Pages

24 December 2010

மன்மதன் அம்புகடந்த இருபது ஆண்டுகளில் கமல் நடித்த மிகச்சிறந்த குப்பைகளில் ஆகச்சிறந்த குப்பை மன்மதன் அம்பு. பெரிய கப்பலை காட்டுகிறார்கள்.. பிறகு கமலை காட்டுகிறார்கள்.. கப்பல்... கமல்.. இதற்கு நடுநடுவே காமெடி மாதிரி கமலே எழுதிய வசனங்களை பேச சில நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கமலே எழுதிய தத்துவார்த்தமான வசனங்கள், ஒருவரிகூட புரியாத கமலின் கவிதைபாடல் கமலுக்கு மட்டுமே புரிந்து சிரிப்பு மூட்டக்கூடிய காமெடி வசனகாட்சிகள்.. கமலே கரகர குரலில் பாடி ஆடும் பாடல்கள்... ஆவ்வ் தூக்கம் வரவைக்கும் கமலின் திரைக்கதை.. வேறென்ன வேண்டும் ஒரு ஆகச்சிறந்த மொக்கைப்படத்திற்கு! எல்லாமே ஒருங்கிணைந்து மன்மதன் அம்பாய் நம் கண்களையும் காதுகளையும் பதம்பார்க்கிறது. எங்கேயும் கமல் எதிலும் கமல்.. படம் தொடங்கி சில நிமிடங்களில் நாம் பார்ப்பது கமல்படமா டிஆர் படமா என்கிற சந்தேகமே வந்துவிடுகிறது.

இந்துமுண்ணனி, இந்துமத விரோத பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டதால் கமல்-த்ரிஷா டூயட் கவிதை பாட்டை கட் செய்துவிட்டனர். ஆனாலும் நம்மூர் அறிவுஜீவிகளின் வாய்க்கு மசால் பொரிகடலை கிடைத்தது மாதிரி படத்தில் சூப்பர் சர்ச்சைகள் நிறைய உண்டு. அதில் இரண்டுமட்டும்.. எக்ஸ்ளூசிவ்லி ஃபார் சர்ச்சை விரும்பிகள்.

* ஈழத்தமிழர் ஒருவரை முழுமையான காமெடி பீஸாக.. ‘’த்ரிஷாவின் காலடி செருப்பாக கூட இருக்க தயாராக இருக்கிறேன்’’ என்று கூறுவதாக வசனங்கள் வருகிறது..

* தசாவதாரம்,உன்னைபோல் ஒருவன் படங்களை தொடர்ந்து இப்படத்திலும் கமல், லஷ்கர் ஈ தொய்பா குறித்து பேசுகிறார். தலையில் குல்லாப்போட்ட தீவிரவாதியை சுட்டு வீழ்த்துகிறார்.

படத்தின் கதைதான் மிகப்பெரிய லெட்டவுன்!. உயிருக்குயிராய் காதலிக்கும் காதலியை வேவு பார்க்க காதலனே ஒரு கனவானை ஏற்பாடுசெய்ய அந்த கனவானை காதலி காதலித்துவிட காதலியோடு காதலன் சேர்கிறானா கனவான் சேர்கிறாரா என்பதே கதை. ரொம்ப ஈஸியா சொல்லனும்னா.. மின்சாரகனவு படம் மாதிரி! கிளைமாக்ஸும் அதே மாதிரி! அதிலும் படத்தின் முதல் ஒரு மணிநேரம் உங்கள் பொறுமையை சோதித்து பைத்தியம் பிடிக்க செய்துவிடும்.

த்ரிஷாவுக்கு வயசாகிவிட்டது. பல இடங்களில் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வருகிறார்.. பார்க்க பையன் போலிருக்கிறது. இன்னும் ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு ரிடையர்ட் ஆகி தொழிலதிபரை மணந்து செட்டில் ஆகிவிட நேரிடலாம். சங்கீதா அவரைவிட அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார். மாதவன்தான் படத்தின் உண்மையான ஹீரோ.. படம் முழுக்க கமல் கமலாகவே வந்து போவதால்.. அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை.. ஓரிரு இடங்களில் நடிக்கிறார், மற்றபடி பல நேரங்களில் நடப்பதே நடிப்பு.

வசனங்கள் அனைத்தும் லைவ் ரெக்கார்டிங். கமல் இந்த லைவ் ரெக்கார்டிங் தண்டத்தை விட்டுத்தொலைப்பது நல்லது. பாதி வசனங்கள் புரிவதில்லை. வசனங்கள் புரியாமல் போனதற்கு இன்னொரு காரணம் 50%க்கும் மேற்பட்ட வசனங்கள் ஆங்கிலத்தில்.. ஆங்கிலப்பட பாணியில் வாட் இஸ் திஸ்.. ஏ ஃபார் ஆப்பிள் என ஏதேதோ பேச நமக்கென்ன எப்போதும் போல ஙே! கே.எஸ்.ரவிக்குமார், கே.எஸ்.ரவிக்குமார் என்று டிக்கெட் கிழிக்குமிடத்தில் பேசிக்கொண்டனர். அவருக்கும் இந்தபடத்திற்கும் என்ன சம்பந்தம்!

இந்த படத்தினை மேடையில் நான்கே நான்கு திரைச்சீலைகளை வைத்துக்கொண்டு ஏழு கதாபாத்திரங்களோடு மேடை நாடகமாகவே போட்டுவிடலாம். இதற்கு ஏன் குரூஸ் கப்பல்,ரோம்,வெனிஸ்...?

அண்மையில் பார்த்த விருதகிரி கொடுத்த கொண்டாட்ட மனநிலையை குலைத்துவிட்டது இந்த மன்மதன் அம்பு.