Pages

01 September 2009

பஞ்சர் பாண்டியின் பைக் குறிப்புகள்!
செப்டம்பர் - 1 - 2009


''சார் இஞ்சின் செமத்தியா அடி வாங்கிருச்சு இனிமே தாங்காது.. பேசாம வித்துட்டு செகன்ட்ஸ்லயே ஒரு ஸ்பிளென்டர் பிளஸ் வாங்கிக்கோங்க சார்! மூணு மாஸ்த்துக்கு ஒருக்கா ஆயிரம் ஆயிரமா தண்டம் அழுவுறீங்களே.. ''

''இல்ல பாஸ்.. அந்த வண்டிய மட்டும் விக்க முடியாது.. அது எனக்கு லட்சுமி மாதிரி , எனக்கு மட்டுமில்ல எங்க அப்பாவுக்கு கூட.. அந்த பைக்க எங்கப்பா எனக்கு குடுத்தப்பறம்தான்யா எனக்கு வேலை கிடைச்சிது, ஃபிகர் மாட்டிச்சு , அதுமில்லாம அடுத்து வாங்கினா கார்தான்..’’

"அப்படினா ஒரு அஞ்சாயிரம் செலவு பண்ணி வண்டி எஞ்சின் வேலை பாத்துருவோம் சார்..’’

"அஞ்சாயிரமா..ம்ம் யோசிச்சு சொல்றேன்..’’

___________

செப்டம்பர் 10 - 2009


"பாஸ் , எத்தன நாளைக்குள்ள கிடைக்கும்..’’

"இன்னைக்கு வியாழன் திங்கள் கிழமை வாங்கிக்கோங்க..’’

"சனிக்கிழம ஏதும் சான்ஸ் இருக்கா!’’

"இல்ல சார்... வெல்டிங்லாம் பண்ணனும்.. ஞாயித்துகிழம வேலை பாத்தாதான் முடியும்..’’

"ஓகே .. இந்தாங்க சாவி.. பைக் பத்தரம் சார்..’’

"சார் எங்க போறீங்க.. ஏதாவது பணம் குடுத்துட்டு போங்க..’’

"எவ்ளோங்க பாஸ்’’

"நாலாயிரமாவது குடுங்க..’’

"சாவிய குடுங்க.. ஏடிஎம் போய்ட்டு வந்து தரேன்..’’

____________

செப்டம்பர் 12 - 2009

"வினோ சன்டே எங்கயாச்சும் போலாமா..! ‘’

"சாரிடா குட்டி சான்ஸே இல்ல.. வண்டி சர்வீஸ் விட்டுருக்கேன்.. மன்டேதான்’’

"பொய்சொல்லாதே.. எவளோட ஊர் சுத்த போற..’’

"ஏய் பிராமிஸா வண்டி சர்வீஸ் போயிருக்குடா’’

"நான் நம்ப மாட்டேன்.. அந்த மோனியோடதான ஊர் மேயப்போற.. தெரியும்டா நீ இப்படி பண்ணுவேனு.. ‘’

"ஐயோ ப்ளீஸ் நம்புமா.. அப்படிலாம் இல்ல.. மோனிய பாத்தே பல நாள் ஆச்சு..’’

"ச்சே போன வை..’’

_________

செப்டம்பர் 11 - 2009

"டேய் எங்கடா வண்டி’’

"சர்வீஸ் விட்டுருக்கேன்மா..’’

"போனவாரம்தானடா சரிவீஸ் விட்ட’’

"வண்டி இஞ்சின்ல பிரச்சனையாம் அதான்.. திங்கள் கிழமை கிடைச்சிரும்.. ‘’

"டேய் வண்டிய வித்துட்டியா.. எங்கிட்ட ஏன்டா மறைக்கிறா.. அப்பா செத்த்துக்கு அப்புறம் அவர் ஞாபகார்த்தமா இருக்கறது அந்த வண்டிதான்..’’

"ஐயோ அம்மா நம்புமா.. வண்டியெல்லாம் விக்கல.. எனக்கு அப்பா மேல பாசம் இல்லையா..’’

___________

செப்டம்பர் 11 - 2009

"என்ன சார் பதினோறு மணிக்கு வரீங்க..’’

"வண்டி ரிப்பேர் சார் அதான்.. பஸ்ஸ புடிச்சு ஷேர் ஆட்டோ புடிச்சு டைமிங் மிஸ்ஸாகிருச்சு..’’

‘’போங்க உள்ள எம்.ஜி.ஆர் கூப்படறார்..’’

‘’சார் உள்ள வரலாமா..’’

‘’ஏன்யா டைம் என்ன தெரியுமா..’’

‘’சார் வண்டி..’’

‘’ஐ டொண்ட் வான்ட் எனி பிளடி எக்ஸ்பிளனேஷன் பிரம் யூ.. எனக்காக வொர்க் பண்ணாதீங்க உங்க திருப்திக்கு வொர்க் பண்ணுங்க.. மாசமானா சம்பளம் மட்டும் சொலையா வாங்க தெரியுதில்ல.. டைமுக்கு ஆபீஸ் வரணும்னு தெரியாதா.. ஹெல்.. ஐ டோன்ட் வான்ட் யூ ட்டூ .. டூ இட் எகய்ன்’’

‘’சார் நம்புங்க சார் நிஜமாவே வண்டி ரிப்பேர்.. திங்க கிழமை கிடைச்சிரும்..‘’

‘’அப்புறம் எப்படியா கால்ஸ் போவ.. ஒரு சேல்ஸ் ரெப்புக்கு வண்டி எவ்ளோ முக்கியம். இரண்டு நாள் ஆபீஸ்ல உக்காந்துகிட்டு சீட்ட தேப்ப இல்ல...’’

‘’சார் பஸ்ல போய்..’’

‘’கோ ட்டூ ஹெல்.. கெட் அவுட்’’

____________________

செப்டம்பர் 12 - 2009

‘’மச்சான் டைமே சரியில்லடா..’’

‘’ஏன்டா.. பைக் இல்லாட்டி போனா டைம் சரியில்லையா.. ‘’

‘’ஆமான்டா அந்த பைக் இல்லாம எல்லார்கிட்டயும் திட்டு சண்டை எதுவும் சரியில்ல.. கையிலருந்த நாலாயிரம் ரூவா பணத்தையும் குடுத்துட்டேன்.. கைல காசு கூட இல்லடா.. ம்ம்.. மச்சி ஒரு ரெண்டு நாளைக்கு ஒன் பைக் குடுறா.. மன்டே தந்துடறேன்..’’

‘’சாரி மச்சி சன்டே ஒரு மேரேஜ் இருக்கு.. அம்மாவோட போணும்..’’

‘’ச்சே ஹெல்ப்னுதானடா கேக்கறேன்..’’

‘’மச்சி புரிஞ்ச்சிக்கோ எனக்கும் பிரச்சனை இருக்குடா..’’

‘’ச்சே இவ்ளோதானாடா ஒன் பிரன்ட் ஷிப்பு..’’

‘’டேய் ஏன்டா கோவப்படற..’’

‘’ஓஓ நான் கோவப்படறேனா.. உனக்கு எவ்ளோ ஹெல்ப் பண்ணிருப்பேன் ச்சே.. போடா..’’

__________

செப்டம்பர் 14 - 2009

‘’சார் ஏன் மெக்கானிக் கடை பூட்டிருக்கு..’’

‘’சார் காலைலருந்து கடையே திறக்கல.. தன்ராஜிக்கு போன் பண்ணிப்பாருங்க..’’

‘’போன் பண்ணேங்க போன் சுவிட் ஆப்னு வருது..’’

‘’இன்னா சார் வண்டி வுட்ருக்கியா..’’

‘’ஆமா இன்னைக்கு தரேனு சொல்லிருந்தாரு..’’

‘’தெர்லயே சார்.. நீ வேணா , பக்கத்தில டீகடைல கேளேன்’’

‘’பாஸ் இந்த மெக்கானிக்..’’

‘’தெரியலயேங்க.. அவரு டீ குடிக்கதான் கடைபக்கமே வருவாரு வேற எதுவும் தெரியாது’’

‘’பாஸ் அவரு வீடு எங்கருக்குனாவது தெரியுமா..’’

‘’தெரியலைங்க.. பக்கத்துல ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடைல கேட்டுப்பாருங்க’’

‘’சார் இந்த மெக்கானிக் தன்ராஜ் வீடு தெரியுங்களா..’’

‘’தெரியலையே சார் அவரு வீடு தேனாம்பேட்டையோ சைதாப்பேட்டையோனு சொன்னாங்க’’


______________

செப்டம்பர் 15 - 2009


‘’சார் இன்னைக்கு கடை திறக்கலையா’’

‘’இல்லைங்களே.. ஒரு அஸிஸ்டென்ட் பையன் வருவான் அவனையும் காணோம்..’’

___________

செப்டம்பர் 16 - 2009

‘’சார் மெக்கானிக்..’’

‘’சார் உங்கள பாத்தா பாவமா இருக்கு.. என்ன சார் ஏதாவது துட்டு குடுக்கணுமா..’’

‘’அதெல்லாம் இல்லைங்க, பைக் சர்வீஸ் விட்டிருக்கேன்.. அத திருப்பி வாங்கணும்..’’

__________

செப்டம்பர் 25 - 2009

‘’வினோ இந்த வாரமாவது வரியாடா’’

‘’குட்டி ப்ளீஸ்மா.. மூனு வாரம் ஆயிருச்சு.. அந்த மெக்கானிக் என்ன ஆனானே தெரியல..’’

‘’ச்சே பொய் பொய் , போன வாரம் என் கொலிக் உன்ன பைக்ல போகும் போது பாத்திருக்கா.. ஏன்டா இவ்ளோ பொய் சொல்ற’’

‘’ப்ளீஸ்மா புரிஞ்சுக்கோ..’’

‘’ச்சே இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத.. உனக்கு நான் சலிச்சு போய்ட்டேன் இல்ல’’

‘’டேய் குட்டி ஏன்டா இப்படிலாம் பேசற’’

‘’ப்ளீஸ் போன கட் பண்ணு இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத’’

______________

செப்டம்பர் 27 -2009

‘’டேய் அது அப்பாவோட பொக்கிஷம்டா.. அதைப்போய் வித்து குடிச்சிட்டியே’’

‘’அம்மா நான் அப்படிலாம் பண்ணலமா..’’

‘’ச்சே என்னைக்கு அப்பாவோட பைக்கயே வித்து குடிச்சி அழிச்சியோ இனிமே ஒரு நிமிசம் கூட நான் இந்த வீட்டில இருக்க மாட்டேன்..’’

‘’அம்மா என்னம்மா இந்த சில்லரை விசயத்துக்கு கோயிச்சிட்டு ஊருக்கு போறேன்ற’’

‘’ஓஓ அப்பாவோட பைக் ஒனக்கு சில்லரை விசயம் ஆகிருச்சில்ல ச்சே நான் செத்தா கூட என் மூஞ்சில முழிச்சிராத’’

____________

செப்டம்பர் 28 - 2009

‘’வாங்க சார்.. உக்காருங்க..’’

‘’சார் பரவால்ல நான் நிக்கறேன்’’

‘’ஏன் சார் ஆபீஸ்லயே உக்காந்து உக்காந்து சீட்டு தேஞ்சு போச்சோ.. மூணு வாரமா ஒரு நாலே நாலு கஸ்டமர் பாத்திருக்கீங்க.. டார்கெட் இரண்டு பர்சென்ட்தான் , என்னையா நினைச்சுகிட்டு இருக்கீங்க மனசில’’

‘’சார் வண்டி பிராப்ளம், மெக்கானிக் எங்கப்போனா......’’

‘’ப்ளீஸ் ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் மெக்கானிக் ஸ்டோரி.. வேலை பாக்க இஷ்டமில்லாட்டி வேலைய விட்டுட்டு போக வேண்டியதுதானய்யா’’

‘’சார் சாரி சார்.. ‘’

‘’ஐ டோன்ட் வான்ட் ஏ பர்சன் ரியூனிங் மை டிக்னிட்டி இன் மை கம்பெனி ... வுட் யூ ப்ளீஸ் புட் யுவர் பேப்பர்ஸ் டுமாரோ..’’

‘’சார் இத்தனை நாளா நல்லாதான சார் வேலை பாத்துகிட்டு இருந்தேன் இப்போதான வண்டி இல்லாம..’’

‘’ஹெல் இங்க நான் மேனேஜரா நீ மேனேஜரா.. ஐ ஆம் கோயிங் டூ டெர்மினேட் யூ.. கெட் அவுட்..’’

________________

அக்டோபர் 1 - 2009


‘’ சார் சாரி சார்.. வியாழக்கிழமை வண்டி குடுத்துட்டு போனீங்களா.. உங்க நேரம் பாருங்க.. எனக்கு அம்மை போட்டிருச்சு சார்.. அதான் போன் கூட ஸ்விட் ஆப் பண்ணிட்டேன்.. பெரியம்மை வேற சார்.. ஆடி மாசம் வந்திருக்குனு.. வீட்ல அசைய வுடல..’’

‘’.......................’’

‘’ மூணு நாள்ல , இன்னைக்கு வியாழக்கிழமை அடுத்து வாரம் திங்கள் கிழமை பக்காவா ரெடி பண்ணி குடுத்துடறேன் சார்’’

‘’...........................’’

‘’இன்னா சார் எதுவுமே பேசமாட்டீறீங்க..’’

‘’பாஸ் நிச்சயம் மன்டே குடுத்துருவீங்களா?’’
_____________