Pages

17 April 2009

உடல்கள் விற்பனைக்கு...




அவளை நம் எல்லாருக்குமே தெரிந்திருக்கும். அவள் பெயர் சில்க் ஸ்மிதா. எங்கோ ஆந்திராவில் விஜயலட்சுமியாய் பிறந்த அவள் தமிழ்சினிமாவின் போக்கையே சில காலம் மாற்றியமைத்தவள். அவளின்றி ஒரு படமும் வெளியாகவில்லை. அப்படி வெளியாக முயன்ற சிலதையும் வாங்க மறுத்தனர் விநியோகஸ்தர்கள். அவளின்றி சூப்பர் ஸ்டார்களின் படங்களும் பெட்டிக்குள் முடங்கிய காலமெல்லாம் உண்டு.


ஆனால் அவளே ஒருநாள் முடங்கிப்போவாள் என்று அன்று அவளோ சுற்றியிருந்தவர்களோ நினைத்திருக்க நியாமில்லை. அவளும் வீட்டிற்குள் முடங்களினாள். ஒரு நாள் ஊரே ரசித்த உடல் அந்தரத்தில் தொங்கியது. பிணமாய் கிடந்தாலும் அப்போதும் விடாமல் அவ்வுடலை ரசித்தகதைகள் கூட அவளைப்பற்றி சொல்வதுண்டு. அவள் பெயர் சில்க் ஸ்மிதா. புகழின் உச்சியில் இருக்கும் ஒருவர் தன் வாழ்வின் கடைசியில் உடல்நலம் குன்றி புகழ் இழந்து , வீட்டிற்குள் முடங்கிப்போவது நம்மூரில் புதிதல்ல. எத்தனையோ வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் நம் தெருவின் ஊரின் மூலையில் எங்கோ முடங்கித்தான் கிடக்கிறது.


அப்படி ஒருவனின் கதை THE Wrestler. ராண்டி தி ராம் ராபின்சன் என்ற பெயர் 80களின் ஆரம்பத்தில் உச்சத்தில் இருப்பதாய் பறைசாற்றும் பத்திரிக்கைகளினோடு காட்சி துவங்குகிறது. அவனது ஒவ்வொரு சண்டையும் பல லட்சம் பேரால் ரசிக்கப்படுகிறது. அமெரிக்காவின் பட்டித்தொட்டியெல்லாம் அவன் பெயர் சுவாசிக்கப்படுகிறது. ஆனால் இப்படம் அவனது எழுச்சியைப்பற்றியதல்ல. உடல் தளர்ந்து சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு கையில் காலணா இல்லாமல் அவன் வாழ்க்கைப்போராட்டம் குறித்தது.


அவனது வீழ்ச்சி , அவனது குடும்பத்தின் நிராகரிப்பு , ஏழ்மை , ஒரு விபச்சாரியுடனான அவனது காதல் , உள்ளூர் மல்யுத்தப்போட்டியில் விளையாடியதால் மாரடைப்பு , அதனால் மல்யுத்தமாடத்தடை , மீண்டும் மல்யுத்தத்தில் பிராகசிக்க வரும் வாய்ப்பு , அதனை இவன் மறுப்பது , ஒரு கறிக்கடையில் வேலைக்கு சேருவது , அங்கே அவனது பழைய ரசிகர் அடையாளம் காண்பது , காதலியின் எதிர்ப்பையும் மீறி போட்டியில் கலந்து கொண்டு மல்யுத்த மேடையில் உயிர் துறக்கிறான் என படம் நகர்கிறது.


படத்தின் மிகமுக்கிய பாத்திரத்தில் மிக்கி ரூர்க் (MICKEY ROURKE) . 1941 என்னும் காமெடி திரைப்படத்தின் மூலம் ஸ்பீல்பெர்க்கால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதற்கு பின் சின் சிட்டி திரைப்படத்தின் பார்த்ததாய் ஞாயபகம். ஆனால் இந்த படம் அவரது திரைவாழ்க்கையில் ஒரு மைல்கல் . ஹாலிவுட் கமலஹாசன் என பாராட்டலாம்.


ராண்டி தி ராம் ராபின்சனாகவே வாழ்கிறார். அதிலும் தனது மகள் தன்னை நிராகரிக்கும் காட்சியில் பிரமாதம். தூள்! என்று சொல்ல முடியவில்லை. மனத்தை கனக்கவைக்கிறார். மிக அற்புதமான நடிகர்.


ஒரு காட்சியில் கறிக்கடையில் கறித்துண்டுகளை வெட்டிக்கொண்டிருக்கிறார். அங்கே வரும் வாடிக்கையாளன் ஒருவன் அவரை அடையாளம் காண்கிறான். தாங்கள்தானே ராண்டி என கேட்க இவனோ தலையை குனிந்து கொண்டு நான் இல்லை நான் இல்லை என மறுக்கிறான். அவன் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறான். எத்தனை முயன்றும் அவனால் அழுகையையும் ஆதங்கத்தையும் அடக்கமுடியாது தன் கையை அந்த கத்தியால் அறுத்துக்கொண்டு ரத்தத்தை முகத்தில் பூசியபடி ராண்டி தி ராம் நான்தான்டா என கதறியபடி அந்த கடையை விட்டு வெளியேறுகிறார். அபாரமான நடிப்பு. அதைக்குறித்து எழுத வார்த்தைகள் ஏனோ சிக்கவில்லை.

விபச்சாரியாக அல்லது ஸ்டிரிப் டான்சராக வரும் கதாநாயகி. மரிசா டோமி. அவளது தளர்ந்து போன உடலை கேலி செய்யும் வாடிக்கையாளனை எதிர்கொள்வதாகட்டும் , தன் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் மல்யுத்த வீரனிடம் தன் காதலை தெரிவிக்க முடியாமல் தவிப்பதில் ஆகட்டும் அசத்தல் நடிப்பு.


படத்தின் கதை மல்யுத்தம் , ஸ்டிரிப் டான்ஸ் விபச்சாரம் எனும் இரண்டு வெவ்வேறு தளங்களில் இயங்குகிறது. (நாயகன் மற்றும் நாயகியின் தொழில் முறைகள் அவை) . இரண்டிற்குமான உடல் சார்ந்த ஒற்றுமையும் முதுமையின் முடிவில் அவர்கள் அனுபவிக்கும் வேதனையும் வலியும் நம் கண் முன்னே கொணர்ந்த இயக்குனரை கட்டாயம் பாராட்டியாகவேண்டும்.


இரண்டு தொழிலிலும் பிரதானமானது உடல். உடலின் கவர்ச்சி குன்றினால் அதை சரிசெய்து கொள்ள அவர்கள் செய்யும் பிரயத்தனம் ( மேக்அப் , ஆன்டிராய்டு பொட்டாக்ஸ் போன்ற மருந்துகள்) அவர்களது வாழ்க்கையையே முடித்துவிடும் அபாயகரமானவை. அதையும் மீறி அதை உட்கொண்டு உயிர்வாழவேண்டிய கட்டாயத்தின் காரணங்கள் மிக அருமையாய் சொல்லப்பட்டிருக்கிறது.


வீரமும் , பாலியலும் பிரதானமாய் ஆகிவிட்ட சமூகத்தில் அவை இரண்டையும் வெறுக்கின்ற இரண்டு பேரின் காதலை , சிறு சிறு மணிகளால் கோர்க்கப்பட்ட மாலையைப்போல சொல்லியிருக்கிறது திரைக்கதை அமைப்பு. அதிலும் நாயகனின் இரண்டு காதல் , ஒன்று நிராகரிப்பு தந்த காதலி மற்றொன்று தன்னை நிராகரித்த தனது தொழில். தொழிலைத் தேர்ந்தெடுத்து அதில் தன்னை நிரூபித்து உயிர்துறக்கிறான்.


WWF (world wrestling federation ) பலருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு பின்னால் இருக்கும் சிக்கல்களையும் அதில் பங்கு பெறும் பலரது வாழ்வியலையும் மிகச்சிறப்பாக பதிவு செய்திருப்பதாக அந்த நிறுவனத்தின் தலைவர் வின்ஸ் மெக்மோகன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இத்தனைக்கும் இது மல்யுத்தத்திற்கு ஆதரவான படம் கூட கிடையாது. ஆனால் படத்தின் வெற்றிக்காக அவர் உறுதுணையாக இருந்ததாக தெரிகிறது.

படத்தின் இயக்குனர் டாரன் அரோன்ப்ஸ்கியின் முந்தைய படமான ''பை''(கணக்கில் வருமே பை) ஆக இருக்கட்டும் , தி பவுண்டைனாக இருக்கட்டும் இரண்டுமே மனித மனங்களின் எழுச்சி வீழ்ச்சி குறித்தான சிக்கலான பிரச்சனைகளினூடே பயணிப்பவை. அந்த படமும் அப்படியே!. ஆனால் இவை மற்ற படங்களை காட்டிலும் ஆகச் சிறந்த ஒன்று.

படத்தின் இசை கிளின்ட் மான்செல். படம் நெடுக நிராகரிப்பையும் , தளர்ந்து போன தசையின் இறுக்கத்தையும் மனதினை ஆழமாய் வருடிச்செல்கிறது அவரது இசை. கிளாஸ்!


கேமரா! படம் முழுக்க ஒரு அழுக்குநிறமும்,இருளும் வெறுமையும் நம்மோடே பயணிக்கிறது.

2008ல் வெளியான இப்படம் பல விருதுகளைப்பெற்ற ஒன்றாகும். மிக்கி ரூர்க் (சிறந்த நடிகர் பிரிவு) மற்றும் மரிசா டோமி( சிறந்த துணை நடிகை பிரிவு) பரிந்துரைக்கப்பட்டாலும் விருது கிடைக்கவில்லை. கோல்டன் குளோப் மிக்கி ரூர்க்கிற்கு சிறந்த நடிகர் விருது கொடுத்து கௌரவித்தது. ஆஸ்கரும் கிடைத்திருக்க வேண்டும் ஜஸ்ட்டு மிஸ்.