Pages

04 July 2008

பிளாக் எழுதியே நாசமாப் போனவன்!!!!!!!

'' டேய் மாப்ளே!!! என்னடா எப்படி இருக்கே , ரொம்ப நாளா ஆளும் இல்ல , போனும் இல்ல , உயிரோடதான் இருக்கியா!!!! '' சோகமாய் வினவினான் விஜய் .


'' இல்ல மச்சி , கொஞ்சம் பிஸிடா !! அதான் , எப்படி இருக்கே , அம்மா எப்படி இருக்காங்க , ஸாரிடா மாப்பி, போன் பண்ண்னும்னு நெனைப்பேன் அப்புறம் மறந்துருவேன் , '' கெஞ்சும் தோரணையில் அஜித் .


'' ஏன்டா நல்லாதான இருந்த என்ன ஆச்சு , என் மேல எதும் கோபமா , நான் எதும் தப்பா பேசிட்டனா , அப்படி எதும் பேசிருந்தா மன்னிச்சுர்ரா !!! ''


'' ச்சீ அப்படிலாம் ஒன்னுமில்லடா , நான் இந்த வலைப்பதிவுலாம் எழுத ஆரம்பிச்சுருக்கேன் , அதுல என்னோட கதை கவிதை விமர்சனம்லாம் எழுதறேனா அதான்டா , நிறைய யோசிக்க வேண்டி இருக்கு ''


'' வலைப்பதிவுனா?''


'' பிளாகுடா , நீ கூட ஏரிவாயன்னு ஒரு இங்கிலீஷ் பிளாகு வச்சிருக்கியே அது மாதிரி இது தமிழ்டா , தமிழ்ல வலைப்பதிவு ''


''ஸோ வாட் ''


''அதுதான்டா !! நிறைய யோசிச்சு எக்க சக்கமா எழுதறேன் , என்னோட கதை கவிதைலாம் கூட இருக்கு மாப்பி !! என்க்கு புனைப்பெயர் கூட இருக்குடா , ஜாம்பஜார் ஜக்குனு , என் வெப்சைட் அட்ரஸ் ஜக்குபாய் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம்டா மறக்காம பாருடா''


'' பாக்குறேன்டா , கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறம் பேசறேன் மச்சி , பாய்டா '' '' பாய்டா மாப்பி'' அஜித் மனதுக்குள் பரபரப்பாக இருந்தது விஜய் தன் வலைப்பூவை பார்த்து விட்டு என்ன சொல்ல போகிறானோ என்று .'' மச்சி விஜய் பேசறேன்டா !! ''


''சொல்லு மாப்பி ''


''மச்சி உன் பிளாக் பார்த்தேன்டா , நல்லாருந்துச்சி , பட் எனக்கு தான் ஒன்னும் புரியல ''


'' ஏன்டா , என்னாச்சு''


''நீ என்னமோ எழுதிருக்க , ஆனா பரவால்ல , நைஸ் , யாராவது வந்து பாக்குறாங்களா , ??''


அஜித்துக்கு என்னவோ போல் இருந்தது .


'' இது வரைக்கும் 2000 பேர் வந்து பார்த்துருக்காங்க மச்சி , ஆனா யாருமே கமெண்ட்ஸ் போட மாட்டேங்கிறாங்க , தமிழ்மணம்னு ஒரு திரட்டில போட்ருக்கேன் , அது மூலமா , வரவங்கதான் , தினமும் எப்படியாவது ஒரு பிளாக் போட்ருவேன்டா , ரெகுலரா அப்டேட் பண்ணிருவேன் , பட் தினமும் 20 பேர் தான் வராங்க , ரெண்டு நாளாதான் ஒன்னும் போடல , போஸ்ட் போட ஒரு மேட்டரும் கிடைக்கல மச்சி ''


'' சரி உன் பிளாக்ல நான் கமெண்ட் போடறேன் என் பிரண்ட்ஸ்கிட்டயும் சொல்லி கமெண்ட் போட சொல்றேன் ஓகேவா , யூ டோண்ட் வொரி ,'' , '' தேங்கஸ்டா மச்சி ''


'' ஒகே உன் லவ்வர் கீதா எப்படி இருக்காடா , '' ,


''மச்சி நான் அவளோட பேசறதில்லடா ''


''ஏன்டா ''


'' நீ வேற , அவளால என் பிளாக்ல இருக்கற கவிதைகள ரசிக்க முடியல , எப்படி என்னோட வாழப்போறா !! என் கவிதை மொக்கையா இருக்காம் , அதுவுமில்லாம அவளோட பேசினா , என்னால என் பிளாகுக்கு மேட்டர் எதும் யோசிக்க முடியறதில்ல அதான்டா!!


''அடப்பாவி இதுக்கு போயி எவனாவது இப்படி பண்ணுவானா !! லூசாடா நீ ? ''


'' மச்சி உனக்கு என்னடா தெரியும் நம்ம எழுத்த நாலு பேரு படிச்சு , அது மூலமா கிடைக்கிற அந்த பாராட்டு அதுனால கிடைக்கிற அந்த சந்தோசம் , அந்த கிக்கே தனிடா ''


''மச்சி , நீ எதுக்கோ அடிமை ஆகிட்டேனு நினைக்கிறேன் , வீட்லதான இருக்க உங்கம்மாவ கூப்பிடு , நான் கொஞ்சம் பேசணும் ''


''மாப்பி அம்மாகிட்ட கொஞ்சம் பிரச்சனைடா , அம்மாகிட்ட சரியா பேசறதில்ல , எப்ப பாரு கம்ப்யூட்டரே கதினு இருக்கேனு என்ன ஒரு நாள் ரொம்ப திட்டிட்டாங்கடா , நானும் அவங்கள கன்னாபின்னானு திட்டிட்டேன் ''


'' அட இழவெடுத்தவனே !! அப்படி என்னதான்டா இருக்கு அந்த கருமம் புடிச்ச பிளாக்ல , அஞ்சு காசுக்கு பிரயோஜனமிருக்கா !!''


'' மாப்பி நான் காசுக்காக எழுதறதில்லடா , மனசு திருப்திக்காகடா , நான்லாம் சுஜாதா, பாலகுமாரன் மாதிரி வரவேண்டியவன்டா , கொஞ்சம் மிஸ் ஆகி இப்படி ஆகிட்டேன் , என் எழுத்துக்கு இங்கதான்டா சரியான அங்கீகாரம் கிடைக்குது ''


''உன்னலாம் திருத்தவே முடியாது , வை போன!! நீயெல்லாம் பிளாக் எழுதியே நாசமாப்போகப் போறடா , தயவு செஞ்சு இனிமே எங்கிட்டயும் பேசாத!!''


பட்டென அலைபேசி இணைப்பை துண்டித்தான் விஜய் .காலச்சக்கரம் மேலும் 6 மாதங்கள் சுழன்றது


அஜித் தன் காதலியுடன் ஸ்பென்சர் பிளாசாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தான் , அங்கே வந்த விஜய் இந்த காட்சியை பார்த்து ஆச்சர்யத்துடன் அஜித்திடம் ஓடிச்சென்று


'' மச்சி !! எப்படிடா இருக்கே , என்னடா என்னலாம் மறந்துட்டியா , மறுபடியும் கீதாவோட பேச ஆரம்பிச்சுட்ட , ஏய் கீ (தா) நாயே நீயாவது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல !! ''

'' மாப்பி , நானே உனக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன்டா , இப்பலாம் நான் பிளாக் எழுதறதில்லடா , ''


'' அட்ரா சக்கை , இது எப்பருந்து ''


'' மச்சி இந்த பிளாக்னாலே என் வாழ்க்கைல நிறைய விசயங்கள இழந்துட்டேன்டா , அதுவுமில்லாம இந்த பிளாக்ல நல்ல கதை நல்ல கவிதைலாம் எவன் படிக்கிறான் , ஒரே அரசியல் அங்க செக்ஸ்க்கும் சென்ஷேஸன்க்கும்தான்டா மதிப்பு , நானும் எப்படி எப்படியோ எழுதி பார்த்துட்டேன் ம்ம்ம் ஒரு பய நம்ம பிளாக்க மதிக்கலையே , அந்த விரக்தி எனக்கு வாழ்க்கைய உணர்த்திருச்சுடா , நான் இதனால என் வாழ்க்கையின் எத்தனை முக்கியமான தருணங்களை ரசிக்காம விட்டுட்டேன் , எக்ஸம்பிளுக்கு ஒன்னு சொல்லட்டா , இதோ என் செல்லக்குட்டியோட இந்த அழகான புன்னகையக்கூட ரசிக்க முடியாம போயிடுச்சே ''


கீதா வெட்கப்பட்டு முகத்தை மூடிக்கொண்டாள் . விஜயால் நம்பவே இயலவில்லை . கையை கிள்ளி பார்த்துக்கொண்டான் .


பெருமகிழ்ச்சியுடன் வீட்டிற்கு சென்றவன் இன்னும் அஜித்தின் இந்த மாற்றத்தை நம்ப இயலாமல் மீண்டும் விஜய்க்கு தன் அலைப்பேசியில் அழைத்தான்


'' மச்சி விஜய்டா '' , '' சொல்லு மாப்பி ''


'' மச்சி உண்மைய சொல்லு நீ உண்மைலயே பிளாக் எழுதறத விட்டுட்டியா ''


''மாப்பி , நீ பெரிய தில்லாலங்கடிடா , கண்டுபிடுச்சுட்டியே !!''


'' அப்ப நீ இன்னும் திருந்தலையா ''


'' மாப்பி இப்பவும் நான் பிளாக் எழுதறேன் , ஆனால் முன்னால மாதிரி இல்ல , பிளாக் மட்டுமே உலகமில்லனு புரிஞ்சுகிட்டேன் , பிளாக் படிக்கிறவங்களுக்கு என்ன புடிக்குமுன்னு தெரிஞ்சு அதுக்கேத்த மாதிரி எழுத முயற்சி பண்றேன் , அதுனால நிறைய புதுபுது நண்பர்கள் கிடைக்கிறாங்க , ஆனால் ஒன்னு இந்த பிளாக் என் பெர்சனல் வாழ்க்கைய எந்த விதத்திலயும் பாதிக்காத மாதிரி பாத்துக்கறேன் , எதுக்குமே அடிமையாகம அத புரிஞ்சுகிட்டு

பண்ணா நிச்சயம் அந்த விசயத்துல பெரிய ஆளா வரலாம்டா , அது வாழ்க்கையா இருக்கட்டும் பிளாக்கா இருக்கட்டும் , அது இரண்டுக்குமே பொருந்தும் , பலன எதிர்பார்க்காம செய்ற எந்த வேலையும் ரொம்ப அழகாருக்கும் ''


'' அட நாயே , அப்ப காலைல கீதாவ வச்சுகிட்டு சீன் போட்ட?''


'' நீ வேற அவளுக்கு நான் பிளாக் எழுதறது தெரிஞ்சா அவ்ள்ளோதான் , சாமி தயவுசெஞ்சு அவகிட்ட மட்டும் சொல்லிறாத !!''


'' ஓகேஓகே , எப்படியோ போ!!''


''மச்சி இப்பக்கூட நாம பேசினத வச்சிதான் அடுத்த போஸ்ட் ஆரம்பிச்சிருக்கேன்டா ''


'' அட கருமாந்திரம் புடிச்சவனே , நீ பிளாக் எழுதியே நாசமா போ!!! என்ன விடு , பாய் ''


அஜித் தனது புதிய பதிவை தன் கணினியில் தொடங்கினான் '' பிளாக் எழுதி நாசமாப்போனவன்!!!!'' என்று.