Pages

08 October 2008

விடுமுறை தினத்தை முன்னிட்டு....
இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு கலைஞர் தொலைக்காட்சியில் எதாவது சிறப்பு நிகழ்ச்சியானு மட்டும் கேட்டுவிடாதீர்கள் , இது அதை பற்றியதல்ல , பெரிய விழா, தீபாவளி,பொங்கல் போன்ற விடுமுறை நாட்களில் உங்களில் எத்தனை பேர் கொலைப்பட்டினி கிடந்திருக்கிறீர்கள் . இது அப்படி பட்டவர்களின் வாழ்க்கைபற்றியது . இது உணவிற்கும் உணர்விற்குமான ஒரு ஆராய்ச்சி .

பேச்சிலர் வாழ்க்கை இனிமையானது , இயல்பானது , சுதந்திரமானது தான் , அதனடி ஆழத்தில் இறைந்து கிடக்கும் வலியும் வேதனையும் அவனால் மட்டுமே உணரமுடிந்தது . பேச்சிலர்னா வாரம் ஒரு முறை பீரும் கண்ட நேரத்தில் தம்மும் , நினைத்த நேரத்தில் ஊர் சுற்றி திரும்பி வருவதும் , என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற இத்துனை சுதந்திரங்களையும் தாண்டி அவனது வாழ்க்கையின் மனதின் அடிஆழத்தில் இறைந்து கிடக்கும் தனிமையை அவனால் மட்டுமே உணர இயலும் .

பொதுவாகவே பேச்சிலர்கள் பலரும் விடுமுறைதினங்களில் எப்பாடுபட்டாவது தங்கள் சொந்த ஊருக்கு போய் விடுவர் . ஆனால் சில பாவப்பட்ட ஜீவன்கள் அலுவலகத்தில் , தொழிற்சாலையில் , மற்றும் பிற இடங்களில் விடுமுறை கிடைக்காமலோ ஊருக்கு ஒரு நாளில் செல்ல வழியில்லாமலோ தங்களது அறைகளில் அடைந்து கிடக்கும் கொடுமையை பார்க்கலாம் . துபாயில் மட்டுமல்ல நம்மூரின் சென்னையிலும் திருப்பூரிலும் கோவையிலும் கூட இதை கண்கூடாக காணலாம் . அதுவும் சென்னை போன்ற இடங்களில் மேன்சன்களில் வாழும் இந்த ஜீவன்கள் இத்தினங்களில் உணவங்களின் விடுமுறையால் அவதியுறும் காட்சிகள் மிக சகஜம் . இந்த கடைநிலை பிராணிகள், மேன்சன்களின் பத்துபத்து அளவில் பத்து பேருடன் பகிர்ந்து கொள்ளும் அறையில் நிச்சயம் சமைக்க இயலாது . (மென் பொருள் துறையில் பணிபுரியும் பேச்சிலர் நண்பர்களைப்பற்றி எனக்கு தெரியாது. இது முழுக்க முழுக்க திருவல்லிக்கேணி பல துறைகளிலும் கடைநிலையில் பணியாற்றும் நாலிலக்க சம்பள நண்பர்களை பற்றியதே )

பேச்சிலர்களில் பலரும் இந்நாட்களில் தங்களது பைக்கில் ஊரெல்லாம் சுற்றி எங்காவது பேருந்து நிலையங்கள் அருகிலேயோ அல்லது ரயில்நிலையத்திலோ சென்று உணவு வாங்கி வந்து உண்ணுவதையும் காணலாம் . மாதக்கடைசியில் வரும் பண்டிகை தினங்களில் இது இன்னும் மோசமாகும் , பெரும்பாலான மேன்சன் வாசிகள் மாதக்கடைசிகளில் மெஸ்களை மட்டுமே நம்பி கையில் காசின்றி அந்த மெஸ்களின் விடுமுறைதினத்தில் சோற்றுக்கும் வழியின்றி கையிலும் காசின்றி மிக கொடுமையாய் பத்துக்குபத்து அறையில் காலையிலிருந்து மாலைவரை முடங்கிக்கிடக்கும் பேச்சிலர்களை எல்லா விடுமுறைதினத்திலும் காணலாம் .

இவர்களில் பலரும் இத்தினங்களில் கையில் பணமின்றி பெட்டிக்கடைகளில் அக்கௌண்ட் இருந்தால் ஒரு சில வாழைப்பழமும் தண்ணீர் பாக்கெட்டும் ஒரு சிகரெட் என மதிய உணவை முடித்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன் . இதை படிக்கும் குடும்பஸ்தர்களுக்கு இது ஒரு விந்தையான விடயமாக இருக்கலாம் . ஆனால் இது காலம்காலமாக நடக்கும் ஒரு நிகழ்வே . இதை பற்றி படித்தால் இதன் வலியும் வேதனையும் நிச்சயம் மத்ய வயதினருக்கோ அல்லது குடும்பஸ்தர்களுக்கோ , வாழ்க்கையில் ஒரு நாள் கூட பேச்சிலராக வாழாதவருக்கோ நிச்சயம் வேடிக்கையும் நகைப்புக்கும் உரிய ஒரு விடயம்தான் இது .

இந்த பேச்சிலர்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கும் , இது போன்ற விழா நாட்களில் தன்னுடன் பணிபுரியும் நண்பர்களோ அல்லது சக குடும்ப நண்பர்களோ தங்கள் வீடுகளுக்கு அழைத்து ஒரு வேளையாவது சோறு போடமாட்டார்களா என்று , ஆனால் பெரும்பாலான மக்கள் ஒரு ஆடவன் தங்கள் வீட்டிற்கு வருவதையோ இது போன்ற பண்டிகைதினங்களில் வீட்டினை ஆக்கிரமிப்பதையோ விரும்புவதில்லை போலும். அதிலும் குறிப்பாக மனைவிகளுக்கு தனது கணவனின் பேச்சிலர் நண்பர்களை கண்டாலே ராவணனை கண்ட சீதை போல ஒரு உணர்வு, அதற்கும் காரணம் உண்டு பொதுவாகவே கணவன்கள் தண்ணி அடிப்பதையோ அல்லது சிகரெட் பிடிப்பதையோ மனைவிகளுக்கு பிடிப்பதில்லை , அதை பேச்சிலர் நண்பர்கள்தான் தனது கணவன்மார்க்கு கற்று தருவது போல ஒரு எண்ணம் . உண்மை என்னவென்றால் இந்த கல்யாணம் பண்ணிய ரங்கமணிகள்தான் வீட்டிற்கு பயந்து, நண்பர் அறைகளில் தம் அடிக்கவும் தண்ணி அடிக்கவுமே பேச்சிலர்களிடம் மிகுந்த அக்கறையுடன் பழகுவது தெரியாது போலும் . இது எல்லா குடும்பஸ்தர்களையும் குறிக்காது சிலரை மட்டும் .

பேச்சிலர்கள் என்றுமே பேச்சிலர்களாகவே இருந்து விடுவதில்லை . ஒரு நாள் அவர்களுக்கும் திருமணமாகிறது , அவர்களும் தான் வாழ்ந்த அதே ஊரில் தன் மனைவியுடன்தான் பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலமாய் பொழுதை கழிப்பர் . ஆனால் தான் இது போன்றதொரு நாளில் இன்று நம்மோடு இருந்த அந்த பேச்சிலர் அனுபவிப்பானே என்கிற எண்ணம் யாருக்குமே வராததன் மர்மம் மட்டும் ஏனோ புரிவதில்லை . அதுவும் பலர் தான் பேச்சிலராய் பட்ட அந்த நாட்களை மறந்திருப்பது வியப்பே.

நான் பொதுவாகவே இது போன்ற குடும்பஸ்த நண்பர்களிடம் பொங்கல் அன்று உங்கள் வீட்டற்கு வரலாமா என்று வாயைவிட்டு கேட்டாலும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லும் நண்பர்களும் நிறைய இருக்கின்றனர் .

நீங்கள் நினைக்கலாம் என்னங்கடா ஒரு நாள் சோறு இல்லைனா என்ன செத்தா போயிடுவீங்க என்று , இது ஒரு நாள் சாப்பாடு குறித்த பிரச்சனை அல்ல , இது ஒரு பண்டிகை தினத்தில் இது போல பல வருடங்கள் தன் குடும்பத்தோடும் நண்பர்களோடும் கழித்த ஒரு பண்டிகைதினத்தில் ஒரு வேளை சோறு கூட இன்றி ( அறையில் இருக்கும் பிற நண்பர்கள் ஊருக்கு போயிருந்தால் இது இன்னும் மோசம் ) யாரும் சாப்பிட்டாயா என்று கேட்க கூட ஆளில்லாமல் , வெளியில் சுற்ற பணமுமில்லாமல் பேசயாருமின்றி ஒரு நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடப்பது கொடுமைதானே . இனிப்பை சுவைத்த ஒருவன் ஊரே இனிப்பின் மகிழ்ச்சியில் திளைக்கையில் தனக்கு மட்டும் கசப்பு மருந்து கிடைத்தால் இருக்கும் அந்த மனநிலையே இது .

இதை தாழ்வு மனப்பான்மையாக கூட நீங்கள் கருதலாம் . இது நிச்சயம் தாழ்வுமனப்பான்மையே , எந்த கஷ்டப்படும் பேச்சிலரும் !! ஜாலியாக ஊரை சுற்ற வெளியூருக்கு வந்து வேலை செய்வதில்லை , தனது குடும்ப சுமையும் வறுமையுமே அவனை அங்கே அழைத்து வந்திருக்கிறது , ஏப்பேர்பட்ட வறுமையிலிருப்பவனும் பண்டிகை தினங்களில் மகிழ்ச்சியாய் குடும்பத்தோடு பொழுதை கழிக்கவே விரும்புவான் , ஆனால் அது கூட கிடைக்காத வெறுமையே இதற்கு காரணாமாக இருக்கலாம் .

இது உணவையும் தாண்டி உணர்வு சார்ந்த ஒரு விடயம் , இது பண்டிகை நாட்களில் மட்டுமல்ல மற்ற நாட்களிலும் தொடர்வதை பார்க்கலாம் . பேச்சிலர்கள் ஊருக்கு போய் திரும்பும் போதெல்லாம் ஒரு வித புத்துணர்ச்சியுடனும் கொஞ்சம் உடல் சதையுடன் முகமலர்ச்சியோடும் வரும் அவன் அதன் பின் அடுத்த முறை ஊருக்கு போவதற்குள் அது குறைவதையும் அந்த புத்துணர்ச்சியின்றி உடல் மெலிந்து இருப்பதை கண்கூடாகக் காணலாம் .

பல நாள் கழித்து ஊருக்கு செல்லும் போதெல்லாம் எல்லா பெற்றோரும் முதலில் சொல்லும் வாக்கியம் என்ன தெரியுமா என்னாடா இப்படி இளச்சிட்டே என்பதுதான் ( அவன்/ள் எத்துனை குண்டாக இருந்தாலும் ) , எத்தனை முக்கியத்துவம் வாய்ந்த சொற்றொடர் அது , நம் சமூகத்தில் உணவுக்கும் உணர்வுக்கும் இருக்கும் உறவு அது . அதனால்தான் ஊரிலிருந்து வந்த மகனை/ளை நாம் திரும்பும் வரை இன்னும் கொஞ்சம் சாப்பிடு இன்னும் இன்னும் என சொல்லி சொல்லி சோறூட்டும் தாயின் உணர்வு அது யோசித்து பாருங்கள் அது வெறும் வெந்த அரிசியா என்ன அது நிச்சயம் உணவல்ல ஒவ்வொரு தாயின் அன்பு அது (அதை நாம் எப்போதுமே உணர்வதில்லை அது வேறு விடயம் அதை விடுங்கள் ).

இது போன்ற தருணங்களில் சிகரெட்டு மிகுந்த ஆறுதல் தரக்கூடியவன் , மனதை இது போன்ற தருணங்களுக்கு தயாராக்குவான் . ம்ம் இதானால்தானோ என்னவோ பெரும்பாலான பேச்சிலர்களுக்கு சிகரெட் பழக்கம் வந்து விடுகிறது . தனிமையின் வெறுமையை எப்போதும் போக்குபவது இந்த சிகரெட்டின் சக்தி . அது கூட ஒரு தற்காலிக நண்பன்தான் அணையும்வரை . அதறகும் நம் உயிரென்னும் விலைதரவேண்டியிருக்கிறதே . காதல் கூட இந்த நோய்க்கு மருந்தாகாது , அதுவும் தற்காலிக மருந்துதான், போதை மருந்து . பிறகக இந்நோய்க்கு என்னதான் மருந்து , அது நிச்சயம் நோயில்லை . இது நிகழ்வு , இதன் சாரம் ஒவ்வொரு பேச்சிலருக்கும் மாறுபடும் .

பேச்சிலராய் வாழும் ஒவ்வொரு இளைஞனும் கட்டாயம் இது போன்றதொரு தருணத்தை நிச்சயம் கடந்திருப்பான் . மிகசுவாரசியமான அந்நாட்களை பிற்காலத்தில் அசைபோடுகையில் அது நேற்றைய பேச்சிலருக்கு என்றுமே நகைச்சுவைதான் .

____________________________________________________________________

அவ்ளோதான்பா........ ;-)

____________________________________________________________________