25 March 2015

வாணிபர் காந்தி
வள்ளுவர் கோட்டத்தில் இப்போதெல்லாம் தினமும் ஒரு போராட்டம் நிச்சயமாக நடக்கிறது. யாருக்காக எதற்காக என்பதெல்லாம் முக்கியமில்லை. மக்களுக்கும் அதைப்பற்றி அக்கறை இல்லை. வள்ளுவர் கோட்டத்து சிக்னலுக்கும் அங்கே போராட்டம் பண்ணுகிற மக்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டையும் யாருமே மதிப்பதில்லை. ஆனாலும் இங்கே போராட்டம் பண்ண ஆர்ஏசி ரிசர்வேசன் எல்லாம் உண்டு. முந்தினால்தான் உங்களுக்கு இடம் கிடைக்கும். அவ்வப்போது ஆளுங்கட்சியினரை குளிர்விக்க அம்மாவை குஷிப்படுத்த கோடாம்பாக்கத்தினரின் குளிர்கண்ணாடி போராட்டங்கள் நடத்துவதுண்டு. அப்படிப்பட்ட காலங்களில் மட்டும் கூட்டம் அம்மும்.

தினமும் அவ்வழியாகத்தான் அலுவலகத்திற்கு வருவது வழக்கம். அதனால் அங்கே என்ன போராட்டம் எதற்காக என்று நின்று விசாரித்துவிட்டு செல்வதை வழக்கமாக்கியிருக்கிறேன். சில போராட்டங்கள் ஜாலியான கோரிக்கைகளுக்காக நடத்தபடுவதுண்டு. நேற்று வாணியர் சங்கம் என்கிற அமைப்பு மார்கேண்டேய கட்ஜூவை கண்டித்து ஒருகூட்டம் நடத்திக்கொண்டிருந்தது.

இந்தசங்கம் செட்டியார் சாதி ஆட்களுடைய அமைப்பு என்பதை போஸ்டரிலேயே தெரிந்தது. மார்கண்டேயே கட்ஜூ சிலதினங்களுக்கு முன்பு மகாத்மா காந்தியை பற்றி சில கருத்துகளை தன்னுடைய வலைப்பூவில் வெளியிட்டிருந்தார். அதில் காந்தியை பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று விமர்சித்திருந்தார்! இதைதான் வள்ளுவர் கோட்டத்தில் 99டிகிரி வெயிலில் நின்று கண்டித்துக்கொண்டிருந்தனர். மார்கண்டேயே கட்ஜூவே மன்னிப்புக்கேள், நாட்டைவிட்டு வெளியேறு என்பது போன்ற விசித்திரமான கோரிக்கைகளை முன்வைத்து அந்தப்போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டதால் உடனே அங்கிருந்து கிளம்பவேண்டியிருந்தது. ஆனாலும் ஒருவிஷயத்தில் குழப்பமாகவே இருந்தது. அதனால் அங்கேயே பராக்கு பார்த்துக்கொண்டு நின்றேன். எத்தனையோ அமைப்புகள் இருக்கும்போது, காங்கிரஸ் கூட போராட்டம் பண்ணாமல் இருக்கும்போது இவர்களுக்கு ஏன் காந்தி மேல் இவ்வளவு அக்கறை? ஊரில் யாருக்கும் இல்லாத அக்கறை. அங்கேயிருந்த ஒரு ஆவேச போராட்டக்காரரிடம் விசாரித்தேன். காந்தியும் நம்மாளுங்கதான்ங்க என்றார். எனக்கு புரியவில்லை. என்னது காந்தி செட்டியாரா? என்று சிந்தித்துக்கொண்டே அலுவலகத்திற்கு வந்துவிட்டேன்.

சில நிமிட யோசனைக்கு பிறகுதான் புரிந்தது. காந்தி பனியா சாதியை சேர்ந்தவர். பனியா சாதியினர் வாணிபத்திற்கும் வட்டிக்கு பணம் கொடுப்பதற்கும் பேர் போனவர்கள்! அந்த வகையில் இந்த வாணியர் சங்கம் சகவாணிபரான காந்திக்காக களமிறங்கியிருக்கிறார்கள்!

***

நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் சென்ற வாரத்தில் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். ‘’காரியம் செய்வது’’ என்று அந்த புனிதமான விஷயத்தை சொல்லக்கூடாது. வேறெப்படி சொல்வதென்று தெரியவில்லை. ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பிரஜையை இந்துமதத்திற்கு இட்டுக்க்கொண்டு வந்திருக்கிறார். மதமாற்றம் செய்துவிட்டு அந்தப் புகைப்படத்தை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.

‘’பிறப்பில் ரஷ்யரான திருவாளர்.ரோமன் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர். இவர் நம்முடைய மாபெரும் இந்துத்வத்திற்கு மாறியிருக்கிறார். இனி அவர் ஸ்ரீ.லோகனாதன் என்றும் அவருடைய மனைவி ஸ்ரீமதி.சந்திரா என்றும் அழைக்கப்படுவார்கள்’’ என்று ஆங்கிலத்தில் ஒரு ஸ்டேடஸையும் போட்டு லைக்ஸ்களை வாங்கி குவித்துக்கொண்டிருக்கிறார்! ஆங்கிலத்தில் போட்டால்தானே அகில உலக ரீச் கிடைக்கும் என்று நினைத்திருக்கலாம். பாரினிலிருந்து நிறைய பேர் இந்துமதத்திற்கு வந்தால் நல்லதுதானே.

பேரு ரோமன் ஊரு ஆஸ்திரேலியா, பிறந்தது ரஷ்யா என்று திருவாளர் ரோமரே பெரிய குடாக்காக இருப்பார் போலிருக்கிறது. போகட்டும். அன்னாருக்கு லோகநாதன் என்கிற நல்ல பெயரை தேர்ந்தெடுத்து சூட்டியிருக்கிறார்கள். ரோமர் என்கிற பெயரையே ஒரு எழுத்து மாற்றி ராமர் என்று ஆக்கியிருக்கலாம்! சம்பந்தப்பட்டவர்களை குளிர்வித்து குளிப்பாட்டியிருக்கலாம். இவ்விஷயத்தில் இன்னொரு சந்தேகம் கூட உண்டு. அவருக்கு என்ன சாதியில் அலாட் பண்ணியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அடியேன் ஃபேஸ்புக்கில் இல்லை இருந்திருந்தால் கமென்டில் கேட்டிருப்பேன். என் சார்பாக யாராவது அவரிடம் கேட்டும் சொல்லலாம். அடிக்கடி இதுபோன்ற மதமாற்ற நிகழ்வுகளின் போது வருகிற பல நாள் சந்தேகம்.

***

இணையத்தில் கருத்து சொன்னால் கம்பி எண்ண வைக்கிற கொடூரமான ‘’66ஏ சட்ட பிரிவை’’ ரத்து செய்துவிட்டார்கள். இனிமே ஜாலிதானா, இஷ்டப்படி கும்மி அடிக்கலாம்ல? என்று அட்வகேட் நண்பரிடம் குஷியாக சொன்னேன். வஞ்சகமாக சிரித்துவிட்டு ‘’இது போனா என்ன ஓய், இதுமாதிரி இன்னும் பத்து பிரிவு இருக்கு! உனக்கு கம்பி கன்பார்ம், ரொம்ப ஆடாதீரும்’’ என்றார்.

ஐந்நூறு, ஐந்நூத்தி அஞ்சு, ஐந்நூத்தி ஆறு, ஐநூத்தி ஏழு, எட்டு ஒன்பது… பத்து என அவர் வரிசையாக ஐபிசி சட்டப்பிரிவுகளை அடுக்க ஆரம்பித்தார். நிறுத்தும் ஒய் எதுக்கு இப்போ வரிசையா அடுக்குறீங்க என்றேன். ‘’இந்த பிரிவுகளின் படி கூட ஸ்டேடஸ் போட்டதுக்கும் லைக் போட்டதுக்கும் மீம்ஸ் போட்டதுக்குமாக பிணையில்லாமல் பிடித்து ஜெயிலில் போட்டுவிட முடியும்! அதனால் ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதீங்க இணைய மொன்னைகளே’’ என்றார்.

வேற என்னதான் சார் செய்யறது எங்களுக்கெல்லாம் விமோச்சனமேயில்லையா? என்று வருத்தமாக கேட்டேன். ‘’அடிங்க ஆனா ரத்தமும் வரக்கூடாது, சத்தமும் வரக்கூடாது’’ என்றுவிட்டுப்போனார். எனக்குதான் ஒன்றும் புரியவில்லை. ஆனால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மட்டும் புரிந்தது.

18 March 2015

பிரபஞ்சனைப் படித்தால் ஃபிகர் மடியுமா?
ஒரு கல்லூரியில் பேச அழைத்திருந்தார்கள். ‘’வாசிப்பின் அவசியம்’’ பற்றி மீடியா மாணவர்களிடம் உரையாட வேண்டும் என்றார்கள். சுஜாதா, சுபா, ரமணிச்சந்திரன் தொடங்கி ஷோபாசக்தி, சுந்தர ராமசாமி வரை பல நூல்கள் குறித்தும் அவர்களை எல்லாம் ஏன் வாசிக்கவேண்டும் எதிலிருந்து ஆரம்பிக்கலாம் என்பது மாதிரி நிறைய அடங்கிய குறிப்புகளை தயாரித்து எடுத்துச்சென்றிருந்தேன்.இன்றைக்கு நாலு பையன்களையாவது தமிழ் இலக்கியத்துக்கு இட்டாந்துரணும் என்பதுதான் என்னுடைய ஒரே எண்ணமாக இருந்தது.

முன்பே துறைத்தலைவரிடம் ‘’ஐயா தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி பேசலாமா’’ என்று கேட்டிருந்தேன். அந்தப்பக்கமிருந்து ‘’அவங்க எந்த கருமத்தையாவது படிச்சா போதும், நீங்க கூச்சப்படாம பேசுங்க’’ என்றார்கள். இதில் கூச்சப்பட என்ன இருக்கிறது. ஆனால் ‘’எந்த கருமத்தையாவது’’ என்று சொல்லும்போதே நான் சுதாரிப்பாக இருந்திருக்கலாம்.

அரங்கில் நூறு அல்லது நூற்றி பத்து மாணவர்கள் இருந்திருக்கலாம். எல்லோருமே பட்டப்படிப்பு முடித்தவர்கள். சில கேள்விகளுடன் பேச்சைத் துவங்கினேன். ‘’இங்கே எத்தனை பேர் தமிழ் நூல்கள் படிப்பவர்கள்?’’ அரங்கத்திலிருந்த அத்தனை பேரும் காலை உணவாக இரண்டு டப்பா பெவிகால் தின்றுவிட்டு வந்தது போல உட்கார்ந்திருந்தார்கள்! நூற்றியோரு சதவீத நிசப்தம்.

‘’இங்கே எத்தனை பேருக்கு சுஜாதாவை தெரியும்?’’ மீண்டும் அதே அமைதி. ‘’சும்மா சொல்லுங்க யாருக்குமே தெரியாதா, படத்துக்கெல்லாம் வசனம் எழுதிருக்கார்’’ என்றேன். ஒரு முனகல் கூட இல்லை. அடுத்த கேள்விக்கும் இதே நிசப்தமே பதிலாக வந்தால் அங்கேயே மூர்ச்சையாகி மூச்சை விட்டிருப்பேன். ‘’கல்கியின் பொன்னியின் செல்வன் தெரியுமா’’ என்று கேட்க இரண்டுபேர் தயங்கி தயங்கி கைதூக்கினார்கள்! படிச்சிருக்கீங்களா என்றேன் ‘’இல்ல பாத்துருக்கோம், வீட்லருக்கு’’

இவர்களெல்லாம் ஆங்கிலத்தில் படிப்பார்களாயிருக்கும், என்ன இருந்தாலும் மெட்ரிகுலேஷன் தலைமுறை மாணாக்கர்களில்லையா? சேதன்பகத் படிக்கிறவர்கள் எத்தனை பேர் என்று கேட்டேன். ஒரே ஒரு பெண் மட்டும் கைதூக்கினாள். மற்றவர்கள் அவளை திரும்பி பார்த்து ஏதோ முணுமுணுத்துக்கொண்டனர். அமிஷ் திரிபாதியை மட்டும் ஏன் விடுவானேன் என்று அவரை எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டேன். நூறு புன்னகைகள் மட்டுமே பதிலாக வந்தது. ‘’இந்த நாய் நம்மள கேள்வி கீள்வி கேட்டுதொலைச்சிருமோ?’’ என்கிற மரணபீதியை மறைத்துக்கொண்டு இளம் ஆசிரியர்கள் கூட போலிப்புன்னகையோடு என்னை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தனர்.

இவ்வளவு நடந்தபின்னும் கூட கேள்விகேட்பதை விடவில்லை. ‘’சரி இங்கே எத்தனை பேர் டெய்லி பேப்பராச்சும் படிக்கறீங்க’’ என்று கேட்டேன். நான்குபேர் கையை தூக்கினார்கள். என்ன பேப்பர் படிப்பீங்க என்றேன். நால்வருமே ‘’எகனாமிக் டைம்ஸ்’’ என்றனர். அவர்கள் சொல்ல சொல்ல ஆசிரியர் பகுதியிலிருந்த ஒரு டைகட்டின ஆசாமி நிமிர்ந்து உட்கார்ந்தார். அந்த நால்வரும் ‘’எங்க சார்தான் படிக்க சொன்னாரு’’ என்று அவரை கைகாட்டினர். அதற்கு முந்தைய நாள்தான் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லியில் ஆட்சியை பிடித்திருந்தார். எத்தனை பேருக்கு அது தெரியும் , அர்விந்த் கெஜ்ரிவால் வெற்றிபெற என்ன காரணம் என்று கேட்டேன். நடுராத்திரி பனிரெண்டு மணி சுடுகாட்டில் கூட ஏதாவது சத்தம் கேட்கும். ஆனால் அந்த அரங்கில் அதுகூட இல்லை.

இதுக்கு மேல தாங்காது என்று நினைத்து ‘’சரி ஏன் யாருமே பாடபுத்தகங்களுக்கு வெளியே அதிகமாக படிப்பதில்லை, உங்கள் மனதில் தோன்றுகிற பதிலை நேர்மையாக சொல்லுங்கள்’’ என்று கேட்டேன். ஒரு பெண் எழுந்து நின்று ‘’எங்க வீட்ல புக்கு வாங்குனா திட்டுவாங்க சார், அவங்களும் வாங்கித்தரமாட்டாங்க’’ என்று அப்பாவியாக சொன்னார். ‘’டைம் இல்லை சார், காலேஜ் அசைன்மென்ட்ஸ் ப்ராஜெக்ட்ஸ்னு ஒரே பிஸி’’ என்றார் இன்னொரு மாணவர். ‘’சார் எதை படிக்கணும்னு தெரியல, சொல்லித்தரவும் ஆள் இல்ல, வீட்ல நியூஸ்பேப்பர் வாங்கினாக்கூட வேலைவாய்ப்பு செய்தி வர நாள்ல மட்டும்தான் வாங்க அனுமதிப்பாங்க’’ என்றார். இன்னும் என்னென்னவோ காரணங்கள் சொன்னார்கள். யாருக்கும் படிப்பதில் விருப்பமும் இல்லை நேரமும் இல்லை என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது.

நமக்கெல்லாம் எப்போதாவது தோன்றுமில்லையா, இந்த அகண்டு விரிந்த எல்லையற்ற மகத்தான பிரபஞ்சத்தில் நம்முடைய இருத்தல் என்பது என்ன? என்பதைப்போற ஒரு ஞானோதயம். அப்படித்தான் அந்த நொடி எனக்குத்தோன்றியது. இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ் எழுத்தாளர்களெல்லாம் என்னுதுதான் பெரிசு உன்னுது சிறிசு என சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். தங்களை ரட்சகர்களாகவும் தேவதூதர்களாகவும் நினைத்துக்கொண்டு அலப்பரைகளை கொடுக்கிறார்கள்.

இந்த கல்லூரியில் மட்டுமல்ல இதற்கு முன்பு மைலாப்பூருக்கு மத்தியில் இருக்கிற ஒரு பிரபல கலைக்கல்லூரியில் பேசச்சென்றிருந்த போதும் இதே மாதிரி அனுபவத்தை எதிர்கொண்டேன். இன்னும் சில மாணவர்களை சந்திக்கும்போதும், புத்தகம் வாசிப்பதை பற்றி பேசினாலே மாணவர்களுக்கு சப்தநாடியும் அடங்கி ஒடுங்கிவிடுகிறது.

இன்றைக்கு புத்தகம் வாசிக்க வேண்டிய அவசியம் இளைஞர்களுக்கு பத்து சதவிகிதம் கூட இல்லை. வாட்ஸ் அப் தொடங்கி ஆங்கிரிபேர்ட், கேன்டிக்ரஷ், ஷாப்பிங் மால், காபிடே, டவுன்லோட் மூவிஸ், கொரியன் சீரியல் சமூகவலைதளங்கள் என அவர்களுக்கான பொழுதுபோக்கின் முகம் மாறிவிட்டது. தொலைகாட்சியின் வருகைக்கு பிறகான தலைமுறைக்கு புத்தகம் என்பது ஒரு சுமைதான். தகவல்களுக்காக படித்த காலம் கூட உண்டு. ஆனால் இன்று ஒற்றை விரல்சொடுக்கில் தகவல்களை கொட்டத்தயாராயிருக்கிறது கூகிள். இதைத்தாண்டி எப்படி இளைஞர்கள் வாசிக்க வருவார்கள். சர்ச் எஞ்சின் தலைமுறைக்கு ஏற்ற படைப்புகளும் தமிழில் இல்லை. தமிழில் கடந்த பத்தாண்டுகளில் எழுதப்பட்ட ரொமான்டிக் நாவல்கள், அறிவியல் புனைவுகள், த்ரில்லர்கள், ஹாரர், மிஸ்டரி நாவல்கள், நகைச்சுவைக்கதைகள் எத்தனை இருக்கும்? விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் நூல்கள் வெளியிடப்படுகிறது!

வாசிப்பென்பது இருட்டறையில் அமர்ந்துகொண்டு இரண்டரை மணிநேரம் பாப்கார்ன் கொறித்த படி எதுவும் செய்யாமல் படம் பார்க்கிற ஈஸி வேலை கிடையாது. வாசிப்பதற்கு நேரம் வேண்டும், கவனம் உழைப்பு பொறுமை எல்லாம் தேவை. ஆனால் அவ்வளவு சக்தி நமக்கு கிடையாது, போதாகுறைக்கு சுவாரஸ்யமான பிரதிகளும் நம்மிடம் இல்லை. இப்படியொரு சந்தர்ப்பத்தில் நம்முடைய இளைஞர்களுக்கு சில கேள்விகள் உண்டு. வாசிப்பதால் ஏதாவது பயனுன்டா? ஆங்கிலத்தில் படித்தால் கூட பெருமைக்காகவாவது அவ்வப்போது பெயர்களை உதிர்க்கலாம். தமிழ் எழுத்தாளர்கள் பெயர்களை சொல்வதால் நமக்கு பாதகமா? சாதகமா? பிரபஞ்சனையும் பிரமிளையும் படித்தால் ஒரு ஃபிகராச்சும் மடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். காரணம் வாசிப்பின் மீது குழந்தைகளாக இருக்கும்போதிருந்தே உருவாக்கத்தவறிய ஆர்வம்.

தமிழில் சொல்லிக்கொள்ளும் படி குழந்தைகள் நூலோ பத்திரிகைகளோ பல ஆண்டுகளாக கிடையாது (காமிக்ஸ் தவிர்த்து). இப்போதைக்கு சுட்டிவிகடன் மட்டும்தான். அதுவும் விலை அதிகம். குழந்தைகளுக்காக எழுதக்கூடிய எழுத்தாளர்கள் எண்ணிக்கையும் நான்கோ ஐந்தோதான். ஆனால் ஆங்கிலத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, பத்து வயதுக்கு, பதினைந்து வயதுகுட்பட்ட பதின்பருவத்தினருக்கு என விதவிதமான நூல்கள் கிடைக்கின்றன. ஆனால் தமிழில் அப்படி வகைமைகள் கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரி நூல்கள்தான். இன்று பதிமூன்று வயது பையனுக்கு வாங்கித்தர எந்த தமிழ்நூலை பரிந்துரைக்க முடியும்? மீண்டும் மீண்டும் அதே தெனாலிராமன், பீர்பால், பஞ்சதந்திர கதைகளையே நாடுகிறோம். வீட்டிலும் கூட செய்தித்தாள் வாசிக்கிற பழக்கம் குறைந்து வருகிறது. இதழ்கள் கூட மருத்துவம், வேலைவாய்ப்பு கல்வி என தேவைக்கேற்ப வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். புத்தகக்கண்காட்சியில் காமிக்ஸ் கன்னாபின்னாவென்று விற்பதாக சொல்லப்பட்டாலும் அதை இப்போதும் வாசித்துக்கொண்டிருப்பதென்னவோ முப்பது வயதிற்குமேற்பட்ட ஆட்களே!

குழந்தைகளுக்காக தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் இரா.நடராசன் ஒரு கூட்டத்தில் பெற்றோர்கள் எந்த அடிப்படையில் நூல்களை வாங்கித்தருகிறார்கள் என்பதைப்பற்றி சொன்னார். தங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பொருளாதார முன்னேற்றித்திற்கு பயன்படுகிற நூல்களையே அவர்கள் வாங்கித்தர எண்ணுகிறார்கள். ‘’உங்கள் குழந்தை விஞ்ஞானியாக வேண்டுமா?’’ ‘’உங்க குழந்தை கோடீஸ்வரனாக வேண்டுமா?’’ என்பது மாதிரி நூல்களையே வாங்கித்தர எண்ணுகிறார்கள். கதையும் கவிதையும் படிப்பது குழந்தைகளை பாழாக்கக்கூடும் என்று அஞ்சுகிறார்கள் என்றார். பெற்றோர்களின் அழுத்தம் ஒருபக்கமென்றால் இன்னொரு பக்கம் பள்ளிகள் பல பள்ளிகளில் பெயருக்குத்தான் நூலகங்கள் இயங்குகின்றன. நூலகத்திற்கு செல்லவும் அங்குள்ள நூல்களை தேடி வாசிக்கவும் குழந்தைகள் பயிற்றுவிக்கப்படுவதில்லை. பாடபுத்தகச்சுமை குழந்தைகளை அச்சிட்ட காகிதங்களின் மீதான வெறுப்பையே உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவில் மார்ச் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாக கொண்டாடுகிறார்கள். இம்மாதத்தில் மக்கள் மத்தியில் நூல்வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையில் நிறைய நிகழ்ச்சிகளை நாடு முழுக்க நடத்துகிறார்கள். நிஜமாகவே நடத்துகிறார்களா என்பதை அமெரிக்க வாசிகள்தான் உறுதி செய்ய வேண்டும். ஆனால் அதுகுறித்த செய்திகளை வாசிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

பெற்றோர்களிடம் ஒவ்வொரு நாளும் தங்களுடைய குழந்தைகளுக்கு ‘’பதினைந்து நிமிடம்’’ ஏதாவது ஒரு புத்தகத்தினை உரக்க வாசித்து காட்ட வலியுறுத்துகிறார்கள். பொது இடங்களில் நூல்களை பற்றிய கூட்டங்கள் நடக்கின்றன. பள்ளிகளில் தினமும் யாராவது ஒருவர் வகுப்பறையிலேயே ஏதாவது ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை நிகழ்த்துகலையாகவும். அதே கதையை வாசித்தும் காட்டுகிற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. புத்தக கண்காட்சிகள், இலவச நூல்கள், திரைப்பட காட்சிகள், நூல்களை பரிசாக வழங்குவது என நிறைய விஷயங்கள் பண்ணுகிறார்கள். இதன் மூலம் எத்தனை பேர் செய்வார்களோ வாசிக்க ஆரம்பிப்பார்களோ ஆர்வம் வருமோ தெரியாது.

இது ஏதாவது பெரிய என்ஜிஓக்களின் இன்னுமொரு லீலையாக கூட இருக்கலாம். ஆனால் இதுமாதிரியான முயற்சிகள்தான் அடுத்த தலைமுறையினரை வாசிப்பின் பக்கம் தூண்டக்கூடியவையாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் செய்ய இங்கே குழந்தைகளுக்கு, பெற்றோர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, பொதுஜனங்களுக்கு என யாருக்குமே நேரமில்லை!

16 March 2015

மீண்டும் சங்கராபரணம்
தாத்தாக்களும் பாட்டிகளும் நிறைந்திருந்த ஒரு திரையரங்கு. அத்தனை முதியவர்களுக்கு மத்தியில் அமர்ந்திருப்பது பஜனை மண்டபத்தில் பாயாசத்திற்காக உபன்யாசம் கேட்க வந்தமர்ந்திருப்பதை போல் இருந்தது. சத்யம் திரையரங்கில் இதுவரை பலநூறு படங்கள் பார்த்திருந்த போதும் எப்போதும் இந்த அளவுக்கு வறட்சியாக உணர்ந்ததில்லை. முன்பக்கத்திலிருந்த இருக்கைகள் அத்தனையும் நரைத்திருந்தன! நெற்றிகளில் பட்டையும் நாமமுமாக... ரிடையர்டானவர்களுக்கான சிறப்புக்காட்சிக்கு வந்துவிட்டோமோ என்றென்னும் அளவுக்கு வெண்மை பூத்திருந்தது. முத்தாய்ப்பாக கோயிலில் பூஜை முடித்துவிட்டு அப்படியே சட்டைகூட போடாமல் நேராக தியேட்டருக்கு வந்திருந்தார் ஒரு பூஜாரி! விபூதி மணக்க, நெய்மணம் கமகமக்க… தொடங்கியது சங்கராபரணம்!

எனக்கு நேர் முன்பாக அமர்ந்திருந்த பெரியவர் தன் இளம் மகனோடு வந்திருந்தார். அல்லது மகன் அழைத்து வந்திருக்க வேண்டும். படம் தொடங்கியதிலிருந்து தன் மகனிடம் ஒவ்வொன்றையும் காட்டி காட்டி பேசிக்கொண்டேயிருந்தார். முதல் பாடலில் தொடங்கி ஒவ்வொரு பாடல் தொடங்கும்போதும் கண்களை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேயிருந்தார். படத்தில் மொத்தம் பனிரெண்டு பாடல்கள்! ஒரு பாடலுக்கு முப்பது மில்லி என்றாலும் பனிரெண்டு பாடலுக்கு எவ்வளவு கண்ணீர்? கண்களை துடைத்துக்கொண்டேயிருந்தார்.

படம் பார்க்கும்போதே தன் மகனுடைய தோள்களில் சாய்ந்துகொண்டார். படத்தில் வருகிற மொக்கை ஜோக்குகளுக்கெல்லாம் விழுந்து விழுந்து சப்தமாக சிரிக்கிறார். பாடல்களுக்கு நடுநடுவே எஸ்பிபியோடு சேர்ந்து ப்ரோ… ச்சே… வா… ரெவரூரா…ஆஆஆஆஆ.. என்று முணுமுணுத்தபடி தன்னுடைய கைகளால் தாளமிடுவதுபோலவும் தட்டிக்கொண்டிருந்தார். மகனிடம் ‘’இப்போ பாரு செமயாருக்கும், இப்போ பார் இப்போ பார்’’ என்று சொல்லிக்கொண்டேயிருந்தார்.

இடைவேளையில் கூட மகன் அழைத்தும் வெளியே போகாமல் அப்படியே அமர்ந்திருந்தார். பெரியவருக்கு வயது ஐம்பதுக்குள்தான் இருக்கும். அனேகமாக தன்னுடைய கல்லூரி காலத்தில் இப்படத்தை பார்த்திருக்க வேண்டும். பல ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தை பார்க்கிற அவருக்கு நிச்சயமாக இது வெறும் திரைப்படமாக மட்டுமே இருந்திருக்கும் என்று நிச்சயமாக சொல்லமுடியாது. கல்லூரிக் காலத்தில் திரும்ப திரும்ப பலமுறை பார்த்திருக்கலாம், தன் காதலியோடு பார்த்திருக்கலாம். அவருக்கு படத்தின் ஒவ்வொரு காட்சியும் பாடலும் ஒலியும் மறக்கவியலாத நினைவுகளாக தேங்கியிருந்திருக்க வேண்டும். அவர் மட்டுமல்ல சத்யம் திரையரங்கில் அந்த காலைகாட்சிக்கு கூடியிருந்த எழுபது எண்பது பேருமே இப்படித்தான் படம் பார்த்து கண்ணீர் விட்டு நெகிழ்ந்து உணர்ச்சிக்கொந்தளிப்பில் பாடல்களில் கரைந்து உருகியதை காண முடிந்தது. படத்தை விடவும் இக்காட்சிகள் நம்மை நெகிழச்செய்வதாக இருந்தது.

படம் முழுக்க வசனங்கள் மிகவும் குறைவு, படம் தொடங்கி முதல் பத்து பதினைந்து நிமிடங்கள் வரைக்குமே வசனங்களில்லை. சென்னையிலும் கூட படம் அக்காலத்தில் நூறுநாட்கள் ஓடியதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு பார்த்தாலும் இப்படம் நன்றாகப் புரியும்.

படத்தின் முதல் நாயகர் பாடும்-பாலு இரண்டாவது நாயகர் பார்க்கும்-பாலு(மகேந்திரா)! கேவி.மகாதேவனின் இசைக்கு தன்னுடைய கம்பீரக்குரலால் ஒலிபாலு உயிர்கொடுக்கிறார். விஸ்வநாத்தின் நேர்த்தியான படமாக்கலுக்கு ஒளிபாலு உயிர் தருகிறார். இப்போதெல்லாம் மானிட்டர் வந்துவிட்டது, எடுத்த காட்சிகளை அப்போதைக்கு அப்போதே சரியாக வந்திருக்கிறதா என்று பார்த்துவிட முடியும், ஆனால் அதுமாதிரி வசதிகள் இல்லாத காலத்திலும் கூட சில காட்சிகள் எடுக்கப்பட்டிருந்த விதம் ஆச்சர்யப்படவைத்தது.

இப்படத்திற்கு நாயகியாக மஞ்சுபார்கவியை பாலுமகேந்திராதான் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பாலுமகேந்திராவின் அத்தனை கறுப்பு ஹீரோயின்களுக்குமான ரெபரன்ஸ் இவரிடம் இருக்கிறது! முகத்தில் உதட்டில் கன்னங்களில் இன்னும் பல இடங்களில் என கேமரா அவரை கட்டித்தழுவுகிறது. தனுஷ் போல மஞ்சுபார்கவி கூட பார்க்க பார்க்க பிடிக்கிற ஆள் போல படம் தொடங்கும்போது இந்தம்மாவா என்று வெறுப்பாக இருந்தாலும் போக போக அவர் மீது நமக்கும் காதல் வந்துவிடுகிறது. முடியும் போது படம் முழுக்க மௌனம் பேசும் மஞ்சுபார்கவி ரசிகராகிவிடுவோம்!

மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டே கதை பண்ணியிருந்தாலும் ஒவ்வொருவரும் அவ்வளவு ஆழமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்தப்படம் தமிழிலும் தெலுங்கிலுமாக எப்படியும் ஒரு நூறு படங்களுக்கு ரெபரென்ஸாக இருந்திருக்கும். அந்த அளவுக்கு இந்தப்படத்தில் வருகிற காட்சிகளும் பாத்திரங்களும் இதற்கு பிறகுவந்த எண்ணற்ற இசைப்படங்களில் நடனப்படங்களில் பலமுறை பார்த்தவை. அதனாலேயே மிகச்சில காட்சிகளில் சலிப்பு வந்தாலும் படம் விறுவிறுப்பாகவே நகர்கிறது. காமெடிகள் அச்சுபிச்சுத்தனமாக இருந்தாலும் அந்தகாலகட்டத்தில் ரசித்திருக்கக் கூடியவை. அல்லு ராமலிங்கையஇதை ஒரு கலைப்படமாகவே இத்தனை நாளும் நினைத்துக்கொண்டிருக்க, சிறந்த பொழுதுபோக்குப்படத்திற்கான தேசியவிருதுதான் கொடுத்திருக்கிறார்கள்!

படத்தை தெலுங்கிலேயே வெளியிட்டிருக்கலாம். ஆனால் ஏனோ பாடல்களையும் கூட தமிழில் மாற்றியிருக்கிறார்கள். பாலுவே மீண்டும் பாடியிருக்கிறார். குரலில் அதே கம்பீரம். பழைய பிரிண்ட்டை டிஜிட்டல் பண்ணியிருப்பதால் ஆரம்ப காட்சிகள் புள்ளி புள்ளியாக வினோதமான மங்கலாக தெரிந்தாலும் போகப்போக அது தொந்தரவு செய்யாமல் கண்ணுக்கு பழகிவிடுகிறது. வாய்ப்புக்கிடைத்தால் திரையரங்கில் பார்க்கலாம். மிகச்சில காட்சிகள்தான் ஓடுகிறது. யூடியூபில் முழுப்படமும் தெலுங்கில் காணக்கிடைக்கிறது. பாடல்களையாவது கேட்கலாம்.

படம் முடிந்து கிளம்பும்போது எல்லோர் முகத்திலும் திருப்தி. ‘’தம்பி இன்னொருக்கா பாக்கலாமாடா’’ என்று ஏக்கமாக மகனிடம் கேட்டுக்கொண்டே கூட்டத்தில் மறைந்தார் முன் இருக்கைப்பெரியவர். எனக்கும் கூட இன்னொரு முறை பார்க்க வேண்டும், ஆனால் தெலுங்கில்.


13 March 2015

ஆரோவில் மாரத்தான் 2015

சென்னை மாரத்தானில் ஓடிய பிறகு நிச்சயமாக ஓடுவதை நிறுத்திவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் உடனே அடுத்த மாரத்தானுக்கு உடனே தயாராகிவிட்டேன். ஆச்சர்யம்தான். இம்முறை முந்தைய போட்டியைவிடவும் மிகக் குறைவான நேரத்தில் பந்தய தூரத்தை ஓடிக்கடக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. வேகமாக ஓட உடல் வலுவையும் கூட்ட வேண்டும் என்பதால் ஸ்ட்ரென்த் டிரெயினிங் மாதிரியான விஷயங்களை தெரிந்துகொண்டு அதையும் செய்ய வேண்டியிருந்தது. ஓடுவதற்காக மட்டுமே பஸ் பிடித்து பாண்டிச்சேரிக்கு போவேன் என்று ஒருநாளும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. தமிழ்நாட்டின் மிகச்சில மாரத்தான்களில் ஆரோவில் மாரத்தான் மிகவும் புகழ்பெற்றது.

ஆரோவில்லின் காட்டுப்பகுதிக்குள் அதன் எழிலை ரசித்தபடி மரநிழலில் ஜாலியாக ஓடலாம். பசுமையும் அமைதியும் நிறைந்த பாதை. அதிக கூட்டமில்லாத ஓட்டம் , ஓடிமுடித்து திரும்பிவந்தால் கடற்கரை. அங்கேயே குளித்துவிட்டு குடிக்கும் பழக்கமிருந்தால் மலிவு விலையில் மதுவும் அருந்தலாம். குளிக்கலாம். நிறைய வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தினரும் கலந்துகொள்ளும் ஓட்டம் இது. ஓடுவதின் இன்பத்திற்க்காகவே ஓடுவது என்பதுதான் இந்த மாரத்தானின் நோக்கம். அதனால் மெடல் கிடையாது. கடந்த பிப்ரவரி எட்டில் பல ஆயிரம் பேரோடு அடியேனும் ஓடினேன். (இந்த முறையும் அரை மாரத்தான்தான் 21.1 கி.மீ)

ஓடிமுடித்து ஊருக்கு வந்து ஒருமாதமாகிவிட்டது, எவ்வளவு நேரத்தில் ஓடினேன் எத்தனையாவது இடம்பிடித்தேன் என்பதுமாதிரி எந்த விபரமும் தெரியவில்லை. ஏதோ தொழில்நுட்ப கோளாறுகளால் தாமதாகியிருக்கிறது. இப்போதுதான் ரிசல்ட் போட்டிருக்கிறார்கள். என்னைப்போன்ற மாரத்தான் பித்தேறிய முத்துக்களுக்கு இந்த ரிசல்ட் மிகவும் முக்கியமானது. முந்தைய ரெகார்டுகளை இம்முறை முறியடிக்க வேண்டும் என்று முக்கி முக்கி இரண்டு மாதங்கள் பயிற்சி செய்திருக்கிறேன் சும்மாவா?.

கடந்த ஒருமாதமாக தினமும் ஆரோவில்லின் இணையதளத்தை திறந்து பார்ப்பதும், அவர்களுடைய மன்னிப்புக்கோரலை படித்துவிட்டு சோகமாவதும் வாடிக்கையாகியிருந்தது. இதோ இப்போது வந்துவிட்டது முடிவுகள். ஓடிய கால அளவு 1மணிநேரமும் 50 நிமிடங்களும்தான்! இது சென்ற முறை ஓடியதைவிட இருபத்தியோரு நிமிடங்கள் குறைவு. 1மணிநேரம் 45 நிமிடங்களுக்குள் ஓட்டத்தை முடிக்க நினைத்திருந்தேன், ஆனால் இது காட்டுப்பகுதியில் ஓடக்கூடிய TRAIL வகை மாரத்தான் போட்டி என்பதால் ஓடுவதில் சிரமமிருந்தது. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று ஓடவேண்டியிருந்தது! சென்ற முறை 2:11 , இம்முறை 1:50. என்னளவில் ட்ரிட் வைத்துக்கொள்ள ஏற்ற சாதனைதான். (அரைமாரத்தானில் ஓடியவர்கள் எண்ணிக்கை 1829 பேர்! அதில் 44வது இடத்தை பிடித்திருக்கிறேன்.)

ஏகப்பட்ட வெளிநாட்டினர் என்னோடு ஓடினார்கள், ஒரு பாரினரையாவது முந்த வேண்டும் என நினைத்திருந்தேன். காரணமெல்லாம் இல்லை. இன்னும் அதிக வேகம் ஓடுவதற்கான ஒரு உத்வேகம். நல்ல வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நாலைந்து வெளிநாட்டினரை தாண்டினேன்! அதில் ஒரு அல்ப திருப்தி. பாரத்மாதாகீ ஜெ! இங்கே சென்னை மாரத்தானில் ஓடிமுடித்து வருகிறவர்களுக்கு உண்ண பர்கர் கொடுத்தார்கள். பாண்டிச்சேரி பிரஞ்சு தேசம், அங்கே பாஸ்டா பீட்சா மாதிரி ஏதாவது கொடுப்பார்கள் என்று நினைத்திருந்தேன். வெண்பொங்கலும் வடையும் டிகிரி காபியும் கொடுத்தார்கள்.

அடுத்து செப்டம்பரில் சென்னை ட்ரையல் மாரத்தானில் கலந்துகொள்ள நினைத்திருக்கிறேன். நடுவில் எதுவும் பெரிய போட்டிகள் இல்லை. அதனால் இம்முறை 21கிலோமீட்டர் தூரத்தை 90நிமிடங்களில் ஓட நினைத்திருக்கிறேன். இதை SUB90 என்கிறார்கள். அதற்கான பயிற்சிகள் தொடங்கவிட்டது. இனி ஓடவேண்டியதுதான்.


Facebook Share