Pages

17 December 2008

ஞாநியின் அஜாலும் குஜாலும்....!


( ஞாநி வரைந்த ஓவியம் )

அஜால் குஜால் தெரியும்.... அடிதடியோடு குலாவுதல் என்றால் என்னவென்று தெரியுமா? .


அது இன்னாங்கடா அடிதடியோடு குலவுதலென்று கேட்பவர்கள் நேற்று கிழக்கு பதிப்பகத்தில் நடந்த மொட்டைமாடிக்கூட்டத்திற்கு வந்திருந்தால் புரிந்திருக்கும் . சமீபகாலமாக அடிதடியோடு குலவுதல் போன்ற காரியங்களுக்கு பத்ரி தனது மொட்டைமாடியை நம்மை போன்ற வெகுஜன வாசகர்களுக்கு தாரைவார்த்திருக்கிறார் . சில மாதங்களுக்கு முன் சாருநிவேதிதாவை ஒரு மொட்டைமாடிப் பொதுக்கூட்டத்துக்கு அழைத்திருந்தார் . அவரும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு வலைப்பதிவர்களின் டுபுரித்தனத்தை கட்டுடைத்து சர்ச்சையை கிளப்பியிருந்தது அனைவரும் அறிந்ததே . அதன்பிறகு அந்த பிரச்சனையில் வலையுலகம் பற்றியெறியவில்லை என்றாலும் சாரு சில காலத்திற்காவது தமிழ்மண சூடான இடுகைகளில் இடம்பிடித்திருந்தார் . ( இப்போதும் பிடிக்கிறார் அது வேறு கதா ) .


நேற்று கிழக்குப்பதிப்பகத்தில் நடந்த மொட்டைமாடிக்கூட்டத்தில் சர்ச்சைநாயகர் ஊருக்கே ஓ போடும் மூத்தபத்திரிக்கையாளர் ஞாநி கலந்துகொண்டார் . இக்கூட்டம் மும்பை கலவரம் குறித்த ஞாநியின் கருத்துக்களை அறியும் வண்ணம் ஏற்பாடாகியிருந்தது.
ஞாநி கூட்டத்தின் ஆரம்பத்திலேயே மும்பை கலவரம் குறித்து தான் தனது ஓ பக்கங்கள் மற்றும் தனது ஆங்கில இணையப்பக்கத்திலும் எழுதியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார் . அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை என்றும் கூறினார். இருந்தாலும் டிவி ஊடகங்களின் பொறுப்பினைமை குறித்தும் பேசினார் . இது தவிர பல ஊடகங்கள் பெரிதாக கண்டுகொள்ளாத ஆனால் மிக முக்கியமான சில விடயங்களையும் பகிர்ந்து கொண்டார்.

மும்பை கலவரத்தின் போது சத்ரபதி சிவாஜி ரயில்நிலையத்தில் தீவிரவாதிகள் புகுந்து கொண்டு தாக்குதல் நடத்தியபோது , அவர்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த கேட்டின் வழியே உள்ளே நுழையும் மெட்ரோ ரயில் பயணிகளை ரயில்நிலைய அறிவிப்பாளர் சாதுரியமாக அந்த வழி அடைக்கப்பட்டதாக கூறி திருப்பி விட்டதால் பெருமளவு சாவு தடுக்கப்பட்டது . இதன்மூலாம் தீவிரவாதிகள் தாக்குதல் என்று கூறி தேவையில்லாத பரபரப்பை தவிர்த்தார் . அதைக்குறித்து எந்த தொ.கா ஊடகமும் பேசவில்லை என்றும் கூறினார் . அதற்கான காரணமாக ஊடகங்களின் பார்வையாளர் யார் என்பதும் மிக முக்கியமான ஒன்றாகவும் தெரிவித்தார் .


இதைத்தவிர கடைசியாக மாட்டிக்கொண்ட தீவிரவாதியை பிடித்தபோது , கையில் எந்த ஆயுதமும் இல்லாமல் தன் மார்பால் தீவிரவாதியின் கையிலிருந்து துப்பாக்கியை பிடித்துக்கொண்டு தனது இன்னுயிரை நீத்த ஒரு சப்இன்ஸ்பெக்டர் குறித்தும் கூறினார் . தாஜ் மற்றும் டாடா ஹோட்டல்கள் குறித்த விபரங்கள் போலீஸைவிட தீவிரவாதிகளுக்கு நன்றாகத் தெரிந்திருந்ததே , சில கமாண்டோ மற்றும் போலீஸ்காரர்கள் இறந்துபோக காரணமாயிருந்தது என்றும் தெரிவித்தார்.


பேச்சு மும்பை கலவரங்களில் இருந்து மெதுவாக தீவிரவாதம் குறித்த விவாதத்திற்கு நகர்ந்தது . கூட்டத்திலிருந்த ஒருவர் முஸ்லீம் தீவிரவாதம் குறித்து கேள்வியெழுப்பியபோது , ஞாநி இந்தியாவில் முஸ்லீம் தீவிரவாதம் காஷ்மீர் தவிர மற்ற இடங்களில் பரவ முக்கிய காரணம் இந்துக்களின் தீவிரவாதமும் அடக்குமுறையுமே ஆகும் . அது பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னேதான் ஆரம்பித்தது . அதற்கு முன் இந்தியாவில் எங்குமே அல் என்னும் முன்பெயருடன் (அல்உம்மா போல ) எந்த அமைப்பும் இருந்ததில்லை என்றும் கூறினார் . ஒரு இந்துத்துவா நண்பர் மிக ஆவேசமாக இதை மறுத்தார் . டோண்டுவும் இதை மறுத்தார் . காஷ்மீர் தீவிரவாதமே இதற்கு காரணமென்றும் கருத்து தெரிவித்தனர் அவர்கள் இருவரும் .


ஞாநி இதற்கு பதிலளிக்கையில் காஷ்மீர் தீவிரவாத அமைப்புகள் முழுக்க முஸ்லீம் அமைப்புகள் அல்ல என்றும் அவர்கள் குண்டு வைத்தால் கூட தங்கள் மாநிலத்திற்குள்ளேயே வைத்துகொள்வார்கள் என்றும் கூறினார் . பாபர்மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்மராவ்தானே ஆட்சியில் இருந்தார் நீங்கள் ஏன் அவரை குறை சொல்வதில்லை என ஒரு கேள்வி எழுப்பப்பட்டது . அதற்கு ஞாநி அவர்தான் இறந்துவிட்டாரே அதனால் கேட்பதில்லை என ஒரே போடாக போட்டார் .


இந்துத்துவா நண்பர் ஞாநியை நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்றும் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கம்யூனிஸ்ட்டுக்குத்தான் வாக்களிப்பேன் என்றும் கூறியதாக குற்றம்சாட்டினார் . ஞாநி இதற்கு அந்த கூட்டம் சென்றவருடம் நடந்தது . அது இந்திய தேர்தல்கள் குறித்த ஒரு கூட்டம். திருவல்லிக்கேணியில் இன்னார் (பெயர் ஞாயபகம் இல்லை ) கலந்து கொண்ட கூட்டத்தில் கூறியது . அதுவும் நான் கம்யூனிஸ்ட்களுக்கு வாக்களிக்க நினைத்தாலும் தான் ஓட்டளிக்கும் தொகுதியில் கம்யூனிஸ்ட்கள் கூட்டணி வைக்கும் திமுகவோ அல்லது அதிமுக உறுப்பினருக்கே ஓட்டளிக்க நேர்கிறது என்றுதான் பேசியதாக கூறினார் . அது போல தான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல என்றும் தான் ஒரு மனிதன் அவ்வளவே , கம்யூனிஸ்ட்கள் குறித்து அவர் தனது கட்டுரைகளில் நிறைய முறை விமர்சித்து எழுதியிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.


கூட்டத்தில் ஒருவர் நீங்கள் ஏன் ஏழைபிராமணர்கள் குறித்து எழுதுவதில்லை என ஒரு கேள்வியை எழுப்பினார் . அதற்கு பதிலளிக்கையில் தான் ஏழை பிராமணர்கள் குறித்து 1978-79 வாக்கில் முதன்முறையாக பிராமணர்கள் சங்கம் துவக்கப்பட்டது . அப்போது அதுகுறித்து எழுதுகையில் இச்சங்கம் எந்த பிராமணருக்காக போராட இருப்பதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என தான் கேள்விகேட்டு எழுதியிருந்தமையை தெரிவித்தார் . அது நிச்சயம் இன்றளவும் சர்ச்சைக்குரிய ஒரு கேள்விதான் . தான் ஜாதி என்று பாராமல் எல்லா ஏழைமக்களுக்காவுமே எழுதுகிறேன் என்றும் தெரிவித்தார் .


உங்களை ஒரு பார்ப்பனனாக சில சமயம் மீடியாக்களில் சித்தரிக்கிறார்களே என்று ஒருவர் கேட்டபோது , தான் தற்சமயம் எந்த சாதியையும் மதத்தையும் பின்பற்றுவதில்லை என்றும் தனது எல்லா சான்றிதழ்களிலும் நோ காஸ்ட் மற்றும் நோ ரிலிஜியன் என்றே உள்ளது எனக்கூறினார் . தனது மகனது பள்ளிக்காலத்திலேயே அவனது டி.சியிலும் தான் அவ்வாரு செய்துவிட்டதாகவும் அதற்கான வழிமுறைகளுக்கு இந்திய அரசியல்சட்டத்தில் இடமிருப்பதாகவும் தெரிவித்தார் . அதனால் தான் எந்த சார்பும் அற்றவன் என்றும் தெரிவித்தார் .


இதுதவிர அவரது ஒற்றைரீல் இயக்கத்தின் பிரச்சனைகள் , தீம்தரிகிடவின் தோற்றமும் மறைவும் , ஓ பக்கங்களை ஆவியில் இருந்து குமுதத்தில் எழுத துவங்கியது , இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான இவரது பிரச்சனை என இன்னும் பல இதுபோன்ற அதிரடியான கேள்விகளால் அவரை தாக்கினாலும் சளைக்காமல் கிட்டத்தட்ட இரண்டரைமணிநேரம் விடாமல் தண்ணீர் கூட குடிக்காமல் கணீர் கணீரென பேசிக்கொண்டிருந்தார் (மிக நல்ல குரல் ). அவரது ஞாயபகசக்தியும் ஸ்டாமினாவும் வியக்கவைத்தது . பல அரிய தகவல்களையும் தனது விரல்நுனியில் வைத்திருந்து உடனுக்குடன் தெரிவித்தது வியக்கவைத்தது .


அவரை கோபமூட்டும் கேள்விகள் எழுப்பினாலும் சிரித்த முகத்துடனேயே எல்லா கேள்விகளுக்கும் சுவையாக பதிலளித்தார். கூட்டத்தில் பெரும்பாலான கேள்விகளை டோண்டு ஒருவரே கேட்டதால் பலருக்கும் கேள்வி கேட்க நேரமில்லாமல் போனது . டோண்டு அடுத்த முறையாவது அளவான கேள்விகள் கேட்டால் நன்றாக இருக்கும் . மற்ற பார்வையாளர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம் இல்லையா . டோண்டு தவிர , லக்கிலுக் , அக்னிப்பார்வை , ஹரன்பிரன்னா போன்ற சில தெரிந்த முகங்களும் சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி பீதியை கிளப்பினர் .


பக்கத்தில் அமர்ந்திருந்த ஜிகினா சட்டை நண்பர் திமுக குறித்து ஞாநி ஏதாவது குறை சொல்வார் அவரை ஒரு பிடிபிடித்துவிடாலமென கழுகு போல காத்திருந்தார் . கடைசிவரை திமுக குறித்தும் கருணாநிதி குறித்தும் அதிகம் பேசாமல் பக்கத்து சீட்டு நண்பரை கடுப்படித்தார் . இருந்தும் அவரையும் மீறி இடையில் சன்டிவியின் செய்திகள் பல்டி குறித்து ஒரு குட்டுவைத்தது , சந்து கேப்பில் சைக்கிள் ஓட்டியது போலிருந்தது .


கொஞ்சம் மீறியிருந்தாலும் அடிதடிகள் நடந்திருக்க வாய்ப்புள்ள சிக்கலான பிரச்சனைகள் குறித்து , அதுபோன்ற அஜால்குஜால்கள் எதும் நடக்காமல் மிக பொறுப்பாக பதிலளித்த ஞாநிக்கும் இக்கூட்டத்திற்கு இடம் மற்றும் ஏற்பாடுகள் செய்துகொடுத்த பத்ரிக்கும் நன்றிகள் பல. ...


வரும் நாட்களில் கிழக்குப்பதிப்பகத்தில் இது போல நிறைய கூட்டங்கள் ஏற்பாடு செய்தால் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு மிகப்பயனுள்ளதாக இருக்கும் .
இக்கூட்டத்தின் முழு ஓலிப்பதிவு இங்கே