Pages

04 March 2015

கோமாதா எங்கள் குலமாதா (அல்லது) #BEEFBAN





சென்னையில் கிடைக்கிற மாட்டுக்கறி எதுவுமே நல்ல மாட்டுக்கறி கிடையாது. முக்கால் வீசம் எருமைக்கறி கலவைதானாம்! மிச்சமீதி கறியும் மாத்திரைபோட்டு பதப்படுத்தப்பட்ட எடைகூட்டப்பட்ட சுமார்கள்தான். இருந்தாலும் வேறு வழியில்லாமல் அதைதான் தின்று தொலைக்க வேண்டியிருக்கிறது. இதற்கு ‘’1955ல் போடப்பட்ட சட்டம்’’தான் காரணம். தமிழ்நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு கட்டுப்படுத்தப்பட்ட தடையிருக்கிறது. ஆடு, கோழியைக் கொல்வதைப்போல ஒரே திருகில் தலையைக் கிள்ளி மாடுகளை கொல்ல முடியாது.

முதலில் வெட்டப்படுகிற மாடு வெட்டுவதற்கு ஏற்றதா என்பதற்கு சான்றிதழ் வாங்கவேண்டும். அதுவும் அந்த மாட்டிற்கு பத்து வயதிற்கு மேலாகிவிட்டதை உறுதிப்படுத்தவேண்டும். இனி அந்த மாடு விவசாயத்திற்கு பயன்படாது, இனப்பெருக்கம் பண்ணாது, பால்தராது, எதற்குமே பயன்படாது என்பதற்கும் சான்றுகள் அளித்தால் மட்டும்தான் அவற்றை வெட்டமுடியும்.

இது 1955ல் போடப்பட்ட சட்டம், 1976ல் எக்காரணத்திற்காகவும் பசுக்களை கொல்லக்கூடாது என்று அரசு அறிவித்தது. அதன்பிறகு தமிழ்நாட்டில் எதற்குமே பிரயோஜமில்லாத காளை மாடுகளும், எருதுகளும், எருமைகளும் மட்டும்தான் உண்பதற்கென்று மிகச்சிறிய அளவில் வெட்டப்படுகின்றன (சட்டப்பூர்வமாக). இதனால்தான் கேரளாவிற்கே எல்லா மாடுகளையும் தாரைவார்க்கிறோம். இங்குமட்டுமல்ல இந்தியா முழுக்கவே பெரும்பாலான மாநிலங்களில் இதே மாதிரி தடை இருக்கிறது. கேரளா, மேற்குவங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மட்டும்தான் மாட்டுக்கறிக்கு எந்த தடையும் கிடையாது. இஷ்டபடி துண்டாக்கி வாயிறுமுட்ட தின்னலாம்.

இந்தியாவின் 90சதவீத மாநிலங்களில் வெட்டப்படாமல் அல்லது சாப்பிடக்கிடைக்காமல் போகிற மாட்டிறைச்சியெல்லாம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதனால்தான் உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நமக்கு இரண்டாமிடம்! இந்த ஏற்றுமதியில் பிரபலமான ஆறு இந்திய நிறுவனங்களில் நான்கை நடத்துபவர்கள் இந்துக்கள் என்பது இதில் நம்ப முடியாத மெடிக்கல் மிராக்கிள்! ஆனால் இந்நிறுவனங்களின் பெயர்கள் எல்லாமே அல்கபீர், அராபியன் மாதிரி இஸ்லாமிய பெயர்கள் என்பது அடுத்த மிராக்கிள்.

இவ்வகை தடைகளால்தான் இன்றுவரை நல்ல மாட்டுக்கறியை தேடி அலையவேண்டிய துர்பாக்கிய நிலையில் நாமெல்லாம் இருக்கிறோம். இருந்தும் இந்த தடைகளையும் மீறியே இங்கு ஒரளவுக்காவது மாட்டிறைச்சி கிடைக்கிறது. கேரள எல்லையோர பகுதிகளில் இருக்கிற உணவங்களில் நல்ல பீஃப் பிரியாணியும் மசாலாவும் ஃப்ரையும் இப்போதும் கிடைக்கிறது.

சென்னையில் ரங்கீஸ் கிச்சன், குமரகம், என்டே கேரளம், வாங்ஸ் கிச்சன் முதலான கடைகளிலும், வடசென்னையின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருக்கிற சிறிய கடைகளிலும் ருசியான தரமான மாட்டிறைச்சி கிடைக்கிறது.

இந்துக்கள் அதிகம் வாழும் கேரளாவில் சராசரியாக ஒரு மாதத்தில் ஒரு ஆள் 147கிராம் மாட்டிறைச்சியை உண்கிறார்கள். மேற்குவங்கத்தில் சராசரியாக 133கிராம். இங்கெல்லாம் மாட்டிறைச்சிக்கு தடையில்லை. மாடுகளை வெட்ட தடையுள்ள தமிழ்நாட்டில் இந்த அளவு வெறும் ஒன்பது கிராம்தான்! ஒருவேளை இங்கும் தடைநீக்கப்பட்டால் கேரளாவோடு நாமும் சரிக்கு சமமாக போட்டி போட முடியும் என்றே தோன்றுகிறது. காரணம் அவ்வளவு பேர் நல்ல மாட்டிறைச்சி கிடைக்காதா என ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இங்கே கேரளாவை விடவும் மிக அதிக தேவை இருக்கிறது.

நல்ல வேளையாக தமிழ்நாட்டில் மாட்டுக்கறி தின்பதற்கோ அல்லது அதை வீட்டில் பத்திரப்படுத்தி பாதுகாப்பதற்கோ தடையில்லை! அந்த வகையில் நாம் புண்ணியம் பண்ணியவர்கள்தான். ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு இந்நிலை இப்படியே இருக்கும் என்பதை சொல்வதற்கில்லை. நம்மை ஆளும் சனாதன இந்துத்வர்கள் சீக்கிரமே தமிழ்நாட்டையும் புனிதமாக்கிவிடகூடும்! இதோ மகாராஷ்டிரா வரைக்கும் வந்துவிட்டார்கள் புனிதர்கள்.

மகாராஷ்டிராவில் மாட்டுக்கறி ‘’தின்றாலும்’’ கூட ஐந்தாண்டுகள் சிறை என்று அறிவித்திருக்கிறது அம்மாநில அரசு. அதை என்னவோ மாபெரும் சாதனை போல லட்சக்கணக்கில் செலவழித்து அரைப்பக்கத்துக்கு தினசரிகளில் விளம்பரங்களும் கொடுத்து கொண்டாடி மகிழ்கிறது. மாட்டிறைச்சி சாப்பிட்டால் ஐந்தாண்டு சிறைதண்டனை என்பது என்ன மாதிரி நாஸித்தனம்.

மராட்டியத்தில் ‘’மாட்டிறைச்சிக்கு தடை’’ என்றால் வெறும் பசுவின் இறைச்சிக்கு மட்டுமல்ல தடை, காளை, எருது, இளங்காளை, கன்றுக்குட்டி என எதையுமே வெட்டவும் தின்னவும் சமைத்துக்கொடுக்கவும் முடியாதபடி சட்டம் போட்டிருக்கிறார்கள். எருமைகளை மட்டும் வெட்டிக்கொல்லலாமாம் , ஏன் என்றால் எமனின் வாகனங்களான கறுத்த எருமைகள் புனிதமானவை கிடையாதாம்! (இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களில் எருமைகளை உட்கொள்ளுவோர் அளவு வெறும் 25 சதவீதம்தான்.)

மராட்டியத்தில் மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களின் முக்கால்வாசிபேர் தலித்துகளும் ஆதிவாசிகளும் இஸ்லாமியர்களும்தான். இப்போது அப்பிரிவினருக்குத்தான் ஆப்பு வைத்திருக்கிறது அம்மாநில பிஜேபீ அரசு. இத்தடைக்காக கடந்த இருபதாண்டுகளாக விடாப்பிடியாக போராடியிருக்கிறார்கள். தொடர்ந்து இம்மாநிலத்தில் மாடுகளை வெட்டுவதற்காக எடுத்துச்செல்லும்போது வண்டிகளை மடக்கியும் ஓட்டுனர்களை தாக்கியும் அடாவடிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவன ஊழியர்கள் மீதும் கொலைவெறித்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.

சென்ற மாதம் கூட இதுமாதிரி பத்து நிகழ்வுகள் நடந்திருக்கிறது. இதையடுத்து அம்மாநில முதல்வர் நல்ல பிள்ளைபோல ‘’மாட்டிறைச்சி வியாபாரிகளின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு இப்போது அவர்களுடைய பிழைப்பிற்கே மங்களம் பாடியிருக்கிறார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாட்டிறைச்சி விற்பதில் மட்டுமல்ல அதுசார்ந்த தோல் பதனிடுதல் மாதிரி தொழில்களிலும் ஈடுபட்டுள்ள அத்தனை இஸ்லாமியர்களும் இதன்வழி நேரடியாக பாதிக்கப்படுவர். மற்ற இறைச்சிகளின் விலை தாறுமாறாக உயரும் இது அம்மாநில நடுத்தர வர்க்கத்தினரை வெகுவாக பாதிக்கும். (தமிழ்நாட்டில் ஏன் மட்டன் விலை அதிகமாக இருக்கிறதென்பது இப்போது புரிகிறதா?).

இதையெல்லாம் தாண்டி இந்திய அளவில் மாட்டிறைச்சி உற்பத்தியில் இருபத்தைந்து சதவீத பங்கு மகாராஷ்டிராவிலிருந்துதான் கிடைக்கிறது. இனி இந்தத்தடையால் கறுப்புச்சந்தையின் வீச்சு அதிகரிக்கும். ஏற்கனவே இந்திய அளவில் இருக்கிற தடைகளால் முப்பதாயிரத்திற்கும் அதிகமான சட்டவிரோத மாட்டிறைச்சி கூடங்கள் இந்தியா முழுக்க இயங்குகின்றன, இங்கெல்லாம் மாடுகள் மிகமோசமான முறையில் நடத்தப்படுகின்றன. இவற்றை அரசால் கண்காணிக்கவும் முடியாது. இவற்றின் பின்னணியில்தான் மேற்சொன்ன அல்கபீர் அராபியன் மாதிரி நிறுவனங்கள் இயங்குகின்றன.

எல்லாவித சட்ட நெறிமுறைகளின் படி கண்காணிப்பில் இருக்கிற மாட்டிறைச்சி கூடங்களின் எண்ணிக்கை இந்திய அளவில் வெறும் மூவாயிரம்தான்! இனி ச.வி.மாட்டிறைச்சி கூடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். நல்ல மாட்டிறைச்சிக்கு தட்டுபாடுகள் உண்டாகும். கொல்லப்படாத மாடுகளை வைத்து பராமரிக்க முடியாத விவசாயிகள் அவற்றை சாலைகளில் அநாதைகளாக அனுப்பலாம், அதனால் விபத்துகள் பெருகும். இன்னொருபக்கம் அவையே உணவின்றி பிளாஸ்டிக் குப்பைகளை தின்று செத்துப்போகும். அல்லது ஆர்எஸ்எஸ் புனிதர்கள் இவற்றையெல்லாம் கைப்பற்றி தீவனம் போட்டு காப்பாற்றினாலும் அம்மாநிலத்தில் தீவனப்பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உண்டு.

இந்த தடைக்கு பின்னால் இருப்பது வெறும் ஜீவகாருண்யம்தான், அந்த மாடுகள் எவ்வளவு புனிதமானவை தெரியுமா? அவை இந்துக்களுக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா? அவற்றை எவ்வளவு மோசமாக வெட்டுகிறார்கள் தெரியுமா? என்பது மாதிரி கேவலமான வாதங்களை ஆங்காங்கே வாந்தி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இந்துத்வர்கள். இவர்களுடைய ஜீவகாருண்யதில் எருமைகள் வராதா, எமன் வாகனம் என்றால் இளக்காரமா? ஆடுகளும் கோழிகளும் பன்றிகளும் வராதா? முட்டை என்ன கணக்கில் சேரும் அரசே முட்டை தின்பதை வலியுறுத்தி சச்சின் தெண்டுல்கரை வைத்து விளம்பரமெல்லாம் போடுகிறதே? மற்ற எந்த விலங்குகளையும் விட கோழிகளைதான் நம் நாட்டில் மிக மோசமான முறையில் கையாளுகிறார்கள், அதையெல்லாம் காக்க வேண்டும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா? பண்ணுவது அப்பட்டமான பேரினவாத அரசியில், அதை மூடி மறைக்க எதற்கு ஜீவகாருண்ய முகமூடி? இத்தடையால் யாருக்கு பாதிப்பு என்பது கூட அல்லது குறிப்பிட்ட எந்த சமூகத்தினருக்கு என்பதும்கூட தெரியாமல்தான் தடைவிதிக்கிறதா ஓர் அரசு? ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள்ளாகவே இவ்வளவு ஆட்டம் இன்னும் அடுத்த நான்காண்டுகளின் என்னவெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?

சென்ற மாதம்கூட ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட போது, ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் அவரவர் மாடுகளை கேரளாவுக்கு அடிமாடுகளாக அனுப்பிவிட தீர்மானித்தனர். ஆனால் ராமகோபாலன்தான் அந்த மாடுகளின் மீது பரிதாபப்பட்டு அதையெல்லாம் கொண்டு போய் தன்னுடைய கோசாலையில் வைத்து பராமரிக்கிறார். என்னே ஜீவகாருண்யம்! இதேபோல தமிழ்நாடு முழுக்க வெட்டப்படும் ஆடுகளையும் கோழிகளையும் கூட தன்னுடைய கோசாலையில் கொஞ்சம் இடம் ஒதுக்கிக் காப்பாற்றலாம். ராமகோபாலனை பின்பற்றி ஊரெங்கும் இருக்கிற ஆர்எஸ்எஸ் அரைடிராயர்களும் தங்களுடைய இடங்களில் வெட்டப்படும் கோழி ஆடுகளை காப்பாற்றி புண்ணியம் பெறலாம். மாடுகளை காப்பாற்றுவதால் கிடைக்கிற புண்ணியத்தில் பாதியோ கால்வாசியோதான் ஆடுகளையும் கோழிகளையும் காப்பாற்றினால் கிடைக்கும். ஆனால் அப்படி காப்பாற்ற ஆரம்பித்தால் சன்டே மதியம் என்னத்தை தின்பதாம் என்கிறார்கள் ஆர்எஸ்எஸ் ஆர்வலர்கள். கரகெட்தானே.