14 July 2012

நஞ்சாகும் எதிர்காலம்!எப்போதும் இல்லாத அளவுக்கு மின்னணு கழிவுகள் தமிழகம் முழுக்க மலைபோல் குவியத்தொடங்கியுள்ளன. இந்திய அளவில் மின் கழிவு உற்பத்தியில் தமிழகத்திற்கு இரண்டாமிடம்!

நம் வருங்காலம் நம் கண்முன்னே நஞ்சுவைத்து கொல்லப்படுகிறது. நம்முடைய நிலத்தடி நீரும்,மண்வளமும் விஷமாகின்றன. இந்த நாசகார வேலைகளை செய்கிற வில்லன் வேறு யாருமல்ல.. நாமேதான்! எது குப்பை, எது விஷம் என்கிற அக்கறையேயில்லாமல் மலைபோல் மின்-கழிவுகளை (E-WASTE) குவித்துக்கொண்டேயிருக்கிறோம். சென்ற ஆண்டு மட்டுமே 28,789 மெட்ரிக் டன் அளவுக்கு சென்னையில் மட்டுமே மின்கழிவுகள் குவிந்துள்ளன. இந்த ஆண்டு இதன் அளவு இரட்டிப்பாகலாம் என எச்சரிக்கின்றனர் வல்லுனர்கள். இது அடுத்த இருபது ஆண்டுகளில் இரண்டு லட்சம் டன் என்னும் அளவுக்கு உயரும் என பயமுறுத்துகின்றனர். சென்னை நகரத்தில் மட்டுமே ஒவ்வொருநாளும் 4500டன் மின்கழிவுகள் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது! இந்திய அளவில் மின்கழிவு உற்பத்தியில் சென்னைக்கு நான்காமிடம்.

புதியன புகுதலும் பழையன கழிதலும் பாட்டுக்கு ஒக்கேதான்! ஆனால் புதியன அளவுக்கதிகமாக வீட்டுக்குள் நுழைய ஆரம்பித்துவிட்ட காலத்தில் வாழ்கிறோம். போன மாதம் வாங்கின செல்ஃபோன் இந்தமாதம் அவுட்டேட் ஆகிவிடுகிறது. சென்ற ஆண்டு வாங்கின எல்சிடி டிவிக்கு போட்டியாக 3டி டிவி மார்க்கெட்டில் சக்கைபோடு போடுகிறது. நாளொரு புதிய தொழில்நுட்பம் பழைய கணினிகளை பரணுக்கு அனுப்புகின்றன. மார்க்கெட்டுக்கு எது புதிதாக வந்தாலும் வாங்கி வாங்கி குவிக்கிறோம்.

இவற்றை வாங்க பணம் கூட தேவையில்லை.. கடன் கொடுக்க பன்னாட்டு வங்கிகள் போட்டி போடுகின்றன. நமக்கு தேவையோ இல்லையோ பெருமைக்காச்சும் வாங்கிப்போடு! என்கிற எண்ணம் ஆழமாக வேர் ஊன்ற தொடங்கியுள்ளது. உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் குவியும் மின்கழிவுகள் பற்றி அக்கறையேயில்லாமல் புதிய பொருட்களை விற்பதில் மட்டுமே அக்கறை காட்டுகின்றன.

சின்ன ரிமோட் கன்ட்ரோல் பழுதடைந்துவிட்டதா.. அதை சரிசெய்வதெல்லாம் ஃபேஷன் கிடையாது. தூக்கி குப்பையில் போடு! புதிதுவாங்கிக்கொள்வோம். கம்ப்யூட்டர் மானிட்டர் தொடங்கி மிக்ஸி,எம்பி3 பிளேயர்,கேமரா,லேப்டாப்,செல்ஃபோன்,டீவி,டிவிடி பிளேயர்,டிவிடி,விசிடிகள் என இன்னும் ஏகப்பட்ட மின் மற்றும் மின்னணு சமாச்சராங்கள் அப்டேட் ஆக ஆக பழையவை குப்பைக்கு செல்கின்றன. அல்லது காய்லாங்கடையில் எடைக்கு போடப்படுகின்றன. அல்லது துணி சுற்றப்பட்டு நம் பரண்களில் எதிர்காலத்தை பாழாக்க காத்திருக்கின்றன.

இந்த மின்னணு கழிவுகளால் என்ன பிரச்சனை? அவற்றினால் நாம் வாழும் சுற்றுசூழல் எப்படி பாதிக்கப்படுகிறது? இவற்றால் நமக்கு என்ன பாதிப்புகள் உண்டாகும்? அணுக்கழிவுகளை விட இந்த மின்கழிவுகள் ஆபத்தானவை என்பது யாருக்கும் தெரியாது. நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது பொருட்களை சந்தைப்படுத்துகின்றன. நாமும் போட்டிக்கு போட்டியாக வாங்கிக்குவிக்கிறோம். இதுதான் தற்போதைய நிலைமை!

மின்கழிவு (E-WASTE)


மின்கழிவு என்பது ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து நம் பூமியை பாழாக்க பாய்ந்துவந்த விண்கல் கிடையாது. நாம் பயன்படுத்தபடுத்தி குப்பையில் போடும் காப்பர் வயர்களில் தொடங்கி பழைய மிக்ஸி,டிவி,கணினி,மொபைல் ஃபோன்,டிவிடிபிளேயர்,ட்யூப்லைட்,தொலைபேசி என மின்சாரத்தால் இயங்கிக்கொண்டிருக்கிற எல்லாமேதான்! தமிழகத்தில் குவியும் இருபத்தியெட்டாயிரம் டன் மின்கழிவில் 60 சதவீதம் பழைய கணினிகள் மட்டுமே என்கிற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

‘’வேகமாக வளரும் பொருளாதாரம் , அது சார்ந்த புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகள், அதிகரித்துவரும் நுகர்வு கலாச்சாரம், இவைதான் கடந்த பத்தாண்டுகளில் மின்கழிவுகள் மலைபோல் குவிய காரணம்’’ என்கிறார் டாக்ஸிக் லிங்க்ஸ் அமைப்பின் அருண்செந்தில்ராம்.
இவையெல்லாம் மக்காத குப்பைகளாக குவிவது ஒருபக்கம். இன்னொரு பக்கம் இதை என்ன செய்வதென்று தெரியாமல் அரசு விழிபிதுங்கிப்போய் அலைகிறது. பழைய கணினிகளால் உண்டாகும் மின்கழிவின் அளவு மட்டுமே அடுத்த பத்தாண்டுகளில் 500 மடங்கு அதிகரிக்கும் என்கிறது ஐ.நா சுற்றுசூழல் திட்ட அமைப்பின் அறிக்கை.

விஷம்தான் விஷயம்

உங்கள் வீட்டில் ஒரு பழைய மானிட்டரும் கீபோர்டும் மவுசும் பலநாளாய் கிடக்கிறது. கொண்டுபோய் காய்லாங்கடையில் எடைக்கு போட்டுவிடுகிறீர்கள். அதற்கு பிறகு அவை என்னாகும் என்று தெரியுமா? நம்முடைய பழைய எலக்ட்ரானிக் பொருட்கள் காய்லாங்கடையில் உடைத்து நொறுக்கப்படுகின்றன. அதிலிருக்கிற நல்ல விலைகிடைக்கிற இரும்பு,பிளாஸ்டிக்,அலுமினியம் மாதிரியான பொருட்கள் பிரித்தெடுக்க படுகின்றன.. இதனால் பெரிய பாதிப்பில்லை. இதற்கு பிறகு இவர்கள் கையாளுகிற முறைகள்தான் சுற்றுசூழலை காலி பண்ணும் அஸ்திரங்கள்.


பிவிசி ஒயர்களை எரித்து காப்பரை பிரித்தெடுப்பது. வெறும் கைகளால் கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையாள்வது, அவற்றில் இருக்கிற விலை உயர்ந்த உலோகங்களை அமிலத்தை பயன்படுத்தி பிரிப்பது போன்ற ஆபத்தான பணிகளில் இவை கையாளப்படுகின்றன. பயன்படுத்தக்கூடிய விலைகிடைக்கக்கூடிய பொருட்களை பிரித்தெடுத்தவுடன் மீதியை குப்பையில் கொட்டப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த சர்க்யூட் போர்டுகளை போட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கின்றனர். இதுதான் தமிழகம் முழுக்கவே தற்போதைய காய்லாங்கடைகளின் மறுசுழற்சி முறை! இவைதான் சுற்றுசூழலுக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்க கூடியதாகவும் உள்ளன. இந்த மின்கழிவுகளை கையாள்பவர்களுக்கும் மட்டுமல்லாது நமக்கும் மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது.

பாதிப்பு என்ன?

நம் உடல்நலத்தையும் இவை விட்டுவைப்பதில்லை. ட்யூப்லைட்டுகளில் இருக்கிற பாதரசம் நம் கல்லீரலையே பாதிக்கும் வலிமை கொண்டவை. பிரிண்டர் இங்குகளிலும் டோனர்களிலும் பயன்படுத்தப்படும் கேட்மியம் நம்முடைய கிட்னியை நேரடியாக பாதிக்கும் சக்தி கொண்டவை. மின்கழிவுகளில் பரவலாக காணப்படும் நஞ்சான பெரிலியம் நம்முடைய நுழையீரலை பாதிக்கச்செய்து புற்றுநோயை உண்டாக்குமாம்! இவையெல்லாம் உதாரணங்கள்தான்.

இந்த நச்சுப்பொருட்கள் நம்முடைய டிஎன்ஏவை கூட பாதிப்படைய செய்யும் வலிமை கொண்டவை என எச்சரிக்கின்றனர் மருத்துவநிபுணர்கள். நம் அண்டைநாடான சீனாதான் மிகமோசமான முறைகளில் (இந்தியாவை விடவும் மோசம்!) கையாளுகிறது. திறந்த வெளியில் சர்க்யூட் போர்டுகளை எரிப்பது தொடங்கி ஆபத்தான பாதரசத்தினை மண்ணில் கலப்பது மாதிரியான வேலைகளை சிரத்தையாக செய்துவருகின்றனர்.

சீனாவின் ஜேஜியங் பல்கலைகழகம் நடத்திய ஆய்வறிக்கையின் படி தவறான முறைகளில் கையாளப்படும் மின்கழிவுகளால் காற்று மாசடைகிறது, அதனை சுவாசிக்கும் மக்களுக்கு டிஎன்ஏ பாதிப்பும், கேன்சரும் உண்டாவதை கண்டறிந்துள்ளனர்.

மின்கழிவினை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது. அவற்றினை குழிதோண்டி புதைத்தால் மழைகாலங்களில் நீரோடு கலந்து நிலத்தடி நீரை நாசமாக்கி நஞ்சாக்குகிறது. எரிக்கவும் முடியாது.. புதைக்கவும் இயலாது.. இந்த நச்சினை என்னதான் செய்வது?

மறுசுழற்சி

இப்பிரச்சனைக்கு தற்போது முன்வைக்கப்படும் மிகமுக்கியமான தீர்வு ரீசைக்கிளிங் எனப்படும் மறுசுழற்சி முறை. நாம் பயன்படுத்தும் கணினியில் இருக்கிற மைக்ரோ பிராசசர் தொடங்கி மொபைல் போன் வரைக்கும் எல்லா பொருட்களும் மறுசுழற்சிக்கு ஏற்றவைதான். இதன் மூலம் நல்ல லாபமும் கிடைக்கும் அதோடு, நம் கனிம வளங்களும் காக்கப்படும்.

நாம் பயன்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்களில் 90சதவீதம் முழுமையாக மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகிக்க கூடியவைதான். ஆனால் இந்தியாவில் கொட்டப்படும் நான்கு லட்சம் டன் மின்கழிவில் வெறும் நான்கு சதவீதம்தான் அங்கீகரிக்கப்பட்ட மறுசுழற்சியாளர்களிடம் செல்கிறது. மீதமுள்ள அனைத்தும் தவறானவர்களின் கைகளில் சிக்கி நிலத்தையும்,நீரையும்,நம்மையும் மாசடையசெய்கின்றன! அல்லது மக்காத குப்பையாக மண்ணில் கொட்டப்படுகின்றன.

சென்னையில் மட்டுமே 18 மறுசுழற்சி மையங்கள் இயங்கிவருகின்றன. ஆனால் அவை போதிய மின்கழிவுகள் கிடைக்காமல் ஏனோதானோ என்றுதான் இயங்குகின்றன. ‘’மறுசுழற்சிக்கு ஒரளவு செலவாகும்... ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியிருக்கும்.. அதனால் நாம் பழைய மின்கழிவுகளை பெற அதிக பணம் தர இயலாது. ஆனால் அங்கீகாரம் பெறாத ஆட்கள் அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை என்பதால் அதிக விலை கொடுத்து இதை பெறுகின்றனர்! பெரிய ஐடி நிறுவனங்களும் அதிகமாக விலைகொடுப்பவருக்கே தங்களுடைய பொருட்களை கொடுப்பதால்.. எங்களால் திறம்பட எதையும் செய்ய முடிவதில்லை. இது கட்டுபடுத்தப்படவேண்டும்’’ என வருத்தத்தோடு கூறுகிறார் குளோபல் ரீசைக்கிளிங் நிறுவனத்தின் மலர்மன்னன்.

என்னதான் தீர்வு?


மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற மறுசுழற்சி நிறுவனங்களிடம் நம்முடைய மின்கழிவுகள் சேரவேண்டும். இந்த மின்கழிவுகள் மிகச்சரியாக சுற்றுசூழலுக்கு ஆபத்தில்லாத வகையில் மறுசுழற்சி செய்யப்படவேண்டும். அதோடு அந்த விபரங்கள் அனைத்தும் ஆண்டுதோறும் அரசால் ஆடிட் செய்யபடவேண்டியதும் அவசியம்.

‘’எங்களிடம் கிடைக்கிற இந்த மின்கழிவுகளை ஆறு கட்டங்களாக மறுசுழற்சி செய்கிறோம். முதலில் வகைபடுத்துதல், அவற்றில் பயன்தரும் பொருட்களை பிரித்தெடுத்தல், நச்சுதன்மை உள்ளவற்றை இனங்காணுதல், பாகங்களை பிரிப்பது, அவற்றை விதிமுறைகளின் படி மறுசுழற்சிசெய்வது என இவை நடக்கிறது,’’ என்கிறார் மலர்மன்னன்.

2005ஆம் ஆண்டு வரை இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் கூட ஈவேஸ்ட் குறித்த போதிய அக்கறையில்லாமல்தான் இருந்துள்ளனர். ஆனால் பல சுற்றுசூழல் அமைப்புகளின் முயற்சியால்தான் இப்படியொரு மாபெரும் ஆபத்து இருப்பதை உலகம் உணரத்தொடங்கியது. அப்போதிருந்து தொடர்ச்சியாக உலக நாடுகள் இதற்கென பிரத்யேக வழிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்கி வருகின்றன. இந்தியாவும் தன் பங்குக்கு சட்டமியற்றி மின்கழிவுகளையும் அது தவறான கைகளில் சிக்குவதையும் கட்டுப்படுத்துகின்றன. உற்பத்தியாளர்கள், நுகர்வோர், மறுசுழற்சியாளர்கள் என ஒவ்வொருவருக்குமான பொறுப்புகளை 2011ல் சட்டங்களாக இந்தியா அறிவித்தது. இவை கடந்த மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளன.

உற்பத்தியாளர்களுக்கு கிடுக்கிபிடி!


மின்னணு கழிவுகளை கையாளுதல் சட்டம் 2011ன் படி எக்ஸ்டென்டன்ட் புரொடியூசர் ரெஸ்பான்சிபிலிட்டி என்னும் வழிமுறையை அறிவுறுத்துகிறது. அதாவது உற்பத்தியாளரே அவர்களால் சுற்றுசூழலில் உருவாகும் மின்கழிவுக்கான பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதற்கென மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தில் பல்வேறு மறுசுழற்சியாளர்களுக்கு லைசென்ஸ் வழங்கியுள்ளது. அவர்களிடம் மட்டுமே உற்பத்தியாளர்கள் தங்களுடைய மின்கழிவுகளை அளித்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்றும் சட்டம் சொல்கிறது.

ஒவ்வொரு உற்பத்தி நிறுவனமும் தங்களுடைய பொருட்களுக்கான குப்பைகளை பெற கலெக்சன் சென்டர்களை உருவாக்கவும் அது வலியுறுத்துகிறது. இதையடுத்து டெல்,சாம்சங்,எச்பி மாதிரியான பெரிய நிறுவனங்கள் இதனை செயல்படுத்த தொடங்கியுள்ளது நல்ல தொடக்கமாக உள்ளது. டெல் நிறுவனம் தங்களுடைய லேப்டாப்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் ஐயான் பேட்டரிகளை பெற்றுக்கொண்டு புதியபேட்டரிகள் வாங்கும்போது ரூ.500வரை டிஸ்கவ்ன்ட் வழங்குகிறது.

நோக்கியா நிறுவனம் நாடுமுழுக்க 1500 இடங்களில் தங்களுடைய பழைய செல்போன்களை பெறும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. எச்பி நிறுவனம் உபயோகித்த கேட்ரிஜ்களை வாங்கி மறுசுழற்சி செய்து புதிய கேட்ரிஜ்களை விற்கிறது.

‘’பெரிய நிறுவனங்கள் இவற்றையெல்லாம் செய்தாலும், திரும்பப்பெறப்படும் மின்கழிவுகள் முறையான வழிகளில் மறுசுழற்சிக்கு செல்கிறதா என்பதையும் அரசு கண்காணிக்க முன்வரவேண்டும்’’ என்கிறார் சுற்றுசூழல் ஆர்வலரான நித்யானந்த் ஜெயராமன்.

தேவை விழிப்புணர்வு


‘’சென்னையில் மட்டுமே பல ஆயிரம் டன் அளவுக்கு மின்கழிவுகளை குவிக்கிறோம். மின்கழிவுகளில் உள்ள நச்சுப்பொருட்கள், அதானல் நமக்கும் சுற்றுசூழலுக்கும் உண்டாகும் பாதிப்புகள் குறித்து நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறை குழந்தைகளிடம் இதுகுறித்து பேசவேண்டும்.மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இதைப்பற்றி போதிய விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்’’ என்கிறார் டாக்ஸிக் லின்க் அமைப்பின் அருண் செந்தில்ராம்.

அவர் மேலும் பேசும்போது ‘’இன்று உங்களுக்கு ஈவேஸ்ட் குறித்து தெரிந்தாலும் கூட உங்களால் மறுசுழற்சியாளர்களை கண்டுபிடிக்க இயலாது, இந்த விஷயத்தை அரசினால் மட்டுமே சரிசெய்ய முடியும். மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு உள்ளூர் நிர்வாகத்தின் உதவியோடு திரட்டு மையங்களை அமைத்தல் வேண்டும். அப்போதுதான் சரியான மறுசுழற்சியாளர்களிடம் நம்முடைய ஈவேஸ்ட் போய்ச்சேரும்’’ என்கிறார்.

உற்பத்தியாளர்களை மட்டுமே குற்றம் சொல்லிக்கொண்டிருக்கவும் முடியாது, அரசு மற்றும் நுகர்வோரின் பங்கும் இதில் உண்டு. அதை உணர்ந்து பொதுவான புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த விஷயத்தை அணுக வேண்டும்.

கர்நாடகா ஏற்கனவே விழித்துக்கொண்டுவிட்டது. மங்களூருவில் வீட்டுக்கு வீடு மின்கழிவுகளை பெறும் வசதியை அரசே ஏற்படுத்தியுள்ளது. மக்களிடம் தொடர்ந்து இதுகுறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது. பெறப்பட்ட குப்பைகள் உரிய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு மறுசுழற்சிக்கு செல்கின்றன. அரசு இதுமாதிரி முன்மாதிரி திட்டங்களை நாடுமுழுக்க செயல்படுத்த முன்வரவேண்டும். அதோடு வாங்கும் பழைய பொருட்களுக்கு சரியான விலை நிர்ணயம்செய்தால் நிச்சயமாக மின்கழிவுகளை மக்கள் தாங்களாக முன்வந்து தருவார்கள் என்பது உறுதி. அதோடு நாமும் காசிருக்குதே என்கிற அலட்சியத்தோடு எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கிக்குவிப்பதையும் குறைத்துக்கொண்டால் இனி எல்லாம் மாறும்!

*****************************


துணுக்குகள்

ஈகோ ஏடிஎம்!
சென்ற மாதம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கான கண்காட்சியில் ஈகோ ஏடிஎம் (ECO ATM) என்னும் இயந்திரம் அனைவரையும் கவர்ந்தது. இந்த இயந்திரம் பழைய எலக்ட்ரானிக் பொருட்களை பெற்றுக்கொண்டு பணம் தரும் ஏடிஎம் மெஷின் போல இயங்கும். தேவையற்ற செல்போன்கள், ஐபாட், ஐபேட், எம்பி3 பிளேயர் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை இதில் போடவேண்டும். அதற்கான டிரேயில் முதலில் பொருளை வைக்க வேண்டும். சில வினாடிகளில் அதை கருவி உள்ளிழுத்துக் கொள்கிறது. அதை பல கோணங்களில் ஸ்கேன் செய்து தரத்தை மதிப்பிடுகிறது. அதற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்ற தகவல் திரையில் மின்னுகிறது. தொகை நமக்கு ஓகே என்றால் அதற்கான பட்டனை அழுத்த வேண்டும். உடனே பணம் வெளியே வரும். தொகை கட்டுபடி ஆகாவிட்டால் கேன்சல் என அழுத்த வேண்டும். பொருள் வெளியே வந்துவிடும். பில் போவெல் என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்துள்ளார். கணிசமான பழைய பொருட்கள் சேர்ந்த பிறகு, அவை அகற்றப்படும். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அந்த பொருட்களில் இருந்து பிளாஸ்டிக், உலோகங்கள் என தனித்தனியாக பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படும். ரொம்ப நல்ல ஐடியா இல்லையா?105நாடுகளின் குப்பைத்தொட்டி!

நம்மூர் குப்பைகளையே சமாளிக்க திணறும் அதே வேளையில் வளர்ந்த நாடுகளின் மெகாசைஸ் குப்பைத்தொட்டியாகவும் இந்தியா இருக்கிறது என்பது அதிர்ச்சிகரமாக இருந்தாலும் உண்மை! கிட்டத்தட்ட 105 நாடுகளின் குப்பைத்தொட்டியாக இந்தியா விளங்குகிறது. குஜாராத் அருகே உள்ள புரோபோ கோலா என்ற துறைமுகத்தில் தான் அதிகளவில் உலக நாடுகளின் விஷத்தன்மை கொண்ட கழிவுப் பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன . 380,000 டன் எலக்ட்ரானிக் கழிவுப் பொருட்கள் 2007-ல் இந்தியாவில் கொட்டப்பட்டுள்ளன, இது 2012-ல் 800,000 டன்னாக அதிகரிக்கும் என கிரீன்பீஸ் இந்தியா என்ற அமைப்பு தெரிவிக்கிறது. ஏன் வெளிநாடுகள் இந்தியாவுக்குப் குப்பையை அனுப்ப வேண்டும்? ஒரு டன் குப்பையைச் சுத்திகரித்து மறுசுழற்சி செய்ய 12 ஆயிரம் ரூபாய் செலவாகும். கப்பலில் ஏற்றி இங்கே அனுப்பிவிட ஆகும் செலவு வெறும் 2800 ரூபாய்தான்!நாம் செய்ய வேண்டியதென்ன?

*எப்பேர்ப்பட்ட அதிநவீன தொழில்நுட்பமே வந்தாலும் எந்த புதிய பொருளையும் வாங்குவதற்கு முன் அது நிச்சயமாக நமக்கு உபயோகம்தானா என்பதை நிறையவே யோசிக்கலாம்.
*முன்னெல்லாம் செகன்ட் ஹேன்ட் பொருட்கள் வாங்குவதும் விற்பதும் நடைமுறையில் இருந்தது, இன்று அதுமாதிரியான பழக்கம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. முடிந்தவரை உங்களிடமுள்ள பொருட்களை செகன்ட் ஹேன்டாக விற்க முயற்சிசெய்யலாம்.(விலை குறைவாக கிடைத்தாலும் அந்தப்பொருளின் ஆயுளை அது அதிகரிக்கும்)
*உங்களிடம் லேப்டாப்போ செல்ஃபோனோ பழைய டிவியோ இருக்கிறதென்றால் அதை யாருக்கும் விற்க மனமில்லையென்றால் அதை வாங்க வசதியில்லாத ஏழைகளுக்கு இலவசமாக கொடுக்கலாம்.
*பழுதடைந்த பொருட்களை சரிசெய்ய முனையலாம். சரிசெய்யவே முடியாது என்னும் நிலையில் புதியவற்றைவாங்கலாம்.
*பழைய பொருட்களை எக்ஸ்சேஞ்ச் மாதிரியான திட்டங்களில் உற்பத்தியாளரிடமே கொடுத்து புதிய பொருட்களை வாங்கலாம்.
*மின்சாதனங்களை தவறியும் காய்லாங்கடைகளில் போடுவதை தவிர்க்கவும். அது தவறான ஆட்களின் கைகளில் சென்றடையும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.


நன்றி - புதியதலைமுறை

23 comments:

lakshmi said...

Very informative :) tks

இல்யாஸ்.மு said...

அருமையான விழிப்புணர்வு கட்டுரை..

யாத்ரீகன் said...

நம்மூரிலும் உற்பத்தியாளர்களின் collection centreகள் இருக்கிறதென தெரிவதே புது தகவலா இருக்கு :-(( இப்போவாவது தெரிஞ்சதே..


அத்தகைய collect centreகள் பற்றிய listஉம் இந்த பதிவில் சேர்க்க முடியுமா ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எதிர் காலத்திற்கு சவாலாக விளங்கக் கூடிய மின்னணுக் கழிவுப் பிரச்சனையை விரிவாக விளக்கியதற்கு நன்றி. இது பற்றிய தகவல்கள் இன்னும் மக்களிடம் போய்ச் சேரவில்லை என்பது உண்மை.அரசாங்கம் மெத்தனமாக இருந்துவிடாமல் இருப்பதற்கு நம்மிடையே விழிப்புணர்வு வேண்டும். நல்ல பயனுள்ள பதிவு.

Raashid Ahamed said...

முழுக்க முழுக்க சமுதாய மற்றும் நம் சந்ததிகளை காக்க முயற்சிக்கும் விழிப்புணர்வு கட்டுரை. நிறைய எலக்ட்ரானிக் சாதனங்களில் குப்பை தொட்டி படம் கிராஸ் செய்து போட்டிருக்கும். அதாவது குப்பையில் போடவே கூடாத பொருள் என்பது. இதை எத்தனை பேர் கவனித்து பின்பற்றுகின்றனர் ? அட என்ன ஆயிடப்போவுது என்ற அலட்சியம் வருங்காலத்தில் மோசமான விளைவுகளையும் பேராபத்தான நோயகளையும் உண்டாகும் என்பதையும் நம் சந்ததிக்கு புரியவைக்கவேண்டும். மறு சுழற்சியின் அவசியத்தையும் ஈ வேஸ்ட்டின் ஆபத்தையும் பள்ளி பாடதிட்டத்தில் சேர்த்தால் தான் நம் வாரிசுகளை காப்பாற்றமுடியும். இல்லையென்றால் நமக்கு நாமே தலையில் கொள்ளி வைத்து கொள்வது போல தான்.

Anonymous said...

Very good info Athisa, But do you think our Administrators in India will realise these facts and make policy decisions ? I have no hope.!
Vetrivel Shanmgam

Unknown said...

ரெண்டு நாள் முன்பு எனக்கு தெரிந்த அளவில் இந்த மின்னணு குப்பைகள் பற்றி வலைச்சரத்தில ரொம்ப ஷார்ட்டா எழுதியிருந்தேன்.. நீங்க ரொம்ப விரிவா எழுதியிருக்கீங்க..!

அருமையான பதிவு சகோ வாழ்த்துக்கள் :)

Uma said...

அருமையான பதிவு! அதிர வைக்கும் தகவல்கள்!collection centre பற்றி இன்னும் கொஞ்சம் தகவல்கள் எழுதியிருக்கலாம்,.
நான் பரவாயில்லை 6 வருடங்களாக ஒரே கைபேசியை பயன்படுத்தி வருகிறேன்.

Anonymous said...

அருமையான பதிவு !! ஒரு முழுமையான அலசல் மற்றும் தீர்வு !!
- @nettai_

Anonymous said...

thanks for the ewaste.

வின்சென்ட். said...

மிகச் சிறந்த விழிப்புணர்வு கட்டுரை.
நமது குப்பைகளையே மறுசுழற்சி செய்ய திணரும் போது இறக்குமதி அதிர்ச்சியை அளிக்கிறது.

perumal karur said...

பயனுள்ள பதிவு நன்றிங்க

Unknown said...

there is subject called concurrent engineering...teaches the same...but implementation ?? in the govt hand...like battery now they are collecting back old one they supplying the new.

Unknown said...

There is a subject called concurrent engineering for PG engineering. now this engineering is implemented for battery, collecting old battery, then only they will supply new one...

while designing new product it has to address the end product after the life...called life cycle.
Good article-govt has to implement the same..but they are not at all concentrating in this way of good life. They are planning for 5 years only. not for life cycle.

பிரதீபா said...

நான் இங்கிலாந்தில் தற்போது வாழ்ந்து வருகிறேன். பயனற்ற பேட்டரி, பிரிண்டர் டோனர், தண்ணீர் சுத்திகரிக்கும் catridge ,செல்போன்கள் , கண்ணாடி பாட்டில்கள் போன்றவைகளை சேகரிக்க இங்கு பெரும்பாலான சூப்பர்மார்க்கட்டுகளில் தனிய பெரிய பெட்டிகள் இருக்கிறது. நான் பணிபுரியும் அலுவலகத்தில் cosumer electronics and electricals விற்பனை சதவிகிதத்தில் எவ்வளவு சதவிகிதம் சுதிகரிக்கப்பட்டுளது என்ற கணக்கையும் அரசாங்கத்திற்கு காட்ட வேண்டுமாம்.இந்தத் தகவல் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. நம் ஊரில் இதுபோன்ற சட்டங்கள் பேச்சளவில் மட்டும் இல்லாமல் செயலிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? //கர்நாடகா ஏற்கனவே விழித்துக்கொண்டுவிட்டது. மங்களூருவில் வீட்டுக்கு வீடு மின்கழிவுகளை பெறும் வசதியை அரசே ஏற்படுத்தியுள்ளது.//- இது செம சூப்பர்.
மறுசுழற்சி என்பதே பாதி மக்களுக்கு தெரியாமல் இருக்கின்றது வேதனையான விஷயம்.பெற்றோர்கள் தன பிள்ளைகளுக்கு Reduce, Re-use, Recycle சொல்லித் தராவிட்டால் இரண்டு தலைமுறைக்கப்புறம் வாழ்வதற்கு வேறு கிரகம் தேடவேண்டியது தான்.. மிகவும் நல்ல பதிவு இது. நன்றி.

SIV said...

//மின்சாதனங்களை தவறியும் காய்லாங்கடைகளில் போடுவதை தவிர்க்கவும். அது தவறான ஆட்களின் கைகளில் சென்றடையும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்//

இதை சற்று விளக்க முடியுமா? காய்லாங்கடைகளில் போடப்படும் பொருட்களும் மறுசுழற்சி அல்லது மறு உபயோகத்திற்கு செல்கிறது என்றே எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

Unknown said...

எம்ஜிஆரிடம் ஒரு பழக்கம்!!! எந்த ஒரு பொது பிரச்சினை ஆனாலும்...தீர்வையும் வருபவரிடமே கேட்பார்!!! அதிஷா வை எனக்கு பிடித்திருபதற்கு அவர் பிரச்சினையையும் சொல்லிவிட்டு தீர்வையும் சொல்லுவதுதான் காரணம்....நல்லாரு!!

kailash said...

I think kuppathotti.com is collecting e-wastes but im not sure how they are handling it . In US many states (one is California ) charge disposal fee for electronic products , when you are buying you have to pay this fee . Thsi money is then properly spent by govt. for handling e-wastes .

Unknown said...

பயனுள்ள கருத்துகள் .....
நன்றி நண்பரே

சுந்தரராஜன் said...

மின்னணு குப்பைகளை மேலாண்மை செய்வதற்கு திறனற்ற நாம்தான் அணுஉலைக் கழிவுகளை பாதுகாப்பாக மேலாண்மை செய்யப்போகிறோமாம்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்...

சுந்தரராஜன் said...

மின்னணு குப்பைகளை மேலாண்மை செய்வதற்கு திறனற்ற நாம்தான் அணுஉலைக் கழிவுகளை பாதுகாப்பாக மேலாண்மை செய்யப்போகிறோமாம்.

கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன்...

Mahendran said...

நண்பர்களே நோக்கியா சேம்சங் போன்ற கைப்பேசி நிறுவனங்கள் தங்களுடைய பழுதீர்க்கும் மையத்தில் குப்பை தொட்டிகளை வைத்திருக்கின்றன் இதில் நமது பழுதடைந்த கைப்பேசியையோ அலலது அதன் பாகஙகளையோ போடலாம். இதன் மூலம் அவை சரியான முறையில் மறுசுழற்சி செய்யப்படும்.

அணில் said...

மின் கழிவுகளைப் பற்றி பதிவு எழுத தகவல்களைத் தேடியபோது இப்பதிவை கண்டுகொண்டேன். விரிவாக அலசியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதிய நாளிலிருந்து இன்றுவரை இப்பிரச்சனை இன்னும் பூதாகரமாக வளர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.