Pages

12 February 2011

பயணம்


உங்களை ஒரு தியேட்டருக்குள் துப்பாக்கி முனையில் வெடிகுண்டுகளுடன் பிணைக்கைதியாக தீவிரவாதிகள் பிடித்துக்கொண்டால் என்னாகும்? ஒரு இரண்டு நிமிடங்கள் கண்ணை மூடி புத்தபிரான் போல் அமர்ந்தோ அமராமலோ கற்பனை செய்துகொள்ளுங்கள்.

நினைக்கவே படுபயங்கரமாக கொடூரமாக அய்ய்யோ பயமாருக்கே என்று இருக்கிறதா? இல்லையென்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு ஒரளவாவது பயணம் திரைப்படம் சுவாரஸ்யம் கூட்டும் சாத்தியங்கள் இருக்கிறது. ஹைஜாக்கெல்லாம் எனக்கு அல்வா சாப்பிடறமாதிரி என்று நினைக்கிறவர்களுக்கும் இப்படம் பிடிக்கும். அடிக்கடி விமானப்பயணம் போகிறவர்களுக்கும் பிடித்துத் தொலைக்கலாம்.

ஹாலிவுட்டில் விமானக்கடத்தல் தொடர்பான படங்கள் நிறைய வெளியாகியிருந்தாலும், இந்தியாவில் மிக குறைவான படங்களே வெளியாகியுள்ளன. அவையும் பெரிய அளவில் வெற்றிபெற்றதில்லை. 2008ஆம் ஆண்டு வெளியான ஹைஜாக் என்னும் கொஞ்சம் மொன்னையான ஹிந்தி படம் விமானக்கடத்தலை அடிப்படையாக கொண்டது. அதற்கு பிறகு இப்போது பிரகாஷ் ராஜ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் பயணம். நடுவில் வெளியான காந்தகார் ரிலீஸாகிவிட்டதா என்றே யாருக்கும் தெரியாது.

தீவிரவாதிகள் படமென்றாலே ஹீரோயிசம் தூக்கலாக இருக்கும். பஞ்ச் வசனங்களுக்கு பஞ்சமிருக்காது. தீவிரவாதியை இடதுகையால் அடித்தபடி வலதுகையில் நாயகியின் இடைதடவி நடனமாடும் ஹீரோக்கள் நிச்சயம் இருந்தாக வேண்டும். ஏனோ பயணத்தில் அது நிச்சயமாக கிடையாது என்று ஆரம்பத்திலேயே தெரிந்துவிடுகிறது. டூயட் கிடையாது. மயிர்க்கூச்செரியவைக்கும் சண்டைக்காட்சிகள் கிடையாது. அண்மையில் வெளியாகி தெலுங்கில் சக்கை போடு போடும் நாகர்ஜூனின் ரகடா படம் பார்த்தவர்கள் கொஞ்சம் ஆடித்தான் போக நேரிடும். (நாயகிகளுடன் தொப்புள் மார் தெரியும் டூயட்டுகள் கூட இல்லை!). படத்தில் பாடல்களே கிடையாது. டைட்டில் சாங் மட்டும்தான். முதலில் அதற்காகவே பி.ராஜை பாராட்டிவிடுவோம். வாழ்க வளர்க!

அடடா ஒரு சூப்பர் ஹீரோவை வைத்துக்கொண்டு ஹீரோயிசம் இல்லாத படமா என நிமிர்ந்து உட்கார்ந்தால், படத்தின் கதை நம்மைப் பார்த்து கொக்கானி காட்டுகிறது. விஜயகாந்தின் அக்மார்க முத்திரை பெற்ற ஐஎஸ்ஓ 9001 தீவிரவாதிகள் ஒழிப்பு திரைப்படங்களின் அதே கதை. பணய கைதிகளை விடவேண்டுமென்றால் பாகிஸ்தானிலிருந்து பிடித்து வரப்பட்ட தாடிவைத்த சூப்பர் தீவிரவாதியை விட்டுவிடவேண்டும். ஸ்ஸ்ப்பா ரோஜா படத்தில் தொடங்கி விமானக்கடத்தலை மையமாக கொண்ட ஹிந்தி படமான ஹைஜாக் படத்தின் கதையும் இதேதான் என்பது எல்கேஜி குழந்தைகளுக்கும் தெரிந்திருக்கும்.

என்னதான் புதுமை செய்திருக்கிறார்கள்? நிறைய குட்டி குட்டி ஜோக்குகள், விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை சம்பவங்கள், பாப்கார்ன் வாங்கினால் கிளிசரின் ஃப்ரீ என்கிற அளவுக்கு அழவைக்கிற சென்டிமென்ட் காட்சிகள், தேசிய கீதம் போடாமலே , கிரிக்கெட் மேட்ச் பார்க்காமலே உங்களுடைய தேசப்பற்று உச்சி முதல் உள்ளங்கால்கால் வரை ஊறிப்போய் உடல் கூச்செரியவைக்கும் இந்தியக்காட்சிகள்... மத ஒற்றுமையை நல்லிணக்கத்தை வலியுறுத்தும்.. ஸ்ஸ்ப்பா டேய் இதெல்லாம் நாங்க விக்ரமனின் படங்களிலேயே நிறைய பார்த்துட்டோம்டா என்று கத்திவிட தோன்றும் அளவுக்கு இப்படி நிறைய புதுமைகள்.

எப்போதும் போல இதிலும் மிக நுணுக்கமாக இஸ்லாமியர்களை கொடியவர்களாகவும், கொடூரமானவர்களாகவும் , ஜிகாத்துக்காக எதையும் செய்யக்கூடியவர்களாகவும் காட்டி தொலைத்திருக்கிறார்கள். அதிலும் குழந்தைகளிடம் பாசமாக பேசி நடித்து ஏமாற்றி அவர்களுடைய ஸ்கூல் பேகில் குண்டுவைப்பதாக காட்டியிருப்பதெல்லாம் அப்பட்டமான அயோக்கியத்தனமே தவிற வேறொன்றும் இல்லை. அதிலும் ஒரு புரட்சியாளர் ‘நான் கார்ல்மார்க்ஸையும் காந்தியையும் படித்துவிட்டேன் அதனால்தான் இப்படி புரட்சி பண்ணுகிறேன்’ என்று லூசுபோல பேசுவார். அப்துல்காதருக்கு அமாவாசைக்கும் என்ன பாஸ் தொடர்பு! கும்பகோணம் கோயிஞ்சாமி ஒருவர் இந்திய மக்களை காப்பாற்ற தாடிவச்சுண்டு தீவிரவாதியாய் நடிச்சுண்டு தன் இன்னுயிரையும் பணயம் வைத்து.. காப்பாற்றுவதெல்லாம் என்ன அரசியல் என்று பவர்பாய்ன்ட் பிரசென்டேஷன் வைத்து விளக்க வேண்டியதில்லை.

அரசியலை விட்டுத்தொலைத்துவிட்டு சினிமாவை சினிமாவாக அணுகித்தொலைப்போம். படத்தில் நூறுபேர் விமானத்தில் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய செல்போன்கள் பிடுங்கப்படுகின்றன. ஆனால் அடுத்தக்காட்சியில் ஒரு மூலையில் ஒரு பெண் செல்போனில் பேசியபடி பக்கத்துசீட்டு ஆன்ட்டியோடு மகிழ்ச்சியாக சிரித்துக்கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. அது ஏதோ கன்ட்டினியுட்டி பிரச்சனையோ எடிட்டிங் எளவோ ஏதோ ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரச்சனையோ என்று விட்டுவிடலாம். ஆனால் விமானம் கடத்தப்பட்டிருக்கிறது, துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டிருக்கிறோம், குண்டுகள் வைத்துள்ளனர், ஆனால் எந்த வித பயமோ, அச்சமோ இல்லாமல் அனைவரும் பிக்னிக் வந்தது போல பேசிக்கொள்வதும், தீவிரவாதியின் துப்பாக்கியை வாங்கி விளையாடுவதும் , மிமிக்ரி செய்துகொண்டிருப்பதும், சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

அட பயணிகள்தான் இப்படினா தீவிரவாதிகள் அதுக்கும் மேல , ஹேய்.. மே கோன் ஹை.. தூம் கோன் ஹை என ஹிந்தியில் அடித்தொண்டையில் கத்திக்கொண்டே இருந்தால் போதுமா.. அடப்போங்கப்பா குழந்தைங்க கூட சிரிக்குது.. வல்லரசு படத்துல வர வாசிம்கான்தான் உண்மையான தீவிரவாதி என நினைக்க தோன்றுகிறது. படம் முழுக்க நிறைய காமெடி.. பெரிய காமெடி எம்.எஸ்.பாஸ்கர் பாதிரியாராக தோன்றி அவ்வப்போது மிகசீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு சொல்லும் வசனங்கள்.. சிரிப்புக்கு கியாரண்டி. நாகார்ஜூன் ஹீரோயிசம் காட்டவில்லையென்றாலும், கிளைமாக்ஸில் கொஞ்சம் கொஞ்சம் தன் முகத்தை காட்டத்தவறுவதில்லை.. மற்றபடி அவருக்கு சபாஷ். படம் முழுக்க ஒரே ஆறுதல் சூப்பர் ஸ்டாராக வரும் ப்ரித்வியும் அவருடைய ரசிகரும் வருகிற காட்சிகள் மட்டும்தான். சினிமா ஹீரோக்கள் மீதான நல்ல விமர்சனமாக அதைக்கருதலாம். (ஆனால் கிளைமாக்ஸில் வேறு வழியில்லாமல் ஹீரோவை ஹீரோவாக காண்பிக்க வேண்டி வந்ததோ என்னவோ)

போலீஸ் வேஷம் போட்டுக்கொண்டு விமானநிலையத்தில் நுழையும் பத்திரிகையாளர் காட்சியெல்லாம் காதுல பூ. பிரம்மானந்தத்தின் காமெடி இரண்டாபாதியில் கொஞ்சம் ஆறுதல்.

தமிழ்சினிமா மீண்டும் மீண்டும் இஸ்லாமியர்களை கொடூரமாக காட்சிப்படுத்துவதை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத்தான் படமாக்குமோ தெரியவில்லை. இதற்கு உன்னைப்போல் ஒருவன் கமலே பரவாயில்லை, படம் முழுக்க தன் தவறை உணர்ந்தோ உணராமலோ ஆங்காங்கே கதையில் வசனங்களில் பாத்திரப்படைப்பில் என கொஞ்சமாவது சப்பை கட்டியிருப்பார். ஆனால் ராதாமோகன் மிகநேரடியாக தன் அரசியலை நெற்றிப்பொட்டில் அடித்தது போல இது இஸ்லாமியர்களுக்கு எதிரான படமென பறைசாற்றுகிறார். அவருக்கு என் கண்டனங்கள். ஒருவேளை ராதாமோகன் முற்போக்காளராக இருக்கலாம். அவரிடம் கம்யூனிச சிந்தனைகள் இருக்கலாம், பொழைப்புக்காக இப்படி ஒரு படமெடுக்க நேர்ந்திருக்கலாம். என்னவானாலும் இப்படம் குப்பை.

ராதாமோகனின் முந்தைய படங்களான அழகியே தீயேவை நிச்சயம் இருபதுக்குமேற்பட்ட தடவைகள் பார்த்து ரசித்திருக்கிறேன். மொழி படம் கண்டு நெகிழ்ச்சியில் கண்ணீர்விட்டதுமுண்டு. ஆனால் இப்படம் எனக்கு எரிச்சலையும் கோபத்தையுமே ஏற்படுத்தியது.