Pages

19 September 2009

உன்னைப்போல் ஒருவன் - உட்டாலக்கடி தமிழன்
அநியாயமும் அக்கிரமும் எங்கெல்லாம் அதிகமாகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றி அதை அழிப்பேன். அதாவது சம்பவாமி யுகே யுகே! கிருஸ்ன பகவான் தெரியாம சொல்லிட்டு போயிட்டாரு ! எங்கயாச்சும் பிரச்சனை உண்டாச்சுனா அவரு வராரோ இல்லையோ சினிமா ஹீரோக்கள்லாம் கரெக்டா வந்து காப்பாத்துவாங்க! அதைதான் பல வருஷமா சூப்பர்மேன் தொடங்கி லேட்டஸ்ட் கந்தசாமிவரைக்கும் செஞ்சுகிட்டு இருக்காங்க. அதைதான் கமலும் இந்த படத்தில செய்யறாரு!

மூணு முஸ்லீம் திவிரவாதிகள் ஒரு இந்து தீவிரவாதி. மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதாச்சாரப்படி சீட்டுக்குலுக்கி போட்டுப்பார்த்து கிருஷ்ண பரமாத்மாவா மாறி துவம்சம் செய்யறாரு. அதுக்கு தீவிரவாதம்னு ஒரு காரணம். மோடி குஜராத்னு ஒரு சப்பைக்கட்டு. ஆனாலும் தீவிரவாதிங்க முஸ்லீம்தான்..! எங்கேயோ இடிக்குது.. அறிவுஜீவிங்க மெல்றதுக்கு கமலஹாசன் நல்ல நொருக்குத்தீனியா வச்சிருக்காரு.. அதை அவிங்க நொருக்குவாங்க. ?( ஐ மீன் கமலஹாசனின் இந்துத்துவா பார்வை அது இது லொட்டு லொசுக்கு நுண்ணரசியல் பிரச்சனைகள்.. நமக்கு அது அவசியமில்லை .. நாம் அறிவுஜீவியும் இல்லை )

படத்தோட கதை சப்பையான சம்பவாமி யுகே யுகேதான். ஆனா திரைக்கதை வித்தியாசம். "SAW" "PHONE BOOTH" பாணி திரைக்கதைதான் என்றாலும் தமிழுக்கு புதுசு. தமிழில் இப்போதைக்கு இது மாதிரி வித்தியாசமான திரைக்கதைகளுக்குத்தான் மவுசு என்பதை கமல் சரியாக புரிந்து வைத்திருக்கிறார்.

படம் முழுக்க கமல் ஒரு மொட்டைமாடியில் அமர்ந்திருக்கிறார். கரகர குரலில் போனில் பேசுகிறார். ( ஒரே ஆங்கில வாடை! ஹாலிவுட் மயக்கம்..) . மொட்டை மாடி ஓரமாய் நின்று கொண்டு ஊரைப்பார்க்கிறார். இவ்ளோதான் கமலின் பங்கு. ஆனால் மனுசன் நிஜமாவே ஒரு மேதை. வெறும் முகபாவனையிலும் குரலிலுமே நடித்து தள்ளுகிறார். நடக்கும் போதுதான் பைல்ஸ் வந்தது போல் இருக்கிறது மற்றபடி நடிப்பு அபாராம். அதிலும் அவரது உருவம் ஏதோ விஜய் மல்லையா வீட்டு பக்கத்துவீட்டுக்காரர் மாதிரி இருக்கு.. அவரப்போய் எப்படிங்க சாதாரண ஆளுனு நினைக்கறது.

மோகன்லால். அச்சு அசல் எர்ணாகுளத்திலிருந்து டிரான்ஸ்பர் ஆன போலீஸ்காரரை கண்முன் நிறுத்துகிறார். இயல்பான நடிப்பு. படத்தின் பல இடங்களில் கமலை மிஞ்சுகிறார்.

படத்தில் மொத்தமா இரண்டே பாத்திரங்கள்தான் மனதில் நிற்கின்றன. லட்சுமி , சந்தான பாரதி, சிவாஜி என மிகச்சிலரே தெரிந்த முகங்கள். மற்றவரெல்லாம் புதுசு. புதுமுகங்களை கொஞ்சம் நேட்டிவிட்டியோடு போட்டிருக்கலாம். பல இடங்களில் டப்பிங் படம் பார்க்கும் உணர்வு.. வடநாட்டு முகங்கள் தமிழ்பேசுவது கூட ஏதோ அந்நியமாக தோன்றுகிறது.

இசை ஸ்ருதிஹாசன்! பாஸ்மார்க் போடலாம். ஏ.ஆர்.ஆர் ஐப்போல முதல் படத்திலேயே சென்டம் எல்லாம் கிடையாது. ஏதோ அவரால் முடிந்தது முழுமையாய் செய்திருக்கிறார்.

வசனம் இரா.முருகன். இந்துத்துவா ஆட்களுடன் 'மோதி'ப்பார்த்திருக்கிறார்.அதன் பின்விளைவு பின்னால் தெரியும்.

கேமராமேனுக்கும் கலை இயக்குனருக்கும் எடிட்டிங் செய்தவருக்கும் கட்டாயம் ஒரு ஆளுயர மாலை போட வேண்டும். படம் முழுக்க ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது அத்தனையும்.

படம் குறித்து சொல்ல அதிகமில்லை. கமலுக்காகவும் திரைக்கதை அமைப்பிற்க்காகவும் அது தரும் பரபரப்பு அனுபவத்திற்காகவும் ஒரு முறை கட்டாயம் பார்க்கலாம். ஹிந்தியில் பார்த்திருந்தால் கட்டாம் இந்த படம் உங்களுக்கு பிடிக்காது.

மற்றபடி இந்த திரைப்படம் சமூகத்தில் ஏதாவது மாற்றத்தை உண்டாக்குமா என்றால் கேள்விக்குறிதான். திரைப்படம் பார்த்து சமூக விளிப்புணர்வெல்லாம் வராது என்பது இங்கிருக்கும் சராசரி காமன் மேனுக்கு கட்டாயம் தெரியும். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் மூலம் நல்ல வருவாய் கிடைத்திருக்கும் தயாரிப்பாளர் கமலுக்கு.

படம் முடிந்து வெளியே வரும்போது விடையில்லாத ஒரே ஒரு கேள்விதான் எஞ்சி நிற்கிறது.

''இன்னும் எத்தனை படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருக்க போகிறார்கள்?''

மற்றபடி - உன்னை போல் ஒருவன் - ஒரு முறை பார்க்கலாம்