Pages

23 September 2008

விஜயகாந்துனா காமெடிதானா..... அவரை பற்றிய ஒரு சீரியஸ் பதிவு (உங்கள் கண்ணீருக்கு கம்பெனி பொறுப்பல்ல)

விஜயகாந்த் தற்காலத்தில் வளர்ந்துவரும் ஒரு மாபெரும் அரசியல் தலைவர் , சமீபத்தில் வடிவேலுகூட, வளர்ந்து வரும் தானே தலைவனின் புகழ் மீது ஆற்றாமை கொண்டு அவர் மீது அவதூறு பரப்பி அவரது அழியா புகழை அழிக்க நினைப்பது கண்டு மனம் நொந்து இன்று காலைநான் வெளியிட்ட விஜயகாந்த் v/s வடிவேலு பதிவிற்கு ஒரு நல்ல மாற்றத்திற்காக ஏங்கும் நடுநிலை மக்களான நீங்கள் தந்த ஆதரவை தொடர்ந்து.................நேற்றய பதிவில் ரஜினிக்காக ஒரு திரைக்கதை அமைத்து அப்படம் பப்படம் ஆனது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் அதைத்தொடர்ந்து , இன்று மக்களின் பேராதரவுடன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்கபாட்டி சுட்ட வடைகதையிலிருந்து புரட்சிகலைஞர் விஜயகாந்திற்காக அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் சேஸிங்குடன் ஒரு ஆக்சன் ஸ்டோரி : ( தீவிரவாதிகள் மற்றும் பஞ்சாயத்து இல்லாமலா)
(காக்கையாக விஜயகாந்த் , பாட்டியாக லட்சுமி மற்றும் நரியாக வல்லரசு வாசிம்கான் )ஊரின் மிகப்பெரிய கோடீஸ்வரியான லட்சுமி அந்த ஊரின் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சின்ன வயதில் ஒரு கண்ணு நொள்ளையாய் போன தன் பேரன் விஜய்காந்த் குணமானால் , வேண்டுதலுக்காக ஆயிரம் வைரங்கள் பதித்த ஒரு தங்க வடையை தர முடிவெடுத்து , பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த நேர்த்தி கடனை பல கோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட தங்க வடையை செய்கிறார், ஆண்டவனுக்கே கொடுக்க போகும் வடை குறித்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய டெல்லிகணேஷ்(லட்சுமியின் காரியதரிசி ) அதை பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் தெரிவிக்கிறார் , பாகிஸ்தான் தீவிரவாதி வாசிம்கான் அதை அறிந்து மகிழ்ச்சியடைந்து அந்த பல கோடிரூபாய் மதிப்புள்ள தங்க வடையை அபகரிக்க திட்டமிடுகிறார். ( இப்படத்தில் புதுமையாக படம் தொடங்கி முதல் அரைமணிநேரம் கேப்டன் வரமாட்டார் , மக்கள் நிம்மதியாய் இருக்கலாம் )இருண்ட ஆப்பிரிக்காவின் விடிவெள்ளி நைரோபி போலீஸ் விஜயகாந்த் , அங்கே கருப்பின தீவிரவாதிகளை அடித்து துவைத்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறார் , சோமாலியா அதிபருக்கு சவால் விடுகிறார் , தன்னை அதிபராக்கினால் வீட்டு வீடு தானே வந்து ரேசன் பொருள் தருவதாய் ஜால்ஜாப்பு விடுகிறார் , செல்போன் அலருகிறது , லட்சுமி ஆண்டவனுக்கு தரப்போகும் வடை குறித்து தெரிவிக்க குஷியாகி சண்டையை பாதியில் போட்டுவிட்டு , தன் பாட்டியின் இந்த பிரார்த்தனையை பார்க்க இந்தியா வருகிறார் , வந்த இடத்தில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கும் ஒரு ஏழையை பார்த்து கடுப்பாகி டென்சனாகி மனம் நொந்து , கண் கலங்கி அவனை நினைத்து வெந்து வெதும்பி நொந்து , கவர்ச்சி நடிகை தேஜாஸ்ரீயுடன் ஒரு ஒப்பனிங் சாங்கில் நடனமாடுகிறார் .அது தவிர ஊரில் இருக்கும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் அரஜாகத்தை அந்த அரசியல்வாதிகளின் அடியாட்களை பின்னங்காலால் சுவறில் ஏறி அடித்து தட்டி கேட்கிறார் , ஒரு காட்சியில் தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனைகள் குறித்து பதினைந்து நிமிடங்கள் பேசுகிறார் , இவர் பேச்சை நிறுத்தவாவது அரசியல்வாதிகள் திருந்தலாம் என மக்கள் எண்ணுகின்றனர் .'' மக்கள் உங்ககிட்ட எதிர்பார்த்து கிடச்சது ஏமாற்றம் எங்கிட்ட எதிர்பாக்கறது நல்ல மாற்றம்'' என பஞ்ச் டயலாக் பேசுகிறார் .வடிவேலுவை புரட்டி புரட்டி அடிக்கும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு நடுவே சம்பந்தமில்லாமல் வரலாம் ( வடிவேலு கால்சீட் கிடைத்தால் , இல்லாவிட்டால் விவேக்கை வைத்து பஞ்ச் வசனங்களுடன் கூடிய சமுதாய சீர்திருத்த வசனங்களை பேச வைக்கலாம் ) , கடைசி நேர தகவல் படி வடிவேலு நடிக்க மறுத்து விட்டார்.அரசியல்வாதிகளை புரட்டி எடுத்து டயர்ட் ஆகும் போதெல்லாம் தன் மாமன் மகள் நயன்தாராவையும் புரட்டி எடுக்கிறார் , அவரது தொப்பிளில் பரமபதம் ஆடுகிறார் ( பாம்பு ஏணிகள் மற்றும் கட்டைகள் என எல்லாமே தொப்புளில் கதகளி ஆடுகின்றன் - அட எல்லாமே கிராபிக்ஸ்பா ), (இந்தியாவில் புரட்டி எடுக்க மன்னிக்கவும் டுயட் பாட இடமில்லாததால் ஆஸ்திரேலியா , அமெரிக்கா , இங்கிலாந்து என பல நாடுகளிலும் பாடுகிறார் ஆடுகிறார் மரத்தை சுற்றி சுற்றி ஹீரோயினை விரட்டுகிறார் ) , இடைவேளைக்கு முன்னால் இரண்டு பாடல்களிலும் அதன பிறகு ஒரு பாடலிலும் பாடுகிறார் . அதன் பின் நயன்தாரா மாயமாய் மறையலாம் காணாமல் போகலாம் நமக்கும் கதைக்கும் அதனால் ஒன்றும் ஆகிவிடாது .
இப்படி பல வேலைகளுக்கு நடுவில் கதையெழுதிவிட்ட பாவத்திற்காக அவர் லட்சுமியை சந்திக்கிறார் , அங்கே அவருக்கு தங்க வடை குறித்தும் அதை கடத்த போகும் தீவிரவாதிகள் பற்றியும் தெரிய வருகிறது , அதற்குள் படம் பாதிக்கும் மேல்முடிந்தும் விடுகிறது , கண்கள் சிவக்கிறது ( படம் முடியும் வரை அது அப்படியேதான் இருக்க போகிறது பீ கேர் புல்... நான் எதிரிகள சொன்னேன் ). வடையை எடுத்துக்கொண்டு ஆயிரம் கிலோ மீட்டருக்கு அந்தபக்கம் இருக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது பைக்கை கிளப்பிக்கொண்டு , கையில் பெட்ரோலுக்கு காசிருக்கிறதா என்கிற கவலையில்லாமல் முதுகில் வடையை கட்டிக்கொண்டு டுர்ர்ர்ர்ரென கிளம்புகிறார் . (காட்டுதீயாக , அனல் பொறி அல்லது கடலை பொரியாக , அடங்காத வெள்ளமாக ,பனை வெல்லமாக என மேற்கூறிய வாக்கியங்களினிடையில் மக்கள் எந்த வாக்கியத்தையும் இணைத்துக்கொள்ளலாம் )போகும் வழியில் கிராமங்களில் மக்கள் படும் துன்பம் கண்டு மனம் நொந்து விக்கி திக்கி திணறி திக்குமுக்காடி அழுது புரண்டு கண்ணீர் வடித்து , மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என எண்ணி நயன்தாராவை அழைத்து அவரது தொப்புளில் ஜிலேபி சுடுகிறார் ( ஏற்கனவே ஆம்லேட்,ஆஃபாயில், பூரி கிழங்கு .பொங்கல், தோசை,ஆப்பம் என பல அயிட்டங்களையும் போட்டு விட்டதால் இம்முறை ஜிலேபி - எப்படியோ மக்கள் மகிழ்ச்சியா இருந்தா சரிதான் ) , ஊருக்குள் நடந்த பம்பரம் விடும் போட்டியில் நடந்த அசம்பாவித சம்பவத்தை தட்டி கேட்டு தீர்ப்பு வழங்குகிறார் ( மக்கள் எதிர்பார்க்கறாங்க பாஸு உங்களையும் சேர்த்துதான் பாஸு )மக்கள் மகிழ்ச்சியாகி அவரை புகழ்ந்து பாடுகின்றனர் . சாங் தொடங்குகிறது .அரசாங்கம் அமைக்க வந்த சின்னையா

ஆட்சில இருக்கறவங்கள்ளாம் வெண்ணையா

நீங்க கிரிக்கெட்டில் கலக்குகிற கங்குலி

நம்ம கூட்டத்தில இல்ல ஒரு கருங்காலி

உனக்காக கூடியிருக்கு பெரிய கூட்டம்

அத பாத்து ஆளுங்கட்சி தலைவருக்கு நம்மேல் நோட்டம்

நீ நின்னா திருவாரூர் தேரு

உன்ன தட்டி கேட்க தமிழகத்தில் யாரு .....

உன் அரசாங்கம் அமையட்டும் சீக்கிரம்

உன் ஆட்சிக்காக கண் முழிச்சு காத்துகிட்டு கிடக்கறோம்

ஆண்டவனோட மட்டும்மே உங்க கூட்டணி

தேர்தலில் நம்ப மாட்டீங்க கள்ள ஒட்டணி

( அரசாங்கம் அமைக்க வந்த சின்னையா )

அவரை வில்லன்கள் துரத்துகிறார்கள் , துரத்துகிறார்கள் , துரத்துகிறார்கள் , கார்கள் பறக்கின்றன , லாரிகள் எரிகின்றன , வெடிகுண்டுகள் வீசப்படுகிறது , வாசிம்கான் கதறுகிறார் , செல்போனில் கட்டளையிடுகிறார் , நடுவில் நயன்தாராவுடன் டூயட் பாடுகிறார் !!! ( ஏன்னு கேட்டா உங்க வீட்டிலும் கற்கள் வீசப்படலாம் அதனால் _______ ) .கிளைமாக்ஸில் லட்சுமி , நயன்தாரா , மற்றும் பலரை கடத்தி வைத்துக்கொண்டு விஜயகாந்தை செல்போனில் அழைக்கிறார் , கேப்டன் டென்சனாகிறார் , வீரவசனங்கள் பேசுகிறார் ( வசன உதவி - லியாகத் அலிகான் ) , விஜயகாந்தின் தங்கையை தீவிரவாதிகள் கட்டி வைத்து கதற கதற ................................... (அட கற்பழிக்கலைங்க நீங்க வேற எதையாவது நினைச்சுகிட்டு இது சீரியஸ் கதை அதனால நோ கற்பழிப்புங்கோ ) கட்டி வைத்து கிச்சி கிச்சு மூட்டி டார்ச்சர் செய்ய அதை செல்போனில் கேட்ட விஜயகாந்த் வீரு கொண்டு எழுந்து கத்தி கதறி மண்ணெல்லாம் எடுத்து மேல பூசிக்கொண்டு ( இந்த சிச்சுவேசன்லயும் நீங்க நயன்தாராவோட டூயட் எதிர்பாத்தா அதற்கு நாங்க பொருப்பில்ல ) ... கண்ணீர் விடுகிறார் , தியேட்டரில் தாய்க்குலங்களும் அழுகின்றனர் அவரது டார்ச்சரை நினைத்து.........(விஜயகாந்தின் டார்ச்சர்.. வில்லன் டார்ச்சர இல்ல )


தனி ஆளாக பின்னிமில்லில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தன் உறவினரை தீவிரவாதிகள் சுடும் லட்சக்கணக்கான குண்டுகளில் ஒன்று கூட தன் மேல் படாமல் அனைவரையும்
துவம்சம் செய்து காப்பாற்றுகிறார் ,


கடைசியில் வடை குறித்த புள்ளி விபரங்களை கீழ்கண்டவாரு அடுக்குகிறார் இறுதிகாட்சியில் வாசிம்கானுடன் ஓற்றைக்கு ஓற்றையாக மோதுகிறார் , வாசிம் கானிடம் வசனம் ,


உலகத்துல வடை சுடுற நாடுங்க மொத்தம் பத்து


அதுல அதிகமா வடை சுடுறது இந்தியாவுல

ஒரு நாளைக்கு சுடுற வடைகளோட எண்ணிக்கை இரண்டு கோடி


அதுல ஊசி போன வடை அம்பது லச்சம்


அத வாங்கி அப்படியே திங்கறவன் இருபதுலட்சத்து முப்பத்தி அஞ்சாயிரம்

அத வாங்கி தினதந்தில கசக்கி திங்கறவன் 17 இலட்சம்


காசு குடுத்து திங்கறவன் ஆறு லட்சத்தி அருபதாயிரத்தி நானுரு பேரு

ஓசில திங்கறவன் மூணு லட்சத்தி முப்பதாயிரம் ஆங்ங்


.................விட்டா இந்தாளு நிறுத்தாம மூணு நாளு மூச்சு விடாம இந்த மாதிரபேசுவார்னு , கடுப்பாகி வாசிம்கான் கேப்டனை நையபுடைத்து வீசுகிறார் மூர்ச்சையான கேப்டன் விடமால் கணக்கு சொல்லிக்கொண்டிருக்க வாசிம் கான் இந்தாளுக்கு வெறி புடிக்கணும்னா ஒரே வழினு
இந்தியாவைப்பற்றியும் தமிழ்நாட்டைப்பற்றியும் தமிழ் மக்களைப்பற்றியும் மிக கேவலமாக பேசுகிறார் , அப்போதும் விடாமல் கணக்கு சொல்லிக்கொண்டிருக்க
நயன்தாராவையும் அவரது இறந்து போன தாய் அம்பிகாவை பற்றி படு கேவலமாக பேச உணர்ச்சி வந்து வாசிம்கானை நாயடிப்பது போலடித்து நாட்டை காக்கிறார் , வடையை காக்கிறார் .


( வாசிம் கானும் விஜயகாந்திடமிருந்து தப்பி போலீஸிடம் சரண்டைந்து போலீஸின் காலைபிடித்த படி ஐயா தயவு செஞ்சு என்னை தூக்குல வேணா போடுங்க இந்தாளுகிட்ட மட்டும் விடாதீங்க உங்களுக்கு புண்ணியமா போகும் என்று கூறும் காட்சி சென்சாரால் தடை செய்யப்பட்டது ).


இறுதிக்காட்சியில் ராதாரவி போலிஸாக வந்து '' உங்கள மாதிரி ஒருத்தர்தான் இந்த நாட்டுக்கு தேவை '' என்று கூறி சல்யூட் அடிக்க , அதற்கு விஜயகாந்த் இதுலாம் என்னோட கடமை ஆங் என்கிறார்


ஆஞ்சநேயர் கோவிலில் தங்க வடையை சாமிக்கு காணிக்கையாக விஜயகாந்த் குடுக்க ஒரு வழியாக படம் முடிகிறது . மக்கள் நிம்மதி பெருமூச்சடன் திரையரங்கை விட்டு வெளியேற படம் முடிகிறது .


இந்த படத்தின் கதைக்கு நல்ல பெயர் சூட்டுவோருக்கு கேப்டனின் தேமுதிக உருப்பினர் அட்டை இரண்டும் , அவரது தர்ம்புரி மற்றும் கஜேந்திரா படங்களின் டிவிடி ( 7.1) பரிசாக காத்திருக்கிறது , உடனே முந்துங்கள் பரிசுகள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே . _____________________________________________________________________________________

நேற்றைய பதிவைப்போல இது எந்த கதையிலிருந்தும் உருவப்படவில்லை, இது நானே எழுதிய கதை இக்கதையை படமாக்க விரும்புவோர் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை அணுகவும். வி.கா வின் கால்ஜீட் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு ஃப்ரீதானாம்.

_____________________________________________________________________________________