Pages

18 March 2009

எ.வீ.ஜ-4 - குல்பிஐஸும் லேசாப்பறந்த மனசும்


மதீனா அக்காவை எனக்கு மிகமிக பிடிக்கும். பண்பானவர்,பாசமுடன் பழகுபவர். ஆறுவயதிலிருந்தே அவரை எனக்குத்தெரியும். கோவை கோட்டைமேட்டில் வந்து பிரியாணி மாஸ்டர் மதீனா யார் எனக் கேட்டால் அனைவருக்கும் தெரிந்திருக்கும். என் அம்மாவின் தோழி. அவரோடு பேசுவது ஏனோ எனக்கு விபரம் தெரிந்தவரை யாருக்குமே பிடித்ததில்லை. அதோட சேராத நீயும் அதா மாறிடுவே என்று நண்பர்கள் சிறுவயதில் பயமுறுத்தியது இன்றும் ஞாபகம் இருக்கிறது. அவருக்கு 50 வயதிருக்கும் இன்னும் திருமணமாகவில்லை. அவர் ஒரு அராவணி அல்லது திருநங்கை என்பது எனக்கு 16-17 வயதில்தான் தெரிந்தது. அது தெரிந்த பின் ஏனோ எனக்கும் அவருக்குமான உறவில் விரிசல் உண்டாகியிருக்கலாம். திருநங்கைகள் குறித்த போதிய அறிவின்மையும் ஒரு காரணம்.

தொ.காட்சியில் ஒரு விளம்பரம் மிகவும் உருப்படியாக இருந்தது. திருநங்கைகளுக்கு வீடு வாடகைக்கு தரக் கோரும் விளம்பரம் அது. மனசிருந்தால் மார்க்கமுண்டு என்று ஒரு பழமொழி இருக்கிறது. அது போல நாம் மனதிறங்கி திருநங்கைகளையும் சகமனிதர்களாய் ஏற்று நடத்தவேண்டும் என்பதாய் அமைந்திருந்தது அந்த விளம்பரம். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சுவாரஸ்யமில்லாத விளம்பரங்களை ஒத்திருந்தாலும் சமூக நல்லுணர்வோடு எடுக்கப்பட்டிருக்கும் இம்முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். இந்த அமைப்பு மனசு என்கிற பெயரில் சென்னையில் துவக்கப்பட்டிருக்கிறது.

இந்த அமைப்பு திருநங்கைகளுக்காகவும் , மூன்றாம் பாலினத்தவர் குறித்த பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும் , பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் பாலின மாற்றம் தெரிந்தால் அது குறித்த தகவல்கள் பெறவும் ஒரு ஹெல்ப் லைனை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த ஹெல்ப் லைன் அனைவருக்குமானது. திருநங்கைகள் குறித்த சமூகத்தின் தெளிவில்லாத நிலையிலிருந்து அவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஹெல்ப் லைன் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. திருநங்கைகளும் சகமனிதர்களே என்பதாக அறிவிக்கும் பல விளம்பரங்களையும் அந்த அமைப்பின் பேனர்களில் காண முடிந்தது. அனைவரும் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டிய எண்களில் ஒன்றாக இது இருக்க வேண்டும் . அந்த எண் 044-25990505 . (பாலபாரதி அவர்களின் பதிவில் ஏற்கனவே இது குறித்து கூறியிருந்தாலும் நல்ல விடயமாகத்தோன்றியதால் இங்கேயும்.)

'' லேசாப்பறக்குது மனசு '' இதுதான் இப்போதைக்கு மிகப்பிடித்தமான பாடலாக இருக்கிறது. ஊரெல்லாம் அதுதான் ஓலிக்கிறதோ? . முதல் முறை கேட்டதிலிருந்தே அந்தப் பாடல் பைக்கில்,வீட்டில்,சாப்பிடும்போது,தூங்கும்போது,எழுதும்போது எப்போதும் லேசாக மனதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. வெண்ணிலா கபடிக் குழு திரைப்பட பாடல் அது. பாடலின் இசைக்கும் அல்லது ராகத்திற்கும்(!) பாடல் வரிகளுக்குமான அழகான தொடர்பு அந்த பாடலில். இப்படி பாடல்வரிகளுக்கும் அதன் ராகத்திற்குமான தொடர்புடைய பாடல் ஒன்று காதோடுதான் நான் பாடுவேன்,கீரவாணி... இன்னும் பல இருக்கிறது.

வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் பார்த்தேன். வெகுநாளைக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தி. இதற்கு முன் மொழி அப்படி ஒரு திருப்தியை அளித்திருந்தது. முதல் காட்சியில் புதர்களுக்கு நடுவில் ஆய் போய்கொண்டே ஊர்கதை பேசும் காட்சியிலேயே படத்தின் வெற்றி துவங்கிவிட்டது. கறிசோற்றை அள்ளித்தரும் அம்மாவின் கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு தெனாவெட்டான குசும்பான எகத்தாளமான நண்பர் குழாமும் , திருவிழாவிற்கு திருவிழா காணும் காதலியுமாய்.... அடேங்கப்பா! சூப்பர்யா.. கிழிச்சுட்டாய்ங்க.. பருத்திவீரனைவிட இந்த படத்தில் வரும் கிராமம் இயல்பாய் இருந்ததாய் தோன்றியது.

சென்றவாரம் ரமணியோடு ஸ்பென்சர்ஸ் சென்றிருந்தேன். இப்போதெல்லாம் அவளுக்கு ஏனோ ஸ்பென்சர்ஸ் பிடிப்பதில்லை. அதை ஒரு இரண்டாம்தர ஷாப்பிங் காம்பிலக்ஸாக பார்க்கிறாள். அவளது சாய்ஸ் சிட்டி சென்டர்தான். நமக்கு பட்ஜெட் தாங்காது. பர்ஸ் அது வைக்கும் இடமும் சேர்த்து பழுத்துவிடும் . அதனால் எப்போதும் என் சாய்ஸ் ஸ்பென்சர்தான். ஸ்பென்சர்சஸில் உள்ளே நுழைந்ததும் ஒரு திண்பண்ட கடை இருக்கும் கவனித்திருக்கிறீர்களா? அங்கே வெணிலா ஐஸ்கிரீம் மிக அருமையாக இருக்கிறது. குறைந்த விலை நிறைந்த தரம் . 15 ரூபாய் ஒன்று. காசு குறைவாக இருந்தாலும் கடலை போட உதவும்.

சிறுவயதில் பால்ஐஸ் என்று ஒன்று விற்கும். எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மொழுமொழுவென வெள்ளைவெளேரென இருக்கும். எழுதில் உருகிவிடும் (குல்பியைப்போல ஆனால் வேறு சுவையில்) . கையெல்லாம் வழிந்து புறங்கையில் ஒழுகி ஓடும். அதையும் விடாமல் நக்கி தின்றிருக்கிறேன். 10 பைசாவிற்கு விற்கும் போது சாப்பிட ஆரம்பித்து ஓரு ரூபாய் வரைக்கும் விலை உயர்ந்தது வரை சாப்பிட்டிருக்கிறேன். எனது குடும்பத்தின் நகரம் நோக்கிய பெயர்தலால் அதைப்பற்றிய இப்போதைய நிலை தெரியவில்லை. மறைந்து போயிருக்கலாம். ரோட்டில் விற்றுச்செல்லும் ஐஸ்வண்ட்டிக்காரர்களை பார்க்கும் போதெல்லாம் எப்போதும் கேட்டு வைப்பேன் பால் ஐஸ் இருக்கா என.. அவனும் வெணிலா இருக்கு வேண்டுமா என்பான்.. வேண்டாம் என திரும்பி விடுவேன்.

தூக்கம் வராத பின்னிரவில் அதாவது 2 மணி சுமாருக்கு மொட்டைமாடியில் உலாத்திக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் அடிக்கடி இரவு நேரத்தில் தூக்கம் வருவதில்லை. ரோட்டில் ஒரு ஐஸ்வண்டிக்காரன் தனியாக சென்று கொண்டிருந்தான். அட நம்ம பாலு அண்ணே என்று நினைத்து 'என்ன அண்ணே இந்த நேரத்தில என்றேன் , பிஸினஸ்டா என்றார். சிட்டில இந்த 2 மணிக்கு கூடவா குல்பி தின்றாங்க என்றேன் ... ''தம்பி உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைல ஆகட்டும் புரியும்னாரு'', மிட்நைட் குல்பி மற்றும் தூக்கம் வராத காரணம் விளங்கியது. அவர் தனது வண்டியின் முன்பக்கமிருந்த வண்டியின் மணியை ஆட்டியபடியே கிளம்பினார்.

சமீபகாலமாக பல இணையபக்கங்களிலும் அத்வானி ஃபார் பீ.எம் என்னும் விளம்பரம் காணமுடிந்தது. அந்த விளம்பரங்கள் கூகிள் சேவை வழங்குகிறதா? அல்லது தனியார் நிறுவனமோ , பிஜேபீயோ இணைந்து நடத்துகின்றனரா? இதற்கு பணம் கொடுக்கப்படுகிறதா? விபரம் தெரிந்தவர்கள் கூறலாம். என்ன எழவு கருமாந்திரமோ?

மார்ச் 16 பதிவரும் மிகநெருங்கிய நண்பருமான மலேசியாவைச்சேர்ந்த விக்னேஸ்வரன் பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துக்கள்.

வாராவாரம் ஜீவியில் பிரபலங்களின் நொங்கை பிதுக்கிக் கொண்டிருக்கிறார். பதிவர் நர்சிம். வாராவாரம் அவருக்கு வாழ்த்து சொல்ல முடியாது... அது உவப்பாக இருக்காது. மனிதர் வயதுக்கு வந்துவிட்டார். ஒரே வாழ்த்து கொஞ்சம் பெரிய நல்வாழ்த்துக்களை சொல்லிக்கொள்கிறேன். செமத்தியாக ஒரு கிக்ஸ்டார்ட் கிடைத்திருக்கிறது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நர்சிம்மைத் தொடர்ந்து மேலும் பல பதிவர்களும் மக்கள் அதிகம் படிக்கும் வார,மாத இதழ்களில் எழுத எல்லாம் வல்ல தமிழ்மணேஸ்வரனை வேண்டுகிறேன்.

தமிழ்மணத்தில் கொஞ்சகாலமாக சூடான இடுகைகளில் எனது பதிவு நெருக்கி அடித்துக்கொண்டு கஷ்டப்பட்டு வந்து கொண்டிருந்தது. சென்ற பதிவு போட்டதும் சூடாகிவிட்டது. ஒரு வேளை இதுவரை தமிழ்மணம் என் மீது விதித்திருந்த தடையை தளர்த்தியுள்ளதோ என்னவோ? தமிழ்மணத்திற்கு மிக்க நன்றி.
(வெனிலாவை - வெண்ணிலா ஐஸ்கீரிம் என தவறாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய கேபிள் சங்கருக்கு நன்றி , மாற்றிவிட்டேன் )