Pages

26 January 2009

சிகப்பு விளக்குப்பகுதியும் சில்லரைக்காசுகளும்...
முன்னாலிருக்கும் இளைஞனை இறுகக்கட்டியணைத்த இளம்பெண்கள் ஒரு இருபது சொச்சமாவது இருக்கவேண்டும். சினிமா போஸ்டர்கள்,அரசியல் ஹோர்ட்டிங்கள் , விளம்பரங்கள் இல்லை. கறுப்பு பட்டை குறுக்கிட, முதுகில் எக்ஸிகியூட்டிவ் பேகுடன் ஒரு பத்து பேர். வெள்ளையும், மஞ்சளும், கறுப்பும், சிவப்புமாய் விதவிதமான எட்டு கார்கள். அதில் பாதிக்கு மேல் குளிரூட்டப்பட்டவை.

அழுக்கடைந்த சில, பளபள பல பேருந்துகள். அழுக்கு பேருந்தில் தொங்கிக்கொண்டு, சாகசம் செய்யும் இளைஞர் கூட்டம். அவர்களை ஓரக்கண்ணால் அளக்கும் ஜன்னலோர இளசுகள். அதைப்பார்த்து ஆற்றாமை கொள்ளும் பெரிசுகள். கூட்ட நெரிசலிலும் அவர்களை தவற விடாத நடைபாதை ஆண்கள். நடந்து போகும் போது எதிரில் மோதி விடுவார்களோ, இந்த வேடிக்கை ஆண்களென தள்ளி நடக்கும் பெண்கள். நாய் பொம்மை, கலர் ரப்பர் பேண்டு, மலிவு விலை ஹெல்மெட்டு என நடை திருப்பும் பிளாட்பாரக்கடைகள்.

அதனூடே நடைபாதையின் ஓரத்தில், கிழிந்து தொங்கும் குடைக்கு கீழே பல முறை கிழிந்து போன ஒரு செருப்பை தைக்கும் ராமு அண்ணன். 'அந்த' செருப்பை தைக்க இன்னும் எத்தனை மணிநேரமாகுமென ராமு அண்ணனையும் தன் கடிகாரத்தையும் பார்த்தபடியே நிற்கும் ஒற்றை செருப்பாதிபதி. சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. அனைத்தும் நகரத்துவங்கின.

ராமு அண்ணனுக்கு அருகில், அவள் சோர்வாய் கால்களை ஊன்றி ஒருக்களித்தபடி வந்து அமர்ந்தாள். கையிலிருந்தது மிகவும் கனமாக இருந்திருக்க வேண்டும், இடுப்பை ஆட்டி அதனை சரி செய்துகொண்டாள். அந்த கனத்தை அந்த கணத்தில் சரி செய்கையில் அவளது சேலை விலகியதால் அதனையும் சரிசெய்து கொண்டாள். வெயில் மண்டையை பிளந்திருக்கவேண்டும், தலையில் தனது சேலையால் முக்காடு போட்டிருந்தாள் , அதையும் நெற்றியோடு இறக்கிக் கொண்டாள் . கையிலிருந்த காசை ஒன்றொன்றாய் எண்ணி எண்ணி பார்த்து தன் கிழிந்த சேலைமூட்டைக்குள் திணித்துகொண்டாள்.

செருப்புக்கடைக்கு அல்லது தைக்கும் கடைக்கு அருகில் குத்தவைத்து அமர்ந்திருந்தவள், ஆயாசமாக எழுந்து பக்கத்தில் இருந்த பைக் கண்ணாடியில் முகம் சரிபார்த்துக் கொண்டாள். வியர்வை வழிந்து முகமே மாறிப்போயிருந்தது . இன்று வெயில் அதிகம் . உடல் முழுக்க வேர்வை, கட்டாயம் பிசுபிசுத்திருக்க வேண்டும். இன்னும் தொண்ணூறு விநாடிகளே இருந்தன.

89 ....88......87

சிக்னலில் நின்று கொண்டிருந்த காரை நோக்கி ஓட்டமும், நடையுமாய் ஓடினாள் . வழியில் கிழிந்த பையின் வெள்ளைநிற அல்லது வெளிர் கருப்புநிற நைலான் கயிறு கால்களில் சிக்கி இடற தடுக்கி விழுந்தாள். முழங்கையில் ரத்தம். அதை எச்சிலால் தொட்டு அழுத்திவிட்டு, 'தேவிடியா பசங்க' என்று யாரையோ ஈனமான குரலில் திட்டிக்கொண்டாள். கையிலிருந்த கனம் கீழே விழுந்து கதறி வீல் என்று அழுதது . குழந்தையையும், அவளையும் யாரும் தூக்கிவிடக்கூட முன்வரவில்லை. அவளாகவே எழுந்துகொண்டாள். குழந்தையும் ஒரு ஓரத்தில் குப்புற கிடந்து அலறியது. குழந்தையின் உடலில் ஒட்டுத்துணியில்லை , வெயிலில் தார் ரோடு பழுக்க காய்ச்சிய இரும்பு தகடு போல் இருந்தது.

அழுக்குக் குழந்தைகளை யாருக்கும் பிடிப்பதில்லை போல, யாரும் அதை தூக்க முன் வரவில்லை. அவள் அங்கே அக்குழந்தையை , எழுத இயலாத மிக மோசமான கெட்ட வார்த்தைகளில் திட்டியபடி அதை தூக்கி அதன் பிருஷ்டத்தில் இருந்த தூசியை மட்டும் தட்டிவிட்டாள். கால் அனிச்சையாக ஆடிக் கொண்டிருந்தது. எலும்பு விலகியிருக்க வேண்டும். இன்னும் அழுது கொண்டுதானிருந்தது. அதனலறல் சிக்னல் வண்டிகளின் இரைச்சலுக்கிடையே ஒரு மேற்கத்திய இசைபோல கேட்டது. வாகன ஓட்டிகள் திரும்பி பார்த்தனர். சிலர் ஹெல்மெட் கண்ணாடியை உயர்த்திப்பார்த்தனர். மீண்டும் சிக்னலை பார்த்தனர். ஹெல்மெட் கண்ணாடியை சிலர் மூடிவிட்டனர். சிலரது ஹெல்மெட்டில் கண்ணாடி இல்லை.

''சார்..சார்...சார்.. பசில குழந்தை அழுது சார்... ஏதாவது குடுங்க சார்.....'' எல்லாரிடமும்..

''சில்லரை இல்லம்மா'' பல்சர்காரன்.

''அண்ணா அண்ணா ''

''போம்மா போம்மா'' பாக்ஸர்காரன்.

''ஐயா ஐயா ''

''ச்சீ போ '' ஆக்டிவாகாரன்.

''மேடம் மேடம்''

''டார்ச்சர் பண்ணாதம்ம'' கைனடிக் பெண்மணி .

''அண்ணே அண்ணே... புள்ள பாலுக்கு அழுதுண்ணே''

''இந்தா...நிக்காத போ இங்கருந்து'' பின்னாலிருந்த காதலிக்காக ஒரு ரூபாய் குடுத்த ஹீரோஹோண்டா. கார் கதவுகளை தட்டினாள்..

'' சாமி சாமி '' ''இந்தா.. '' ஐந்து ரூபாய் கொடுத்தார்(ன்) ஐயப்பசாமி...

''ஐயா ஐயா''

''போம்மா போம்மா... வரவர உங்க தொல்ல தாங்க முடியல... போய்
தொலைங்க.''

'' சார், சார் ''

''இவங்களையெல்லாம் ரோட்டிலேயே வச்சு சுடணும்யா''

''அம்மா அம்மா ''

''இவங்களாலதான் இந்தியாவுக்கு அசிங்கம்''

''பாய் சாப் பாய் சாப் ''

''இங்கேவா இந்தா... '' பத்து ரூபாய் கொடுத்து புண்ணியம் வாங்கினான் இந்திக்காரன் .

பச்சை எரிந்தது. எல்லாம் விலகியது. இரண்டரை நிமிட எசமான்கள் முறுக்கிக் கொண்டு நகரத்துவங்கினர். சோர்ந்து போய் ராமு அண்ணனுக்கு அருகில் அமர்ந்தாள். குழந்தை இன்னும் அழுது கொண்டுதானிருந்தது. அதனை அருகில் உட்கார வைத்துக் கொண்டாள். வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்........ என்று உயிரே போவது போல ஒரு விபரீத ஒலி. அவளோ அமைதியாக கையிலிருந்த சில்லரைகளை எண்ணிக்கொண்டிருந்தாள். குழந்தை அழுவதை சட்டை செய்ததாய் தெரியவில்லை.

''எவன் புள்ளையோ பாவம் அழுதுட்டுருக்கு பாரு எருமக்கடா மாதிரி எவ்ளோ தெனாவெட்டா உக்காந்து காசென்றானு, இவளுங்களுக்குலாம் காசே போடக்கூடாது சார் ''

''ம்ம்''

''குழந்தைய எங்கயாவது வாடகைக்கு எடுக்கறது , சிக்னல்ல பிச்சை எடுக்கறது , பாவம் யார் பெத்த புள்ளையோ எப்படி அழுது பாருங்கோ, இவாளுக்கும் பகவான் படியளக்கறானே ''

இரண்டு பேர் , யாரோ , அவளை பார்த்து பேசியபடியே பிளாட்பாரத்தில் நடக்கையில் இவர்களைப் பார்த்து பேசியபடியே சென்றனர். குழந்தை இன்னும் அழுதுகொண்டுதானிருந்தது.

ராமு அண்ணன் பதறிப்போய் அவசரமாக எழுந்து போய் குழந்தையை தூக்கினார். அதன் கால்களில் எலும்பு விலகியிருந்தது. குழந்தையின் கால்களைத் தொட்டுப்பார்த்தார். வீக்கமாகியிருந்தது. ''மணி.. கொயந்திக்கு அடி பலமாக்கீதுமா.. நீ வேணா, இந்தா.......... இந்த பக்கத்தில இக்கிற ஆஸ்பத்திரியாண்ட இட்டுனு போயேன், பாவம் புள்ள இன்னாமேரி அழுதுனு பாரேன் ''

அவளோ அதை சிறிதும் காதில் வாங்காமல் காசை மட்டும் எண்ணிக்கொண்டிருந்தாள். பதிமூணு....... பதினாலு....... பதினைஞ்சு ....... ''மணி............ இன்னா மணி, பாரு....... மணி......... இவன் எப்படி அழுவறானு.. கொஞ்சம் பாரேன் '' நிமிர்ந்து கூட பார்க்காமல் அப்படியே காசை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

ராமு அண்ணனுக்கு கோபம் வந்தது.

''ஏண்டி நீ பெத்த புள்ள இப்டி அழுவுதே, அது காலப் பாரு எப்டி ஆய்க்கீதுனு, ஒனக்கு கொஞ்சமாது பீலிங்ஸ் இக்குதா!! , நாளிக்கு அதுக்கு காலு வெளங்காம பூடுச்சின்னா இன்னாவறது, அப்பால அவனும் உன்னாட்டம் பிச்சத்தான் எடுக்கனும் , நாளைக்கு அவன்தான்டி ஒனக்கு கஞ்சி ஊத்தப்போறான் ''

''இன்னா நான் சொல்லிக்கினேக்கிறேன் நீ பூலா போச்சினு, அங்க ஆட்டிகினு உக்காந்திருக்க '' வீல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் குழந்தை முன்னைவிட இப்போது அதிகமாய் அழுதுகொண்டிருந்தது. கால்வீக்கம் அதிகரித்திருக்க வேண்டும் . சிகப்பு விளக்கு எரிந்தது. அவள் ராமு அண்ணனின் கையிலிருந்த குழந்தையை வெடுக்கென பிடுங்கிக்கொண்டு மீண்டும் ஓட்டமும் நடையுமாய் ஓடினாள். சூரியன் உச்சியில் உக்கார்ந்திருந்தான். வெப்பம் தலையில் இறங்கியது . குழந்தையின் காலை துணியாலாவது மறைத்திருக்கலாம். உஷ்ணத்தில் வலி அதிகமாகியிருக்க வேண்டும்.

''சார் சார் '' ''ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கா''

ஐந்து ரூபாய்

''ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கா''

ஐந்தரை ரூபாய்

''ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கா''

ஏழரை ரூபாய்

''ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கா''

'' போமா அந்தாண்டை '' போலீஸ்காரன் விரட்டினான்.

பச்சை எரிந்தது.

மீண்டும் நடைபாதைக்கே வந்தாள் இப்போது குழந்தை அழவில்லை. மயக்கமாகியிருந்தது.

குழந்தையின் முகத்தின் அழுக்குக்கு நடுவே கண்ணீர் , வரைபடத்தில் ஆறு போல ஓடியும் கடல்போல் தேங்கியும் கரையாகி இருந்தது. கரும்திட்டுக்கள். தூங்கியிருந்தான் அல்லது மயங்கியிருந்தான் அல்லது மூர்ச்சையாகியிருந்தான்.

ராமு அண்ணன் அவளை பார்க்காதது போல அமர்ந்திருந்தார்.

''அண்ணே.. ''

''அண்ணே , இங்க ஒருக்கா பாருங்கண்ணே ''

''அண்ணே எங்கிட்ட பேசமாட்டிங்களாண்ணே ''

ராமு அண்ணன் விரைப்பாய் அமர்ந்திருந்தார். முகத்தை திருப்பாமல் கையிலிருந்த பிய்ந்து போன செருப்பை தலைகுப்புறப் போட்டு ஒரு கட்டையால் தட்டிக்கொண்டிருந்தார்.

''அண்ணே, எல்லாம் என்நேரம்ண்ணே, ஊர்லருந்து ஓடி வந்தப்ப நீங்கதான கல்யாணம் பண்ணி வச்சீய, அந்த மயிரான் ஓடி போனதுக்கப்புறம் , ஏதோ உங்க பாதுகாப்புலதான் இருக்கேன் , நீங்களே என்னை வெறுத்துப்போயி இப்படி வஞ்சா நான் ஆருகிட்டண்ணே போறது ''

ராமு அண்ணன் இன்னும் கோபம் குறையாமல் காதை மட்டும் அவளுக்கும் கண்ணை அந்த பிய்ந்த செருப்புக்கும் கொடுத்திருந்தார். அறுந்து போயிருந்த செருப்பினுள்ளே தைக்கும் ஊசியில் நூலின்றி வெடுக்கு வெடுக்கு என தைப்பதுபோல பாவனை செய்துகொண்டிருந்தார்.

''அண்ணே இன்னைக்கு மொத தேதிண்ணே, எல்லாருக்கும் சம்பளம் வந்திருக்கும். நமக்கு இன்னைக்கு வாங்கினாத்தாண்ணே உண்டு, அப்புறம் வர்றதெல்லாம் வயித்துக்கும் கஞ்சிக்குமே போயிருமேண்ணே''

'' நீங்க இந்த புள்ளைய பத்தி கவலப்படுறீய, எனக்கு மூத்தவள பத்திதாண்ணே கவல , இதா இவன பாத்துக்க நாம இருக்கோம், அது இப்போ எங்க எப்படி இருக்கோ, எம்புருஷன் அந்த பொட்டபுள்ளய அடமானம் வச்சிட்டு போயிட்டான், இப்போ நான் நாலு காசு சேத்துதானண்ணே அத மூட்ட முடியும் இப்போ இவன் அழுதகாட்டியும்தான், இன்னைக்கு கொஞ்ச ரூவா சேந்துருக்கு, இன்னும் ஆயிரம் ரூவாதான் அதையும் சேத்திட்டா, அந்த புள்ளய மூட்டுடுவ்வேண்ணே, அதுக்குள அவ கண்ண நோண்டிட்டாளோ இல்ல கால உடைச்சிட்டாலோ எம்புட்டு சிரமண்ணே, இந்த பயல நாம ரவைக்கு கூட ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போலாண்ணே........ எம்புள்ள அது பொட்டபுள்ளண்ணே..... என்ன நீங்க கூட புரிஞ்சுக்கலையேண்ணே ''

உடைந்துபோய் கதறி அழுதாள்.

தொண்டை வலித்தது. ராமு அண்ணனை நிமிர்ந்து பார்த்தாள் அவர் அவள் அருகில் எப்போதும் போல ஆறுதலாய்.

குழந்தை இன்னும் மூர்ச்சையாய் மடியில் கிடந்தது . மீண்டும் சிகப்பு விளக்கு எரிந்தது. வண்டிகள் நின்றன. குழந்தையின் மார்பில் தட்டி தட்டி எழுப்பினாள். குழந்தை எழுந்தது. ஆனால் அழவில்லை. கால்களைத் தடவினாள் கத்தி அழத்துவங்கியது. சிக்னலை நோக்கி வேகமாய் ஓடினாள். இன்னும் 60 விநாடிகள்தான் இருந்தன.

59...58...57

***********************