Pages

10 September 2010

கொம்பு வைத்த பாட்டியும் ஒரு புனைவும்சிறுவர்மலர் காலத்திலிருந்தே ஒரு நல்ல பழக்கம் எனக்கிருந்தது. வாரந்தோறும் வாசகர் கடிதம் எழுதிப்போடுவது. அதற்காக நாலணா கார்டு வாங்கி , முதலில் பென்சிலால் எழுதிப்பார்ப்பது. பின் ரப்பர் வைத்து அழித்து திருத்தி கடைசியாக ஹீரோ பேனா கடன் வாங்கி அழுங்காம குலுங்காம அத்திப்பூ வாடாம எழுதி அனுப்புவேன்.


அப்போதெல்லாம் நல்ல கையெழுத்து கொண்ட வாசகர் கடிதத்திற்கு 100ரூ பரிசு + கடிதமும் அப்படியே கார்டோடு பிரசுரமாகும். எப்படியும் நூறிலுருந்து நூற்றைம்பதாவது அனுப்பியிருப்பேன். ஒன்று கூட பிரசுரமானதில்லை.


கொஞ்சம் வளர்ந்தபின், அதாவது ஒன்பதாம் வகுப்பு காலத்தில் வாசகர் கடிதத்தில் இருந்து முன்னேறி ஒன்லி கதைகள் மட்டுமே அனுப்பத்தொடங்கினேன்.. எல்லா கதைகளுமே இப்படித்தான் தொடங்கும் 'செல்வபுரம் என்று ஒரு ஊர் இருந்த்து, அதை செல்வேந்திரன் என்கிற மன்னன் ஆண்டு வந்தான் , அவனுக்கு நான்கு மகன்கள்' , ''மாயவரம் என்று ஒரு ஊர் இருந்தது அங்கே மாதவராஜ் என்று விவசாயி இருந்தார், அவர் ஒரு சோம்பேறி''. கிட்டத்தட்ட அது ஒரு இருபது அல்லது இருபத்தி மூன்று கதைகள் இருக்கும். அதில் ஒன்று பிரசுரமானது.


பிரசுரமான நாள் இப்போதும் நினைவிலிருக்கிறது. தினமும் பத்திரிகை வாங்கிப்படிக்கும் அளவுக்கு எங்களுடைய வீட்டில் யாருக்கும் வசதி கிடையாது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் எனக்கும் கிடையாது. பக்கத்து வீட்டு போட்டோகிராபர் வீட்டில் வாங்கும் தினமலர்தான். அதையும் அவர் இரண்டு நாள் தள்ளிதான் எனக்குக் கொடுப்பார். என்ன நினைத்தாரோ வெள்ளியன்றே கொடுத்தார். புரட்டினேன்.. மங்கி பங்கி பிங்கி என ஏதேதோவைத் தாண்டி என்னுடைய செல்வபுரமும் அரசனும் செல்வேந்திரனும் கதையும் இருந்தது. ஆனால் கதையை வேறுமாதிரி எழுதியிருந்தனர். ''அண்ணா இந்த புக்குல என் கதை வந்திருக்குங்கண்ணா'' என்று போட்டோகார அண்ணனிடம் அப்போதே காட்டினேன். அவரோ சிரித்துவிட்டு 'சும்மா வுடாத! பேரையே காணோம்' என்றார். ஆனாலும் சிரித்தபடி தட்டிக்கொடுத்தார்.


எப்படியும் அந்த கதையை பள்ளி ஆசிரியர் தொடங்கி பக்கத்துவீடு எதிர்த்த வீடு என எங்கள் சின்ன ஊரின் நானூறு வீடுகளில் 399ல் காட்டியிருப்பேன். 400வது வீடு என்னுது. அங்கே யாருக்கும் படிக்க வராது. அம்மாவிடம் காட்டினேன். கதையை தடவிப்பார்த்துவிட்டு நல்லா வருவடா என்று கூறிவிட்டு பெருமிதத்தோடு பக்கத்துவீட்டு காரர்களிடமெல்லாம் இதைப்பற்றி பேசியது இப்போதும் நினைவிருக்கிறது. (இப்போது அம்மாவே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டார் என்பது பின்கதை சுறுக்கம்)


அதற்குபின் வீரியமாய் நிறைய கதைகளை எழுதிக்குவித்து அனுப்பிக்கொண்டேயிருப்பேன்.. நான் வீரியமாய் எழுதினாலும் கதையின் நிலைதான் பரிதாபம். ஒன்றும் வெளியாகவில்லை. அதற்குள் பத்தாம்வகுப்பு பரீட்சை மார்க் அது இது லொட்டு லொசுக்கு இத்யாதிகளால்... சிறுவர் மலரும் பூந்தளிரும் அம்புலிமாமாவும் ராணிமுத்து காமிஸ்களும் குதிரை வீரன்களும் என்னை விட்டு பிரிந்து போனது தனிக்கதை.


சிறுவர் மலரோடு நின்று போன என்னுடைய வாசிப்பனுபவம். வாரமலரின் நடுப்பக்க சினிமா துணுக்குகளோடு மீண்டும் தொடங்கியது. இம்முறை வாசகர் கடிதம் , மாறி இ.உ.பக்கம் பகுதிக்கு பார்ப்பதையெல்லாம் எழுதி அனுப்பத்தொடங்கினேன்.இது இப்படித்தொடங்கும் ''நான் சாலையில் சென்று கொண்டிருந்தேன், எதிரில் பலரும் சுவற்றில் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தனர்'' என்பதாகவோ , ''எனக்குத்தெரிந்த உறவினர் வீட்டில் ஒரு நிகழ்ச்சி. அங்கே அனைவரும்.. ப்ளா ப்ளா' வாக இருக்கும். அனுப்பி அனுப்பி ம்ஹூம் ஆணியை பிடுங்க முடியவில்லை. அதற்குபின் குமுதத்திற்கு ஒரு பக்க கதை எழுதி அனுப்பி.. அது திரும்பி வந்து...


அதற்கு பிறகு பிளாக் எழுதி , ஏதேதோ எழுதி , இதோ சிறுவர் மலர் மகிழ்ச்சியை, அதே கொண்டாட்டத்தை என் பிரியத்திற்குரிய விகடனில் என்னுடைய முதல் சிறுகதை வெளியானபோதும் அடைந்தேன்.


ஆனந்த விகடனின் கொம்பு வைத்த தாத்தாவை பல காலம் பாட்டி என்றே நினைத்திருக்கிறேன். அதன் முக சாயலும் , சைடாக போர்த்தியிருக்கும் சால்வையும் எனக்கு , இந்திராகாந்தியையே நினைவூட்டும். இ.காந்திக்கு ஏன் கொம்பு வைத்திருக்கிறார்கள் என்று ஒருமுறை மாமாவிடம் கேட்டிருக்கிறேன். சிரித்தபடி அது தாத்தாடா கண்ணா! என்பார். சும்மா பீலா வுடாதீங்க இது பாட்டிதான் என்று முழுமையாக நம்பியிருக்கிறேன். கொஞ்சம் விபரம் தெரிந்து கொண்ட பின்தான் அது பாட்டி அல்ல தாத்தா என்று நம்ப ஆரம்பித்திருக்கிறேன்.


கெட்ட வார்த்தை என்கிற நான் எழுதிய சிறுகதை ஒன்று சென்ற வார விகடனில் பிரசுரமாகி இருந்தது. தமிழகம் முழுக்க வியாழன்றே புத்தகம் கடைகளில் கிடைத்தாலும், சென்னையில் வெள்ளிதான்! அதே வெள்ளி! அதே சோகம்!


வியாழன்று அதிகாலையிலேயே போனில் அழைத்தார் நண்பர். உன் கதை விகடனில்! கையும் ஓடலை காலும் ஓடலை.. என்ன பண்றதுண்ணே தெரியாம , பல் விளக்கி, குளித்து , உடைமாற்றி எப்போதும் போல பைக் ஸ்டார்ட் செய்து ஆபீஸ் வந்தேன். எப்போதும் போல வேலை பார்த்தேன்.

எழுத்தாளர் ச.ந.கண்ணன் புதன்கிழமை இரவே கோவையில் வாங்கி இருக்கிறார். ஆபீஸ் வாங்க தரேன் என்றார். மதிய உணவு இடைவேளையில் அலுவலகம் சென்று புத்தகத்தை கைகளில் வாங்கி தடவி, முகர்ந்து.... அடடா! நம் படைப்பை அச்சில் பார்ப்பதிலும் ஒரு சுகமிருக்கத்தான் செய்கிறது! அதுவும் என் ஆதர்ஷன ஆனந்தவிகடனில்...


கதையை படித்துவிட்டு பல நண்பர்கள் போனிலும் , குறுஞ்செய்தியிலும் அழைத்து ஊக்கமூட்டினர். மின்னஞ்சலில் பல கடிதங்கள் வந்திருந்தன. ஊக்கமூட்டிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நிறைய நண்பர்கள் கதையை தாறுமாறாக விளாசி பல நெகட்டிவ் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர் அவர்களுக்கு ஸ்பெசல் நன்றி. கதை குறித்து திட்டி வந்த விமர்சனங்கள் நான் இன்னும் நிறைய வாசிக்க வேண்டும், நிறைய எழுதிப்பார்க்க வேண்டும் என்பதை உணர்த்தியது.


இதோ இப்போதுதான் அஆஇஈயை கற்றுக்கொண்டுவிட்டதாக உணர்கிறேன்.. போக வேண்டிய தூரம் பல லட்சம் மெகா மீட்டர்கள் இருக்கிறது.