Pages

27 June 2014

ஒரு கோடம்பாக்கம் காப்பி கதை



தன் முதல்படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனரின் இரண்டாவது படம். இந்த மாதமே ரிலீஸாகியிருக்க வேண்டியது என்ன காரணமோ அனேகமாக அடுத்த மாதம் ரிலீஸாகலாம். ஏற்கனவே படத்தின் ட்ரைலரும் பாடல்களும் வெளியாகி இணையத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது. எல்லோருமே அந்த இரண்டாவது படத்துக்காகத்தான் ஆவலுடன் வெயிட்டிங்.
நேற்று கோடம்பாக்கத்தில் உதவி இயக்குனர் ஒருவரோடு டீக்கடையில் காப்பி குடித்துக்கொண்டே ஒரு விவாதம். பேச்சு வடபழனியில் தொடங்கி அமெரிக்கா ஆஸ்திரேலியாவெல்லாம் சுற்றி ஈரான்,எஸ்ரா,ஜெமோ,வித்யூ வித்தவுட் யூவில் யூடர்ன் அடித்து கொரியாவில் வந்து நின்றது.

‘’அண்ணே கொரியாவுக்கும் கோடம்பாக்கத்துக்கும் நடுவுல ஒரு சுரங்கப்பாதை இருக்குண்ணே’’ என்றார். ஜோக்கடிக்கும்போது சிரிக்கமாட்டார். ரசனையான மனிதர். பேச்சு சுற்றி சுற்றி கடைசியில் முத்திரை இயக்குனரின் இரண்டாவது படத்தைப்பற்றி வந்தது. அது ஒரு காப்பி படம்ண்ணே என்றபோது பகீர் என்றிருந்தது. மிகவும் மதிக்கிற இளம் இயக்குனர்களில் அவரும் ஒருவர். ‘’இளம் இயக்குனர்ண்ணா காப்பியடிக்க மாட்டாய்ங்களாண்ணே’’ என்றபோது அது நியாயமாகவும் தெரிந்தது. ‘’காட்பாதரை தேவர்மகனாக்கின மாதிரி இவரு.. இந்த டர்ட்டி கார்னிவல *****வாக்கிட்டாருண்ணே’’

‘’அது ஒரு கொரியன் படத்தோட அச்சு அசல் காப்பிண்ணே… கொரியா மேட்டரை நம்மூர் மதுரை மேட்டரா மாத்திருக்காய்ங்க, காவேரி கார்னர்ல சுத்துற எல்லா பயலுக்கும் இது தெரியும்.. போய் நின்னு சும்மா பேச்சு குடுத்து பாருங்க ஆளாளுக்கு அந்த ஒரிஜினல் படம் பத்திதான் சொல்லுவானுங்க... நீயூஸ்லயே வந்துடுச்சு.. நீ வேஸ்ட்ண்ணே என்ன பத்திரிகையாளனோ’’ என்றார். ஒரிஜினல் கொரியன் படத்தின் டாரன்ட் காப்பியை பென்ட்ரைவில் எனக்கும் ஒன்று கொடுத்தார்.

அந்த தென்கொரிய படத்தின் பெயர் ‘’A DIRTY CARNIVAL”. 2006ல் வெளியான இத்திரைப்படம் பல்வேறு விருதுகளை வென்றது. நியோ-நாயர் வகை படம் இது. (கேரள நாயர்களுக்கும் இதுக்கும் தொடர்பில்லை. இது ஒரு GENRE).

இரண்டாவது பட ட்ரைலரை ஏற்கனவே பார்த்திருந்ததால் இந்த படத்தின் கேரக்டர்களுக்கு அந்த முகங்களை பொருத்திக்கொண்டு படம் பார்க்க தொடங்கினேன். உதவி இயக்குனர் சொன்னது கிட்டத்தட்ட உண்மை மாதிரிதான் தோன்றியது. ஆனால் இல்லாத மாதிரியும் தோன்றியது.

படம் வெளியாவதற்கு முன்பே நாம் எந்த முன்முடிவுகளுக்கும் போய்விடக்கூடாது. யாரையும் குற்றவாளியாக்குவது PROFESSIONAL ETHICS ஆகவும் இருக்காது. நமக்கென்று சில தனிமனித விழுமியங்களும் உண்டுதானே… என்பதால் படத்தின் கதையை மட்டும் இங்கே சொல்லிவிடுகிறேன். இதேகதையுள்ள ஏதாவது படத்தை இதற்கு முன்பு நீங்கள் பார்த்திருந்தாலோ அல்லது இனிமேல் பார்க்க நேரிட்டாலோ தயவு செய்து தகவல் தரவும். நீளமான கதையை வாசிக்க விருப்பமில்லையென்றால் ஸ்கிப் செய்து கடைசிப்பத்திக்கு தாவலாம்!

இனிகதை…

***

கொரியாவின் ஏதோ ஒரு நகரத்தில் இருக்கிற ஒரு கேங்ஸ்டர் தலைவன். அவனுக்காக வேலை பார்க்கிற அவனுடைய கிளை கேங்ஸ்டர்தான் நாயகன். கிளை வைத்திருப்பவன் தனக்கென்று விஸ்வசமாக நான்கு பேரை வைத்துக்கொண்டு ரவுடித்தனம் செய்துகொண்டிருக்கிறான். ஆனால் போதிய வருமானம் இல்லாமல் வறுமையில் இருக்கிற தன்னுடைய குடும்பத்தை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறான். அதோடு தன்னுடைய கிளையை தொடர்ந்து நடத்துவதிலும் அவனுக்கு சிரமங்கள் இருக்கிறது. இந்த நிலையில் கேங்ஸ்டர் தலைவனுக்கு வேலைகள் கொடுக்கிற முதலாளிக்கு ஒரு போலீஸ்காரனால் சிக்கல் வருகிறது. அவனைப்போட்டுத்தள்ள கேட்கிறான் முதலாளி. ஆனால் கேங்ஸ்டர் தலைவனோ அது கஷ்டம் என மறுக்கிறான். முதலாளி ஹீரோவை அழைத்து எத்தனை நாளைக்குதான் இப்படி காசில்லாம கஷ்டபடுவ சீக்கிரமா ஒரு நல்ல முதலாளியை பிடிச்சி வாழ்க்கைல முன்னேறப்பாரு என அட்வைஸ் பண்ணுகிறான்.

உடனே நம்ம ஹீரோ போலீஸ்காரனை போட்டுத்தள்ளும் அசைன்மென்ட்டை முடித்துக்கொடுக்கிறான். இதற்கு நடுவில் தன்னுடைய பள்ளிகால நண்பனை சந்திக்கிறான் ஹீரோ. அவன் ஒரு கேங்ஸ்டர் படமெடுக்க திரைக்கதை அமைப்பதற்காக களவிபரங்கள் சேகரிக்கிறான். ஹீரோ கேங்ஸ்டர் என்பது தெரிந்து அவனுடன் மீண்டும் பழைய நட்பை புதுப்பித்து கொண்டு ஜிகிரிதோஸ்தாக மாறுகிறான். அதோடு பள்ளிக்கால தோழியை (ஹீரோயின்) ஹீரோ மீண்டும் சந்திக்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக்கொடுக்கிறான். பள்ளிக்கால தோழியை கண்டதும் காதலில் விழுகிறான் ஹீரோ. அவளை அவள் வேலைபார்க்கும் இடத்தில் சந்திக்கிறான். ஆனால் அவளோ இவன் ஒரு ரவுடி என்பது தெரிந்து அவனிடம் நெருக்கம் காட்ட மறுக்கிறாள். ஒருநாள் தனிமையில் சந்திக்கும்போது அவளோடு அவளுடைய முன்னாள் காதலன் தகராறு செய்துகொண்டிருப்பதை பார்த்து அந்த மு.கா வை நாயகியின் முன்னாலேயே வைத்து நைய புடைத்துவிடுகிறான். இதனால் கோபமாகும் நாயகி என் முகத்திலேயே முழிக்காத என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறாள்.

ஹீரோ போலீஸ்காரனை கொன்று முதலாளிக்கு நெருக்கமானதை அறிந்து கொள்ளும் கேங்ஸ்டர் தலைவன் கோபமாகிறான். ஆனால் ஹீரோவிடம் அதை காட்டிக்கொள்ளாமல் அவனுக்கு ஒரு வேலை கொடுக்கிறான். ஆனால் அந்த வேலையை தன்னுடைய தங்கை திருமணவிழா முடிந்த பின் செய்துகொள்ளலாம் என்றும் முடிவாகிறது. தலைவனுக்கு மேட்டர் தெரிஞ்சிடுச்சு என்று உஷாராகும் ஹீரோ தலைவனை போட்டுத்தள்ள ப்ளான் போடுகிறான். தலைவன் தங்கை திருமண விழாவிலேயே தலைவனை சதக் சதக்.. இஸ்ஸ் என காரியத்தை கச்சிதமாக முடிக்கிறார்கள்.

ஹீரோ தலைவனாக தலையெடுக்கிறான்.. முதலாளிக்காக மோசமான காரியங்களை மகிழ்ச்சியோடு செய்கிறான். மிகப்பெரிய ப்ராஜெக்ட் ஒன்றுக்காக நிறைய கொலைகள் செய்யத்தொடங்குகிறான். நடுவில் காதலியை பிரிந்த சோகத்தில் நிறைய குடித்துவிட்டு டைரக்டருக்கு போன் பண்ண அவன் தன்னுடைய அறைக்கு அழைத்துச்செல்ல.. அங்கே தான் செய்த கொலைகளை பற்றி உளறிவிட.. அவனோ அதை திரைக்கதையாக எழுதி படமெடுக்கிற வாய்ப்பை பெறுகிறான். நடுவில் காதலியை சந்தித்து மன்னிப்புக்கேட்டு மீண்டும் காதலை புதுப்பிக்கிறான் ஹீரோ.

டைரக்டர் நண்பனின் படம் வெளியாகி மெகாஹிட் ஆகிறது. படத்தில் ஹீரோ முதன்முதலில் போலீஸ்காரனை கொன்றதும், அதற்குபிறகு தலைவனை கொன்றதும் அப்படியே காட்சியாக வந்திருக்க.. அதை பார்த்து முதலாளி அஞ்சுகிறான். டைரக்டரை போட்டுத்தள்ள சொல்கிறான். ஆனால் நட்புக்காக டைரக்டரை மிரட்டிவிட்டு விட்டுவிடுகிறான் ஹீரோ. ஆனால் டைரக்டர் அவமானத்தால் கோபமாகி போலீஸிடம் ஹீரோவை போட்டுக்கொடுத்துவிட… காதலியிடம் கல்யாணத்துக்கு ப்ரபோஸ் பண்ணுகிற ஒரு நாளில் போலீஸ் அவனை சுற்றிவளைக்க போலீஸிடமிருந்து தப்பி தலைமறைவாகிறான் ஹீரோ. முதலாளியிடம் மன்னிப்புக்கேட்டு உங்கள் பெயர் வெளியே வராது என்று சொல்லிவிட்டு.. டைரக்டரை போட்டுத்தள்ள கிளம்ப.. க்ளைமாக்ஸில்.. நிறைய ட்விஸ்டுகளுக்கு பிறகு ஹீரோவின் அஸிஸ்டென்டே ஹீரோவை போட்டுத்தள்ளிவிட்டு புதிய தலைவனாகிறான்!

கதை முடிந்தது.

****

தமிழ்சினிமாவில் ஏற்கனவே பலமுறை நாம் பார்த்த கதைதான் என்றாலும் படத்தின் மிகசிறந்த மேக்கிங். அருமையான நடிப்பு என எல்லா வகையிலும் ரொம்பவும் ஈர்த்தது. அதிலும் ஹீரோவாக நடித்திருக்கும் ஜோ இன் சுங்கின் நடிப்பு அபாரமானது. சிறந்த நடிகர் விருதுகளை பெற்றும் கொடுத்திருக்கிறது. இயக்குனரும் பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்த படத்தைதான் இப்போது தமிழில் சுட்டு படமாக எடுத்திருக்கிறார்களாம். எடுக்காமலுமிருக்கலாம். என்னிடம் சொன்ன உதவி இயக்குனருக்கு அந்த இரண்டாவது பட இயக்குனரின் மேல் காண்டாக கூட இருக்கலாம். அவரை காலி பண்ணுவதற்காக கூட இப்படி ஒரு விஷயத்தை என்னிடம் சொல்லியிருக்கலாம். ''ப்ரோ எனக்கு இந்த கதைய சுட்டுருப்பாங்கனு தோணலை ப்ரோ'' என்றேன். ''படம் வரட்டும் அப்புறம் சொல்லுங்க'' என்றார் விரைப்பாக. கோவக்காரர்.

அவரைவிடுங்க நீங்கள் இந்தக் கதையை படித்துவிட்டீர்கள்தானே இதே கதையோடு எதாவது படம் வந்தால் பார்த்துவிட்டு கொந்தளிக்கவும். அல்லது அந்நிய நாட்டு விஷயத்தை தமிழுக்கு ஈன்ற தங்கம் எங்கள் இணையற்ற இயக்குனர் என அவரை பாரட்டவும். உங்கள் விருப்பம்.

அப்படி படம் எதுவுமே வரவில்லையென்றால இந்த கொரிய படத்தையாவது தவறவிடாமல் பார்த்துவிடவும். கேங்ஸ்டர் பட ரிசிகர்களுக்கு ஏற்ற சூப்பரான படம். குறையென்று சொல்வதென்றால் கொஞ்சம் நீளம். ஆனால் அற்புதமான மேக்கிங்கிற்காகவும் ஸ்டன்ட்காட்சிகளின் கோரியோக்ராபிக்காகவும் நிச்சயமாக அனைவரும் கட்டாயம் பார்க்கலாம்.

(இரண்டாவது படம் என்றே ஒரு படத்தை எனக்கு பிடித்த இயக்குனரான அமுதன் இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த இயக்குனர் அவரில்லை. ஒருவேளை இப்பதிவை படித்து யூகிக்க முடிந்தாலும் படம் வெளியாகும் வரை ரகசியம் காக்கவும்.)