Pages

26 September 2008

மோசமான படமா ராமன் தேடிய சீதை ??

பெண் பார்க்கும் படலம் திருமணமான அனைவரும் கட்டாயம் கடந்து சென்ற ஒரு மறக்க இயலாத விடயம் . அது பலருக்கும் பல வித அனுபவங்களை தந்திருக்கும் , சிலருக்கு மறக்கமுடியாத ஒரு சம்பவமாகவும் பலருக்கு மறக்க வேண்டிய சம்பவமாகவும் அது இருந்து விடுகிறது , சினிமாத்தனமாக இப்போதெல்லாம் யாரும் பெண் பார்ப்பதில்லை , இருவீட்டாரும் முன்னமே தொலைப்பேசி அலைப்பேசி இணையம் என்று தொழில்நுட்பம் அவர்களை எளிதில் இணைக்கிறது , அது மட்டுமின்றி மணமக்கள் இருவரும் நேரில் பார்க்கும் முன்னமே அலைப்பேசியிலே மின்அரட்டையிலோ பேசி தங்களை புரிந்து கொண்டு ஒத்துவராத பட்சத்தில் பிரிந்து விடும் சூழலே இன்றைய நமது சமூகத்தில் நிலவுகிறது .

இந்த பெண் பார்க்கும் சடங்கும், பஜ்ஜி சொஜ்ஜி மொக்கைகளும் , பெண்ணை பாட சொல்லி கேட்பதும் , ஆடத்தெரியுமா , சமைக்கத்தெரியுமா என்பது போன்ற ஆணாதிக்க மனோபாவத்துடன் கூடிய மற்றும் சினிமாத்தனமான சடங்குகள் இப்போதெல்லாம் வழக்கொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது .

பல ஆண்டுகளுக்கு முன் வெளியான இயக்குனர் விசு படங்களில் நிச்சயம் ஒரு காட்சியாவது பெண் பார்க்கும் காட்சி இருக்கும் , அதிலும் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மூன்று விதமான பெண்பார்க்கும் காட்சிகள் வைத்திருப்பார் , ஒவ்வொன்றும் ஒரு விதம் , இது போன்ற தளத்தில் படம் எடுக்க அவரைத்தவிர யாராலும் அவ்விடயத்தை சினிமாவில் மிக அழகாக கையாண்டிருக்க இயலாது என்பது அனைவரும் அறிந்தது . அதன் பிறகு மௌன ராகம்,ரோஜா, படங்களில் வரும் பெண் பார்க்கும் காட்சியை சொல்லலாம் . ஒரு முழுத்திரைகதையையும் பெண்பார்க்கும் நிகழ்ச்சியை மட்டுமே கொண்டு பின்னப்பட்ட படித்தால் மட்டும் போதுமா படத்தின் திரைக்கதையை விட அது போன்ற கதைக்களத்தில் இது வரை எந்த திரைப்படமும் வரவில்லை .

கடந்த பத்து வருடங்களாக நம் வீட்டிற்குள் புகுந்து விட்ட மெகா சீரியல்கள் செய்ய முயன்றதை திரையில் இரண்டரை மணி நேரத்தில் செய்ய முயற்ச்சிக்கிறார் ராமன் தேடிய சீதை படத்தின் இயக்குனர் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் படம் முடிகையில் 500 எபிசோட்களை ஒரே மூச்சில் பார்த்த விரக்தி .ஒரு பெண்பார்க்கும் காட்சியில் தொடங்கும் படம் , நம்மை ,அட ஒரு நல்ல படத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்கிற ஒரு உணர்வை எழுப்பினாலும் , அந்த பெண் சேரனின் திக்கி பேசும் முறையையும் அவருக்கு சிற்வயதில் மனசிதைவு இருந்ததையும் கேள்விப்பட்டு சேரனை மணம் முடிக்க மறுக்கிறார் ( அந்த காட்சி மட்டுமல்ல எல்லா காட்சியிலும் திக்கி பேசுவாதக எண்ணி சேரன் முகத்தை அஷ்ட கோணலாக காட்டுவதை பார்த்து படத்தில் வரும் பெண்கள் மட்டுமல்ல குழந்தைகள் கூட அம்மா பூச்சாண்டி என்று அலறியதை கேட்க முடிந்தது , சேரன் இயக்கம் மட்டும் செய்யலாம் . ). அதை தொடர்ந்து சேரன் படம் முழுதும் அழுகிறார் , திக்கி திக்கி பேசுகிறார் , பல பெண்களை திருமணம் செய்து கொள்ள தெரு தெருவாய் அலைகிறார் , இப்படி அவர் வாழ்க்கையில் கடவுள் அவருக்கு கல்யாணம் செய்து வைக்காமல் கபடி விளையாட , அவர் மனம் நொந்து பசுபதியை சந்தித்து , பார்வையற்ற பசுபதி தரும் உற்சாகத்தில் மீண்டும் பெண் பார்க்க தொடங்கி , கடைசியில் ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண்ணும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு , அவளின் காதலன் நிதின் சத்யா என்று தெரிந்து எப்போதும் போல தியாகி ஆகி கடைசியில் தன்னை வேண்டாமென்று மறுத்த ஒரு பழைய டிக்கட் மீண்டும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க அந்த பெண்ணையும் சிலபல சிக்கல்கள்கள் ( அது ஒரு 4 ரீல் ஓடுகிறது ) நடுவே கஷ்டப்பட்டு திருமணம் செய்யும் போது நம் கண்களில் ஆனந்த கண்ணீர் , ( சேரனுக்கு திருமணாமனதற்கல்ல அப்பாடா படம் முடிஞ்சிருச்சேனு ) .

சேரன் படம் முழுக்க கொடுத்த சம்பளத்திற்கு பல ஆயிரம் மடங்கு அதிகமாய் நடித்து கலக்குகிறார் , பசுபதி படத்தில் தேவையில்லையோ என்றே எண்ண தோன்றுகிறது , நிதின் சத்யாவை பாராட்டலாம் நல்ல தேர்வு அந்த பாத்திரத்தில் கனகச்சிதமாய் பொருந்துகிறார் , படத்தின் ஒரே மகிழ்ச்சி அவர் மட்டுமே . பல நாயகிகள் நிறைய மேக்கப்போடு கண்ணை உறுத்துமளவுக்கு வந்து வந்து போகின்றனர் , வெறுப்புதான் மிஞ்சுகிறது , மணிவண்ணன் எப்போதும் போல அதே சேம் ஒல்டு மாப்ளே மாப்ளே என்று ஹீரோ பின்னால் அலைகிறார் , சில காட்சிகளில் மிக அருமையாய் நடித்திருக்கிறார் .

இசை வித்யாசாகர் - அருமையான பிண்ணனி மற்றும் பாடல்கள் , கேமரா யாரென்று தெரியவில்லை நிறைவாய் செய்திருக்கிறார் , எடிட்டிங்கும் நிறைவாய் இருந்தது . மற்றபடி படத்தில் பெரிதாய் சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.

படத்தின் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் ஒரு சிறுகதை போல் சொல்ல முயன்று அந்த சிறுகதையின் முடிவில் சொத்தப்புகிறார் . அதனால் அடுத்த காட்சியின் மீது வெறுப்புதான் மிஞ்சுகிறது . ஒரு அருமையான கதையை எடுத்துக்கொண்டு அதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்திருந்தால் மிக நன்றாக வந்திருக்கும் . படம் நெடுக நகைச்சுவைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் இயக்குனர் வேண்டுமென்றே அந்த நகைச்சுவையை குறைத்திருப்பதாக தெரிகிறது . அதுவே படத்தின் பெரிய மைனஸாகிறது .

ஆனால் படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு 60 வயது மாமா மற்றும் மாமி படத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர் ,( படம் முடிந்து எழுத்துக்கள் வருவதைக்கூட ) . இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம் , இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.

படத்தின் பிளஸ் - இசை , பசுபதி , நிதினசத்யா

படத்தின் மைனஸ் - சேரன் , நாயகிகள் , ஸ்டீரியோ டைப் திரைக்கதை ,

இனி தலைப்புக்கு வருவோம் - அதென்ன மோசமான படமா ராமன் தேடிய சீதை - நிச்சயம் இல்லை , மிக மிக மோசமான படம்... ( இந்த படம் நல்ல படம்னு சொன்னா அப்புறம் நல்லபடம்லாம் என்னனு சொல்றது மக்களே )இந்த லூசுத்தனமான படத்தை பார்த்து காண்டானதற்கு , புரட்சிதலைவரோடு புரட்சி தலைவி கலக்கிய அக்கால ராமன் தேடிய சீதையை இன்னொரு முறை பார்த்து குஷியோடு குஜாலகியிருப்பேன்....... டாமிட் ....... அதுவும் மோசமான படமாக இருந்தாலும் இதைவிட அது பல ஆயிரம் மடங்கு மேல்.......____________________________________________________________________________________

அவ்ளோதான்பா......... :-)
____________________________________________________________________________________