Pages

26 March 2011

சட்டப்படி குற்றம்முன்னதாகவே சொல்லிவிடுகிறேன் இத்திரைப்படத்தை இளைஞர்கள் பார்த்தால் அவர்களுக்கு புரட்சிவெறி மேலோங்கி வெறிபிடித்து ரோடெங்கும் சட்டையை கிழித்துக்கொண்டு அலைய நேரிடுகிற அபாயமுண்டு. அந்த அளவுக்கு படம் முழுக்க புரட்சி புரட்சி புரட்சிதான். சாதா புரட்சியல்ல.. மசாலா போட்ட காரமான புரட்சி! படத்தின் பெயர் சட்டப்படிக்குற்றம்! விஜய் ரசிகர்களால் அன்போடு அப்பா என்றழைக்கப்படும் எஸ்.ஏ.சந்திரசேகர் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தலில் எப்படியும் அதிமுகவை வெற்றி பெற வைத்தே தீரவேண்டும் என்கிற ஆர்வவெறியோடு மிகமிக சீரியஸாக மூஞ்சை வைத்துக்கொண்டு ரத்தம் சூடேறி நரம்புகள் புடைக்க பல்லையெல்லாம் கடித்துக்கொண்டு இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் மேன்மையை விளக்க படத்திலிருந்து சில உதாரணங்கள். செந்தமிழரான சீமான இந்தப்படத்தில் ஒரு வக்கீல். சாதா வக்கீல் கிடையாது நேர்மையான நியாயமான நல்ல வக்கீல். (சீமான் பெயரை படித்ததும் உங்களுக்கு விசிலடித்து கைத்தட்ட வேண்டும் என்கிற உணர்வு எழுகிறதா? உடனே ஓடிப்போய் இந்தப்படத்தை பார்த்துவிடுங்கள்)

சீமானின் பெயர் பிரபாகர் (ஆஹா என்ன ஒரு குறியீடு!). கோர்ட்டில் ஒருலட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் திருடிய ராசாராமன் என்வரின் குற்றத்தை நிரூபிக்க வாதாடுகிறார். ‘’அய்யா நாம் உபயோகிக்கிற மிளகாய்த்தூளுக்கு வரிகட்டுகிறோம்.. சோப்புக்கு வரிகட்டுகிறோம்.. ஏன் நாம் சாப்பிடுகிற உப்புக்கு கூட வரி கட்டுகிறோம், அந்த பணத்தைத்தான்யா இவரு கொள்ளையடிச்சிட்டாரு’’ என்று சொல்ல... கோர்ட்டில் ஜ்ட்ஜாக அமர்ந்திருக்கும் ராதாரவி தன் தாடையில் கைவைத்து புருவம் உயர்த்தி ‘’அடேங்கப்பா ஆச்சர்யமாக இருக்கிறதே.. ஓஓ இப்படியெல்லாம் கூட நடக்குதா!’’ என்கிறார். தியேட்டரே கைத்தட்டல்களாலும் விசிலாலும் அதிர்கிறது. நாம் தமிழர் இயக்கமே சில விநாடிகள் தலைநிமிர்கிறது.

இன்னொரு காட்சியில் தினத்தந்தி படித்துக்கொண்டிருக்கும் அசிஸ்டென்ட் கமிஷனர் , ‘’என்னது சத்தியமங்கலத்துல பயங்கரமான ஆயுதங்கள் கைப்பற்றிட்டாங்களா...’’ என செய்தியை படித்து அதிர்ந்து போய் உடனே லுங்கி கட்டிக்கொண்டு மாறுவேடத்தில் கிளம்பிவிடுகிறார். அங்கே காட்டுக்குள் திரிகிறவர் , ஒரு கோயிலில் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் ‘’ஏம்மா இங்க தீவிரவாதிகள் யாராவது இருக்காங்களா?’’ என்று கேட்கிறார். தமிழ்சினிமா இதுவரை கண்டிராத புதுமையான காட்சி!

மூன்று காமெடி நடிகர்கள் எதையோ தேடி காட்டுக்குள் அலைகிறார்கள். அவர்களை சந்திக்கும் புரட்சிகர இளைஞர்கள் கேட்கும் முதல் கேள்வியே.. ''நீங்க உளவுத்துறையா'' , இல்லைங்க என்று சொல்கிறவர்கள் அடுத்த காட்சியில் புரட்சியில் இறங்கிவிடுகிறார்கள். ஆஹா!

இதுபோல படம் முழுக்க மிரட்டும் வசனங்கள். நெஞ்சம் பதைபதைக்கவைக்கும் இதுபோன்ற காட்சிகள் அடங்கிய படம்தான் சட்டப்படிகுற்றம்.

படத்தின் இயக்குனர் இந்த கதையை தன் இளம்பிராயத்தில் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். அதாவது எழுபதுகளின் கடைசியில் அல்லது எண்பதுகளின் துவக்கத்தில்! இவ்வளவு பழைய கதையை அண்மையில் எந்தப்படத்திலும் பார்த்ததில்லை. அதிலும் ஒரே நேரத்தில் பத்து கலெக்டர்களை கடத்துவது, பத்து கமிஷனர்களை கடத்துவது... தமிழ்சினிமாவுக்கு மிக மிக புதுசு. படத்தில் கதையெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை. சத்யராஜ் சேகுவாரா கெட்டப்பில் படம் முழுக்க சுருட்டு பிடிக்கிறார். சேகுவாரா குளிருக்கு சுருட்டு பிடித்து.. அவர்காலத்திற்கு புல்லட்டில் போனா.. இவனுங்க எதுக்கு போறானுங்க , என்கிற சுய எழுச்சியால் உண்டாகிற கேள்விகளை தவிர்த்துவிடுவோம்.

படத்தின் இயக்குனர் லாஜிக் என்றால் என்ன அது எந்த கடையில் கிடைக்கும் என்கிற கேள்வியை படம் முழுக்க வித்யாசமான காட்சிகளால் தொடர்ந்து எழுப்புகிறார். புதுமுக நடிகர்களும் நடிகைகளும் கையில் துப்பாக்கியோடு படம் முழுக்க காட்டுக்குள் கேரம் போர்ட் விளையாடுகின்றனர். மரத்தில் வெட்டியாக அமர்ந்திருக்கின்றனர். வேலை வெட்டியில்லாமல் பொழுதுபோக்குக்கு சத்யராஜோடு காட்டுக்குள் நடக்கின்றனர்.
போராளிகளிடம் இவ்வளவு ஜனநாயகமாக நடந்துகொள்கிற உன்னதமான தலைவனை உலகில் எங்குமே பார்க்க முடியாது. அதிலும் என் உச்சி மண்டைல சுர்ர்ருங்குது பாடலுக்கு போராளிகள் நடனமாட அதை சுருட்டுபிடித்தபடி ரசிக்கும் தலைவனும் உண்டா? இதுபோல ஏதும் இயக்கங்கள் இருந்தால் நாளைக்கே போய் அனைவரும் சேர்ந்துவிடலாம்.. உண்ண உணவு, உடுக்க நல்ல மிடுக்கான உடை, அவ்வப்போது குழுவாக தமிழ்பாடலுக்கு குத்துப்பாட்டு, போரடித்தால் கடலை போட அழகழகான ஃபிகர்கள்.. இப்படியெல்லாம் படம் எடுத்தால் ஏன்தான் தமிழ் இளைஞர்களுக்கு புரட்சிவெறி வராது.

படத்தில் உடன்பிறப்பே உடன்பிறப்பே என்று யாரோ பேசுகிற வசனத்தை சென்சார் செய்திருக்கிறார்கள். இதுதான் எஸ்ஏசிக்கு கிடைத்த முதல்வெற்றி. இனி அடுத்தடுத்து படங்களை தொடர்ந்து எடுத்தால் தமிழகத்தில் திராவிடம் என்கிற ஒரு பாரம்பரியம் இருந்த தடயமே இல்லாமல் அழித்துவிடலாம். எஸ்ஏ சந்திரசேகர் இதுபோன்ற படங்களை எடுக்காமல் இருப்பதற்காகவாவது திராவிடக்கட்சிகள் ஊழலை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம்.

படம் முழுக்க பஞ்ச் மழை! படத்தின் இறுதி பஞ்ச் தமிழக அரசியல் வரலாற்றில் மிகமுக்கியமானது என்பதால் அதை ஆவணப்படுத்த வேண்டிய கட்டாயம் எனக்கிருப்பதாக எண்ணுகிறேன்.. ‘’இனிவரும் காலம் இளையதளபதிகளின் காலம்’’

இதற்குமுன் லதிமுக வின் தலைவரும் சகலகலாசமர்த்தருமான டி.ராஜேந்தரின் திரைப்படங்களில் இதேவகையான இன்பத்தை மகிழ்ச்சியை பேரானந்த்த்தை அனுபவத்திருக்கிறேன். இப்படமும் எனக்கு அதேவித திருப்தியை மகிழ்ச்சியை உள்ளொளி தரிசனத்தையும் தருகிறது. படத்தின் ஒவ்வொரு விநாடியிலும் ஒவ்வொரு ஃபிரேமிலும் கிடைக்கிறது. அதிமுகவினர் இப்படத்தை பார்த்தால் திமுகவில் இணைந்துவிடுகிற வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

ஜெயாபிளஸ் தொலைகாட்சியை இரண்டரை மணிநேரம் தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ அதே மகிழ்ச்சியை இப்படமும் தருகிறது.சிரித்து மகிழ சிறந்தபடம் இந்த சட்டப்படிக்குற்றம்!

பாவம் விஜய்!