Pages

27 November 2010

நந்தலாலா - மிஷ்கின் ஐ லவ் யூ


அவனை எனக்கு பிறந்ததிலிருந்தே தெரியும். ஒன்னரை வயதாய் இருந்த போதே அம்ம்ம்மா வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டாள் அவனுடைய அம்மா. பதினெட்டு வயது வரை அங்கேதான் வளர்ந்தான். கிட்டத்தட்ட ஒரு அநாதையைப் போல! அவனுடைய அம்மாவின் மேல் எப்போதும் அவனுக்கு தீராத வெறுப்பும் ஆத்திரமும் இருந்தது. அவளை எப்போதும் அவன் அம்மா என்றழைத்ததே இல்லை. எப்போதாவது ஊருக்கு ஒதுக்குப்புறமாய் அம்மா வசித்த அவளுடைய குடிசைக்கு போவதுண்டு. அம்மா வாரி அணைத்து முத்தமிடுவாள். இவன் கன்னத்தை துடைத்து கொள்வான். எரிச்சலும் கோபமுமாக பேசுவான். எரிந்து விழுவான். அம்மா சில சமயம் அவனை கட்டிப்பிடித்த படி அழுவாள். பிரியாணி வாங்கித்தருவாள். அவனுக்கு அம்மாவை விடவும் பிரியாணி பிடித்திருந்தது. பிரியாணிக்காகவே அக்குடிசைக்கு அடிக்கடி செல்வான். பிரியாணி கிடைக்கும். அம்மா புன்னகைப்பாள். இவன் பிரியாணியை தின்று விட்டு வாசலில் விளையாடுவான். சித்தாள் வேலை செய்யும் அம்மாவின் நாற்றம் அவனுக்கு எப்போதும் பிடித்ததே இல்லை. அம்மாவை வெறுத்தான்.

பல நாள் இரவுகளில் பாட்டியை இறுக அணைத்துக்கொண்டு ஏன் பாட்டி எனக்கு மட்டும் நல்ல அம்மா இல்ல..! ராகுலோட அம்மா எவ்ளோ நல்லவங்க தெரியுமா. என் அம்மா ரொம்ப அழுக்கு அவங்களுக்கு என்ன பிடிக்கல..அதான் நான் பிறந்ததும் என்னை இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க.. நாத்தம் என்று தேம்பி தேம்பி அழுவான். பாட்டி தலைவருடி தேற்றுவாள். இது பல காலம் தொடர்ந்தது. பதின்ம வயதில் அவனுக்கு பிரியாணியின் மீதான விருப்பம் குறைய அம்மாவை பார்க்கவுங்கூட போவதில்லை. பாட்டி வீட்டின் வாசலில் வந்து அமர்ந்து கொண்டு.. அழுக்குபிடித்த நகங்களிலிருந்து அழுக்கை பிதுக்கி எடுத்தபடி கண்ணா கண்ணா என்று அழைப்பாள். அவன் அவளை கண்டுங்காணாமால் விலகி செல்லுவான். அவள் பேச முற்படும் முன்னமே என்ன வேணும் அதான் மயிரா போச்சுனு இங்க வந்து விட்டுட்டு போய்ட்டல்ல அப்படியே போய்த் தொலைய வேண்டியதுதானே என்று எரிந்து விழுவான். அம்மா இருமுவாள்.

சில நாட்களில் அம்மா இறந்துவிட்டாள். அவள் ஏதோ மர்ம் நோயால் பீடிக்கப்பட்டிருந்தாள். அதனால்தான் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்ததாக அவன் என்னிடம் கூறினான். சாவதற்கு முதல் நாள் கூட பிரியாணியோடு பாட்டி வீட்டிற்கு வந்ததாகவும் , இவன் எப்போதும் போல திட்டியனுப்பியதாகவும் கூறினான். நோயால் பாதிக்கப்பட்டதால்தான் அப்பாவும் ஓடிவிட்டதாக கூறினான். சாகும் வரை அவன் அவளை எப்போதும் அம்மா என்றழைத்ததே இல்லை என்று கூறி முதல் முதலாக அம்மாவிற்காக வருத்தப்பட்டு பேசினான். இத்தனைகாலமும் பாட்டி வீட்டில் அவன் வளரவும் படிக்கவும் பணம் அம்மாதான் சித்தாள் வேலை பார்த்து பணம் கொடுத்தாள் என்று கூறி அவன் கதறி அழுததும் , கடைசிவரைக்கும் அவங்கள நான் எவ்ளோ சித்ரவதை பண்ணிருக்கேன் என்று கூறி பித்துபிடித்தவன் போல உளறியதும் இப்போதும் நினைவிருக்கு.

பூந்தமல்லி சாலையிலிருக்கும் அந்த அநாதை இல்லத்தில் வாரந்தோறும் ஒருநாள் முழுக்க குழந்தைகளுக்காக செலவழிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்த நாட்கள் அவை. அங்கிருந்த ஆண்பிள்ளைகளுக்கு அம்மாக்கள் மீது அளவுகடந்த கோபமிருந்தது. சில பையன்கள் என் காதோரம் வந்து கெட்டவார்த்தையில் திட்டியதை கேட்டிருக்கிறேன். தாய்மை மறுக்கப்பட்ட குழந்தைகள் ஏனோ வன்முறை மிக்கவர்களாக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் மிகச்சில குழந்தைகள் நம்பிக்கையோடிருந்தன. மாமா என்னைக்காவது அம்மா நிச்சயம் வருவாங்க என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கும் குழந்தைகளும் உண்டு. அவர்களுக்கு யாருடைய அன்பும் தேவையில்லை. அம்மா போதும். அம்மாவின் நினைவுகளோடே வாழ்கிற அக்குழந்தைகளின் உலகம் வலியும் வேதனையும் நிரம்பியது.

மிஷ்கினின் நந்தலாலாவும் அப்படித் தாய்மையை தேடியலைகிற இரண்டு குழந்தைகளின் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. ஒருவன் தாய்மையின் மீதான நம்பிக்கையோடும் மற்றொருவன் அவநம்பிக்கையோடும் புறப்பட படம் தொடங்குகிறது. மூட்டை நிறைய அன்பை சுமந்தபடி செல்லும் அக்குழந்தைகள் செல்லும் வழியெங்கும் அன்பை சிந்தியபடி செல்ல வழியில் தென்படும் வழிப்போக்கர்களின் வாழ்க்கையையே அவ்வன்பு வழிமாற்றிவிடுகிறது. ஒவ்வொரு நொடியும் வாழு எனக் கற்றுத்தருகிற ஜென்குருக்களை போல பலரும் ஏதோ ஒன்றை அக்குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுகின்றனர். நம்பிக்கையோடு தாயை தேடுகிறவனுக்கு அவநம்பிக்கையும், அவநம்பிக்கையோடும் வெறுப்போடும் தாயை அடைகிறவனுக்கு நம்பிக்கை ஒளியும் பளிச்சிட படம் முடிகிறது. அன்பு மட்டுமே அநாதையாக அவர்களிடமே தஞ்சமடைகிறது.

படத்தின் நாயகன் இளையராஜா. அவர் இசையமைத்த படங்களின் உச்சம் இது என்று நிச்சயம் கருதலாம். இளையராஜா இல்லாமல் இப்படத்தை ரசிக்க முடியுமா தெரியவில்லை. அம்மா என்றால் இளையராஜாவுக்கு கசக்குமா என்ன.. வெறியாட்டம் ஆடியிருக்கிறார் ராஜா. முழுக்க முழுக்க இளையராஜாவை நாயகனாக்கி அழகு பார்த்திருக்கிறார் மிஷ்கின். ஒவ்வொரு முறையும் பிண்ணனியில் ராஜாவின் குரலோ இசையோ வரும்போதெல்லாம் கண்களில் நீர்கசிவதை உங்களால் கட்டுப்படுத்தவே முடியாது. கதறி அழவைக்கிற உங்களை உருக்கி வார்க்கிற இசை.

படத்தின் இரண்டு குழந்தைகளாக வருகிற மிஷ்கினும் அஸ்வத்தும் இயல்பான நடிப்பில் கரையவைக்கின்றனர். மிஷ்கின் நடிகராகவும் சென்டம் வாங்குகிறார். மனநோயாளியாக தொடங்கும் அவருடைய பாத்திரம் மிகமிக பொறுமையாக காட்சிகளினால் சகஜநிலைக்கு திரும்புவதாக காட்டியிருப்பது தமிழுக்கு புதுசு. படத்தின் கேமிரா நேர்த்தியும் எங்குமே சிதறாத எடிட்டிங்கும் கொஞ்சமே கொஞ்சம் வசனங்களும் நிறைய காட்சிகளுமாக நகரும் திரைக்கதையும் தமிழுக்கு மிகமிக புதிது. எப்போதாவது வருகிற ஒன்றிரண்டு வசனங்கள் எல்லாமே மனதில் பதியக்கூடியவை. படத்தின் திரைக்கதை புத்தகம் வெளியானால் நிச்சயம் ஒன்று வாங்க வேண்டும்.

படத்தில் பெரிய நடிகர் பட்டாளங்கள் கிடையாது. அனைவருமே புதிய முகங்கள். அன்பும் வெறுப்பும் கோபமுமாக நம்மிடையே திரிகிற முகங்கள். படத்தின் பிண்ணனி நாம் பார்த்த கடந்து போகிற இடங்கள். சில விநாடிகளே வருகிற நாசரும்.. வசனமே பேசாமல் வருகிற ரோகிணியும் , தவறை உணர்ந்து உடைந்து போகிற அந்த லாரி டிரைவர் என இன்னும் இன்னும் எத்தனை பாத்திரங்கள். ஒரு முழுமையா நாவலை வாசித்த திருப்தி கிடைக்காமலில்லை. பல காட்சிகளில் குறியீடுகளால் நிறைய சொல்ல முற்பட்டிருப்பதாக சொன்னாலும் உருக வைக்கிற திரைக்கதையில் எதையுமே கவனிக்க முடியவில்லை. சில காட்சிகளில் கண்களில் கண்ணீர் கசிவதையும்... ஒவ்வொரு காட்யிலும் யாருமற்ற ஒரு இடம் காட்டப்பட்டு அங்கே கதாபாத்திரங்கள் வந்து எதையாவது செய்வதும் காட்சி முடிந்ததும் அவ்விடம் வெற்றிடமாக மறைவதும்.. அழகு. சினிமா ஒரு காட்சி ஊடகம்.. ஏனோ தமிழ்சினிமா வசனங்களினால் நிரம்பியது. ஆனால் நந்தலாலாவின் வசனங்களை இரண்டு ஏ4 பேப்பர்களில் எழுதிவிடலாம். எல்லாமே காட்சிகள்.. வெறும் காட்சிகள்.

படம் முடிந்த பின் என் அம்மாவோடு இன்னொரு முறை பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். என் அம்மாவுக்கும் இப்படம் நிச்சயம் பிடிக்கும். (அம்மா அழுவாரோ என்கிற பயமும் இருக்கிறது)

படம் பார்க்கும் போது ஏனோ பலமுறை கதறி அழுதுகொண்டிருந்தேன். இத்தனைக்கும் அண்மையில் பார்த்த அங்காடித்தெரு போல இதில் வலிந்து திணிக்கப்பட்ட சோக காட்சிகள் ஏதுமில்லை. படத்தில் கிளைமாக்ஸ் தவிர்த்து மற்ற காட்சிகளில் யாருமே அழுவதில்லை. இயல்பான காட்சிகள்தான். சாதாரண வசனங்கள்தான்.. ஏனோ என்னையும் மீறி ஏதோ ஒன்று அழவைத்துவிடுகிறது. நான் மட்டும்தான் அழுகிறேனோ என்று நினைத்தேன். படம் பார்க்க வந்திருந்த பலரது கண்களும் சிவந்திருந்ததை காண முடிந்தது. மிஷ்கின் கிட்டத்தட்ட படம் பார்த்தவர்கள் அனைவரையுமே தோற்கடித்துவிடுகிறார்.

அவனை இப்போதும் நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. என்னை பார்க்கும் போதெல்லாம் பேச்சு எங்கெங்கோ சுற்றி அவன் அம்மாவிடமே வந்து நிற்கும். அவனுடைய அம்மா ஏன் அவனை பாட்டி வீட்டில் விட்டாள் என்று தொடங்கி அவளுடைய ஒவ்வொரு நொடி வேதனையையும் இப்போது உணர்வதாக சொல்லுவான். இதுவரை பலமுறை இதையேதான் சொல்லிக்கொண்டிருக்கிறான். ஆனால் மீண்டும் மீண்டும் அது தொடர்கிறது. இனியும் சொல்லுவான். உயிரோடிருந்த போது ஒரு முறை கூட அம்மா என்றழைக்காதவன் இப்போதெல்லாம் மூச்சுக்கு மூன்னூறு முறை அம்மா என்றுதான் அழைக்கிறான்.