Pages

16 April 2012

ஓக்கே ஓக்கே!




இடை சுளுக்கிக்கொள்ளும் அளவுக்கு விலா நோக சிரித்துக் கொண்டே ஒரு படம் பார்த்து பல நாளாகிவிட்டது! படம் முடிந்து செல்லும் அழகழகான இளம்பெண்கள் கர்ப்பிணி பெண்கள் போல இடுப்பில் கை வைத்தபடி சிரித்துக்கொண்டே வெளியே செல்வதை பார்க்க முடிந்தது.

அண்மையில் பார்த்த ஓக்கே ஓக்கே (ஒருகல் ஒருகண்ணாடி) திரைப்படம் அப்படி ஒரு மஜாவான அனுபவத்தை நமக்கெல்லாம் தருகிறது. குதித்து குதித்து சீட்டு உடையும் அளவுக்கு கதற கதற சிரிக்க வைக்கிறார்கள் ராஜேஷ்+சந்தானம்+உதயநிதி அன் டீம்! டிக்கட்டோடு வயிற்றுவலிக்கு ஏதாவது மலையாள மாந்த்ரீக இடைவலி தைலமும் இளம்பெண்களுக்கு இலவசமாக கொடுக்கலாம் இயக்குனர் ராஜேஷ்!

ஏற்கனவே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களின் மூலம் தனக்கென்று ஒரு காமெடி முத்திரையை பச்சக் என்று பதித்தவர் ராஜேஷ். முந்தைய படங்களில் எப்படி கதைக்கென மெனக்கெடாமல் சிரிக்க வைத்தாரோ.. சேம் ஃபார்முலா.. இந்தப்படத்திலும் அதையே செய்திருக்கிறார்.

ஓக்கே ஓக்கே படத்தின் கதையும் ராஜேஷின் முந்தைய படங்களில் பார்த்த அதே லவ் டிராஜிடி காமெடிதான். ஒரு வெட்டிப்பையன் ஒரு ப்யூட்டிபுல் பொண்ணை காதலிக்கிறார். அந்த ப்யூட்டி புல் பொண்ணு அந்த பையனை காதலிக்க மறுக்கிறாள். அந்தக் காதல் கைகூட அப்பாவி நல்ல காமெடி நண்பன் உதவுகிறான். காதல் கைகூடியதா? என்பதை வெள்ளித்திரையில் காண்க. ஏற்கனவே இரண்டு முறை எடுத்துவிட்ட அதே கதையை மூன்றாவது முறையாக எடுத்து இந்த முறையும் ஜெயித்து ஹாட்ரிக் அடித்திருக்கிறார்.

படத்தின் நாயகன் என்று விளம்பரப்படுத்தப்படும் உதயநிதி ஸ்டாலினைப் பார்க்க பக்கத்துவீட்டு ஆன்ட்டிகளை உஷார் பண்ணிவிட துடிக்கும் வாலிபன் போல துருதுருவென இருக்கிறார். எந்தவித பில்டப்பும் இல்லாமல் நடிக்க முயற்சித்திருக்கிறார். முதல் படமென்பதால் சில இடங்களில் சொதப்பினாலும் போக போக சரியாகும் என எதிர்பார்க்கலாம். படத்தின் நாயகன் உண்மையில் சந்தானம்தான்!

சந்தானத்திற்கு இன்னும் ஆறு ஜென்மங்களுக்கு கடமை பட்டிருக்கிறார் ராஜேஷ். சந்தானம் மட்டும் இல்லையென்றால் இந்தப்படம் இந்த அளவுக்கு வந்திருக்குமா தெரியவில்லை. படம் முழுக்க சந்தான ராஜ்யம்தான். உள்ளத்தை அள்ளித்தா படத்தை எப்படி கவுண்டமணி இல்லாமல் கற்பனை செய்யமுடியாதோ அதுபோல சந்தானம் இல்லையென்றால் இந்தப்படம் வெடிக்காத பட்டாசு போல நமுத்து போயிருக்கும் !.

ஹன்சிகா மோதுவானியை பற்றி ஒரு வரியாவது சொல்லவில்லையென்றால் இந்த விமர்சனக்கட்டுரை முழுமையடையாது. ராஜேஷ் தன் படங்களில் முடிந்தவரைக்கும் கவர்ச்சியில்லாமல்தான் கதாநாயகிகளை காண்பிப்பது வழக்கம். இந்தப்படத்திலும் அதையே முயன்றது நன்றாகத் தெரிந்தாலும் அன்பார்சுனேட்லி பிதுங்கிக்கொண்டிருக்கிற ஹன்சிகா மோத்வானியின் கவர்ச்சி ஆங்காங்கே அப்பட்டமாக தெரிந்துவிடுகிறது. வாட் டூ டூ! படத்தில் ஹன்சிகாவைப்பார்த்து ‘’சின்னத்தம்பி குஷ்பூ போல இருக்கிறார்’’ என ஒரு வசனம் வருகிறது. எனக்கென்னவோ ஸ்லிம்மான ஷகிலாபோல என்று சொல்வதே சாலப்பொருந்தும் என்று தோன்றுகிறது. ஹன்சிகா வரும் காட்சியெல்லாம் வாலிப வயோதி அன்பர்களுக்கு வேட்டைதான்!

படத்தில் கதையில்லை என்று பரவலாக சொல்லப்பட்டாலும் நாயகனின் தாய் தந்தையர் குறித்த கிளைக்கதையும் காட்சிகளும் கவிதை! அதிலும் சரண்யாவின் நடிப்பு ரொம்ப பிடித்திருந்தது. எப்பேர்பட்ட சீரியஸ் காட்சியையும் காமெடியாக மாற்றிவிடுகிறார் இயக்குனர். அதுவே படத்தின் பலமாகவும் அமைந்துவிடுகிறது.

ஹாரிசு ஜெயராஜ் எப்போதும்போலவே அவர் பாட்டையே அவரே ரீமிக்ஸ் பண்ணி போட்டிருக்கிறார். காமெடி கலாட்டாவில் இசை குறித்தெல்லாம் யாரும் சட்டை செய்ததாக தெரியவில்லை. சொல்லப்போனால் காமெடி எக்ஸ்பிரஸில் பாடல்கள் தம்மடிக்க கிடைத்த கேப்பாகவே உணர்கிறேன். நன்றி ஹாரிஸ்!

எந்த ஒரு படத்திற்கும் திரைக்கதைதான் மிகப்பெரிய பலம் என்பதை இயக்குனர் உணர்ந்தேயிருப்பார் போல! திரைக்கதை வசனம் இரண்டிற்கும்தான் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். நிறையவே சின்னதும் பெரிதுமாக குறைகள் தெரிந்தாலும் படத்தின் எல்லா குறைகளையும் திரைக்கதையும் அதிரடி காமெடி வசனங்களும் நிறைவு செய்கின்றன.

திஸ் பிலிம் ஆஃப் தி சம்மர் ஆஃப் தி ப்ளாக் பஸ்டர் ஆஃப் தி பேமிலி ஆஃப் தி என்டர்டெயினர் ஆஃப் திஸ் ஓகே ஓகே.. அதாவது இந்த சம்மரில் குடும்பத்தோடு பார்த்து குதூகலிக்க ஏற்ற படமாக அமைந்திருக்கிறது இந்த ஓக்கே ஓக்கே!



((படத்தில் சந்தானத்திற்கு வில்லனாக ஒரே ஒருகாட்சியில் தோன்றி நடித்திருக்கும் எங்கள் அன்பு அண்ணன்.. சீறும் சிங்கம்.. பாயும் சிறுத்தை.. மகாஸ்டார் மாடசாமி அவர்களின் நடிப்பை பற்றி எழுதுவது குத்துவிளக்கின் மேல் குத்தவைச்சு உட்கார்ந்தது போலிருக்கும்.. அதாவது குன்றின் மேலிட்ட விளக்காக அமைந்துவிடும் என்பதால் அண்ணனை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்)