Pages

30 September 2010

ஞானத்தைத் தேடி

தோழரும் நானும் குடிப்பழக்கமோ புகைப்பழக்கமோ இன்னபிற பழக்கங்களோ இல்லாத டி டோட்லர்கள். உத்தமக் குடிமகன்களாய் வாழநினைக்கும் ஈடு இணையில்லா தேசபக்தர்கள். ஸ்ரீராமச்சந்திரமூர்த்திக்குப் பின் நாங்கள்தான் என்று சொன்னால் அது மிகையல்ல. நான்கூட அசைவமாவது உண்பவன், ஆனால் தோழரோ எதையும் ஏறெடுத்தும் பார்க்காத உத்தமசீலர். முட்டை மட்டும்தான். எதற்குமே ஆசைப்படாமல் கிடைத்ததை உண்டு , உடுத்தி, சூப்பர் இல்லையென்றாலும் சுமாரான ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொண்டு, மதிய தயிர்சாதத்தோடு பிசைந்து போன லௌகீக வாழ்க்கையர்கள் நாங்கள்.


எங்களுடைய கைகளில் ஐம்பதும் நூறும் சிக்குவதே அபூர்வம். வாங்குகிற ஐந்துக்கும் பத்துக்கும் 'அந்த' மாதிரி ஒரு ஆசை வந்திருக்க கூடாது. அது எவ்வளவு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது எங்களுக்கு அப்போது தெரியவில்லை. ஆனாலும் ஆசை யாரை விட்டது. ஆசைதான் அழிவுக்குக் காரணம் என்றார் புத்தர்.


அப்படிப்பட்ட எங்களுக்கு ஏன் அப்படி ஒரு ஆசை வந்தது என்றே தெரியவில்லை.. ''பாஸ் நாம தண்ணியடிச்சு பார்த்தா இன்னா?'' தோழருக்கு அதிர்ச்சி பிளஸ் ஆச்சர்யம் பிளஸ் மகிழ்ச்சி. ''பாஸ் நானும் உங்ககிட்ட சொல்லலாம்னு தான் இருந்தேன் நீங்களே சொல்லிட்டீங்களே''  , இத்தனை வருஷத்துல அதுமாதிரி ஆசை பலமுறை வந்தும் யார்கிட்டயுமே கேட்டதில்ல தெர்யுமா'' என்று மிகமிக சோகமாக கேட்டபோது என் கண்களில் நீர் கோர்த்துவிட்டது. ''பாஸ் டோன்ட் வொரி பாஸ் , நாம அடிக்கறோம் எவ்ளோ செலவானாலும் அடிக்கறோம், காசு நீங்கதான் குடுக்கறீங்க'' என்று அவரை தேற்றினாலும் என் கண்களில் பீய்ச்சி அடிக்கின்ற நீரை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். ஆம் அழுதேன்.


முடிவெடுத்தாச்சு எங்கே செல்வது? யாரைக்கேட்பது? திக்குத்தெரியாத காட்டில் ஒரு கட்டிங்கைத்தேடி  எங்களுடைய பயணம் தொடங்கியது. அதில் ஒரு பிரச்னை இருக்கிறதே? ''பாஸ் வீட்டுக்கு போய் ஸ்மெல் வந்து மாட்டிகிட்டா பொண்டாட்டி போட்டு பொழந்துருவா பாஸ் , ரொம்ப கோபமாகிட்டா அடிப்பா பாஸ், அவ ஒரு பத்ரகாளி'' என்றேன். ''ஆமா பாஸ் , என் பொண்டாட்டியும் கிட்டத்தட்ட..'' என்று சொல்லும் போதே தோழரின் கண்களில் வழிய முற்பட்ட கண்ணீர்துளியை ஸ்டைலாக தட்டிவிட்டார். அது சாலையோரம் நின்று கொண்டிருந்த பசுமாட்டின் மேல் பட்டுத்தெரித்தது. டிங் டிங் டிங்...துளிதுளியாக


''பாஸ் இப்படி பண்ணுவோம் இப்ப மணி இரண்டு, நாலு மணிக்குள்ள ஆளுக்கு  ஒரு பீர் குடிச்சிட்டு , அப்படியே சாப்பிட்டுட்டு , பைலட் தியேட்டர்ல ஆலைஸ் இன் வொன்டர்லேன்ட்னு ஒரு படம் ஓடுது அத பார்ப்போம். படம் முடிய ஏழு, ஏழர ஆகிடும். முடிஞ்சதும் வீட்டுக்கு போயிரலாம். ஸ்மெல் வர வாய்ப்பில்ல'' என்று ஐடியாவை கொடுக்க மெய்சிலிர்த்து என்னை கட்டிபிடித்து பாஸ் உங்கள மாதிரி பிரண்டு கிடைக்க நான் குடுத்துவச்சிருக்கணும் என்றார். சொல்லும்போதே அவர்கண்களில்.. யெஸ் சேம் கண்ணீர்த்துளி.. டிங் டிங்டிங்..


ராயப்பேட்டையில் ஏதாவது ஒரு டாஸ்மாக்கில் குடிப்பதாக முடிவெடுத்து, தேடினோம். தேடினோம். டாஸ்மாக்கே இல்லை. ஒன்று கூட இல்லை. என்ன ஓர் ஆச்சர்யம் சென்னையின் இதயத்தில் ஒரு டாஸ்மாக் இல்லையே. அவ்வை சண்முகம் சாலையில் தேடினோம், லாயிட்ஸ் ரோடில் தேடினோம். ம்ஹூம் அகப்படவில்லை டாஸ்மாக்கு. சில பார்கள் தென்பட்டாலும் பாரில் குடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் போதிய வருவாய் இல்லையே.

எங்களுடைய டாஸ்மாக் தேடல் தொடர்ந்தது. ஆட்டோ காரர் ஒருவரிடம் விசாரிக்கலாம் என்றார் தோழர். விசாரித்தார்.


''எக்சூஸ்மீ சார், இங்க டாஸ்மாக் பக்கத்துல எங்கருக்கு'' 


கக்கத்தை சொறிந்தபடி வழிசொன்னார் ஆட்டோக்கார். ''சார் இப்படிக்கா நேர போய் லெப்ட்ல திரும்பினா ஒரு மார்க்கெட் இருக்கும் , அப்படியே நேராபோனா நால் ரோட் வரும் , அதை தாண்டி வலது பக்கம் ஒரு கடை இருக்குங்க , நல்ல கடை!''.


நான் ஆர்வ மிகுதியில் ''பாஸ் அங்க குளிர்ந்த பீர் கிடைக்குமா'' என்றேன்.


ஆட்டோக்கார் கொஞ்சமாய் முறைத்தாலும் ''ம்ம்.. கிடைக்கும்'' என்றார்.


மீண்டும் ஆர்வம் கொப்பளிக்க

''பார் வசதி இருக்குமா சார்'' என்றேன்.


''அதெல்லாம் இருக்கும்ங்க'' என்றார் சலிப்போடு. என்ன பிரச்சனையோ


''பார் ஏசிங்களா, ஏசிக்கு தனியா பைசா ஏதாச்சும் குடுக்கணுமா..'' என்றேன்.


''&*%&**%*%**%*&*(* '' என்றார்.


தோழருக்கு கோபமே வந்துவிட்டது. யோவ்.. போதும்யா என்று என் தோளை பிடித்தார். ஆட்டோக்காரர் அந்த " &*%&**%*%**%*&*(* " ஐ கொஞ்சம் கோபமாகத்தான் சொன்னார். பாவம் வீட்டில் பொண்டாட்டி பிரச்சனையோ என்னவோ? புன்னகையோடு அங்கிருந்து திரும்பிப்பார்க்காமல் வண்டியில் விர்ர்ர்ரூம் என நகர்ந்தோம். " பாஸ் ஏன் பாஸ் ஏன்?" என்றார் தோழர். பாஸ் எதுவா இருந்தாலும் டீடெயிலா கேட்டுறணும்ல என்றேன். வண்டியை நிறுத்தியவர் திரும்பி என்னை பார்த்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தன.


ஒருவழியாக தேடோ தேடென்று தேடி கடைசியாக திருவல்லிக்கேணி பாரதியார் சாலையில் ஒரு டாஸ்மாக்கை கண்டுபிடித்தோம் அதற்குள்ளாகவே மணி மூன்றாகியிருந்தது. பாஸ் பசிக்குது பாஸ்! இன்னொரு நாள் தண்ணி அடிச்சிக்கலாமே என்றார் தோழர். நோ பாஸ், நாம தண்ணி அடிக்கறதுனு முடிவுபண்ணிட்டோம் இனிமே பின்வாங்கப்படாது, நாமெல்லாம் யாரு..! என்றேன் நான்.


அது ஒரு அழகிய டாஸ்மாக். அழுக்குப்பிடித்திருந்தாலும் பார்க்க அழகாகவே இருந்தது. பச்சை வண்ண போர்டில் வெள்ளை எழுத்துக்களில் அடுக்கடுக்காக டாஸ்மாக் என எழுதப்பட்டிருந்தது. உள்ளே நுழைய எங்கும் சிவப்பாய் பாக்குபோட்டு துப்பியிருந்தனர். எங்கும் துர்நாற்றம் நிறைந்திருந்தது. பாவம் தோழர் நொந்து போய் பேண்டை ஒருமுழம் தூக்கிப்பிடித்தபடி நடந்தார். சளக் புளக்.. என வழியெல்லாம் வாந்தி. பாஸ் நேரா நாமளே வாங்கி குடிக்கணுமா பார்ல போய்தான் குடிக்கணுமா? என்றார். நோ பாஸ் அது நம்ம இஷ்டம். ஆனாலும் நாம பார்லயே குடிக்கலாம், காசு நீங்கதான தரப்போறீங்க என்றேன்.


மாடியிலிருந்தது அந்த அழுக்கு பார். பார்முழுக்க அழுக்கு சேர். சேர்களெல்லாம் துருப்பிடித்து கரையாகி மிக்சர் தூள்களும், நசுங்கிய யூஸ்அன்த்ரோ கப்புமாக பரப்பிக்கிடந்தன. காலியாய் இருந்த ஒரு டேபிளில் போய் அமர, சின்னப்பையன் ஒருவன் கையில் கோல்பிளேக் பாக்கட் கவரோடு, தலையிடுக்கில் பேனாவும் சொருகியபடி அருகில் வந்து, இன்னா சார் வேணும் என்றான். தோழர் என்னை பார்க்க நானும் தோழரை பார்த்தேன். இரண்டு பீர் குடுங்க நல்லா சில்லுனு இருக்கணும், கிங்பிஷர் குடுங்க என்றேன். தோழர் என்னை பெருமிதத்தோடு பார்த்தார். பாவம் அவருக்கு இந்த பீர் பிராண்டு பெயர்களெல்லாம் தெரியாது. மீண்டும் பெருமிதத்தில் கண்ணீர் சிந்த வேண்டும் என அவர் நினைக்கு போதே , அந்தக் கண்ணீரை தரையில் விழாமல் பிடித்துக்கொள்ள என் கைகள் நீண்டன.. நீண்டன.. நீண்டன


பீர் வந்தது. அது கிங்பிஷர் இல்லை. தம்பி கிங் பிஷர் தான கேட்டேன். அது சில்லுனு இல்லணா.. மார்க்கோ போலா தான் சில்லுனு இருக்கு.. என்றான் சிறுவன். மார்க்கோ போலோ பேரே ஒரு மார்க்கமாக இருந்ததாலும் அவரைப்பற்றி பள்ளிக்காலத்திலேயே படித்திருந்ததாலும் ஒப்புக்கொண்டேன். பாஸ் ஒரு ஸ்மால் ரிக்வஸ்ட் சிக்கன் 65 சொல்லிக்கவா என்றேன். சொல்லிக்கங்க பாஸ் என்றார் மிடுக்காக.. தம்பி ஒரு சிக்கன் 65, ஒரு லெக்பீஸ்,அப்புறம் நெத்திலி ப்ரை, அப்புறம் சாருக்கு நல்லா காரமா ஒரு காரக்கடலை பாக்கட் என்றேன். தோழர் அருகில் என்னையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார். வாயில் புன்னகை கண்களில் சோகம் அடடா! சிவாஜியை நேரில் பார்த்தது போல் இருந்தது. பாஸுக்கு பீரை ஓப்பன் செய்து கிளாஸில் ஊற்றி குடிக்க தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். நான் பீர்பாட்டிலை வாயில்வைத்து நாட்டியம் ஆடினேன். முடியல. பையன் வந்து ஓப்பன் செய்து கொடுத்தான். ஊற்றிக்கொடுத்தான். லேசான கசப்பு.. கொஞ்சம் தித்திப்பு.. குடித்தேன்.


''சார் என்னதான் இருந்தாலும் அம்மா ஆட்சியில இருந்தாதான் பணப்புயக்கம் எகிரும்..'' என்று பக்கத்துசீட்டு முருக்கு மீசை பேசிக்கொண்டிருந்தான். நான் ஒரு அதிபயங்கர திமுக காரன். என்னால் தாங்க முடியுமா.. மிதபோதையில் நான் அவரிடம் பேசத்தொடங்கினேன். ''எஸ்சூஸ்மீ எதை வச்சு.. இப்படி சொல்றீங்கனு தெரிஞ்சுக்கலாமா?''


''சார் பாருங்க முன்னாலலாம்.. நாங்க ஆளுக்கு ஒரு ஆப் அடிப்போம்.. இப்பலாம் குவாட்டர்க்கே கஷ்டப்படவேண்டியிருக்கு'' என்றார் மீசை.

''ஏன்டா நீ ஆப் அடிக்கறதுக்காக அம்மா ஆட்சிக்கு வரணுமா , குடிகாரப்பயலே'' என்று ஏதோ தைரியத்தில் நான் சவுண்டைக்கூட்ட.. முறுக்கு மீசை ''டேய் என்னடா சொன்னே..'' என்று என் டெர்லின் சட்டையை பிடிக்க.. நம்ம பாஸுக்கு அல்லையை பிடித்திருக்க வேண்டும்..


''சார்.. சார்..  அவரை விட்ருங்க அவருக்கு மூளை சரியில்ல.. நீங்க சொல்றதுதான் கரெக்ட்'' ,என்று பச்சபுள்ளபோல பதறினார்.


 ''டேய் நீயாருடா கோமாளி'' என்று என் சட்டையை விட்டு அவர் சட்டையை பிடித்துக்கொள்ள எனக்கு வந்தது பாருங்க கோபம்.. அருகிலிருந்த பீர் பாட்டிலை எடுத்து முரட்டு மீசையின் மண்டையை உடைக்க எண்ணி பாட்டிலை தூக்கினேன்.. அதில் பாதி பீர் இருந்தது.. அதை வீணாக்க மனமின்றி.. ''எச்சூஸ்மீ .. மரியாதையா அவர் சட்டைலருந்து கைய எடுங்க.. அவர் யாரு தெரியுமா'' என்றேன்.


சொன்ன அடுத்த நொடி தோழரின் கன்னத்தில் நாலு அறை.. பளார் பளார் பளார் பளார்..


''ஏன்டா நீ என்ன பெரிய பருப்பா'' , பாவம் தோழர் கண்கலங்கிவிட்டார். நானும் கலங்கிவிட்டேன். ''சார் மன்னிச்சிருங்க நீங்கயார்னு தெரியாமா மோதிட்டோம்..'' ,


''&$%&%&% மவனே இனிமே உங்கள இந்த ஏரியாபக்கம் பார்த்தேன்'' என்று முரடன் முறுக்க.. நாங்கள் இருவரும் பாதி பீரையும் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து பறந்தோம். பின்னாலேயே பீர் பையன் ஓடிவந்தான் பில்லோடு.


''பாஸ் சாரி பாஸ்'' என்றேன் நான்


''பரவால்ல பாஸ் , இதுக்குலாம் போய் சாரி கேட்டுகிட்டு''


''இல்ல பாஸ், பாதி பீர் வேஸ்டா போச்சே.. ''  , அவர்கண்களில் சேம் கண்ணீர்த்துளி. ஆனால் முறைத்தபடி எதுவுமே பேசாமல் வந்தார். எனக்கு சோகம் மனசை கவ்வியது. ச்சே அடிவாங்க வச்சிட்டமே.. அவருடைய பார்வையை என்னால் சந்திக்க முடியவில்லை.


அருகிலிருந்து பிரியாணிகடையில் தஞ்சம் புக.. பிரியாணியும் குஸ்காவும் சிக்கன் 65ம் ஆர்டர் செய்யப்பட்டது. பிரியாணி வந்தது , குஸ்காவும் வந்தது. அரை பீரடித்திருந்ததால் லேசான போதையில் பிரியாணி மணம் அடிவயிற்றில் ஏதோ செய்ய.. உவ்வ்வ்வ்வ்வ்வா.. அருகிலிருந்த வாஷ் பேஷின் நிரம்பி வழிந்தது. பாவம் தோழர் என்னையே முறைத்துக்கொண்டிருந்தார்.


நான் வாயைக்கழுவிவிட்டு பிரியாணியில் கைவைத்தேன். தோழர் ஒரு வாய்கூட சாப்பிடாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய பார்வை என்னை, பிரியாணியில் கிடக்கும் லெக்பீஸைப்போல கூனிக்குருக வைத்தது.


''பாஸ் வாய நல்லா தொடைங்க.. இந்தாங்க'' என்று தன்னருகில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் 65ல் ஒரு துண்டை எடுத்து என் தட்டில்வைத்தார்.. என்கண்கள் கலங்கின.. சொட்டு சொட்டாக கண்ணீர் திரண்டது.. அய்யகோ..


எனக்கு ஞானம் வந்து நண்பேன்டா என்று உரக்க சொல்ல வேண்டும் போல் இருந்தது.