Pages

06 May 2009

அண்டார்டிகாவில் அதிமுக!அண்டார்டிகாவில் அதிமுக.!

இன்று அண்டார்டிகாவில் நல்ல குளிர். தாங்கமுடியவில்லை. மூன்று சுவட்டர்கள் போட்டாலும் குளிரடிக்கிறது. இந்த அடாத குளிரிலும் விடாது உங்களுக்காக பதிவு போட்டால்தான் கொஞ்சூண்டு உடலின் சில பாகங்களாவது சூடாகிறது. பதிவுதான் தமிழ்மணத்தில் சூடாவதில்லை அட்லீஸ்ட் உடலாவது சூடாகிறதே.

அதிலும் அரசியல் பதிவுகள் போட்டால் பின்னூட்டங்களால் நம்மை எரித்து விடுகிறார்கள். பின்னூட்டத்தில் நம்மை எவ்வளவு காய்ச்சினாலும் நமக்கு ஜாலிதான். அண்டார்டிகா குளிருக்கு இதமாய் இருக்குமல்லவா!

இங்கே அண்டார்டிகாவில் டீக்கடை வைத்திருக்கும் நாயர் சேட்டாவிடம் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். மனிதர் மிக கோபமாகப் பேசினார். இந்த முறை அண்டார்டிகாவில் திமுக மட்டுமே போட்டியிடுவதால் தான் 49 ஓ போடப்போவதாக தெரிவித்தார். தமாசாக இருந்தது அண்டார்டிகாவில் 49ஓ கிடையாதே.

ஈழத்தாய்! எங்கள் தெய்வத்தாயாம் தங்கமங்கை அம்மா அவர்கள் சென்றவாரம் பல நூறு வீடியோக்களைப்பார்த்து முடிவெடுத்துவிட்டார்கள். தனி ஈழம்தான் ஈழத்தமிழரின் பிரச்சனைக்கு ஒரே தீர்வென்று. அதற்காக சந்திரமண்டலத்தில் வாழும் தமிழர் பேரவையினர் தங்களது ஆதரவை தெரிவித்து அனுப்பிய மின்னஞ்சல் குறித்தும் செவ்வாய் கிரகத்தில் வாழும் தமிழ் அமைப்பு அனுப்பிய ஃபாக்ஸ் செய்தியும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுதவிர அவர் கூறிய அறிக்கையின் படி இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி சிங்கள இராணுவத்தை தோற்கடித்து ஈழத்தமிழருக்கு அவர்களது சொந்த மண்ணை மீட்டுத்தரவும் இருப்பதாய் வாக்களித்துள்ளார். சும்மா அதிருதில்ல. அம்மானா சும்மாவா.

அதே போல் அண்டார்டிகா குளிரில் வாடும் ஏழை எளியோர் குறித்து ஸ்ரீலஸ்ரீ அட.. நடிகை இல்லைங்க சாமியார் ஒருத்தர் வீடியோ போட்டு காட்டிவிட்டதால் .. மனம் வெதும்பி உள்ளம் ததும்பி ஒவ்வொரு வீட்டிற்கும் ராஜஸ்தான் பாலைவனத்தில் இருந்து தருவித்த இரண்டு லாரி மண்ணும் , காஞ்சு போன பன்னும் வழங்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

திமுகவினரும் அவரது தலைவர்களும் பதிவுலகிலும் சரி நிஜஉலகிலும் சரி ஆடும் நாடகங்கள் கண்டு அதிலும் ( வெறும் நாடகங்கள் அல்ல ஸ்பெசல் கபடநாடகங்கள் - தமிழர் ஸ்பெசல் ) நம் உலகத்தமிழர் மட்டுமல்லாது செவ்வாய்,புதன்,நெப்டியூன், வீனஸ் கிரகத்தில் வாழும் தமிழர்களும் கொதித்து போயிருக்கின்றனர். வருகின்ற நாடாளுமன்றத்தேர்தலில் இது பலமாக எதிரொலிக்குமென்று போன வாரம் காஸ்பர் கிரகத்தில் ( மூன்று பால்வெளி மண்டலங்களுக்கு வெளியே இருக்கும் தனிக்கிரகம்) வாழும் அண்ணன் அறிவுடைநம்பி அவர்கள் தன் நீண்ட நெடிய மின்னஞ்சல் செய்தியில் ஒரு ஓரமாக குறிப்பிட்டிருந்தார். அதைகண்டு கண்கள் பனித்தன இதயம் இனித்தது..

மேலும் தனது காஸ்பர் கிரகத்தில் பாமக சார்பாக திரு.பாம்படிச்சான் பட்டி பழனிச்சாமி போட்டியிடுவதாகவும் அவருக்காக மாம்பழச்சின்னத்தில் தனது வாக்கை பதிய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பாமக மாதிரி ஒரு தன்மானமே பெரியது என நினைக்கும் சோற்றில் உப்பை போட்டு சாப்பிடாமல் உப்பையே சோறாக சாப்பிடும் உத்தமதமிழ்கட்சி அல்லவா அது.

மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. திமுக இந்த தேர்தலில் அடைய இருக்கும் படுதோல்வியை நினைத்து. திமுக தோற்று விடும் அம்மாவின் ஆட்சி மலரும் மலர் காயாகும் காய் பழமாகும் பழத்திலிருந்து கொட்டை வரும்.. அதற்கு பின் தமிழன் வாழ்க்கைமுறையே மாறிவிடும். ஜெயா டிவியில் புதிய திரைப்படங்கள் பார்த்து மகிழலாம்.

ஒரு விளம்பர இடைவேளை...

ராகுல் ஓட்டுப்போட்டுட்டு வந்திடு.. அரைடிராயரை ஏற்றிவிட்டுக்கொண்டு ராகுல் ஓடுகிறான்.

சோனியாம்மா திடீரென கவலையாகிறாள்..

ஐய்யயோ என் மகன் ராகுல்கிட்ட எந்த கட்சிக்கு ஓட்டுப்போடறதுனு சொல்லலியே

யாருக்கு ஓட்டுப்போடுவானோ

கண்ட கண்ட கட்சிக்கும் ஓட்டுப்போட்டுட்டானா?

லஞ்சம் பெருகிடும்

ஊழல் மலிஞ்சிடும்

ஐயோ இந்தியாவே நாசமா போயிடுமே..!

பூத்துக்கு சென்று பார்க்கிறாள் அங்கே ராகுல் இல்லை. அருகில் இருக்கும் டாஸ்மாக்கில் பார்க்கிறாள் அங்கே ராகுல் சரக்கடித்துக்கொண்டிருக்கிறான்,

தன் அம்மாவை பார்த்ததும் '' அம்மா '' என்று அருகில் இருக்கும் சரக்கில் முக்கி அடிக்க வைத்திருக்கும் இலையை காட்டுகிறான். அது இரட்டை இலை.

குரல் - ஆம் சோனியாவும் ராகுலும் ஆதரிக்கும் கட்சி அதிமுக சாரி ஆஇ அதிமுக

ஹமாம்னா நேர்மை அம்மானாலும் நேர்மை.. நேர்மையான ஆட்சிக்கு வித்திட மைனாரிட்டி திமுக ஆட்சி கவிழ்ந்திட தமிழ் ஈழம் அமைந்திட ... இரட்டை இலையில் அம்மாவின் ஆட்சிப்பூ மலர்ந்திட ...

இரட்டை இலை மறவாதீர் நமது சின்னம் இரட்டை இலை..


*************


பேக் டூ தி பதிவு...

மீண்டும் அம்மாவின் ஆட்சி மலர்ந்தால் மட்டுமே திமுகவின் கொட்டம் அடங்கும். திமுகவின் அழிச்சாட்டியம் தாங்க முடியவில்லை. அதிலும் பதிவுலகில் அநியாயம். காசு கொடுத்து பதிவு எழுத வைப்பதாகவும் அதிமுக தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதனால் நானும் இம்முறை அதிமுகவிற்கே எனது பொன்னான வாக்குகளை இட்டு திமுகவை படுதோல்வியடைய செய்யலாம் என்றிருந்தேன்.

என் போதாத நேரம் அகில அண்டார்டிகா அதிமுக தனது கடைசி கட்சி ஆபீஸையும் போன வாரம்தான் போதிய ஆளின்றி மூடியது.(கடைசியாக நான் ஒருவன் மட்டுமே உறுப்பினராக இருந்ததாய் ஞாபகம் ) அதனால் இம்முறை அஅஅதிமுக எங்களூரில் போட்டியிடாது என்றே தோன்றுகிறது. கவலையாக இருக்கிறது. என்னால் அதிமுகவிற்கு ஓட்டுப்போட முடியவில்லையே என்று. திமுகவும் ஒரு சுயேட்சையுமே போட்டியிடுகின்றனர். அந்த சுயேட்சை வேட்பாளரும் அடியேனாய் போய்விட்டேன்.

அதனால் நம் பதிவை படிக்கும் நூறு கோடி இந்தியர்களும் ஆறு கோடி தமிழர்களும் சிங்கப்பூர் மலேசியா மற்றும் பர்மா பாகிஸ்தான் நாடுகளில் வசிக்கும் பல கோடி தமிழர்களும் தங்களது தொகுதியில் யார் போட்டியிட்டாலும் உங்கள் வாக்குகளை அதிமுகவிற்கும் மீதி ஓட்டை எனக்கும் போட்டு அதிமுகவையும் என்னையும் வெற்றிபெற செய்யுங்கள். அதிமுகவின் சின்னம் ஞாபகம் இருக்கிறதா இரட்டை இலை இரட்டை இலை இரட்டை இலை. எனது சின்னம் மேலே இருக்கிறது அதே பந்துக்குள் இரண்டு ஓட்டை. அதிஷாவுக்கு பக்கத்தில் இருக்கிறது பாருங்கள் அதேதான்.

உதிக்கும் சூரியனையும் மறைக்கும் நம் இரட்டை இலை. மறவாதீர் மறந்தும் இருந்து விடாதீர் அமெரிக்காவில் இருந்தாலும் ஆப்பிரிக்காவில் இருந்தாலும் மறவாமல் உங்கள் வாக்குக்களை தேர்தல் சாவடிக்கு வந்து வாக்களியுங்கள். தேர்தல் நாள் 13.05.2009.


*****************


ஆசிகள் - அபி அப்பா , செந்தழல் ரவி மற்றும் உடன்பிறப்பு

ஆக்கம் - அதிஷா

ஊக்கம் - லக்கிலுக் , சென்ஷி , மணிகண்டன் , தாமிரா , புதுகை அப்துல்லா மற்றும் அகில உலக பிரபஞ்ச அதிமுக சார்பு கும்மியடிப்போர் சங்கம்

வெளியீடு - அகில அண்டார்டிகா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அஅஅதிமுக


*********

பின் குறிப்பு - இந்தப்பதிவு முழுக்க முழுக்க கற்பனையே இது இறந்த உயிரோடிருக்கும் யாரையும் எந்த கட்சியையும் குறிப்பிடுவன அல்ல என்று நான் சொன்னால் அதை நம்ப நீங்கள் என்ன என்னைப்போல் அண்டார்டிகா குளிரில் குவாட்டர் அடித்துவிட்டு குச்சி ஐஸ் தின்று குஜாலாக குப்புற கிடக்கும் முட்டாளா!..