Pages

05 July 2010

சின்ன பந்தும் பெரிய பந்த்ம்



எங்களுக்கெல்லாம் பந்த் என்பதே ஒரு திருவிழாவைப் போல! பந்த் நடக்கும் நாளுக்கு முந்தைய நாள் இரவெல்லாம் கண்களில் கனவுகளோடே உறங்குவோம். பந்த் அன்று பள்ளி விடுமுறையோடு , எங்கள் தெருவும் வெரிச்சோடி இருக்கும். கிரிக்கெட் விளையாட இதைவிட நல்ல இடம் வேறெங்கும் கிடைக்காது. நிறைய வாகனங்கள் வீட்டு வாசல்களில் நிற்கும். பந்தைப்பார்த்து அடிக்க வேண்டும். ஓங்கி அடித்தால் கார் அல்லது மோட்டார் சைக்கிள் எதனுடையா பின்னோ முன்னோ உடைந்து எங்கள் பந்து பிடுங்கப்படும். பந்த் நாளில் பந்து வாங்க முடியாமல் போனால் அன்றைய தினமே வீணாகும் அபாயமிருப்பதால், வாகனங்களில் பந்தை அடித்தால் அவுட் என்கிற விதி எங்களால் கிரிக்கெட் வளர்ச்சிக்காக எழுதப்பட்டது.

எங்கள் அப்பாக்கள் ஞாயிற்றுக்கிழமைகளைப் போல லுங்கி அணிந்துகொண்டு தெருமுக்குகளில் நின்றபடி அரசியல் பற்றி நிறையப் பேசுவர். தொந்தரவில்லாத வரை அவரோ அவருடைய அரசியலோ எங்களுக்கு பிரச்சனையில்லை. அப்பாக்கள் மீதோ மாமாக்கள் மீதோ பந்து படாத வரைக்கும் பிரச்சனையில்லை, பந்தை கையில் வைத்துக்கொண்டு வாடா என்று மிரட்டல் தொனியில் அழைத்து காதை ஒற்றைக்கையால் திருகி , ஏன்டா அறிவில்ல , நீ எக்ஸ் வூட்டு பையன்தான.. இந்த பொறுக்கி பசங்களோட சேர்ந்துட்டு என்ன விளையாட்டு , நாட்டுல எவ்ளோ பெரிய பிரச்சனைனு பந்த் நடத்தினா என்று பந்தை கொடுக்காமல் தேவையில்லாததை பேசுவது எங்கள் மீதான தொடர்ச்சியான அராஜகத்தின் குறியீடு.

எங்கள் ஏரியாவில் சிவப்பு கொடி கட்டிய குடிசையில் கூடிப்பேசும் அண்ணன்கள் , எங்களையும் பந்த் அன்று அவர்களோடு எங்கோ செல்ல அழைப்பதுண்டு. அவர்களோடு போனால் எங்கள் டீமை யார் காப்பாற்றுவது நாங்கள் போகமாட்டோம். ஒரு முறை தெரியாத்தனமாக போய் வெயிலில் ஒழிக ஒழிக என்று கத்திக்கொண்டு கையில் கொடியோடு அலைந்ததாக நினைவு. விலையேறிப்போச்சு , உங்கப்பாவுக்கு கஷ்டம், குடும்ப கஷ்டம், ஆட்சியாளர்கள் தவறு என்று தத்துபித்துவென்று உளறிக்கொட்டும் அண்ணன்களுக்கு எங்கள் கிரிக்கெட்டும் பந்தும் எப்போதும் கசப்புதான். இதில் அவர்களுடைய குடிசைக்குள் வந்து புத்தகங்கள் படிக்கவும் வற்புறுத்தினர். ஞாயிற்றக்கிழமைகளில் டிவிக்காரர் வீட்டு வாசலில் டிவி பார்ப்பதையே நாங்கள் விரும்பினோம். அதிலும் கிரிக்கெட் ஆட்டங்கள் எங்களை பெரிதும் கவர்ந்தன. சிகப்பு அண்ணன்களை எங்களுக்கு பிடித்ததே இல்லை, அவர்களைப்போல் ஒருநாளும் ஆகிவிடக்கூடாது என்று நாங்களும் நினைத்தோம் அப்பாக்களும் அந்த உருப்பாடதவன்களோட பேசறத பார்த்தேன் என்று மிரட்டியது இன்னும் வசதியாக இருந்தது.

எங்கள் தெருவெங்கும் பாரத் பந்த் என்று எழுதப்பட்ட சுவர்களை பார்க்கும் போதெல்லாம் தேதி குறித்துக்கொள்வோம். அப்பொதெல்லாம் தெருவில் டார்னமென்ட் , பெட் மேட்ச்கள் கூட நடத்துவோம். இதற்காக நாளைந்து நாள் உழைத்து தெருதெருவாக அலைந்து மற்ற தெருவோர டீம்களையும் எங்கள் தெருவில் ஆட அழைப்போம். எங்கள் தெரு அளவிலும் அகலத்திலும் சற்றேறக்குறைய மற்றவர்களுடையதை விடவும் பெரியது. பந்த்தெல்லாம் முக்கிய சாலையைக் கடந்து மெயின்ரோட்டில்தான். எங்கள் தெரு டவுன்ஹால் ரோட்டிலிருந்து மிகமிக உள்ளே இருந்தது , போட்டியை எங்கள் தெருவில் நாங்களே ஒருங்கிணைக்க வசதியாக இருந்தது. அங்கே நாங்கள் போவதற்கான வாய்ப்பு பூஜ்யத்திற்கும் குறைவான சதவீதமே.

பந்த் அறிவிக்கிற அரசியல்வாதிகளுக்குக் கூட பந்த் குறித்து இத்தனை ஆர்வமிருக்காது. பள்ளியில் பந்த்க்கு முந்தைய நாள் மாலை , ஆசிரியர் எப்போது நாளைக்கு லீவு என்று சொல்லுவார் என அவருடைய திருவாயைப் பார்த்துக்கொண்டேயிருப்போம். சில நேரங்களில் அவர் அதை சொல்லாமலும் இருப்பதுண்டு. அது மாதிரி நேரங்களில் காலை எழுந்ததும் தெருவிலிருங்கி பார்த்தால் ஆங்காங்கே லுங்கி கட்டிய மாமாக்கள் காதைக்குடைந்தபடி கையில் தினதந்தியோடு இன்னைக்கு பஸ் ஓடாது, ஆட்டோ ஓடாது ஆபீஸ் லீவு பேப்பரைப் பார்த்து சொல்லிக்கொண்டிருப்பதை ஆர்வத்தோடு அருகிலுருந்து பார்ப்போம். அவர்களுடைய திருவாயிலிருந்தாவது ஸ்கூல்லாம் லீவு என்கிற வார்த்தை வராதா என்கிற ஆர்வம் எங்களிடம் தொக்கி நிற்கும். நாங்களும் நிற்போம். ஸ்கூல் லீவென்று சொல்லிவிட்டால் போச்சு.. ஓட்டம்தான்.

ஓட்டம் தெருமுனையில்தான் நிற்கும். அதற்குபின் அனைவருமாய் திட்டமிட்டு காரியத்தில் இறங்குவோம். கிரிக்கெட் ஆட்டத்தில் வெற்றிபெறவும் யார் முதல் டவுன், முதல் பவுலிங் தொடங்கி பலவும் விவாதிக்கப்படும். வீட்டில் அம்மாவினுடைய கடைக்கு போயிட்டு வா ராஜா தொல்லை இருக்கவே இருக்காது.. கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். அதனால் மகிழ்ச்சியாக இருட்டும் வரை விளையாட்டு.. இருட்டியபின் குட்டிசுவற்றில் அமர்ந்து கொண்டு அதுகுறித்த விவாதம் என எங்களுடைய பந்த் கழியும்.

ஏதாவது பெரிய சிக்கலாக இருந்தால் எங்கள் தெருமுனையில் கையில் கம்போடு நாலைந்து போலீஸ்காரர்கள் அமர்ந்திருப்பார்கள். எங்கள் பெற்றோரைப்போலவோ எங்கள் தெருக்காரர்களைப்போலவோ அவர்கள் கெட்டவர்கள் அல்ல. மிகமிக நல்லவர்கள். எங்களுக்கு மூன்றாவது அம்பயராக எப்போதும் செயல்படுவார்கள். எங்கள் கேப்டன்களுக்கு அறிவுரை கூறுகிறவர்களாகவும் இருப்பதுண்டு. ஒருமுறை எங்கள் டோர்னமன்ட் பைனலில் கான்ஸ்டபிள் கொடுத்த ஐடியாவை வைத்துத்தான் அவனை அவுட்டாக்க முடிந்தது. ராகுல் திறமையான பேட்ஸ்மேன், அவனுடைய பெயரான தமிழ்ச்செல்வன் என்பதை திராவிட் மீதிருந்த தீராத ஆர்வத்தால் ராகுல் என மாற்றிக்கொண்டவன். இப்போதும் அந்த கான்ஸ்டபிள்களின் உதவியை மறக்கமுடியாது.

பெப்சி குடிப்பதை போல காலி பெப்சி பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு, விளையாடும் போது ஸ்டைலாக குடித்து மகிழ்வோம். அது எங்களுக்கு உற்சாகமூட்டியது. அந்த நீரையே பெப்சியாக நினைத்து, குடிக்கும் எங்களை சச்சினாகவும் திராவிடாகவும் கற்பனை செய்து கொண்டோம். எங்கள் எதிரணிக்கு பெப்சி பிடிக்காது எப்போதும் சேவாக்கின் செவன் அப்தான். அதனால் செவன் அப்பின் காலி பாட்டிலில் தண்ணீரோடு வந்துவிடுவார்கள். எங்கள் அணிக்குப் பெயரோ பெப்சி பெருமாள் கோவில் வீதி ராக்கர்ஸ்.. அவர்களுடைய வண்டிக்காரவீதி செவன் அப் கிங்ஸ்!

ஒருமுறை ராகுல் கேட்டான் மச்சி இது மாதிரி வருஷத்துக்கு அஞ்சாரு பந்த் நடத்தினா எவ்ளோ நல்லாருக்கும் என்று. எனக்கும் கூட அது நல்ல யோசனையாகத்தான் இருந்தது. இதோ இப்போது வளர்ந்து விட்டோம். இப்போதும் ஒரு பாரத் பந்த். சுவர்களில் எழுதப்படாத.. தேதி இல்லாத... பாரத் பந்த்.

படம் உதவி - நன்றி உஷா சாந்தாராம் (http://fineartamerica.com)