Pages

01 April 2015

அஞ்சுமணி க்ளப்



ராபின் ஷர்மா, தன்னம்பிக்கை நூல்கள் எழுதுகிற ஆங்கில எழுத்தாளர். ஆள் பார்க்க மொழுக் என்று மொட்டையாக ஜெட்லியின் சித்தப்பா பையன் போலவே இருப்பார். இவர் ஒரு கார்பரேட் புத்தர். அவருடைய ‘’WHO WILL CRY WHEN YOU DIE”” மற்றும் ‘”THE MONK WHO SOLD HIS FERRARI” என்கிற இரண்டு நூல்களை சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்திருக்கிறேன். மிகவும் சுவாரஸ்யமாக எழுதக்கூடியவர். ஊக்கம் தரக்கூடிய விஷயங்களை எளிமையான ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்.

அவர்தான் இந்த ‘’ஃபைவ் ஏஎம் க்ளப்’’ (5AM) க்ளப்ஐ சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியிருக்கிறார். இந்த ஐந்து மணிக்ளப்பில் யார்வேண்டுமானாலும் இலவசமாக உறுப்பினராகலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐந்து மணிக்கு எழுந்திருப்பது மட்டும்தான். இதைத் தொடர்ந்து 66 நாட்களுக்கு செய்ய வேண்டும்.

விடியற்காலை ஐந்து மணியிலிருந்து எட்டுமணிவரை ஒருநாளின் மிகமுக்கியமான காலம் என்கிறார் ராபின்ஷர்மா. அந்த நேரத்தை புதிதாக எதையாவது கற்றுக்கொள்ளவும், உடல் மற்றும் மனது இரண்டையும் பயிற்றுவிக்கவும் அதற்கான பயிற்சிகளுக்கு உட்படுத்தவும் ஏற்றதாக இருக்கும் என்கிறார். காரணம் அந்த நேரத்தில் புறத்தொந்தரவுகள் அதிகமிருக்காது. நாள் முழுக்க வெளி உலகில் நாம் செய்யவிருக்கிற சமருக்கான பயிற்சியை இந்த ஒருமணிநேரத்தில் பெறமுடியுமாம்! எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து விடாமல் 66 நாட்களுக்கு செய்ய ஆரம்பித்தால் நம்முடைய உடலும் மனமும் அதை பழக்கமாக்கிக்கொள்ளும் என்கிறார்.

இதை முயன்று பார்க்க முடிவெடுத்தபோது ஐந்து மணிக்கு எழுந்து என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்விதான் முதலில் வந்தது. ஆனாலும் முயற்சி செய்து பார்த்தேன். இப்போது நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஐந்துமணியானால் தானாகவே விழிப்பு வந்துவிடுகிறது. ஆறுமணிக்கு மேல்தான் மாரத்தான் பயிற்சி என்பதால், ஐந்திலிருந்து ஆறு மணிவரை நூல்கள் படிக்க, திரைப்படங்கள் பார்க்க, உடற்பயிற்சிக்கு, இந்தி கற்றுக்கொள்ள என ஒதுக்க முடிகிறது. ஐந்து மணிக்கே எழுந்துவிடுவதால் இரவு பத்து பதினோரு மணிக்கெல்லாம் டணாலென்று உறக்கம் வந்துவிடுகிறது. நாள் முழுக்க செய்யப்போகிற விஷயங்களை திட்டமிட முடிகிறது.

இந்த ஐந்து மணி பரிசோதனையை தொடங்கிய முதல் பத்து நாட்கள் கடுமையான தலைவலி, பகலிலேயே தூங்கி தூங்கி விழுவது, உடல் சோர்வு, அஜீரணம், இதை பரிந்துரைத்தவன் மேல் கொலைவெறி முதலான பக்கவிளைவுகள் இருக்கவே செய்தன. காரணம் ஆனால் பதினோராவது நாளிலிருந்து இது எதுவுமே இல்லை. இப்போது உடல் ஐந்து மணிக்கு பழகிவிட்டது. காலையில் எந்திரிக்க விடாமல் நம்மை தடுக்கும் அக-சைத்தான்களை வெல்வதுதான் மிகவும் கடினம். இதை படுக்கைப்போர் என்கிறார் ராபின். ஆனால் படுக்கைப்போருக்கு தமிழ் சினிமா பாடலாசிரியர்கள் வேறொரு அர்த்தம் கொடுத்து பல ஆண்டுகளாகவிட்டது. நிறைய நண்பர்களுக்கு இந்த வீடியோவை அனுப்பியிருக்கிறேன். பலரும் பார்த்த மாத்திரத்தில் இதை முயன்று பார்க்க ஆரம்பத்திருக்கிறார்கள்.

எதற்குமே நேரமில்லை என்று எப்போதும் புலம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஐந்துமணி கிளப் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ராபின் ஷர்மாவின் ஐந்துமணி கிளப் பற்றி அவர் பேசியிருக்கிற வீடியோ. இதில் எப்படி ஐந்துமணிக்கு எழுந்திருப்பது அதன் பயன்கள் என்ன என்பதை பற்றியெல்லாம் முழுமையாக பேசியிருக்கிறார்.





****