Pages

23 April 2010

ஆயிரம் மரங்களின் நகரம்







"கடைசி மரமும் வெட்டுண்டு,
கடைசி நதியும் வரண்டு ,
கடைசி மீனும் மாண்டுவிடும்
அப்போதுதான்
பணத்தைச் சாப்பிட முடியாது என்று நமக்கு உறைக்கும் "


-ஒரு செவ்விந்தியப்பாடல்




சார் உங்களுக்கு எந்த ஊரு என யார் கேட்டாலும் கோவை என்று பெருமையாக சொல்வேன். அட கோயம்புத்தூரா! சூப்பர் கிளைமேட்டா இருக்குமே சார், நீங்கள்ல்லாம் குடுத்து வச்சவங்க, நானும் வந்திருக்கேன் அப்படியே குளுகுளுனு இருக்கும் என்கிற பதிலையும் இதுவரை ஆயிரக்கணக்கான முறையாவது கேட்டிருப்பேன். உண்மையிலேயே கோவையில் பிறக்க நான் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். எத்தனை வெயிலடித்தாலும் ஏசி அறைக்குள் இருப்பது போன்ற உணர்வை அது ஒரு நாளும் வழங்காமல் இருந்ததில்லை. மொட்டை வெயிலில் கிரிக்கெட் ஆடிய நாட்களிலெல்லாம் தண்ணீர் கூட தேவைப்படாது.. எவ்வளவு நேரம் விளையாடினாலும். அதிகம் வியர்க்காது..


அப்படிப்பட்ட கோவையில் இந்த முறை கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. வீட்டிற்குள் உட்கார முடியவில்லை , வீட்டை விட்டு வெளியே வந்தால் மொட்டை வெயில் மூஞ்சை கருக்குகிறது. சென்னையை விட மோசமான வெயில். குளோபல் வார்மிங்கும் இன்னபிற வானிலை மாற்ற காரண சப்பைக்கட்டுகள் ஒரு புறம் இருந்தாலும் , கோவையை குளிர்வித்த மரங்கள் தற்போது அதிக அளவில் மிஸ்ஸிங்! அதை கோவையை பல ஆண்டுகள் வலம் வந்த யாரும் உடனடியாக ஒப்புக்கொள்வார்கள். கோவைக்காரர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இந்த ஆண்டு வெப்பத்தின் அளவு. இது அவர்களுக்கு மிகமிக புதுசு. சென்னை வாசிகளுக்கு மட்டுமே பழக்கப்பட்ட மண்டைக்குள் துளைபோடும் வெயில் அது.


கோவையின் முக்கிய சாலையான அவினாசி ரோட்டில் பல கிலோ மீட்டர்கள் நடந்தே கடந்திருக்கிறேன். சென்ற முறை ஊருக்கு சென்ற போது அரை கிலோமீட்டர் கூட பைக்கில் போக முடியவில்லை. வெயில் வாட்டுகிறது. அதற்கு 233 காரணங்கள் உண்டு. கடந்த வருடம் அவினாசி ரோட்டினை அகலமாக்கும் பணிகளில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 233. அத்தனையும் 60 வயதை கடந்தவை. அவினாசி ரோட்டில் எத்தனை தூரம் சென்றாலும் உணராத வெப்பத்தை அரை கிலோமீட்டரில் இப்போதெல்லாம் உணர முடிகிறது.


இதோ வந்துவிட்டது.. யார் பெருமைக்கோ யார் திருப்திக்கோ யாருடைய மகிழ்ச்சிக்கோ கோவைக்கும் அதன் மக்களுக்கும் துளியும் மகிழ்ச்சியளிக்காத தமிழ் செம்மொழி மாநாடு. அதற்காக கோவையில் நடைபெறும் கூத்துகள் ஆயிரமாயிரம். வளர்ச்சிப்பணிகள் என்கிற பெயரில் அவசரகதியில் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் மண்ணுக்கு நாளொரு பில்டிங் பொழுதொரு ஃப்ளோர் என புதைந்து கொண்டிருக்கிறது. இது மாதிரி சில்வண்டித்தனமான வளர்ச்சிப்பணிகளின் அதிமுக்கியமான ஒன்று மரம் வெட்டும் வைபங்கள். இது வரை இந்த மாநாட்டுக்காக வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? அதிகம் யோசிக்க வேண்டாம்.. ஆயிரம்தான். திருச்சி ரோடு ஹைவேஸுடன் இணையும் பகுதி வரையுமான 6.2 கி.மீ தூர சாலையை அகலமாக்க வெட்டப்பட்ட மரங்கள் 220. அவை முழுமையாக வளர்ந்த 50 வயதுக்கும் மேற்பட்ட மரங்கள்.


அடுத்து ஊட்டிக்கு செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் வெட்டப்பட்ட மரங்கள் மிக மிக அதிக எண்ணிக்கையில் வெட்டப்பட்டுள்ளன. எண்ணிக்கை 636. விமான நிலையத்திற்கு வெளியே 20 மரங்கள். என அடுத்த ஜூனுக்குள் கோவை முழுமையாக மொட்டையடிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டு தங்கத்தில் இரண்டு கடுக்கன்களும் குத்தப்படும் என்றே நம்புகிறோம்.


இது குறித்து கோவை கலெக்டர் பி.உமாநாத் என்ன சொல்கிறார் ‘’சாலை அலைன்மென்ட்டுக்கு ஒத்து வந்தா ஒருபக்கத்துல இருக்கற மரத்தை மட்டும் வெட்டுங்கனு சொல்லிருக்கோம்.. இன்னொரு பக்கத்து மரத்தை விட்டுடவும் சொல்லிருக்கோம்’’ . அவரைப்பற்றியோ அவரது அறிக்கைகப்பற்றியோ அதிகமாக பேசமுடியாது.
அரசு அதிகாரி ஒருவரோ ‘’நாங்க வெட்டும் இடத்திலெல்லாம் புதிய மரங்கள் நட உத்தரவிட்டிருக்கிறோம், சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருக்குங்க நகர்ப்புற வளர்ச்சிக்காக மரங்களை வெட்டுறது தப்பில்லைனு’’ என்கிறார். ஆனால் புதிதாக இதுவரை ஒரு மரம் கூடநடப்பட வில்லை என்பதே நிதர்சமான உண்மை. வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் ஒன்றும் அவசர கதியில் வளர்க்கப்படும் வெளிநாட்டு மரங்கள் (பெயர்கள் தெரியவில்லை , ஆனால் வைத்து ஒன்றிரண்டு ஆண்டுகளில் பெரிதாகிவிடக்கூடியவை) எந்த வகையில் ஈடுசெய்யமுடியும் என்பதும் தெரியவில்லை..


மக்கள் தொகைப்பெருக்கத்தையும் , நகரத்தின் வளர்ச்சியாலும்தான் இப்படியெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நீங்க நினைத்தால் , நிச்சயமாக இல்லை. செம்மொழி மாநாட்டுக்காகத்தான் இந்த மரங்கள் வெட்டப்படுகின்றன. அதைதான் அரசும் அரசு நிறுவனங்களும் சொல்கின்றன. செம்மொழியாம் தமிழுக்காக மட்டுமே!


ஊருக்கு சென்றிருந்த போது நண்பன் வீட்டருகிலிருக்கும் பெரிய வளர்ந்த ஆலமரத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள். அதில் எப்போதோ நண்பர்களோடு விளையாடியதெல்லாம் நினைவு வந்தது. ஒரு சில இளைஞர்கள் அந்த மரத்தை வெட்டுவதை எதிர்த்து மரத்தின் மீதேறி நின்று (அவ்வளவு பெரிய மரம்! ) தர்ணா போராட்டம் செய்து கொண்டிருந்தனர். காவல்துறையின் அனுமதியோடு அந்த ஆலமரம் முழுமையாக வெட்டப்பட்டு அகற்றப்பட்டது. பாவம் தனியார் கான்டிராக்டர்கள் அந்த இளைஞர்களோடு எவ்வளவு நேரம்தான் மல்லுக்கட்டுவார்கள்.


இனி கோவை குளிர்ந்திருக்குமாவென்று தெரியவில்லை. இனி கோவையை குளிர்ச்சி நகரம் என மக்களால் அழைக்கப்படுமா தெரியவில்லை. மக்கள் வயிறெரிந்து கிடக்கிறார்கள். செம்மொழி மாநாடு சில நாட்களில் முடிந்து விடும். அந்த சில நாள் கூத்துகளுக்காக மழிக்கப்பட்ட கோவை பல வருடங்கள் வெயிலில் வாடும்.