Pages

17 February 2017

இரண்டு நிமிடங்கள்



சென்ற ஆண்டுமுழுக்க ஒவ்வொரு நாளும் எனக்கு நானே சொல்லிக்கொண்ட மேஜிக் நம்பர் - 90. ஒவ்வொரு நாளும் என் மாரத்தான் பயிற்சியை தொடங்கும் போதெல்லாம் 90... 90... 90... என்ற எண்களை உச்சரித்தபடியேதான் தொடங்குவேன். ஓடும்போது சோர்ந்துபோனால் இந்த எண்களை மனது தானாகவே உச்சரிக்கத்தொடங்கி ஊக்கப்படுத்திக் கொள்ளத் தொடங்கும். நைன்ட்டி கட்டிங் பார்ட்டிகளை விடவும் வெறியோடு என்னைத்துரத்தியது இந்த நைன்ட்டி தான்.

இரண்டாண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த மாரத்தானில் 97 நிமிடங்களில் அரைமாரத்தான் தூரமான 21 கிலோமீட்டர்களை கடந்தேன். இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட அந்தப்போட்டியில் எனக்கு கிடைத்தது 128 வது இடம். என்னைப்போன்ற பல ஆண்டு புகைப்பழக்கமுள்ள ஓர் ஆளுக்கு... திடீர் ஓட்டக்காரனுக்கு இதெல்லாம் நினைத்துப்பார்க்கவே முடியாத மாபெரும் சாதனை. ஆனாலும் எனக்கு அதில் திருப்தியே வரவில்லை.

ஓட்டப்பயிற்சி அப்படித்தான்... உங்களை லூசு போல மாற்றிவிடும். எவ்வளவு ஓடினாலும் ஓயவிடாது. இலக்குகளை அதிகமாக்கிக்கொண்டேதான் செல்லும். இலக்குகளே இல்லையென்றாலும் புதிய இலக்குகளை தானாகவே உற்பத்தி செய்து கொள்ளும். அதனால்தான் டைம்பாஸுக்கு ஓட ஆரம்பித்த பலரும்... சைக்ளிங்... ஸ்விம்மிங்... கோச்சிங் என அடுத்தடுத்து ஏதோதோ செய்துகொண்டிருக்கக்காரணம். பெங்களூரில் தோன்றிய அத்தகைய புதிய இலக்குதான் இந்த 90நிமிட இலக்கு!

எலைட் ரன்னராக ஆவதற்கான முதல் படி....

2016ஆம் ஆண்டின் சென்னை மாரத்தானில் 90நிமிடங்களுக்குள் பந்தய தூரத்தை கடப்பது. இதை சாதித்தால் நிச்சயம் டாப் 20 இடங்களில் ஒன்றை நிச்சயம் எட்டிவிட முடியும் என்பது என்னுடைய கணக்கு. நான்காயிரம் பேரில் 20வது இடம் என்பதெல்லாம் கனவில் கண்டுக்கலாம்... அல்லது சினிமாவில் பண்ணிக்கலாம்... பாணி இலக்கு!

நண்பர்கள் சிலர் ஊக்கப்படுத்தினாலும், எல்லோருக்குமே இதில் அச்சங்களும் சந்தேகங்களும் இருந்தன. காரணம் மிக அதிகப் பயிற்சியும், காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும்... அதோடு என்னுடைய புகைப்பழக்கத்தால் நார்நாராகிப்போன உடலும்... கூடவே இதுமாதிரியான இலக்குகள் கொடுக்கிற மன உளைச்சலும்... அச்சத்தை உண்டாக்கியது.

விளையாட்டு வீரர்களுக்கு இருக்கிற மிகப்பெரிய சாபக்கேடு இந்த காயங்கள். கண்களுக்கே தெரியாமல் உள்ளுக்குள் உருவாகி வலியால் உயிரை வாங்கிவிடும். காயம் வந்து ஓய்வுக்கு சென்றுவிட்டால் திரும்பிவரும்போது 90மினிட்ஸ் கோட்டையெல்லாம் அழித்துவிட்டு முதலில் இருந்து தொடங்கவேண்டும். எனவே ஜாக்கிரதையாகவும் திட்டமிட்டும் பயிற்சிகளை மேற்கொள்ளத்தொடங்கினேன். தனியாக பயிற்சியாளர் வைத்துக்கொள்கிற அளவுக்கு வசதிகள் கிடையாது. ஓட்டக்குழுக்களோடு இணைந்து பயிற்சி செய்வதிலும் ஏனோ எனக்கு ஈடுபாடு இல்லை. எனவே நானே கற்றுக்கொள்ள முடிவெடுத்து படிக்க வேண்டியதாக இருந்தது. யூடியூப் வீடியோக்கள் உதவின. சமூகவலைதளங்களில் இயங்குகிற ரன்னிங் குழுக்கள் உதவின.

இதுபோன்ற அதிவேக ஓட்டத்திற்கு அவசியமே உடல்வலிமைதான். அதை அதிமாக்கவேண்டியது அவசியம் என்பதால் ஒவ்வொருநாளும் ஓட்டத்தை விட இரண்டுமடங்கு அதிகமான நேரத்தை உடற்பயிற்சிக்கென ஒதுக்கினேன். கூடவே என் உடல் எடையையும் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ள, LCHF டயட் முறையை முடிந்தவரை பின்பற்றினேன். அது நிஜமாகவே நன்றாக உதவியது. தேவையான போஷக்கையும் அளித்தது. புத்தகங்கள் வாசிப்பது, ஓட்டப்பயிற்சியை திட்டமிடுவது என எல்லாமே சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. 97 என்கிற என்னுடைய சாதனை எண்... படிப்படியாக குறைய ஆரம்பித்திருந்தது.

97... 96ஆக மாற மிகமிக மெனக்கெட வேண்டியதாயிருந்தது. ஒவ்வொரு விநாடியைக் குறைப்பதற்கும் பல நூறு கிலோமீட்டர்கள் ஓடி பயிற்சிபெறவும்... உடற்பயிற்சிகள் செய்யவும்வேண்டியதாக இருந்தது.

ஒரு சிறிய விபத்து. 2016 ஏப்ரலில் மாதம் கணுக்காலில் காயம்.

நான் எப்போதும் பயிற்சி பெறும் பூங்காதான். அதன் ஒவ்வொரு இன்ச்சும் கண்ணுக்கு மட்டும் அல்ல மனதிற்கும் அத்துப்படி. இருந்தும் உடைந்து போயிருந்த டைல்ஸ் ஓன்று காலை பதம் பார்த்தது. கணுக்கால் அப்படியே மடங்கிவிட்டது. ஆரம்பத்தில் அது பெரிதாக வலியெல்லாம் இல்லாமல் இருக்கவே, உடைந்த காலோடேயே பயிற்சியை தொடர்ந்தேன். கொஞ்சமாக வலி வர ஆரம்பித்தது, அது நாள்பட சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஓட்ட வியாதிகள் பலவும் அப்படித்தான் பார்க்கிற பெண்கள் மேலெல்லாம் வருகிற காதல் போல அதுபாட்டுக்கு வரும் போகும்... ஆனால் இது ஏதோ டீப் லவ் போல... அப்படியே தங்கி விருந்து சாப்பிடத்தொடங்கிவிட்டது.

அடுத்த பத்து நாளில் கணுக்கால் மூட்டு பந்துபோல வீங்கிவிட...சுதாரித்துக்கொண்டு டாக்டரிடம் போனேன். அவர் அடுத்த ஒருமாதத்திற்காவது ரெஸ்ட் எடுங்க என சொல்லிவிட்டார். சிறப்பு... வெகு சிறப்பு...

பயிற்சிகளை நிறுத்தினேன். ஒவ்வொரு நாளும் 90 என்கிற அந்த எண் கனவில் எல்லாம் வந்து தொல்லை பண்ணும். நினைத்து நினைத்து குமைவேன். ஒருமாதம் எப்போது முடியும் என வெறியாக இருக்கும். ஆனால் தொலைதூர ஓட்டக்காரனுக்கு இருக்கவேண்டிய முக்கிய குணங்களில் ஒன்று காத்திருப்பது. இல்லையென்றால் மிக அதிக தூரத்தை பொறுமையாக ஓடிக்கடக்கவே முடியாது. அதனால் இந்தக் காயம்பட்ட காலகட்டம் பொறுமையாக இருப்பதற்கான வலிமையை கொடுத்த நாட்கள்... அது ஓட்டத்திற்கு மட்டுமான பயிற்சியாக இல்லாமல் வாழ்க்கைக்கான பயிற்சியாக இருந்தது.

ஒருமாதம் முடிந்தபின்னும் கால்களில் போதுமான முன்னேற்றம் இல்லை. இன்னும் பதினைந்து நாள் ஓய்வு நீட்டிக்கப்பட்டது. நாற்பத்தைந்து நாட்கள் கடந்த நிலையில் என்னுடைய எடை 70கிலோவை எட்டி இருந்தது. கன்னத்தில் கூட தொப்பை உருவாகி இருந்தது. ஓட ஆரம்பித்தால் பழைய வேகத்திற்கு அருகில் கூட வரமுடியாத அளவிற்கு வேகம் குறைந்து இருந்தது. உடலில் வலிமையும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஓடத்தொடங்கி பழைய வேகத்தை எட்டமுடியாமல் போகும் போதெல்லாம் உடலைவிட அதிகமாக கண்களில் வேர்க்கும்... இருந்தாலும் பயிற்சி தொடரும். 90-90 மந்திரங்கள் எதுவுமே எடுபடவில்லை.

கொஞ்சம் ஓரளவுக்கு சுமாரான வேகத்தில் ஓடத்துவங்கியதும் இழந்த நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது. ஜூன் மாதம் நடந்த நள்ளிரவு மாரத்தான் (D2D) போட்டியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டேன். நள்ளிரவில் ஓடியே பழக்கப்படாததும், அந்த இரவில் அடித்த அனலும் கால்களில் மீண்டும் காயத்தை உண்டாக்க... போட்றா இன்னும் ஒருமாசம் ரெஸ்ட்டு.

இது... கலங்கிப்போனேன் கண்மணி சீசன் 2. சென்னை மாரத்தானுக்கு ஆறுமாதங்களே எஞ்சி இருந்தன. ஏற்கனவே வருடத்தில் பாதியை காயங்களுக்கு கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தேன். ஆனாலும் அப்படியெல்லாம் விட்டுவிட முடியுமா. ஏதோ ஒருநாளில் உள்ளுக்குள் இருந்து அந்த நைன்ட்டி பூதம் விழித்துக்கொண்டது. நூறு நாள் நூறு ஓட்டம் என்று முடிவெடுத்தேன்.

விடாப்பிடியாக ஓய்வே இல்லாமல் நூறு நாட்களுக்கு ஓடுவது அவ்வளவுதான். ஆனால் தினமும் குறைந்தது 5கிலோமீட்டர் ஓடவேண்டும் என்பது மட்டும்தான் நிபந்தனை. நமக்கு நாமேதான் நடுவர். இந்தப்பயிற்சி எனக்கு மிக அதிக சுயக்கட்டுப்பாட்டை கொடுத்தது. இந்த காலகட்டத்தில் கொஞ்ச கொஞ்சமாக பழைய வேகத்தை எட்ட ஆரம்பித்தேன். ஆனால் இந்த முறை அதிகமான கவனத்துடன் பயிற்சிகள் தொடர்ந்தன. இந்த பயிற்சிகள் அத்தனையும் வெறுங்காலில் ஓடிதான் என்பதால் அதற்குண்டான விஷயங்களையும் இணையத்தில் தேடி படித்து, எப்படி பாதங்களை பாதுகாப்பது என்பதையும் படிக்க ஆரம்பித்தேன்.

அடுத்த ஐந்து மாதங்களும் விடாத பயிற்சி. முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் சென்னை மாரத்தான் ஒருமாதம் ஓத்திவைக்கப்பட, அந்த ஒருமாதம் லம்ப்பாக கிடைத்தது. பயிற்சியை இன்னும் முடுக்கிவிட்டேன். இந்த ஐந்துமாத காலகட்டத்தில் ஒவ்வொரு நாளும் பயிற்சி நேரத்தை அதிகமாக்கினேன். கிட்டத்தட்ட 7 கிலோவரை எடைகுறைத்தேன். வலிமையை கூட்டும் பயிற்சியை அதிகப்படுத்தினேன். வலிநிறைந்த காலகட்டம் இது.
இருந்தும் 90மந்திரம் முன்னெப்போதையும் விட மிக அதிக நம்பிக்கையோடு மனதில் ஜெபிக்கத் தொடங்கி இருந்தேன். நிச்சயம் செய்துவிட முடியும் என்கிற நம்பிக்கை பந்தய நாள் நெருங்க நெருங்க அதிகரிக்கத் தொடங்கி இருந்தது. ஒரு கிலோமீட்டர் 4 நிமிடம் 15 நொடியில் கடந்தால் 21கிலோமீட்டர் எவ்வளவு என எந்நேரமும் மனம் கணக்குப்போட்டபடி இருக்கும்.

எங்குமே நிற்கக்கூடாது. தொழில்முறை அத்லெட்டுகளோடு போட்டி போட்டாலும் அவர்களுடைய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாவிட்டால் விலகிவிடவேண்டும். பொறுமை முக்கியம். வெறுங்காலில் ஓடுவதால் பாதையில் கவனம் வேண்டும். எதாவது கூரான பொருட்கள் குத்திவிட்டால் போச்சு... என ஏராளமான நிபந்தனைகளை விதித்திக்கொண்டேன். ஏராளமான ஸ்ட்ராடஜிகள்... ஒவ்வொன்றையும் நானே உருவாக்கி அழித்து சரிசெய்து... இதோ கடந்த ஜனவரி 7ஆம் தேதி சென்னை விப்ரோ மாரத்தானில் ஓடிமுடித்துவிட்டேன்.

ஆனால் இரண்டு நிமிடங்கள் அதிகமாகிவிட்டது. 92 நிமிடங்களில்தான் முடித்தேன். நடுவில் சில கிலோமீட்டர்கள் ஓடமுடியாத அளவுக்கு உடல் சோர்ந்துவிட்டது ஒரு காரணம்... இன்னொரு காரணம் நடுவில் ஒரு மேம்பாலம் குறுக்கிடுகிறது... இன்னொரு காரணம் ஆரம்பத்திலேயே மிக அதிகவேகத்தில் ஓடியது... இப்படி இன்னொரு காரணம்... இன்னொரு காரணம் என இதோ இப்போது வரைக்குமே மனது ஆயிரம் காரணங்களை கண்டுபிடித்தபடிதான் இருக்கிறது.

ஆனால் தோற்றுவிட்டேன் என்று உறுதியாக நம்புகிற இந்த மனதை என்னால் சரிசெய்யவே முடியவில்லை. ஓராண்டாக பழக்கப்படுத்திய ராட்சசன்... அவனால் அத்தனை எளிதில் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மதிப்பெண் குறைந்தாலும் தேர்ச்சி இல்லைதான், ஒரு ரன்னில் தோற்றாலும் தோல்விதான் இல்லையா... இந்த முறை நான் தோற்றுத்தான் போயிருக்கிறேன். வேறு யாரிடமோ அல்ல என்னிடமே...!

சென்னை மாரத்தானில் என்னுடைய நேரம் 92 நிமிடங்களும் 36 நொடிகளும். இதைவிடவும் சிறப்பாக செய்து முடித்திருக்கலாம்தான். ஆனால் கலந்துகொண்ட 3600பேரில் நான் பிடித்திருந்த இடம் 29வது... என்பதில் பெரிய மகிழ்ச்சி!

2014ல் ஓடத்தொடங்கினேன்..  440வது இடத்திலிருந்து அடுத்த ஆண்டு 128ஆவது இடம். அங்கிருந்து இதோ இந்த ஆண்டு 29வது இடம். ஆனால் இது போதாது என்கிறான் உள்ளுக்குள் இருக்கிற ஓட்ட ராட்சசன்....