Pages

02 January 2009

அப்பன் செத்தான் , மகன் செத்தான் , பேரன் செத்தான்....!



ராமு சுவாமிகளும் , கோமு சுவாமிகளும் தங்களது மாட்டுவண்டியில் வெளியூருக்கு பிரசங்கம் பண்ண சென்று கொண்டிருந்தனர். வழியில் ஒரு கிராமம். அந்த கிராமத்தை கடந்தால்தான் கோவிலுக்குச் செல்ல முடியும். கிராமத்தில் நல்ல மழை . சாலையெங்கும் சேறும் சகதியுமாய் இருந்தது.


அந்த கரடுமுரடான பாதையில் வண்டியில் செல்கையில் வெள்ளம் ஒடும் ஆற்றின் பாலத்தை கடக்க இயலாமல் அழகான பெண்ணொருத்தி கவலையாய் நின்று கொண்டிருந்தாள். ராமு சுவாமிகள் அவளை தங்கள் வண்டியில் ஏறிக்கொள்ளுமாரு கூறினார். அவளும் வண்டியில் ஏறிக்கொள்ள வண்டி பாலத்தைக்கடந்தது. கோமுவுக்கு இதில் கொஞ்சமும் விருப்பமில்லை. முறைத்துக்கொண்டே வந்தான். அவளது இடையைப்பிடித்து வண்டியில் ஏற்றியது கோமுவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.

பாலத்தைக்கடந்ததும் பெண் இறங்கிவிட்டாள். மீண்டும் இடையைப்பிடித்து இறக்கிவிட்டான். இவர்களிருவரும் கோவிலை அடைந்தனர்.

கோமு கோபத்தோடு ஆரம்பித்தான்

'' நம்மைப்போன்றவர்கள் பெண்களை நெருங்கக்கூடாது என்று உனக்கு தெரியாதா ?''

ராமு சுவாமி சிரித்தபடியே கூறினான் '' அந்த பெண்ணை அந்த பாலத்திலேயே இறக்கிவிட்டுட்டேனே.. நீ இன்னுமா அவளை சுமந்துட்டு இருக்க...!?''


***************************

அந்த நான்கு சன்யாசிகள் காட்டில் வெகுதூரம் பிராயணம் செய்து கொண்டிருந்தனர். சூரியன் மேற்கில் மறையத் துவங்கியதால் நடுக்காட்டிலேயே தங்கிவிட தீர்மானித்தனர். ஒரு இடத்தில் கூடாரமிட்டு அங்கே நெருப்பு மூட்டி சுற்றியமர்ந்தனர். இரவாகும் வரைப் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சன்யாசிகள் தூங்கும் முன் தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். நால்வரும் அமைதியாய் தியானத்தில் ஆழ்ந்தனர்.

காற்று பலமாக வீசத்துவங்கியது. அதில் அவர்கள் மூட்டியிருந்த நெருப்பு அணையத்துவங்கியது.

தியானத்தில் இருந்த நால்வரில் ஒருவர் மற்ற மூவரிடம்

''ஐய்யயோ நெருப்பு அணையப்போகிறது '' என்று கூச்சலிட்டான்.

''நாம் மௌனமாக தியானம் செய்ய வேண்டும் என உனக்கு தெரியாதா? '' என இரண்டாமவன் கேட்டான்.

''கொஞ்சம் பேசாம அமைதியா இருக்கீங்களா'' மூன்றாமவன் எரிச்சலடைந்தான்

''ம்ம்ம் நான் ஒருத்தன்தான் இங்கே பேசாமல் இருக்கிறேன் போலிருக்கிறது '' நான்காவது சந்நியாசி கூறினான்.

***********************


அந்த பெரிய பணக்காரன் புத்தாண்டுதினத்தில் காட்டில் தனித்து வாழும் சந்நியாசியை தரிசிக்கச் சென்றான் . அவரிடம் ஆசி பெற வேண்டுமென்றான். அவர் அது முடியாதென்றார். அவரிடம் ஒரு பெரிய காகிதத்தைக் கொடுத்து அதில் தனக்கும் தன் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியை காலாகாலத்திற்கும் தரும் வகையில் ஒரு நல்ல வாசகம் எழுதியாவது தருமாறு வேண்டினார்.

சந்நியாசி அந்த காகிதத்தை வாங்கி அதில் '' அப்பன் செத்தான் , மகன் செத்தான் , பேரன் செத்தான் '' என்று எழுதித்தந்தார்.

பணக்காரனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ''யோவ் என் குடும்பம் சந்தோசமா இருக்கணும்னு எழுதி குடுய்யான்னா, இப்படி எழுதிக்குடுத்திருக்கியே ''

சந்நியாசி சாந்தமாக '' உனக்கு முன்னால் உன் மகன் இறந்தால் நீயும் உன் குடும்பமும் எவ்வளவு துக்கமடைவீர்கள் , உனக்கும் உன் மகனுக்கும் முன்னால் உன் பேரன் இறந்து போனால் அதைவிட இன்னும் அதிகமாகவல்லவா துக்கமடைவீர்கள் , உனது வம்சம் நான் எழுதிக்கொடுத்த வரிசையில் இறப்பதுதானே இயற்கை , அதுதான் உன்மையான மகிழ்ச்சி சந்தோசம் , நீ கிளம்பு ''

********************