Pages

15 July 2010

கலைஞர் கோப்பை கிரிக்கெட் போட்டிஆகா அடித்தாடும் வேங்கைகளே உங்கள் ஆட்டத்தைக்காணும் போது வெல்லப்போவது அண்ணாநகர் தொகுதி திமுகவா? சைதை தொகுதி திமுகவா? என்கிற ஆர்வம் மேலோங்குகிறது. அதோ வந்துவிட்டார் அண்ணாநகர் நந்த குமார் , விஜய்சிசி அணியின் நம்பிக்கை நட்சத்திரம், இவர் களத்திலிருந்தால் அந்த அணிக்கு அசுர பலம்! இல்லாவிட்டால் எதிரணிக்கு நலம். ஆறும் நான்குகளும் இவருக்கு அல்வாவைப்போல! அதிரடி ஆட்டத்தில் அடங்காத காளை! அதிரடி வீராதி வீரர்களே சூராதி சூரர்களே நீங்கள் சிக்ஸரும் ஃபோரும் அடித்தால்தான், ஆங்கே குத்தாட்ட நடனம்! இல்லையென்றால் கிடையாது நடனமும் இசையும்.. திமுகவின் உடன்பிறப்புகளே தமிழ் வாழ அடியுங்கள் ஆறு.. தமிழ்வளர அடியுங்கள் நான்கு! நாளைய சரித்திரம் நம்மோடு!
மேலே குறிப்பிட்டிருக்கும் வசனங்கள் , சென்னை சைதை பஸ் ஸ்டான்டுக்கு பின்புறமுள்ள சாக்கடையை தாண்டி சுவருக்கு பின்னால் இருக்கும் மைதானத்தில் நடைபெற்ற, கலைஞர் கோப்பை கிரிக்கெட் போட்டியின் பைனலில் கேட்ட கமென்ட்ரி.(மூச்சு விட்டுக்கொள்ளுங்கள்)

சென்னையை சுற்றியுள்ள 25000 இளைஞர்களை திரட்டி வருடத்திற்கு இரண்டு முறை (கலைஞர் பர்த்டே ஒன்டைம், தளபதி பர்த்டே ஒன்டைம்) நடைபெறும் போட்டிகள் இது. கிட்டத்தட்ட 2000 அணிகள் பங்குபெறுகின்றன. முதல் பரிசாக ஒரு லட்சம், இரண்டாம் பரிசு 50000! டென்னிஸ் பந்தில் நடைபெறும் போட்டிகளுக்கு பிளக்ஸ் பேனர்கள் என்னே! சியர் லீடர்ஸ் என்னே! (ஊர்த்திருவிழாவில் குத்தாட்டம் போடும் குஜிலிகள்) , ஆர்கெஸ்ட்ரா ட்ரூப்புகள் என்னே! மின்னொளியில் கண்ணைப்பறிக்கும் விளக்குகள் என்னே என்னே! இரண்டு பக்கமும் ஆடும் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பிரமாண்ட(?) திரைகள் என்னே! காசை வாரி இறைத்து கண்ணுக்கு விருந்தளிக்கும் கிரிக்கெட் போட்டிகளை காண கண்கோடி வேண்டும்! பார்க்க இலவசம்தான்!

ஐபிஎல் போட்டிகளுக்கு இணையாக(?) ஊழல்களின்றி பெட்டிங்குகளின்றி நடைபெறுகிற இந்த போட்டியில் கலந்து கொள்ளுகிற வீரர்களுக்கு கலைஞர் படம் போட்ட டிஷர்ட் முற்றிலும் இலவசம். தளபதி கோப்பையாக இருந்தால் தளபதி படம் போட்ட டிஷர்ட் ஃப்ரீ. இந்த டிஷர்ட்டுக்காகவே கலந்து கொள்ளுகிற உடன்பிறப்பு அணிகளும் உண்டு. கலந்து கொள்ள காசு கொடுக்க வேண்டாம். அரையிறுதி வரை முன்னேறும் அணி வீரர்களுக்கு முழு சீருடை , ஷூ எல்லாமே ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ. திருவான்மியூர் தொடங்கி தாம்பரம் வரைக்கும், அம்பத்தூர் தொடங்கி அந்தப்பக்கம் அடையார் வரைக்கும் இளசுகளும் பெருசுகளும் இந்த போட்டியில் பங்கு பெறுகின்றனர். மைதானத்தை சுற்றிலும் கலைஞரும் ஸ்டாலினும் அழகிரியும் இன்னபிறரும் பல்காட்டி சிரிக்கின்றனர்..

கடைசியாக மார்ச் மாதத்தில் ஸ்டாலின் பிறந்தநாளுக்காக நடைபெற்ற தளபதி கோப்பைப்போட்டிகளில் விஜய்சிசி என்றொரு அணி ஒரு லட்சம் வென்றதாம். அதுவும் கடைசி மூன்று பந்துகளில் 14 ரன்கள் அடித்து வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது! இந்த முறை கலைஞரின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் அண்ணாநகர் தொகுதி திமுக அணி வென்றது.

இந்த போட்டிகள் கொஞ்ச காலமாகவே சென்னையில் புகழ்பெற்று வருகிறது. இதை பின்புலமாக வைத்தே சென்னை 60028படம் எடுக்கப்பட்டதாக எண்ணுகிறேன். கல்லி கிரிக்கெட் எனப்படும் இந்த வகை கிரிக்கெட் உண்மையில் கிரிக்கெட்டை அழித்தாலும், வெறும் எட்டே ஒவர்கள் நடைபெறும் இந்த போட்டிகளில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லை! அதிலும் சுத்தமான தமிழ் கமென்ட்ரி , பீர் வந்து பாயுது காதினிலே!

பீரென்றதும்தான் நினைவுக்கு வருகிறது , மைதானத்தின் இரு புறமும் கேலரி, சுற்றிலும் சின்னசின்ன பஜ்ஜி போண்டா கடைகள் , பீடி சிகரட்டு, சுண்டல் என ஒரே மஜாதான். கையில் பீரோடு போனால் இருட்டுக்குள் அமர்ந்து கொண்டு பீரடித்தபடியே சுண்டலோ பஜ்ஜியோ தின்றபடி, ஒரு தம்மை பற்றவைத்துக்கொண்டு ஜாலியாக மேட்ச் பார்க்கிற வசதியை செய்து கொடுத்திருக்கிறார்கள். இது வெஸ்ண் இன்டீஸ் , நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே சாத்தியம். நிறைய கபாலிகளின் குவாட்டர் பார்ட்டிகள் வாட்டர் பாக்கட்டுகளுடன் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு ‘’இன்னா மாமா , த்தா செம லென்த் பாலு! அத வுட்டுட்டான் பார்ரா, அட்ச்சா சும்மா அப்படியே மார்க்கட்ட்டான்ட போவேண்டாம்!’’ மாதிரியான டயலாக்குகளை கேட்டு மகிழலாம்.

உங்களுக்கு டாஸ்மாக்கில் சரக்கடிக்கவே பிடிக்குமென்றால் இந்த இடம் அதற்கேற்ற சூழலை நிச்சயமாக வழங்கும் என்பதில் ஐயமில்லை. மைதானத்தைச்சுற்றி எங்கும் சிறுநீர் கழிக்கலாம். மைதனாத்தின் மரத்தடியின் இருண்ட பகுதியில் சிறுவர்கள் சிலர் சிகரட் பிடித்தபடி பீரடித்துக்கொண்டிருந்தனர். சைடிஷாக பிரட்பஜ்ஜி! என்ன காம்பினேஷனோ?ச்சே!

மார்க்கெட்டிங்கில் பல வகை உண்டு. இது மாதிரி யாரும் கலந்து கொள்ளும் ஒபன் சாலஞ்ச் போட்டிகள் நடத்தி மார்க்கெட்டிங் செய்வது ஒரு யுக்தி. அதிக எண்ணிக்கையிலான மக்களை கவர்ந்திழுக்க முடியும். திமுகவின் இந்த மார்க்கெட்டிங் திமுகவையும் கலைஞரையும் ஸ்டாலினையும் மார்க்கெட் செய்ய மிக அருமையாக உதவும் என்றே நினைக்கிறேன். கிட்டத்தட்ட 25000 பேரிடம் திமுகவினை கொண்டு செல்ல முடியும். அதுவும் நாளைய தமிழகத்தின் தூண்களான சென்னையின் இளைஞர் பட்டாளத்திடம். உடன்பிறப்பு ஒருவர் கொடுத்த தகவலின் படி போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள் ஆட்டோமேட்டிக்காக திமுகவில் இணைந்து கொள்கின்றனர். இது அக்கட்சிக்கு மேலும் வலுசேர்க்கும். தவிர முதல் பத்தியில் கண்ட கமென்ட்ரியில் ஆடுவது விஜய்சிசியோ ராயல்ரேஞ்சர்ஸ் அணியாகவே இருந்தாலும், அழைப்பது என்னவோ சைதை தொகுதி 69வது வட்ட திமுக அணி, வடபழனி டேஷ் டேஷ் வட்ட தொகுதி திமுக அணி என்பதாகவும் இருப்பது நேனோஅரசியல். இன்னும் வரும் ஆண்டுகளிலும் இது தொடருமாம்!

இதுபோக கலந்து கொள்பவர்களுக்கு அந்தந்த ஏரியா திமுக புள்ளிகளின் செல்போன் எண் வழங்கப்பட்டு, பிரச்சனைனா போன் போடு,பார்த்துக்கலாம் என்பதுமாதிரியான வசதிகளும் செய்துகொடுக்கப்படுவதாக தகவல். இது அவர்களை திராவிட இயக்க வரலாற்றில் தம்மை இணைத்துக்கொள்ள வசதி செய்து கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் திமுகவிற்குள்ளாகவே நடைபெறும் போட்டிகள் என்பதால் வீழ்வது யாராக இருந்தாலும் வெல்வது திமுக வாகத்தான் இருக்கிறது.

போட்டிகளை நடத்துவது தென்சென்னை மாவட்ட திமுக என்று பல போஸ்டர்களைக் கண்டேன். இறுதிப்போட்டியைக்காண தளபதி ஸ்டாலின் வந்திருந்தார். துணைமுதல்வர் மூன்று மணிநேரம் அமர்ந்து போட்டிகளை ரசித்தார். வீரர்களை மட்டுமல்லாது இடை இடையே சைடில் ஆடிக்கொண்டிருந்த சியர் லீடர்ஸையும் உற்சாகமூட்டத் தவறவில்லை. அவர்களும் இவர் பார்வை பட்டதுமே துள்ளி குதித்து குதித்து ஆடியது ஆஹா! சியர் லீடர்களை சுற்றி பெருங்கூட்டம் , நடுவில் ஒரு பெண் சின்ன கவுனும் டைட் டிஷர்ட்டுமாய் ஆடிக்கொண்டிருந்தது தெரிந்தது. முண்டியடித்து முன்னால் போய் என்னதான் என்று பார்க்க முயன்றாலும் முரட்டு உடன்பிறப்புகள் வழியே விடவில்லை. ச்சே வட போச்சே என்று நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தேன்.பின்குறிப்பு -

இது எந்த கட்சியும் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரை அல்ல! இந்த நிகழ்வு குறித்து இதுவரை எழுதப்பட்டதிலேயே அரசியல் இல்லாத நடுநிலையான கட்டுரை இதுமட்டுமே என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.