Pages

11 November 2009

ஒரு பக்கக் கதை எழுதுவது எப்படி?அதைத்தான் மூன்று நாளாக மூச்சுவிடாமல் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். யாரிடமாவது கேட்டு வாங்க இது பல்பொடியோ பல்பமோ பக்கடாவோ? இல்லை!

பக்காவான ஒருபக்கக்கதை. அவர்கள் உங்களிடம் அதை கேட்டிருக்க கூடாது. இதோ அப்படி இப்படி என்று வந்துவிட்டது அவர்களிடமிருந்தே அந்த மின்னஞ்சல். ஆமாம் ‘விகடனிலிருந்து!’.

எத்தனை வருட கனவு இது. எப்போதும் போன்றதொரு மொக்கையான முழுநாளில் நிலவொளியின் வெப்பம்தாளாமல் தனிமையாய் கட்டிலில் படுத்திருந்த கடுமையான வேளைதனில் அவரிடமிருந்து(ஆசிரியர் @விகடன் டாட் காம்) உங்களுடைய டூபாக்கூர் அட் ஜிமெயில் டாட்காமிற்கு வந்துவிட்டது டூபீர் என்று ஒரு மின்னஞ்சல். லைட்டா மூச்சு விட்டுக்கோங்க!.

அதுவும் இந்த இதழில் போட 'மூன்னனூரு வார்த்தைகளுக்கு மிகாமல் சுறுக்கமாய் சுறுக்கென கும்முனு ஒரு கதை வேண்டும் அர்ஜன்ட்' என கேட்டதிலிருந்து தலையில் விகடன் கொம்பு முளைத்து தூக்கமின்றி வேலையில் விருப்பமின்றி கணப்பொழுதும் அதே சிந்தனையை கற்பனைக்குதிரையில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் கிடைக்கவில்லை கதைக்கான கரு. நாயக்கண்டா கல்லக்காணோம் கல்லக்கண்டா நாயக்காணோம்ங்கற மாதிரி கதைகிடைச்சா டுவிஸ்ட் இல்ல டுவிஸ்டிருந்தா கதையில்ல. ரெண்டும் இருந்தா மொக்கை கதையா இருக்கு. என்ன செய்வீங்க பாவம் உங்களுக்கு இருக்கறது ஒரு குட்டியூண்டு மூளை. அதை எவ்வளவுதான் கசக்கினாலும் வரதுதானே வரும்!.

கடுப்பாக இருக்கிறது. ஒரு காலை வேளையில்.. அலுவலகம் சென்று கொண்டிருக்கிறீர்கள். போகும் வழியெங்கும் கதைகள் பலதும் வண்டியிலும் பஸ்ஸிலும் சைக்கிளிலும் நடமாடிக்கொண்டிருக்கின்றன. ஆனால் எதுவும் அத்தனை சுவாரஸ்யமில்லை. வீட்டிலும் பல் விளக்குவதில் தொடங்கி ஆய் போய் ,காபி வித் ஆயாவுடனும் பேசியாயிற்று.. கதை?. ம்ஹூம். இப்படி கடுமையான கடுப்பில் பைக்கில் போய்க்கொண்டிருக்கும் போதுதான் உங்களை நோக்கி கை நீட்டினாள் அந்த இளம்பெண். கபளீகர கண்கள். ஸ்ரேயா உடல். டிங்!

லிஃப்ட்! அதுவும் நம்மிடமா! கதையாவது வெங்கயாமாவது என நினைத்துக்கொள்கிறீர்கள். அந்த அழகிக்கு அருகில் வண்டியை நிப்பாட்டிவிட்டு நல்ல பிள்ளைபோல திரும்பி பார்க்காமல் ஸ்டிரிப்பாக அமர்ந்து கொண்டு ‘ மேடம் உங்களுக்கு எங்க போகணும் நான் அடையார் போறேன் , ஆன் தி வே ல டிராப் பண்ணனுமா இல்ல நடுவுலதானா? ஏன்னா பொண்ணுங்களோட வண்டில போறத என் பேமிலில யாராவது பார்த்தா தப்பா நினைப்பாங்க! நீங்க வேற ரொம்ப அழகா இருக்கீங்க , நான் ஒரு இளைஞன்! என்னதான் பனமரத்தடிலு நின்னு பால குடிச்சாலும் பாக்கறவங்க கண்ணுக்கு கள்ளுனுதான தெரியும், என்னடா இவன் இப்படி எதுகைமோனையா பேசறானேனு தப்பா நினைக்காதீங்க நான் ஒரு எழுத்தாளர் , நெட்லலாம் நிறைய எழுதிருக்கேன். வெரி ஃபேமஸ்! படிச்சதில்ல டூபாக்கூர் டாட் பிளாக் ஸ்பாட் டாட் காம். என்னங்க பேசிட்டே இருக்கேன் ம்ம்னு கூட சொல்லாம பக்கத்திலயே நின்னுட்டு இருக்கீங்க வண்டில ஏறுங்க‘ என பேசிக்கொண்டே திரும்பி பார்க்க இரண்டு மீட்டர் இடைவெளியில் அந்தப்பெண் ஷேர் ஆட்டோ ஓன்றில் ஏறிக்கொண்டிருந்தாள்.

‘டிங்’ மீண்டும் மண்டைக்குள் மணி அடிக்கிறது. அட! ஃபிகர் போனால் என்ன கதை கிடைச்சிருச்சே! அப்புறமென்ன விர்ர்ர்ர்ரூம்..

***************

பி.கு – சரியாக 300 வார்த்தைகளைக்கொண்டு எப்போதோ எழுதியது. எண்ணி பாருங்கள்! 300தான் இருக்கு!