Pages

24 December 2008

லக்கிலுக்கின் பூப்புனித நீராட்டுவிழா!


கிழக்கு பதிப்பகத்தின் மொட்டைமாடியில் இந்த ஒரு வாரகாலம் அவர்களது பல புதிய நூல்களின் அறிமுகம் மற்றும் வெளியீடு நடந்து வருவது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த வரிசையில் நேற்று நெருங்கிய நண்பரும் பிரபல எழுத்தாளராக இருக்கும் தோழர் யுவகிருஷ்ணாவின் முதல் புத்தகமான '' சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் '' நூல் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தை எழுத்தாளர் திரு.சோம.வள்ளியப்பன் வெளியிட பிரபல விளம்பர வல்லுனர் திரு.நாராயணன் பெற்றுக்கொண்டார்.

சோம.வள்ளியப்பன் இப்புத்தகத்தை வெளியிட்டு அது குறித்தும் பேசினார். திரு.சோ.வ அவர்கள் ஏற்கனவே துறைசார்ந்த பல நூல்கள் எழுதியவர். இந்நூலும் விளம்பரத்'துறை' சார்ந்த ஒன்றென்பதால் அதை அவர் வெளியிட்டது நூலிற்கு மிக பொருத்தமாக இருந்தது. அதேபோல அதைப்பெற்றுக்கொண்ட திரு.நாராயணன் அவர்களும் விளம்பரத்துறையில் பிரசித்திப்பெற்றவர்.

இந்நூல்குறித்து திரு.சோம.வ அவர்கள் பேசுகையில் , இவ்வகை புத்தகங்கள் வாசிப்பவருக்கு அலுப்பை தரவல்லது என்றும் ஆனால் இந்நூல் முதல்பக்கத்தில் உங்களை உள்ளே இழுத்து கடைசிபக்கத்தில் வெளியே இறக்கிவிடும் வகையை சார்ந்தது. மிகசுவாரசியமாக இருப்பதாகவும் , ஆஹா ஓஹோ இல்லை என்றாலும் அட போட வைக்கும் எழுத்து என்றும் பாராட்டிப்பேசினார். அதேபோல விளம்பரத்துறைசார்ந்த சில விடயங்களை இந்நூல் அணுகவில்லை என்றும் அதை தான் எதிர்ப்பார்த்ததாகவும் தெரிவித்தார்.

அதேபோல இந்நூலோடு மருதன் அவர்களின் மால்கம் எக்ஸ் என்னும் நூலும் வெளியிடப்பட்டது. அந்நூல்குறித்தும் தோழரின் புத்தகம் குறித்தும் கலந்துரையாடல் துவங்கியது . அங்கே விளம்பரத்துறை குறித்த பல கேள்விகள் எழுப்பப்பட்டது , எல்லா கேள்விகளுக்கும் தடாலடியாக இல்லாமல் நயமாகவும் நாசூக்காவும் பதிலளித்தார் புத்தக ஆசிரியர்.

இந்த நிகழ்வு குறித்து மேலும் முழுமையாக அறிந்துகொள்ள

ஹரன்பிரசன்னாவின் பதிவு

கேபிள்சங்கரின் பதிவு


அந்நிகழ்வில் பேசப்பட்ட எல்லா விடயங்களையும் அழகாக தொகுத்துத் தந்திருக்கிறார் .





***********************************

விழா குறித்த சில தேன்துளிகள் :

* எழுத்தாளர் யுவகிருஷ்ணா இணையத்தில் லக்கிலுக் என்று அறியப்படும் வயதான ஒரு இளம் பதிவர்.

*விழாவிற்கு பதிவர்கள் , பாலபாரதி , முரளிக்கண்ணன்,மரு.புருனோ,நர்சிம் (அவரது நண்பர்) ,அரவிந்தன், அக்னிபார்வை , ஒரு வாசகர் ( பெயர் நினைவில் இல்லை ) என பல மூத்தப்பதிவர்களும் கலந்துகொண்டனர், (ஜ்யோவ்ராம் சுந்தர் தனது வாழ்த்துக்களை அலைப்பேசியில் பகிர்ந்துகொண்டார் )

*லக்கிலுக் மொட்டைமாடி தரைமட்ட மேடை(?)யில் ஒரு பரபரப்போடேயே காணப்பட்டார். காலில் வெந்நீரை ஊற்றியது போல. முகம் மட்டும் சிரித்தது போலவே இருந்தது . (லக்கிலுக்கின் பேஸ்மென்ட் ஸ்டிராங் பில்டிங் வீக்கோ? படத்தை பார்த்தால் புரியும் !!! ' )

*அங்கே தரப்பட்ட சிப்ஸ் மற்றும் காபி நல்ல சுவை ஆனால் முழுமையாய் சாப்பிட இயலாமல் போனது . முதல் வரிசையில் அமர்ந்து கொண்டிருக்கையில் எதிரில் ஒருவர் மிக சீரியஸாக பேசும் போது உருளைகிழங்கு வத்தல் கொறிப்பது முறையாகாது (அதை அவரே குறிப்பிட்டார் )

*இடையில் யாரோ(?) இருவர் மேடையிலேயே லக்கிலுக்கிடம் ஆட்டோகிராப் வாங்கியது , லக்கிலுக்கையே வியப்புக்குள்ளாக்கியிருக்க வேண்டும். ( அந்த இருவருக்கும் விழா முடிந்து வெளியே வரும் போது லக்கிலுக்கு 50 ரூபாய் சன்மானம் கொடுத்ததாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன )

*பல கேள்விகளுக்கும் லக்கிலுக் பதிலளித்து பேசினார். ஆனால் புள்ளிராஜா குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது மிக ஆர்வமாக இருந்தார் .

*புத்தகத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பல விடயங்களையும் கேள்விகளாய் எழுப்பி அது குறித்து கலந்துரையாடினர் . ஒரு கட்டத்தில் இது புத்தக அறிமுகவிழா கூட்டம் என்பதே மறக்கும் அளவுக்கு.

* இனிவரும் கூட்டங்களில் வெளியிடப்படும் புத்தகம் குறித்த கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கலாம். (கேள்விகள் புத்தகம் சாரும் துறை அல்லது அதன் அடிப்படையிலானவையாகவே அமைந்துவிடுகிறது )

*பா.ராகவன் பேசும் போது மட்டும் மைக் தொந்தரவு செய்தது குறிப்பிடத்தக்கது . ( அவர் எழுதினால்தான் பிரச்சனை என்றால் பேசினாலும் பிரச்சனைதானோ )

*முஸ்லீம் பிரச்சனை ஒன்றும் , சிகப்பழகு களிம்பு பிரச்சனை ஒன்றும் கூட்டத்தை வேறு திசைக்கே கொண்டு சென்றது .

* இப்படி கூட்டம் எப்போதெல்லாம் வேறு திசைக்கு செல்கிறதோ அப்போதெல்லாம் பத்ரி மைக்கை பிடுங்கி மீண்டும் பழைய இடத்திற்கே கூட்டி வந்து விட்டது நல்ல வேடிக்கையாக இருந்தது . :-p


அதென்ன பூப்புனித நீராட்டுவிழா ?

ஒரு பதிவராகவே அறியப்பட்ட நம் தோழர் வளர்ந்து ஒரு எழுத்தாளராய் வயதுக்கு வந்திருக்கிறார் இல்லையா அதற்குத்தான் அப்படி ஒரு தலைப்பு..


லக்கிலுக்கின் இம்முதல் புத்தகம் அனைத்து பதிவர்கள் சார்பாகவும் வெற்றியடைய வாழ்த்துக்கள் . அவர் இது போல மென்மேலும் வளரவும் வாழ்த்துகிறோம்..


*****************************

******************************