Pages

29 May 2009

டெசி பாபா!



எங்கள் நண்பர் குழாமில் நான் மிகப்பெரிய அப்பாவி. கோகுல்தான் முதன்முதலில் இன்டர்நெட் குறித்து பேசத்துவங்கியவன். மாமா டவுன்ஹால் பக்கத்தில புதுசா ஒரு கம்ப்யூட்டர் சென்டர் வந்திருக்குடா அதுல செம சீன்ரா என்று உசுப்பேத்தி விட்டான்.

அப்போதெல்லாம் அன்றாடம் மாலை வேளைகளில் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தேவாரமும் திருவாசகமும் பாராயனம் இருக்கும் , நெற்றி நிறைய பட்டையும் வெள்ளை வேஷ்டியுமாய் பார்க்க பக்திப்பழமாய் காட்சி அளிப்பேன். எட்டு மணிக்குத்தான் முடியும். நானும் சந்துருவும் முதல் முதலாக அன்றைக்குத்தான் முடிவெடுத்தோம். டவுன்ஹால் அருகிலிருக்கும் அந்த கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய் பார்த்து விடுவதென்று.

இருவருமாக வெக்கு வெக்கு என முக்கி முக்கி பின் சென்டர் அருகில் சென்றதுமே பம்மி பம்மி உள்ளே நுழைந்தால் ஒரு பெரிய அண்ணன் ஆஜானுபாகுவாய் அமர்ந்திருந்தார். என்னப்பா வேணும் என்றவரிடம் அசட்டுத்தனமாய் சிரித்துவிட்டு ஒன்னுமில்லண்ணா சும்மா பாத்துட்டு போகலாம்னு வந்தோம், வரோம் .. என்று பேக் அடித்து எஸ்ஸானோம். சே மிஸ்ஸாகிருச்சே.. என்னடா மாப்ளே... என்று சந்துரு மிகவும் வருத்தப்பட்டான்.

நான் மட்டும் என்ன இதற்காக வேண்டிக்கொண்டா அங்கு சென்றேன் அங்கு போனபின் என்ன கேட்கவேண்டும் என தெரிந்தால் கேட்டிருக்கமாட்டேனா? எனக்குமட்டும் என்ன ஆசையா சீன் பார்க்காமல் வர வேண்டும் என்று. எக்ஸ்க்யூஸ்மீ சார் ஒரு இரண்டு சீன் பார்க்கவேண்டும் அனுமதி கிடைக்குமா என்றா போய் கேட்க முடியும்.. பேசாமல் சந்துருவும் நானும் டிஸ்கஸ் பண்ணியபடியே அவரவர் வீட்டிற்கு கிளம்பினோம். மீண்டும் நண்பர் குழாம் மீண்டும் கோகுல் மச்சான் முந்தாநாள் சென்டர்ல ஒரு சீன் பார்த்தேன் பாரு சூப்பர்டா.. அதும் ஒரு பொண்ணு ஒரு பெப்ஸி கேனே......என்று அவன் பேச சுற்றியிருக்கும் பதினெட்டுப்பட்டி பிரண்ட்ஸ்க்கும் வாயில் ஜொள்ளு ஒழுகும்.

சந்துருவும் நானும் ஒரு சுபமுகூர்த்த நாளில் முடிவெடுத்தோம் தனிப்படையெடுப்பு எடுபடாது. இனி குழுப்படையெடுப்பு ஒன்றே குறி என. கோகுலிடம் சரண்டைந்தோம்.

''மாமா காசு வேணா தரோம் ஒருவாட்டி கூட்டிட்டு போடா.. '' என்று சந்துரு கெஞ்சினான்.

''டே அங்க யார் வேணா போலாம்டா.. இதுக்கேண்டா கெஞ்சற ஆனா எனக்கு ஒரு வில்ஸ் ஸ்பான்சர் பண்ணனும்'' என கன்டிசன் வைத்தான்.

சந்துருவோ '' வில்ஸ்னா ஒன்னு ஒன்னு இரண்டு என டே இரண்டேகால்ரூவாடா '' என்று என் காதைக்கடித்தான். '' நாம கட் ஆஃப் போட்டுப்போம் அவனுக்கு ஒன்னு வாங்கிக்குடுத்துருவோம்டா '' என்றேன்.

மூவருமாய் அந்த சென்டருக்கு இரண்டாம் முறை படையெடுத்தோம். அதே ஆஜானு பாகு ஆள். அதே இடம். எங்கள் இருவர் நெற்றியிலும் பட்டை , கழுத்தில் கொட்டை , வெள்ளை வேட்டி வாயில் கேவலமான அசட்டு சிரிப்பு.

கோகுல் உள்ளே நுழைந்ததும் பிரவுசிங் எனக் கேட்டான். சந்துரு நோட் பண்ணிக்கொண்டான். பிரவுசிங் பிரவுசிங் பிரவுசிங் மனப்பாடம் செய்து கொண்டான்.

நாலாவது கேபின் என்றார் ஆஜானுபாகுஅண்ணன்.

மூவருமாய் நடந்து அந்த நாலாவது கேபினை அடைந்தால் அது ஒரு நாலுக்கு நாலு கேபின். அதில் பாதியை கம்யூட்டர் அடைத்துக்கொண்டிருந்தது. மீதியை ஒரு குட்டி நாற்காலியும் அதனருகில் பெரிய நாற்காலியும் அடைத்துக்கொண்டிருந்தது. கோகுல் பெரியதில். நான் சின்னதில். சந்துரு நிற்கக்கூட இடமில்லை.

''டேய் நீ வேணா வெளிய நில்லேன்.. '' என்றேன்

சந்துரு முறைத்தபடி வெளியவாடா வச்சுக்கிறேன் என்பது போல வெளியேறினான்.

கோகுல் கணினி திரையில் நீலநிற ஈ எனும் ஆங்கில எழுத்தை அழுத்தினான். திரை முழுக்க வெள்ளையாகிப்போனது. உச்சியிலிருந்த இடத்தில் மௌசால் அமுக்கி கிளிக்கி டபிள்யூ டபிளயூ டபிள்யூ புள்ளி டி ஈ எஸ் ஐ பி ஏ பி ஏ புள்ளி சி ஓ எம் என அழுத்தினான் பிறகு கீபோர்டில் என்டர் என்ற பட்டனை டொக் என அழுத்த..

வெகு நேரமாக வெள்ளையாகவே இருந்தது அந்த வெள்ளைத்திரை. கீழே நீலநிறத்தில் ஒரு நிரப்பி ஓடிக்கொண்டிருந்தது. ''மச்சான் இது புல் ஆனாதான்டா ஓப்பன் ஆகும்'' என்றான்.

விபூதி நெற்றியிலிருந்து வியர்வையில் களைந்து வழிந்து கொண்டிருந்தது.

அந்த நீலம் முழுமையடையும் நேரம் பார்த்து புசுக் கரண்ட் போய் விட்டது.

வெளியே வந்தவன் ஆ.பா அண்ணனிடம் எவ்ளோண்ணா.. என்றான்.

இருபது ரூபாய் என்றார்.

சந்துரு வெறுப்போடு பாக்கெட்டில் இருந்து இருபதைக்கொடுத்தான்.

மூவரும் இரண்டு வில்ஸை பற்றவைத்துக்கொண்டு அமைதியாய் அமர்ந்திருந்தோம்.

''மச்சான் கரண்ட் போயிருச்சுடா ஒன்னுமே பாக்கலைடா.. '' என்றேன் சந்துருவிடம்.

''டேய் இவ்ளோ நேரம் இருந்துட்டும் ஓன்னும் பாக்கலைனா யார்டா நம்புவா..''

''மச்சி பிராமிஸாடா.. படிப்பு பிராமிஸ் ''

***********


மற்றொரு நாள் வேதபாடசாலை முடிந்த நேரம். சந்துரு என்னிடம் இன்றைக்காவது போகலாமா என்றான். சரி வா என்று முடிவாகி கிளம்பினோம்.

உள்ளே நுழைந்ததும் இன்று ஆ.பா அண்ணனை காணவில்லை. ஒரு அழகிய பெண்தான் இருந்தாள். அவளும் எங்களுக்கு அக்காளைப்போலிருந்தாள். என்ன என்பதை பார்த்தாள். எங்களது கோலத்தைப் பார்த்து பிச்சை எடுக்க வந்ததாகவோ அல்லது கோவிலுக்கு நிதி கேட்டு வந்ததாகவோ நினைத்திருக்க வேண்டும்.

சந்துரு ஆர்வமாய் மனப்பாடம் பண்ணி வைத்திருந்த அந்த பிரவுசிங் எனும் வார்த்தையை முதலில் உதிர்த்தான்.

அவள் மூனாவது கேபின் என்றாள். எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. மூன்று என் ராசி எண்.

நான் பெரிய சேரில் அவன் சிறியதில். நீலநிற ஈ யை கிளிக்கினேன். வெள்ளைத்திரை வந்தது. டபிளயூ டபிள்யூ டபிள்யூ டாட் டெசிபாபா டாட் காம் என டைப்பினேன். சிறிய நேர இடைவெளிக்குப்பின் கண் முன்னே கவர்ச்சித்திருவிழா. ஆனால் எல்லாமே சிறிய சிறிய படங்களாய் இருந்தது.

சந்துரு அந்த படத்தை அமுக்கி பார்க்க ச்சொன்னான். அமுக்கினேன்.. படபடவென பட்டாசு வெடித்ததுபோல நிர்வாணப்பெண்கள் பெட்டி பெட்டியாய் நூற்றுக்கணக்கில் வெள்ளைத்திரை மறைய மறைய மறைக்க முடியாத அளவுக்கு , ஒன்றொன்றாய் பார்க்ககூட அவகாசமில்லை அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்தது.

கணினி வேறு கீ கீ என கத்திகொண்டே இருந்தது. அதற்குள் ஒரு மணி நேரமும் முடிந்திருந்தது. அந்த பெண் கேபின் அருகில் வந்து முடிச்சிக்கிறீங்களா என்றாள். நானும் சரியென்று எழுந்தேன் சந்துரு கையைப்பிடித்து இழுத்தான். டேய் இதெல்லாம் எப்படிடா நிறுத்தறது என்றான்.

? அதுதான் தெரியாதே.. அதை சொல்லித்தரலையேடா அந்த பாதகன். ஆஹா மாட்டிகிட்டோம்டா.. அதற்குள் நான் பாக்கெட்டில் இருந்து 50 ரூபாயை கொடுத்திருந்தேன்.

மாமா வாடா ஓடிரலாம். எவனாவது பார்த்தா சாவடிதான். அதும் அந்த பொண்ணு பார்த்தா நான் தூக்குல தொங்கி செத்துருவேன். என்று கிசு கிசுக்க இருவரும். அவசர அவசரமாக சென்டரை விட்டு வெளியேறி ரோட்டை கிராஸ் செய்து வீட்டை நோக்கி ஓடினோம். கொஞ்ச தூரம் போய் பின்னால் பார்த்தால் நல்ல வேளை யாரும் துரத்த வில்லை.

அதற்கு பின் சில வாரங்கள் சென்டர் பக்கம் கூட இருவரும் போகவில்லை.

ஒரு நாள் கோவிலில் நானும் சந்துருவும் பூஜை டியுட்டியில் இருந்த தினமது. அந்த பெண்ணும் ஆ.பா அண்ணனும் என்னிடம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றார். என் முகத்தைப்பார்த்ததும் தெரிந்து கொண்டவராய் ''சாமி நீங்க நம்ம கடைக்கு வந்திருக்கீங்கல்ல'' என்றார்.

''ஹிஹி '' அதே அசட்டு சிரிப்பு , பக்கத்தில் முருகன் சன்னதியில் சந்துருவுக்கு டியூட்டி.

நான் அர்ச்சனை சாமிக்கு செய்தாலும் கண் என்னவோ அந்தல இருவரையுமே பார்த்துக்கொண்டிருந்தது. அந்த பெண் ஆ.பா அண்ணனிடம் ஏதோ கீழே குனிய அழைத்து காதில் கிசுகிசுக்க அவர் என்னைப்பார்த்து முறைத்தார்.

நான் கைகள் நடுங்கியபடி அவரது அர்ச்சனை பொருட்கள் கூடையை திருப்பித்தர , அவர்
''என்ன சாமி அன்னைக்கு மீதி பணம் வாங்காம போயிட்டீங்களாம்.. இந்தாங்க '' என்றபடி பாக்கட்டில் இருந்து 30 ரூபாயை எடுத்துத்தர..

நிம்மதியாய் அடுத்த அர்ச்சனையை கன்டினியூ செய்தேன்.

அந்த பெண் வெகு தூரம் போய் என்னைப்பார்த்து விரலால் கொன்னுடுவேன் படவா என்பது போல் சைகை செய்தபடி சென்றாள். வேர்க்க வைக்கும் சிரிப்பு.


*******************