Pages

03 April 2009

அருந்ததீ. - அசத்தீட்ட பொம்மாயி!


பல வருடங்களுக்கு முன்னால் ஒரு கெட்டவனின் அல்லது கெட்ட ஆத்மா அதை ஒரு ஜாடி அல்லது பெட்டி ஏதோ ஒரு ______ல் அடைத்து வைக்கின்றனர். காலம் உருளுகிறது. அந்த கெட்ட சக்தியை எதுவோ எப்படியோ தெரிந்தோ தெரியாமலோ விடுவிக்கிறது. அது தன்னை அடைத்து வைத்தவரை அல்லது வைத்தவர்களை பழிவாங்க புறப்படுகிறது. அதை எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதாக கதை அமையும். அம்புலிமாமா கதைகளில் படித்திருக்கிறேன் ஏழு மலை ஏழு கடல் தாண்டி இதுபோல கெட்ட ஆத்மாக்களை விட்டுவிடுவார்கள் அது திரும்பி வருவதற்குள் நாயகன் அடுத்த பிறவி எடுத்திருப்பான். கடைசியில் அதனோடு சண்டையிட்டு நரகத்திற்கே திருப்பி அனுப்புவான்.

இதே கதையை கோடி ராமகிருஷ்ணாவிடம் கொடுத்தால் என்ன செய்வார்? கோடி ராமகிருஷ்ணா ஆந்திர சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனர்களில் ஒருவர். நம்மூர் எஸ்.பி.முத்துராமனோடு அவரை ஒப்பிடலாம்,யாரும் கோபித்துக்கொள்ளாவிட்டால். மசாலா மன்னன். பெண்களுக்கான வன்முறைப்படங்கள் மன்னிக்கவும் ஆக்சன் படங்கள் எடுக்கிறவர்.
ஒரு திகில் படத்தைக்கூட பெண்களுக்காக எடுப்பவர். அதை ஆண்களும் ரசிக்கும் வண்ணம் எடுக்கும் திறமையும் உண்டு. அவரது முந்தைய படமான அம்மன் திரைப்படம் பார்த்து ஆடிப்போயிருக்கிறேன். தியேட்டரில் பல பெண்களும் சாமி வந்து ஆடினர். அதன் பிறகு இராம.நாராயணன் வரிசையாக அம்மன் படங்கள் எடுத்தது பழைய புராணம்.

சந்திரமுகி திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களிலேயே ஒரிஜினல் போல பளபள பிரிண்டோடு திருட்டு டிவிடிகள் வந்துவிட்டன. படத்தை திருட்டு டிவிடியில் பார்த்த பலரும் அதற்கு பிறகு தியேட்டரை நோக்கி படையெடுத்தனர். தமிழ்திரையுலகமே அதிசயித்துத்தான் போயிருக்கும். அப்படி ஒரு படம் அதற்கு பின் தசாவதாரம். அதைத்தொடர்ந்த அப்படி ஒரு தரத்தில் வந்திருக்கும் படமே அருந்ததீ!

முதல் பத்தியில் சொன்னது போல கதை அவ்வளவுதான்.

திரைகதைதான் படத்தின் ஹீரோ , ஹீரோயின் அனுஷ்கா.

அனுஷ்காவா இது. அனுஷ்கா முகத்திற்கும் ஏதும் கிராபிக்ஸ் செய்திருப்பார்களோ என்று கூட தோன்றுகிறது. அழுகையும் அமைதியாக அப்பாவியாக ஆக்ரோஷமாக அதிரடியாக அசத்தலாக அடேங்கப்பா மிரட்டல் நடிப்பு. ஜக்கம்மா என்னும் அவரது பாத்திரப்பெயருக்கு ஏற்றாற் போல அப்படி பொருந்துகிறார். அதிலும் அந்த டிரம்ஸ் டான்ஸ் டோன்ட் மிஸ் இட்!

சந்திரமுகி படத்தில் ஷீலாவோடு ஒரு ஒல்லிக்குச்சி பயில்வான் நடிகர் வருவாரே அவர்தான் இந்த படத்தில் வில்லன். மனுசன் என்னமா வில்லத்தனம் காட்றான்யா. அந்த நடிகரை நிறைய இந்தி பிட்டுப்படங்களில் பார்த்திருக்கிறேன்( சீசா என்றொரு படத்தில் ஹீரோவாய் நடித்திருப்பார், பெயர் ஞாபகத்தில் இல்லை) . அவருக்கு குரல் கொடுத்தவருக்கு பாதி சம்பளத்தை கொடுக்க வேண்டும். குரலைக்கேட்டாலே பயமாக இருக்கிறது. பேய்க்குரல். பாதி சம்பளைத்தை பிண்ணனி பேசியவருக்கு கொடுத்திருக்க வேண்டும் அந்த நடிகர். அபாரமான டப்பிங்.

வில்லனுக்கு டப்பிங் பேசிய அந்த நபர்தான் படத்தின் வசனமுமாம். உக்கிரமான வசனங்கள். '' அடியே அருந்ததீ '' என்றால் நம் அடி வயிறு கலங்குகிறது. சபாஷ்

ஒலி,ஒளிப்பதிவு இரண்டுமே அட்டகாசம். ஒலி அலர வைக்கிறது. ஒளி பதறவைக்கிறது. முன்சீட்டு குடும்பத்தில் சில பெண்கள் அலறியதே சாட்சி.

படத்தின் திரைக்கதை 'கில்லி' வேகம். ஆதிகாலத்து அம்புலிமாமா கதைக்கு இப்படி ஒரு திரைக்கதை அமைப்பதும் அதை திரைக்கு கொண்டுவருவதும் சாதாரண காரியமாய் தெரியவில்லை. ரஜினிகாந்த் திரைப்படங்கள் பார்க்கும் போது ஒரு சிலிர்ப்பு வருமே படம் நெடுகிலும் , அதை அனுஷ்காவை வைத்தே சாதித்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய குறை அநியாயத்துக்கு இரத்தம். எனக்கெல்லாம் பென்சில் சீவும்போது இரத்தம் வந்தாலே மயக்கமே வந்துவிடும். இந்த படம் முழுக்க கிராபிக்ஸில் இரத்தத்தை ஆறாய் ஓட விட்டிருக்கின்றனர். வடிவேலு சொல்லுவாரே இது ரத்த பூமி என்று அதைவிட அநியாயம் . படம் பார்க்கும் நம் மீதே ஒரு கேலன் இரத்தம் தெரித்திருக்கும் அத்தனை இரத்தம். ஆந்திராவே ஒரு இரத்தபூமி என கேள்விப்பட்டிருக்கேன் அதுக்காக இப்படியா பாதி படத்தில் வயிற்றை குமட்டியது. நல்ல வேளை தண்ணி அடிக்காமல் படம் பார்த்தேன் , இல்லாவிட்டில் முன்சீட்டு நண்பரின் முதுகு நாறிப்போயிருக்கும்.

மிகச்சுமாரான கிராபிக்ஸ்தான். பல காட்சிகள் கிராபிக்ஸ் குழந்தைகளுக்கு கூட தெரிந்துவிடும். ஆனால் சில இடங்களில் ஹாலிவுட் தரம். இன்னும் கொஞ்சூண்டு மெனக்கெட்டிருந்தால் ஹாலிவுட் தரத்தில் படம் மொத்தமுமே வந்திருக்கும். (பட்ஜெட் படம் என்பதால் அப்படி இருந்திருக்கலாம்)

குழந்தைகளை தயவு செய்து அழைத்து செல்லவேண்டாம். அத்தனை வன்முறை. குட்டீஸும் ரசிக்கவல்ல ஒருபடத்தில் வன்முறையின் அளவு டன்கணக்கில். என்னைப்போன்ற குழந்தைகளுக்காகவாவது படத்தில் அதீத வன்முறையை குறைத்திருக்கலாம். என்னோட படம் பார்த்த முதியவரான தோழர் கூட பயத்தில் பல இடங்களிலும் அலறினார்.

மற்றபடி படத்தைக் கட்டாயம் தீயேட்டரில்தான் பார்க்கவேண்டும். திருட்டு டிவிடியில் பார்த்தால் உங்கள் மனைவி , அளவான காரத்தில் குறைவான மசாலாவோடு செய்த பிரியாணி மன்னிக்கவும் நான் வெஜ்-தக்காளி சாதம் போலிருக்கும்.

அருந்ததீ - ஹைதரபாதீ பிரியாணி
*************