Pages

10 November 2011

கழிவறை காதை!





படுக்கையில் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது வாசலில் பெண் குரல்..’’மேடம்! மேடம்’’

ச்சே இந்த சேல்ஸ் பொம்பளைங்களுக்கு நேரங்காலமே கிடையாதா விடிஞ்சும் விடியாம வந்துட்டாங்களே.. என்று மனதிற்குள் நினைத்தபடி..

‘’அம்மா, வாசல்ல யாருன்னு பாரு!’’ என்று சத்தம் போட்டுவிட்டு மீண்டும் போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டேன். சில நிமிடங்களில் அம்மா திரும்பிவந்து மீண்டும் சமையலறைக்குள் படையெடுக்க...

‘’யாரும்மா.. என்னவாம்’’

‘’ஒன்னுமில்லே! யாருனே தெரியல.. பக்கத்துல சர்ச்சுக்கு வந்தாளாம்.. கொஞ்சம் உங்க டாய்லெட்ட யூஸ்பண்ணிக்கட்டுமானு கேக்கறா!’’

‘’நீ என்ன சொன்னே’’

‘’யாரோ எவளோ? அதெல்லாம் முடியாது அதோ அந்தப்பக்கம் மூணாவது வீடு இருக்கு பாரு அதுதான் கிரிஷ்டீன் வீடு அங்கே போய் கேளுனு விரட்டி விட்டுட்டேன்’’ என்று பெருமிதமான தொனியில் சொன்னதும் எனக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துவிட்டது.

‘’என்னம்மா மனசாட்சியே இல்லாம இருக்க , மனுஷங்கதானே நாம.. பாவம் சுகர் பேஷன்டோ என்னவோ.. அடுத்தவங்க வீடு தேடி வந்து கேக்கறாங்களே.. உனக்கு கூட சுகர் இருக்குல்ல.. டாய்லெட்தானே ஒருவாட்டி யூஸ்பண்ணிகிட்டா என்னவாம், சொத்தா அழிஞ்சிடும்’’ என கடிந்துகொண்டேன்.

‘’அட நீவேற வீட்டை நோட்டம் விட்டுட்டு போயி நாளைக்கே நாம இல்லாதப்ப வந்து கொள்ளையடிச்சிட்டி போனாலோ , தனியா இருக்கும்போது கண்ணுல மொளகாப்பொடி தூவிட்டு செயின களவாண்டு போயிட்டா என்னடா பண்ணுவா.. போடா வேலை மயிற பாத்துட்டு வந்துட்டான் மனிதாபிமானத்துக்கு அத்தாரிட்டி’’ என்று எதிர் சவுண்டு விட.. அடங்கிப்போனேன். அம்மாவின் குரலுக்கு அடங்காதவனும் செந்தமிழனா?

இந்த பொதுக்கழிப்பிட பிரச்சனைகளை நம்மில் பலரும் அடிக்கடி சந்திக்கநேருகிற ஒன்றுதான். நான் மார்க்கெட்டிங் பணியில் இருந்தபோது ஒன்பது மணிக்கு அலுவலகத்திற்கு போனால் ஒன்பதரைக்கு வெளியேறிவிட வேண்டும் என்பது மேனேஜரின் உத்தரவு. வெளியேதான் வேலை. கஸ்டமரை பார்க்க போனால் அங்கேயே கழிப்பிடமிருக்கும். ஆனால் பயணத்தின் போது.. சாலையோரம்தான் ஒரே கதி! வேறு வழியேயில்லை.

மலங்கழிக்க வேண்டுமென்றால் கட்டணமுறை கழிப்பிடங்களை எங்காவது முக்கிய பேருந்து நிலையத்தை தேடிக்கண்டுபிடித்து கழிப்பறையை கண்டறிந்து காசு கொடுத்து க்யூ தாண்டி போய் சேர்வதற்குள் நரகவேதனைதான். சிலநேரங்களில் வேறுமாதிரி ஆயிவிடும்.

ஆண்கள் பரவாயில்லை. பெண்களின் நிலைதான் பரிதாபம். சோப்பு,ஃபீனாயில்,டிக்சனரி விற்கும் சேல்ஸ் பெண்களை அறிவேன். அவர்களுக்கு சாதாரண நாட்களிலேயே இது ஒரு பெரிய தொல்லையாக இருந்தாலும் , மாதவிடாய் காலங்களில் சொல்லவும் வேண்டாம். அதற்காக எந்த ஏரியாவிற்கு சென்றாலும் அங்கே இருக்கிற ஹோட்டலிலோ,கடைகளிலோ இருக்கிற ஆண்களிடம் சிரித்துப்பேசி அங்கேயிருக்கிற கழிவறையை உபயோகிப்பதை பார்த்திருக்கிறேன். சிலர் வீடுகள் தோறும் மேடம் கொஞ்சம் யூஸ்பண்ணிக்கட்டுமா என கெஞ்சிக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன்.

நமக்கெல்லாம் வீடு இருக்கிறது, இருக்கிற வீட்டுக்குள்ளேயே பளபளப்பான கழிவறை இருக்கிறது. ஆனால் நம்நிலையே இப்படியென்றால் சென்னையில் வசிக்கிற பதினோறாயிரத்தி சொச்சம் சாலையோரம் வசிக்கிற குடும்பங்களின் நிலையை நினைத்துப்பார்க்கவும் முடியவில்லை. பொதுக்கழிப்பிடங்களில்தான் அக்குழந்தைகளுக்கு எல்லாவித பாலியல் அத்துமீறல்களும் அரங்கேறுகின்றன.

சாலையில் எங்கும் செல்லும் போதும் சாலையோரம் யாராவது சிறுநீர் கழித்தாலோ, மலங்கழித்திருந்தாலோ , மலத்தைக்கண்டாலோ உடனே மூக்கை பொத்திக்கொண்டு ச்சே இவங்களாலதான் சுகாதாரம் கெடுது என வக்கனையாக பேச மட்டும் தெரிந்துவைத்திருக்கிறோம். அதற்கான காரணங்களை பற்றி ஒருநாளும் சிந்திப்பதில்லை. இடிபடும் கோயில்களுக்கு வரிந்துகட்டிக்கொண்டு குரல் கொடுக்கும் நாம் கழிவறைகளுக்காகவும் கொஞ்சமாவது குரல் கொடுக்கலாம்.

வீதிக்கு வீதி எது இருக்கிறதோ இல்லையோ பிள்ளையார் கோயில் ஒன்றை கட்டிவைத்திருக்கிறோம். போட்றா தோப்புகரணத்தை என பார்க்குமிடமெல்லாம் நிறுத்தி குனிந்து குனிந்து போடுகிறோம்! ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பூசாரி வேறு. அதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இருக்கிற இந்த குட்டிக்குட்டி கோயில்களையும் சிறிய பிறமத வழிபாட்டுத்தலங்களையும் கழிவறைகளாக மாற்றி பூசாரிகளை காவலுக்கு நிறுத்திவைத்தாலே கூட வீதிக்கு ஒரு டாய்லெட்டோடு சுத்தபத்தமாக ஆச்சாரமாக வாழ இயலும் என்பது மட்டும் நிச்சயம்.

மதவெறியர்களுக்கு இதைபடிக்கும்போது குபீர் என கோபம் வரலாம்.. வந்துவிட்டுப்போகட்டும். என்றாவது ஒருநாள் அர்ஜன்டாக டூ பாத்ரூம் வரும்போது கழிவறையில்லாமல் அடக்கிக்கொண்டு அலைந்தவர்களுக்கே அந்த வலியும் வேதனையும் புரியும். வழிபாட்டுத்தலங்களைவிடவும் ஏன் கழிப்பறைகள் அவசியம் என்பதை அப்போதுதான் உணரமுடியும். சிறுநீர் முட்டிக்கொண்டு இருக்கையிலும் மலத்தினை அடக்கிக்கொண்டு அலைகையிலும் சொர்க்கமென்றால் அமைதி என்றால் என்னவென்பதை உணரவைக்கும் ஆற்றல் கழிவறைகளுக்கு மட்டுமேயுண்டு, எந்த தெய்வத்தாலும், எந்த வழிபாட்டுத்தலத்தினாலும் அந்த மகிழ்ச்சியை கொடுத்துவிடயலாது. திருப்பதி வெங்கடாஜலபதியின் சொத்தில் பாதி இருந்தால் கூட அரசே நமக்கு லட்சக்கணக்கில் இலவச கழிப்பறைகளை கட்டித்தரமுடியும! என்ன செய்ய காட் இஸ் க்ரேட்!

அரசுதான் கழிப்பறைகளை கட்டித்தர முன்வரவேண்டும்.. அரசே செய்யாட்டி நாங்க என்னபண்றதாம் என கேள்விகளை அடுக்க வேண்டாம். கோயில்களை நாமே கட்டிக்கொள்ளவில்லையா? ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால் கிடைக்கிற புண்ணியத்தைவிடவும் அவசரமாக உச்சா வருது சார் பாத்ரூம் யூஸ்பண்ணிக்கவா என கேட்கிறவனுக்கு டாய்லெட்டை அளித்தும் புண்ணியம் பெறலாம். அல்லது உங்கள் பகுதியில் பொதுக்கழிப்பிடமில்லையா மக்களை ஒன்றுதிரட்டி ஒரு பொதுக்கழிப்பிடம் கட்டுங்களேன்! கோயில் கட்றதுக்கு மட்டும்தான் டொனேஷன் கலேக்ட் பண்ணுவீங்களா? கக்கூஸ் கட்டவும் அதையே செய்வதில் தவறென்ன வந்துவிடப்போகிறது.

சமூகத்திற்கு உருப்படியாக ஏதாவது செய்ய நினைத்தால் உங்கள் பகுதியில் மரம் நடறேன் செடி நடறேன் குப்பை எடுக்கிறேன் என எல்லோரும் செய்யும் அதையே செய்யாமல் கழிவறைக்கு ஏற்பாடு செய்யலாம்!

சரி அதைவிடுங்க! நமக்கேன் பொல்லாப்பு.

வீட்டில் கதவு தட்டிய அந்த பெண்மணியை குறித்த ஏதோ ஒரு குற்றவுணர்வு உருத்திக்கொண்டேயிருந்தது. அந்தப்பெண் வயதானவராக இருக்கலாம். உடல் ஊனமுற்றவராக இருக்கலாம். சிறுநீரக கோளாறு உள்ளவராகவோ, மாதவிடாய் காலத்து பிரச்சனையிலோ இருந்திருக்கலாம். அவசரமாக ஓடிப்போய் வாசலுக்கு வெளியே எட்டிப்பார்த்தேன்.. அந்தவயதான பெண்மணி மூன்றாவது வீட்டிலிருந்து பொறுமையாக மலர்ந்த முகத்தோடு வெளியே சென்றார். அது அவராகத்தான் இருக்க வேண்டும். அந்த வீட்டினர் உதவியிருக்க கூடும். மனது ஆறுதலடைந்தது. அம்மாவை சொல்லியும் குற்றமில்லை. அம்மாவின் பயம் நியாயமானதுதான். உடனடியாக கவுன்சிலரோடு பேசி பொதுக்கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்.