Pages

02 July 2009

நாடோடிகள் - தந்தைகளின் காவியம்!




''டேய் நீ அப்பா மாதிரி.... தான்! ஆனா..! என் பொண்ணுக்கு கஷ்டம்னு வந்தா உங்கிட்டயா வந்தா அப்பானு எங்கிட்டதானடா வந்தா! என்னடா பிரண்டு..! பெத்து வளத்த பொண்ணுக்கு என்ன வேணும்னு பெத்து வளத்தவன விட உங்களுக்கு என்னடா தெரியும்.. ''

நடுமண்டையில் 'நறுக்' என கொட்டியது போலிருந்தது அந்த வசனம். பெண்ணைப் பெற்ற பெரியவர்களுக்கு தெரியும் அதன் வலிமை.

அது காதல் படமா? இல்லை. நட்பு படமா? இல்லை. தந்தை சென்டிமென்ட் ? இல்லை. பின்ன?

சுப்ரமணியபுரம் சென்றவருடம் வெளியாகி பல மூத்த திரைப்பட ஆட்களின் மூக்கில் விரல் விட்டு ஆட்டிய திரைப்படம். சாரு தனது விமர்சனத்தில் அது ஒரு துரோகத்தின் காவியம் என குறிப்பிட்டிருந்தார். ஏனோ சசிக்குமார் நடித்த அடுத்தப் படமே நம்பிக்கைகளின் காவியமாய் ஆகிப்போனது தற்செயலானதா அல்லது திட்டமிடப்பட்டதா தெரியவில்லை.

அது நம்பிக்கைகளின் திரைப்படம். வாழ்க்கையில் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கையோடிருக்கும் நால்வரின் வாழ்வில் துவங்கும் படம். அடுத்த நிகழ்வில் நம்பி வந்த நண்பனின் காதல் பிரச்சனையில் , ஒருவன் காலை இழக்கிறான் , ஒருவன் காதை இழக்கிறான் . ஒருவன் காதலை இழக்கிறான். ( காது+கால்=காதல்! கவிதையோ!). வாழ்க்கையை தொலைக்கின்றனர். கிடைக்க வேண்டிய வேலை,லோன்,பாஸ்போர்ட் என எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனர். மீண்டும் பீனிக்ஸாய் எழுகின்றனர். அச்சமயத்தில் சேர்த்து வைத்த காதல் ஜோடிகள் பிரிந்து விட... மீதி திரையில் காணலாம்.

கொஞ்சம் பிசகினாலும் விக்ரமன் டைப் படமாக ஆகியிருக்கக்கூடிய ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற தேர்ந்த நடிகர்களையும் , திரைக்கு பின்னால் உழைக்கும் ஒரு அசாத்திய அணியையும் உருவாக்கிக்கொண்டு காவியம் படைத்திருக்கிறார் சமுத்திரக்கனி.


இது ஏன் தந்தைகளின் காவியம்?


எத்தனை விதத்தந்தைகள். ஏதோ பிரச்சனையில் வீட்டில் இழவு விழுந்து கிடக்கையிலும் ஊரார் தூற்ற ''என் பையன் எது பண்ணிருந்தாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்யா '' என்று மார்த்தட்டும் ஒரு தந்தை.

இரண்டாம் மனைவிமுன் அதட்டினாலும் உள்ளுக்குள் பாசத்தை விதைத்துவிட்டு ஊமையாய்ப் போனவர். மகன் தன் காது செவிடாகிவிட்டது இனி நீ சொல்றது எனக்கு கேட்காது என அத்தந்தையை பார்த்து கேட்க உடைந்துபோய் அழும் ஒரு தந்தை.

பிரச்சனையில் தன் காலிழந்து வீட்டிற்குள் முடங்கிப்போனவனிடம்.. ''தம்பீ நம்ம பரம்பரைக்கே கால்லதாம்யா ஏதோ பிரச்சனை '' என நம்பிக்கையாய் ஒரு தந்தை.

காதலுக்கு தூது போய்.. ஏய் அவ போறா இப்ப (சைக்கிள்) பெல் அடி , ரிசல்ட் தெரியும் என ஐடியா தருவதாகட்டும் .. சரி நீங்க பேசிட்டு இருங்க என புறவாசலில் போய் அமர்ந்து கொண்டு வலியையும் வேதனையையும் அடக்கி கொள்வதாகட்டும் அடடே போட வைத்த ஒரு தந்தை!

தூக்கில் தொங்கிருவேன்.. செத்துப் போயிருவேன்.. அவனை மறந்துட்டேனு சொல்லு என அடம்பிடிக்கும் ஒரு சராசரி தந்தை. ஐய்யோ என் மானம் போச்சே என் பொண்ணே எனக்கு துரோகம் பண்ணிட்டா என வீதியெல்லாம் கத்தி ஓடி வரும் ஒரு தந்தை!.

மூன்று பெண்கள் மூவருமே காதலிக்கின்றனர். மூன்று காதலுமே வேறு வேறு மாதிரியானவை. ஒன்றில் முறைமாமன் . மற்றொன்றில் அண்ணனின் நண்பன் . இன்னுமொன்றில் பணக்கார யாரோவைக்காதலிக்கும் மகள். இந்த மூன்று காதலையும் மூன்று விதமாய் அணுகும் மூன்று தந்தைகள். பளீர்.

இப்படி தந்தைகளின் பல பரிமாணங்கள். நம் தமிழ்சினிமா அம்மாக்களின் ஆயிரம் விதங்களை காட்டியிருக்கிறது. ஏனோ தந்தைகள் எப்போதும் ஒன்று தன் பிள்ளைக்கு நம்பிக்கையூட்டபவனாகவோ அல்லது டம்மி பீசாகவோதான் காட்டப்பட்டிருக்கின்றனர். இத்திரைப்படத்தின் தந்தைகள் தமிழ்சினிமாவிற்கு மிகப் புதியவர்கள். அது போக இப்படத்தில் அம்மாக்களுக்கு அதிகமாய் வேலை இல்லை முறைப்பதும் சிரிப்பதுமாய் வந்து போகின்றனர் பெரும்பாலும். அதனால் முழுக்க தந்தைகளின் ராஜ்ஜியம்.

இப்படத்தின் நாயகர்கள் அந்த தந்தைகள்தாம். தந்தைகளின் பலவித உணர்வுகளை சில காட்சிகளில் ( வசனம் கூட இல்லாமல் )செவுட்டில் அறைந்தது போல் சொல்லிய சமுத்திரக்கனி கட்டாயம் 'அப்பாப்பிள்ளை'யாகத்தான் இருக்க வேண்டும்.

நட்புதான் இப்படத்தின் அச்சாணி என்றாலும் , மொத்த வண்டியே தந்தைகளாய் ஆகிப்போகின்றனர். நண்பர்களை விடவும் அவர்களது தந்தைகள் ஏனோ மனதில் ஆழமாய் அதிகமான பாதிப்பை உண்டாக்கிச்செல்கின்றனர்.

பொதுவில் எல்லா தந்தைகளுமே இப்படித்தான். எல்லா தந்தைகளுக்குள்ளும் மேற்ச்சொன்ன அனைத்துமே அடக்கம். சூழலும் நிகழ்வுகளும் விதவிதமான தந்தைகளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

படத்தின் அடுத்த நாயகன் இசை - சுந்தர்.சி.பாபு. கில்லி திரைப்படத்தில் சரியான இடத்தில் அர்ஜூனரு வில்லு என்றொரு பாட்டு இடம்பெற்றிருக்கும். அதே பாணியில் இப்படத்திலும் ஒரு சேஸிங் காட்சி . கில்லியை காட்டிலும் நூறு மடங்கு வலிமையான பாடல் அது. வெகு நாட்களுக்குப் சங்கர் மகாதேவன் சம்போ சிவசம்போ என மந்திரம் போட்டு மந்திரித்து விடுகிறார். இடைவேளை முடிந்து வெளியில் வரும் பலரது முகங்களும் அதற்கான சாட்சியாய் மந்திரித்து விட்ட கோழிகள் போல சிகரெட்டை திருப்பி பற்றவைத்துக்கொண்டு அலைகின்றனர். பிண்ணனியில் பிழந்திருக்கிறார் சுந்தர்.சி.பாபு.

****************

கல்லூரி திரைப்படத்தில் வந்த அந்த பையன். அடேங்கப்பா என்ன ஒரு நடிப்பு. பார்க்கும் பெண்களையெல்லாம் டாவடிப்பதாகட்டும். குடித்துவிட்டு பேசிபேசி உதைவாங்குவதாகட்டும். கிளைமாக்ஸில் டேய் கர்ணா அவங்க போட்டுருவோம்டா.. என் வீறு கொண்டு கதறுவதாகட்டும் . அதிலும் காது கேட்காமல் போன பின் ( திடீரென காது கேட்காமல் போனவராய் நடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன் ) அசத்தலப்பா!

வசந்த் அன் கோ புகழ் வசந்த் விஜய் , பார்க்க சென்னை 28 ல் பார்த்த அந்த மெக்கானிக் பையன் போல் இல்லாமல் அந்த பையனின் அண்ணன் போல மிடுக்காய் ஒரு மாதிரி அவரை வேறுமாதிரி இயக்குனர் செதுக்கியிருப்பது தெரிகிறது. ஒரு காட்சியில் ( காலிலழந்த நிலையில் கட்டிலில் கிடக்கையில் காதலிக்கு ஆறுதல் கூறும் போது ) மட்டும் சொதப்பல். மற்றபடி நிறைவு.

சசிக்குமார். ஆடுகிறார். மிரட்டுகிறார். ரொமான்ஸ் பண்ணுகிறார். காமெடிக்கிறார் . பாடல் ஒன்று பாடியதாய் கேள்வி. மிகையில்லா நடிப்பு. தேவையில்லாத பில்டப் இல்லை. ஆனால் மிரட்டலான பாடி லேங்வேஜ் மற்றும் வாய்ஸ் மாடுலேசன். என்ன குரல் இவருக்கு. படத்தில் காட்சிக்கேற்ப அவரது குரல் மாறுவது சிறப்பு. ஆனாலும் சசிக்குமார் நடிக்கப்போய்விடக்கூடாது என இறைவனை வேண்டுவோம். இன்னொரு சுப்ரமணியபுரம் வேண்டுமே! சசிக்குமாரை நடிகராக்கி அழகு பார்த்து அவரை முழுநேர நடிகராக்க முயற்சித்த ச.கனிக்கு ஒரு குட்டு!. மற்றபடி சசிக்குமார் இளம்ஹீரோக்களுக்கு போட்டியாக இருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது.

இவர்களுக்கெல்லாம் நடுவில் தேவையில்லாமல் மாட்டிக்கொண்டு உதைவாங்கும் கஞ்சாகருப்பு. வரும் காட்சிகளிலெல்லாம் மொத்தமாய் திரையை முழுங்கி விடுகிறார். தூள்!

இவர்கள் தவிர சசிக்குமாரின் பாட்டியாக நடித்த அந்த 'அழகு' பாட்டி ( நாயகிகளை விட அழகாய் இருக்கிறார் அந்த பாட்டி ) முதல் வசனமே இல்லாமல் வந்து போகும் பைக் நண்பன் வரை அனைவருமே அட போட வைத்திருக்கின்றனர்.

**********

கேமரா = ராக்கெட் வேகம்
வசனங்கள் = ஷார்ப்

**********

ரொம்ப நாளைக்குப் பின் ஹரிஹரன் குரலில் ஒரு மெலோடி. கேட்க கேட்க பிடிக்கும் போலிருந்தது.

**********

இன்டெர்வெல்லிற்கு பின் வரும் காட்சிகளில் காமெடி கலந்த சோகம் . வக்கிரம்? அல்லது PATHOS வகையோ?

**********

மொத்தமாய் படத்தின் மிகப்பெரிய பலம் இயக்கம். சமுத்திரக்கனியின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிவது அழகு. ஒரு காட்சியில் ஒருவன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயல்கிறான். அவனை வெளியே எடுத்து காப்பற்ற முயல்கின்றனர். தலைகீழாய் போட்டு உலுக்கும் போது அவன் கைகளில் பாதி கழண்ட ஈரமான ஒரு வாட்ச்சு..எத்தனை நுணுக்கம். அட!

நெறஞ்ச மனசு சமுத்திரக்கனியா இது? அடப்போங்கடா இத்தன நாளா அந்தாள சீரியல் எடுக்கவிட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களேய்யா என்று எண்ணினேன்.

குறையெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் இருந்துவிட்டு போகட்டும்.


**********

நாடோடிகள் - இன்னொருவாட்டி பாக்கணும்.