Pages

05 February 2009

வலைப்பதிவர்கள் மற்றும் வாசகர்களுக்கு ஒரு அறிவிப்பு

நண்பர்களுக்கு வணக்கம்..

கடந்த வாரம் சகோதரர் முத்துக்குமரன் அவர்கள் சிங்கள இன வெறி அரசின் தமிழின மக்களுக்கு எதிரான அடக்குமுறை கண்டும் , அதை தடுத்து நிறுத்த வக்கில்லா மலம்தின்னி மத்திய மாநில அரசுகளை கண்டும் மனம் வெதும்பி , தனது உள்ளக்குமுறலையும் அதற்கான தீர்வையும் எழுதிவைத்துவிட்டு சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்து மாண்டு போனது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது அறிக்கையையும் அது செய்த புரட்சியையும் , அம்மரணத்தை மறந்த அல்லது மறைத்த மீடியாக்களின் பலவீனமான முதுகெலும்பு குறித்தும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

முத்துக்குமாரின் மரணம் குறித்து பலருக்கும் பல பார்வைகள் , சிலர் இம்மரணத்தை வீரமரணமாக ஏற்றுக்கொண்டு வீரவணக்கம் செய்வதையும் , சிலர் இதை கோழைத்தனம் என்றும் கோமாளித்தனம் என்றும் விமர்சிப்பதையும் வலையுலகிலும் , டுவிட்டர் , ஆர்குட் உள்ளிட்ட பிற தளங்களிலும் காண நேர்ந்தது. இன்னும் சிலர் இம்மரணத்தால் எந்த பிரயோசனமும் இல்லை , இது காலத்தால் மறக்கப்படும் பல்லாயிரம் மரணங்களில் ஒன்று , அந்த இளைஞன் தன் உயிரை மாய்த்துக்கொண்டுதான் போராட வேண்டியதில்லை , அறவழியில் போராடி வென்றிருக்கலாம் என்றெல்லாம் பலரும் பல கருத்துக்களை கூறி வந்துள்ளனர். இன்னும் சிலர் அம்மரணத்தை வைத்துக்கொண்டு அதன் பிண்ணனிக்காக புனைவுகள் கூட இயற்ற துவங்கியிருந்தனர். இம்மரணத்தால் முத்துக்குமாருக்கு கிடைக்கும் பாராட்டு அல்லது அம்மரணம் இன்னும் பல இது போன்ற இளைஞர்களின் மரணத்திற்கு வழிவகுத்துவிடுமோ என்கிற அச்சத்தையும் சிலருக்கு தோற்றுவித்திருக்கிறது.

எது எப்படி இருந்தாலும் பலருக்கும் சுவாரஸ்யமில்லாத ஈழப்பிரச்சனையை அனைவரிடத்திலும் புழங்க விட்ட மரணமாய் இது இருந்திருக்கிறது. மாணவர்களிடையே ஒரு புது எழுச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. மாநில அரசே மாணக்கர்களின் புது எழுச்சி கண்டு அஞ்சி நடுங்கி கல்லூரிகளை காலவரையின்றி மூடிவிட உத்தரவிட்டிருக்கிறது. கலைஞர் மீது வெறுப்பை உமிழச்செய்திருக்கிறது. ஜெவிற்கும் சில ஆதரவு அலைகள் பெறுக வாய்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. பிரபாகரன் குறித்தும் ஈழத்தமிழரின் வாழ்வுரிமை குறித்தும் மக்கள்(இன்றைய இளம் தலைமுறை) அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது. தமிழகத்தில் பலருக்கும் மிகத்தேவையான இன்ஸ்டன்ட் ஈழத்தமிழர் ஆதரவை பெருக்கியிருக்கிறது. வைகோ,திருமா போன்ற அரசியல் அப்பரசண்டிகளும் மரணத்தை வைத்து ஆதரவு பெற முயற்ச்சிப்பது எப்படி என கற்றுக்கொடுத்திருக்கிறது. ஈழ ஆதரவென்பது கலைஞர் எதிர்ப்பாய் ஆன ஒரு சிக்கலான பிரச்சனையை திராவிட எதிர்ப்பாய் மாற்ற ஒரு குடுமிவைத்த கும்பல் முயற்சிக்கிறது. அடேங்கப்பா ஒரு சாதாரண DTP ஆபரேட்டரின் மரணம் எப்படி இத்தனை பிரச்சனைகளுக்கு விதையானது. அவனது இறுதி அஞ்சலியில் கடலென திரண்டிருந்த மக்கள் வெள்ளமும் அங்கே ஒலித்த முத்துகுமாருக்கு வீரவணக்கம் என்னும் பேரொலியும் மக்களின் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியும் அத்தனை எளிதில் அடங்கிவிடுமா என்ன?

இதை கோழைத்தனம் என்றும் இம்மரணம் மறக்கப்பட்டுவிடும் என்றும் மார்த்தட்டியவர் முகத்தில் கரிபூசச்செய்த நிகழ்வுகள் அல்லவா மேல் சொன்ன சில உதாரணங்கள்.

அவனது மரணம் ஈழத்தமிழருக்கான புதியதொரு விடியலாய் அமைந்தால் மிக்க மகிழ்ச்சியே. இருப்பினும் வலைப்பதிவர்களாகிய நாம் அதற்கு என்ன செய்து விட முடியும். அந்த இளைஞனின் மரணத்தில் நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். இன்றைய நம் இளைஞர்களில் பெரும்பாலோர் தற்கொலை செய்துகொள்வதே ஏதோ காதல் தோல்விக்குத்தான் என்று எண்ணி வரும் நிலையில் , ஒரு இனத்தின் அழிவினைக் கண்டு அதற்காக தன்னுயிரையும் தர தயாரான ஒருவன் நம்மிடையே இருக்கிறான் என்பதே நமக்கு பெருமைதானே. பத்திரிக்கையில் பணியாற்றினாலும் அவன் ஒரு வலைப்பதிவராக இருந்திருந்தால் நிச்சயம் அனைவராலும் கவனிக்கப்பட்டிருப்பான். சரி ஒரு பதிவராக அவனுக்கு என்னதான் செய்வது. ஒன்றுமில்லை. அவனுக்காக ஒரு அஞ்சலி கூட்டம் இவ்வாரம் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துங்கள் . அதோடு நிற்காமல் உங்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கு அவனது இறுதி அறிக்கையின் நகலை கொடுத்து வாசிக்கச் சொல்லுங்கள்.(உடன்பாடிருந்தால்!) .

இவ்வாரம் அதையொட்டி சென்னையில் சகோதரர் முத்துக்குமார் அவர்களுக்காக ஒரு அஞ்சலிக்கூட்டம் அல்லது வீரவணக்கக்கூட்டம் நடத்தலாம் என பதிவர்கள் ஒன்று கூடி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இடம் - நடேசன் பார்க் , திநகர் சென்னை.

நாள் - 08-02-2009

நேரம் - மாலை 4 மணி முதல் கூட்டம் முடியும் வரை ( தோராய.. 6மணி)

இந்த இரங்கல்க்கூட்டத்தில் அனைத்து பதிவுலக நண்பர்களும் கலந்துகொள்ளுமாரு அழைக்கிறோம்.

மேலும் விபரங்கள் அறிய மற்றும் தொடர்புக்கு...

அதிஷா - 9884881824

ஆழியூரான் - 9840903590

சுகுணாதிவாகர் - 9790948623

லக்கிலுக் - 9841354308

ஒருங்கிணைப்பு : ஒடுக்குமுறைக்கு எதிரான வலைப்பதிவர் குழு.

********************************