Pages

24 January 2011

பாவம் விஜய்!




வீரதீர சாகசங்களில் அதீத ஈடுபாடு கொண்டவன் நான். ஆனாலும் அண்மைக்கால விஜய் படங்களை தியேட்டரில் சென்று காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்குமளவுக்கு வீரமோ நெஞ்சுரமோ எனக்கு எப்போதுமே இருந்ததில்லை. சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளுமளவுக்கு என் விதி வலியது. அது என் நண்பனின் வடிவில் என்னை காவு கேட்கும் போது யாரால் அதை தடுக்கவியலும். ஆமாம் நண்பர்களே.. நான் காவலன் படத்தை எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் தியேட்டரில் என் சொந்தகாசில் பார்க்க நேர்ந்தது.

இது நிச்சயம் விஜயின் முந்தைய படங்களான வேட்டைக்காரன்,சுறா மாதிரியான அதிரடி ஆக்சன் திரைப்படம் கிடையாது என நண்பர் என்னையே தூக்கிப்போட்டு தாண்டி சத்தியம் செய்தமையால் வேறு வழியின்றி படத்திற்கு செல்ல நேர்ந்தது. அதுவுமில்லாமல் பிரண்ட்ஸ் திரைப்படம் எடுத்த சித்திக் இயக்கம் என்பது என் எதிர்பார்ப்புகளையே எதிர்பார்ப்புக்குள்ளாக்கியிருந்தது.

படத்தின் கதையென்னவோ வசீகராவில் நாலு ஸ்பூன், காதலுக்கு மரியாதையில் ரெண்டு ஸ்பூன், துள்ளாத மனமும் துள்ளுமிலிருந்து ஒரு சிட்டிகையென இது வரை விஜய் நடித்த நல்ல படங்களின் கதைகளையே கலந்து கட்டி ரீமேக்கியிருப்பது தெரிந்தது. பாவம் விஜய் இதுவரை தெலுங்கு மலையாள படங்களை மட்டுமே ரீமேக்கி வந்தவர், இப்போது அவர் படங்களை அவரே நடித்து ரீமேக்குகிற துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருப்பது சன்பிக்சர்ஸின் சதியாக இருக்கலாம்.

உதவாக்கரை இளைஞனாக விஜய் நடிக்கும் எத்தனாவது படம் என்று நினைவில் இல்லை. எனக்கு தெரிந்தவரை விஜய் தான் நடிக்கும் எல்லா படங்களிலுமே வேலை வெட்டிக்கு போகாமல் ஊர்சுற்றி வெற்று வம்புக்கு அலைபவராகவே இருக்கிறார். இதிலும் அப்படியே! வேலாயுதத்திலாவது ஏதாவது வேலைக்கு போகிறவராக காட்டினால் என்னை போல விஜயின் அதிதீவிர ரசிகர்களுக்கு நன்மை பயக்கும்.

படத்தின் கதை இரண்டாபாதியின் இரண்டாம் பாதியில்தான் தொடங்குகிறது. அதுவும் அடுத்த சில நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. அதற்குபின்னும் தேவையில்லாத காட்சிகளால் படம் நீண்டுகொண்டே போவது நல்ல தூக்கமாத்திரை. முதல் பாதி காமெடி பிரண்ட்ஸ் அளவுக்கு இல்லையென்றாலும் புன்னகைக்க வைக்கிறது. பெண்களுக்கு பிடிக்கலாம். இரண்டாம் பாதி காமெடியும் இல்லாமல் சீரியஸும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே விஜயை வைத்து காமெடி கீமெடி பண்ணியிருக்கிறார்கள். சிரிப்பு வரலை அழுகையும் வரலை.. அதிலும் அந்த கிளைமாக்ஸ் டுவிஸ்ட்.. முடியல! டைரக்டரே என்ன பண்றதுனு தெரியாம கன்பீஸ் ஆகிட்டார் போல.. என்னென்னவோ செய்கிறார்.

அஸினைவிட அவருக்கு சைட்கிக்காக வரும் கேரளத்து ஓமனக்குட்டியும், வடிவேலுக்கு ஜோடியாக வரும் நீபாவும் நல்ல அழகு. அதிலும் நீபாவை வச்சகண்ணு மாறாம பார்த்துகிட்டே இருக்கலாம். வடிவேலு காமெடி சுறாவை விட பரவாயில்லை. ராஜ்கிரணும் ரோஜாவும் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் எல்லாமே எரிச்சலூட்ட.. பூங்காவில் விஜயும் அஸினும் பேசிக்கொள்கிற ஒரே ஒரு காட்சி ஆறுதல். விஜய் நிஜமாகவே அந்த காட்சியில் மட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார். ப்ளீஸ் நோட் திஸ் பாய்ன்ட்.. நன்றாக நடித்திருக்கிறார்.

படத்தின் பாடல்களில் யாரது யாரது.. தவிர்த்து மற்ற எல்லாவுமே தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட டப்பிங் பாடல்களின் தரத்தில் அருமையாக இருந்தன.
பெண்களுக்கு இந்தப்படம் ஏனோ மிகவும் பிடித்திருக்கிறதென்பது ஆச்சர்யம். நிறையபேர் படம் நன்றாயிருப்பதாக சொன்னதை தியேட்டரில் கேட்க முடிந்தது.

ஒரு பாடல் காட்சியில் துணிவே துணை ஜெய்சங்கர் கெட்டப்பில் தலையில் குருமாவை கொட்டியபடி விஜய் வருகிறார். (மேலே பார்க்கும் படம் அந்த பாடலின் போது எடுக்கப்பட்டதே!) தியேட்டரே சிரித்து மகிழ்கிறது.

முதல் பாதி பாடிகார்ட் மொக்கையை தவிர்த்துவிட்டு.. இரண்டாம்பாகத்தையே முன்னும் பின்னுமாக நீட்டியிருந்தால் இன்னொரு காதலுக்கு மரியாதையாய் இருந்திருக்க வேண்டிய படம்.. முதல் பாதி மொக்கையால் ஏடிஎம் வாசலில் அமர்ந்திருக்கும் வயசான செக்யூரிட்டியை போல பலமில்லாத முதியவராக காட்சியளிக்கிறார் இந்த காவலன். படம் முடிந்த பின் நண்பரிடம் கேட்டேன் படம் எப்படி பாஸ்.. ஆஹா சூப்பர்.. அழுதுட்டேன் என்றார். தியேட்டரில் சில இளசுகளோ என்ன இழவு படம்டா என நொந்து கொண்டதையும் பார்க்க முடிந்தது. எனக்கு படத்தை விட எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டரில் கிடைத்த வெஜ் பப்ஸ் பிடித்திருந்தது. பாவம் விஜய்.. அவரை வேலாயுதமாவது காப்பாற்றும் என நம்புகிறேன். அண்மையில் ஒரு உதவி இயக்குனரோடு பேசிக்கொண்டிருந்த போது விஜய்கிட்ட கதை சொல்லப்போனா பாதி கதைல தூங்கிருவாருங்கன்னாரு.. அது உண்மையா பொய்யா என்பது தெரியாது.. இனிமேலாவது விஜய் உஷாராக இருப்பது அவருக்கும் நல்லது என்னைபோல் ரசிகர்களுக்கும் நல்லது.

புரட்சி வேட்கை கொண்டவர்களும் அஞ்சாத நெஞ்சம் கொண்டவர்களும் காவலனை ஒரு முறை பார்க்கலாம்.

கடைசியாக ஒரு எச்சரிக்கை!