகமா அடுத்த வருஷம் உங்காளோட 1800புக் சாதனைய முறியடிச்சிடுவார்'' என்றேன். அவருக்கு என்ன புரிந்ததோ "அரிகாடோ'' என்றார்.

****

இந்த முறை கடைகள் ஏதோ திட்டமிட்டு அமைக்கப்பட்டது போல, இந்து நூல்களின் கடைகளுக்கு நேர் எதிர்பக்கமாக இஸ்லாமிய நூல்கள் விற்கிற கடைகள். விகடன் ஸ்டாலுக்கு பக்கத்திலேயே குமுதம் ஸ்டால் என போட்டியாளர்களை அருகே அருகே வைத்து ரசித்திருக்கிறது பபாஸி! ஆனால் எங்கும் எந்த அசம்பாவிதங்களும் நடக்காதது புதுமைபித்தன் பண்ணின புண்ணியமாகதான் இருக்க வேண்டும்.

****