Pages

07 May 2011

பரளிக்காடு
பரளிக்காடு என்கிற இடம் கோவைக்கு அருகிலிருந்தாலும் கோயம்த்தூர்காரவீங்களுக்கே அதிகமாக தெரியாது. இது பில்லூர் டேமுக்கு கொஞ்சம் முன்னால் ஊட்டிமலைக்கு கொஞ்சம் பின்னால இருக்கிற சின்ன கிராமம். புத்தம்புதிய சுற்றுலா தளம். யாருக்கும் அதிகமாக தெரியாது என்பதே இதன் சிறப்பு. கூட்டம் மிக குறைவாகவே இருக்கிறது. நண்பனோடு பைக்கில் போவதாக முடிவானது. பெட்ரோலை நிரப்பிக்கொண்டு நண்பனின் பைக்கில் அதிகாலை ஐந்து முப்பதுக்கே , கோவையிலிருந்து கிளம்பினோம். காலை பத்து மணிக்குள்ளாக பரளிக்காடு சென்றடைந்தால்தான் பரிசல் பயணம் போக முடியும்.

பரளிக்காடு செல்வதாக இருந்தால் ஒருவாரம் முன்பாகவே அந்த பகுதி வன அலுவலரை தொடர்பு கொண்டு அனுமதி வாங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

பரளிக்காடு கோவையிலிருந்து எழுபது கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் அழகான பிக்னிக் ஸ்பாட். ஒரு நாள் சுற்றுலா போய் வர ஏற்ற இடம், பரிசலில் பயணிக்கலாம்,ஜாலியாய் சுற்றலாம் என்றெல்லாம் நண்பர் சஞ்சய்காந்தியின் இணையதள கட்டுரை படித்து தெரிந்துகொண்டிருந்தேன். அதையே பின்பற்றி கோவையிலிருந்து துடியலூர் வழியாக மேட்டுப்பாளையம் சாலையில் காரமடையை நோக்கி பயணித்தோம். மூன்றாண்டுகள் கல்லூரிக்கு அந்த சாலையில்தான் சென்று வந்திருக்கிறேன். சாலை முழுக்க என் கல்லூரி நினைவுகள் எங்கும் காய்ந்த சருகுகளைப்போல பரவிக்கிடப்பதை உணர முடிந்தது. ஆனால் அச்சாலையோ அடையாளம் தெரியாமல் அழித்தொழிக்கப்பட்டு.. மரங்களில்லாமல் என் தற்கால மண்டையை போல வறட்சியாக மாறிப்போயிருந்தது.

மேட்டுப்பாளையம் சாலையில் சூரிய ஒளியே படாமல் பயணித்த காலமெல்லாம் போய் நிழலுக்கு ஒதுங்க ஒரு மரம் கூட இல்லாமல் மொத்தமாக வெட்டிசாய்த்திருக்கிறார்கள். சில மரங்கள் வேறோடு பிடுங்கப்பட்டுள்ளது. மரங்களில் காம்பஸ்ஸால் ஹார்ட்டின் போட்டு பேரெழுதி.. ம்ம் கொஞ்சம் வருத்தத்தோடு கோவையிலிருந்து 35 கி.மீட்டர்கள் பயணித்து காரமடையை அடைந்தோம். காரமடையிலிருந்து மேலும் 35 கி.மீட்டர்கள் கடந்தால் பரளிக்காடு.

காரமடையிலிருந்து பரளிக்காடு செல்ல புகழ்பெற்ற காரமடை கோயில் தாண்டி முதல் இடது பக்க சாலையில் பயணிக்க வேண்டும். அந்த சாலையில் பயணிக்க பரிணாம வளர்ச்சி போல நகரம் தேய்ந்து தேய்ந்து முழுக்கிராமங்களை காண முடிகிறது. புஜங்கனூர் என்னும் ஊரைத்தாண்டினால் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலை இரண்டு பக்கமாக பிரிகிறது. ஒருபக்க சாலை தோலம்பாளையம் போகிறது இன்னொரு பக்கம் போனால்தான் பரளிக்காடு போக முடியும். அந்த சாலையில் ஒருகிலோ மீட்டருக்கு ஒரு வீடுதான் இருக்கிறது.

வழிமாறி போய்விட்டால் வழிகேட்க கூட ஈ காக்கா இல்லை. அதனால் கவனம் முக்கியம். போகும் வழியெங்கும் தோப்புகள், தூரத்தில் மலைகள், பசுமைகள்.. ஆஹா.. நம் தோழர்கள் ஆங்காங்கே வண்டியை நிறுத்தி இயற்கையை ரசித்தபடி பயணித்தால் சாலை குறுக்கும் நெடுக்குமாக வளைந்து வளைந்து திரும்புகிறது. ஆச்சர்யம் சாலைகளில் ஒரு சின்ன குழி கூட கிடையாதென்பதுதான். வெள்ளியங்காடு என்னும் ஊர்தான் மலையடிவாரத்தில் இருக்கும் கடைசி கிராமம். டீ குடிப்பது, கட்டிங் அடிப்பது, திண்பன்டம் வாங்குவது என அனைத்தையும் அங்கேயே முடித்துக்கொள்வது நல்லது.

வெள்ளியங்காடு தாண்டி பயணித்தால் இருப்பக்கமும் கொஞ்சமாய் மரங்கள் வரவேற்க குண்டுங்குழியுமான சிறிய சாலை காட்டுக்குள் நுழைகிறது. அதில் நாமும் நுழைந்து வெளியே வந்தால் முதல் செக்போஸ்ட் வரவேற்கிறது. பரளிக்காடு போகிறோம், போட்டிங் புக் பண்ணிருக்கோம் என்பதை மட்டும் சொன்னாலே போதும் , ராஜமரியாதையோடு செக்போஸ்ட்டை திறந்துவிடுவார் அத்துவானக்காட்டில் தனிமையில் அமர்ந்திருக்கும் மீசைக்கார காவலர். உள்ளே நுழைந்தோம். நான்கு பக்கமும் மலைகள். நடுவே பாதை. ஆங்காங்கே வித்தியாசமான பறவைகள்.

வெள்ளையுடலும் கறுப்பு சிறகுகளும் கொண்ட குட்டிப் பறவையொன்றை படம் பிடிக்க துரத்தினோம். கடைசிவரை சிக்கவேயில்லை. ஹேர்பின் பெண்டுகளெங்கும் வண்டியை நிறுத்தி மலைகளை பார்த்தால் அச்சமும் மகிழ்ச்சியுமாக உணர முடிகிறது. அவ்வளவு ரம்மியமான இடம். காரில் சென்றால் இதையெல்லாம் பொறுமையாக நின்று ரசிக்க முடியுமா தெரியவில்லை. பைக்கில் போவதே சிறந்தது.

சில மலைகளையும், வளைவுகளையும் பொறுமையான வேகத்தில் கடந்து சென்றோம். செல்லும் வழியெங்கும் சின்ன சின்ன மலைகிராமங்கள். வாழைத்தோப்புகள். வாழைத்தோப்புகளுக்கு மத்தியிலே இருக்கிற மெகா சைஸ் மரங்களின் மேல் அழகான சிறிய குடில் அமைத்திருந்தனர். யானை விரட்டுவதற்காக இரவில் அங்கேயே அந்த தோப்பின் ஓனர் தங்குமிடமாம். ஒரு தோப்பில் நுழைந்தால்.. நாயொன்று துரத்த ஆரம்பித்துவிட்டது. காட்டுக்குள்ளே எப்படி இவ்ளோ பெரிய நாய் என்கிற கேள்வியோடே ஓடினோம். நல்ல வேளையாக தோப்பின் முதலாளி வந்து எங்கள் தொடைச்சதையை காப்பாற்றினார்.

யானைகளிடமிருந்து வாழைத்தோப்பினை காப்பதற்காக மின்வேலிகள் அமைத்துள்ளனர். அதில் மின்சாரம் பாயும்போது அடையாளம் தெரிய கம்பிகளில் ஒரு கிலோமீட்டருக்கு ஓரிடத்தில் டியுப்லைட் மாட்டியிருக்கின்றனர். லைட்டெரியும்போது தொட்டால் ஷாக்கு நிச்சயம். சுற்றுலா வரும் பயணிகள் அந்த டியூப் லைட்டை உடைத்துவிடுவதாக வருத்ததோடு கூறினார். மரக்குடிலில் ஏறிப்போய் பார்த்தோம். ரேடியோ லைட்டு இரவு படிக்க ஆனந்தவிகடன் குமுதம் என பல ஏற்பாடுகளும் செய்து வைத்திருக்கிறார். கரண்ட்டுக்கு சோலார் பேனல்கள் குடிலின் மேலேயே பொறுத்தப்பட்டிருக்கின்றன. இரவு அதிலேயே தங்கிவிட ஆசையாய் இருந்தது.

கொஞ்ச நேரம் குடிலுக்குள் அமர்ந்து சுற்றிப்பார்த்தால்.. நான்கு பக்கமும் பிரமாண்ட மலைகள், தூரத்தில் பறக்கும் பெயர்தெரியாத பறவைகள், வாழைத்தோப்பு என அழகு! மனசேயில்லாமல் குடிலிருந்து இறங்கினோம். காலை நேரமென்பதால் லேசான குளிருக்கு இதமாக ஒரு தம்மைப்போட்டுவிட்டு புறப்பட்டோம்.

இன்னும் கொஞ்சம் தொலைவு செல்ல செல்ல கிராமங்கள் குறைந்து அடர்த்தியான காடுகள் தெரிகின்றன. இங்கே மைனாக்களும்,நீளமான நீலமான தோகை கொண்ட பெரிய சைஸ் மயில்கள், பேன் பார்க்கும் குரங்குகள் என ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே சென்றோம். காட்டையும் விலங்கு பறவைகளையும் பார்த்து ரசித்தபடியே சென்றால் அத்திக்கடவு பாலம் வரவேற்கும். மிகவும் பழைய பாலம் போல (பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம்) அத்திக்கடவு ஆறு கோடைகாலத்திலும் சிகப்பு நிறத்தில் செம்மண் கலந்து ரத்த ஆறு போல ஓடிக்கொண்டிருந்தது. பாலத்தின் கீழே ஆற்றங்கரையோரம் சில ஆதிவாசி இளைஞர்கள் பாறையின் மேல் எதையோ வைத்து அரைத்துக்கொண்டிருந்தனர்.

ஆவலோடு பாலத்திற்கு கீழே கஷ்டப்பட்டு இறங்கிப்போய் பார்த்தோம்.. என்ன பாஸ் அரைக்கறீங்க.. மூலிகையா. திருதிருவென விழித்தனர். ஏதோ சொன்னார்கள் புரியவில்லை. தமிழ்தான், ஆனாலும் புரியவில்லை. இருளர்கள். இருளா பாஷை கலந்த தமிழில் பேசினர். அருகில் சில நகரத்து இளைஞர்கள் காத்திருப்பதை பார்த்து அவர்களிடம் கேட்டபோது.. ஒரிஜினல் கஞ்சா பாஸ்! கோயம்த்தூர்ல கிடைக்காது.. என்று கீக்கீ என்று சிரித்தனர். தெறித்து ஓடிப்போய் பைக்கில் ஏறிக்கொண்டோம். பாலத்திற்கு மேலே ஏதோ ஒரு அப்பிராணி குடும்பம் நிறைய பெண்பிள்ளைகளோடு காலை உணவை முடித்துக்கொண்டிருந்தது. கொஞ்சம் திகிலாக இருந்தாலும் அவர்களிடம் இடத்தை சீக்கிரம் காலி பண்ணுங்க காலிப்பசங்க வந்து போற இடம் என எச்சரித்துவிட்டு கிளம்பினோம்.

அத்திக்கடவு பாலத்திலிருந்து சில கி.மீட்டர்கள் தூரத்தில் காத்திருக்கிறது இரண்டாவது செக்போஸ்ட். நாம் ஒருவாரம் முன்பு போனில் அழைத்து பேசிய வனக்காவலர் இங்கேதான் இருப்பார். அவரிடம் நம்மைப்பற்றிய விபரங்களை அளித்தால் ஒரு லெட்ஜரில் கையெழுத்து வாங்கிவிட்டு, பரளிக்காடு செல்லும் வழியை சொல்வார், வேலை வெட்டியில்லாமல் இருந்தால் அவரே நம்மோடு வந்து வழிகாட்டுவார். செக்போஸ்ட் தாண்டியதுமே காட்டாற்று பாலம் ஒன்றை தாண்டி செல்ல வேண்டும். காட்டாற்று பாலத்தில் சில பெரிய மரங்கள் அடித்துக்கொண்டு வந்து அவை பாறைகளுக்கு நடுவே சிக்கியிருந்ததை பார்த்தோம்.

அங்கிருந்து இரண்டாவது செக்போஸ்ட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர் பரளிக்காடு கிராமத்திற்கு, செல்லும் வழியெல்லாம் லட்சக்கணக்கில் பட்டாம்பூச்சிகள். பைக் டயரில் ஏற்றி கொன்றுவிட அஞ்சி சில மீட்டர்கள் வண்டியை மெதுவாக தள்ளிக்கொண்டே செல்ல நேரிட்டது. சாலைகளை அடைத்துக்கொண்டு அவை பறப்பது அழகு. கார்கள் சில அவற்றை மிதித்து அழித்துச்சென்றதை பார்க்க சங்கடமாக இருந்தது. எட்டாவது கிலோ மீட்டரில் கையில் சுக்கு காபியோடு வரவேற்கிறார் இன்னொரு வனக்காவலர்.

மிதமான குளிருக்கும், நீண்ட பயணத்துக்கும் சுக்கு காபியின் சுவை சுகமாக இருந்தது. வெல்கம் ட்ரிங்க் போல! கிராமத்திற்குள் நுழைந்ததும் சுக்கு காபியை சுவைத்தபடி நோட்டம் விட்டோம். கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் சன்டிடிஎச் இருந்தது , அனைவரது வீட்டிலும் டிவி இருக்கிறது என்பதை உணர்த்தியது. ஒரு வீட்டில் வாசலில் இலவச டிவி தந்த கலைஞருக்கே உங்கள் ஓட்டு என்கிற போஸ்டர் அதை உறுதி செய்தது. ஒரு வீட்டின் சுவற்றில் ஒருபக்கம் கலைஞரும் இன்னொருபக்கம் ஜெயாவும் வீற்றிருந்தனர். தெருவில் பையன்கள் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர். எல்லோர் வீட்டிலும் சோலார் பேனல்கள் இருக்கின்றன. நைட்டி அணிந்த பெண்களை பார்க்க முடிந்தது. ஊருக்குள் மொத்தமாக 35 குடும்பங்கள்தானாம்.

கிராமத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் பெரிய ஏரி. பில்லூர் அணைக்கட்டுக்கு நேர் பின்புறமாக இருக்கிறது. இதில் பரிசல் பயணம் போகவும், மதிய உணவுக்கும், அதற்குபிறகு ட்ரெக்கிங் போகவுமாக மூலிகை குளியலுக்குமாக ஒரு நபருக்கு 300 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பரிசல்கள் என்றதும் ஏதோ மூங்கிலில் செய்யப்பட்டவையாக இருக்குமென நினைத்திருந்தேன். பாதுகாப்பு கருதி (பரிசல் பாதுகாப்புக்காக பாறைகளில் மோதி உடையாமல் இருக்க) ஃபைபர் கிளாஸால் உருவாக்கியுள்ளனர். அதற்கு நீலம் பச்சை என விதவிதமான நிறங்களும் பூசப்பட்டு நமக்காக காத்திருக்கின்றன. நமக்கு ஆரஞ்சு நிறத்தில் பாதுகாப்பு ஜாக்கெட்டு போட்டுவிடுகின்றனர்.

பரிசல் ஓட்டுபவர்கள் உள்ளூர் இளைஞர்கள்தான். அவர்களுக்கு வேலைவாய்ப்பு. பேச்சுக்கொடுத்தோம். எல்லாருமே இருளர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள். தூரத்தில் ஒரு மலையை காட்டி.. அதுக்கு அந்தல்ல ஊட்டிங்க.. நடந்தே போனா ரண்டுமண்ணேரத்துல போய்ர்லாங் என்கின்றனர். அங்கிருந்து ஊட்டி செல்ல பேருந்துகள் கூட உண்டாம் (மலை மேலிருந்து). பில்லூர் டேம் குறித்தும், இங்கிருந்து தண்ணீர் எப்படி செல்கிறது என்பது குறித்தெல்லாம் பேசுகின்றனர். ஏரியில் சில அரிய பறவைகளையும் பார்க்க முடிகிறது. ஏரியின் ஒரு கரையில் இறங்கி காட்டுக்குள் ஒரு ரவுண்டு போய் சொல்கின்றனர். கொளுத்தும் வெயிலில் எங்கேங்க சுத்தறது என்று நினைத்து வேண்டாம் என மறுத்துவிட்டோம். காட்டை சுற்றிப்பார்க்கிறவர்கள் சுற்றலாம்.

அரைமணிநேரம் குலுங்க குலுங்க படகு சவாரி முடித்து கரையொதுங்கினால் புன்னை மரங்களின் நிழலில் ஒரு குட்டித்தூக்கம் போடலாம். அல்லது அங்கிருந்து நடந்தே சென்றால் அருகிலேயே காத்திருக்கிறது ஒரு அழகிய சோலை. இரண்டு பிருமாண்ட ஆலமரங்களின் நிழலில் கயிற்று கட்டில் போட்டிருக்கின்றனர். அதில் சிலமணிநேரங்கள் இளைப்பாறலாம். அல்லது ஆலமரங்களில் ஊஞ்சலாடலாம். அல்லது ஃபிகர்களை சைட் அடிக்கலாம். பெண்கள் இயற்கை உபாதைகளை தணிக்க மூடப்பட்ட சுத்தமான டாய்லெட் வைத்திருக்கின்றனர். வன அலுவலரிடம் பேசியபோது.. காட்டுக்குள்ள வரவீங்க ஆம்பளைங்களா இருந்தா பிரச்சனையில்ல பாவம் பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க அதான் இந்த ஏற்பாடு என்றார். இதற்கான யோசனையை கூட அந்த மலைகிராமத்து மகளிர் சுய உதவிக்குழுவிலிருக்கும் சில பெண்கள்தான் கொடுத்தார்களாம்.

மதிய உணவு ரெடி! மலைகிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் மதிய உணவை செய்து கொடுக்கிறார்கள். நம்மிடம் முன்னரே வசூலிக்கும் பணத்தில் இவர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் கொடுக்கப்படுகிறது. களியும் சிக்கன் குழம்பும் கீரைக்குழம்பும் பரிமாறப்படுகிறது. குழந்தைகள் ஆர்வத்தோடு களி தின்பதை பார்க்க முடிந்தது. களிவேண்டாம் என்கிறவர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி,தயிர்சாதம்,சப்பாத்தி என மகத்தான ஒரு மதிய உணவு படைக்கப்படுகிறது. அதிலும் அந்த சிக்கன் கிரேவி அற்புதமாக சமைக்கப்பட்டிருந்தது. ஒரு பிடிபிடித்துவிட்டு கயிற்றுக்கட்டிலில் தூக்கம் போட்டால் சொர்க்கம்!

இரண்டு மணிக்கு எழுந்து வன அலுவலரிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டோம். அப்போ ட்ரெக்கிங்? அது அத்திக்கடவு பாலத்தை கடந்து வந்தோமில்லையா அங்கேதான். பைக்கில் மதிய வேளையில் மெதுவாக ஓட்டிச்செல்ல எங்கும் விலங்குகளின் விநோத சப்தங்கள். வண்டியை நிறுத்தி காட்டுக்குள் புகுந்து ஒரு ரவுண்டு விட்டு.. ஏதாவது மான் புலி கரடிகள் கண்ணுக்கு தெரியுதா என தேடிப்பார்த்தோம். ஒன்றும் அகப்படவேயில்லை. அத்திக்கடவு பாலத்திற்கு அருகில் செல்லுகிற சிறிய சாலையில் கொஞ்சதூரம் பயணித்தால் ஆற்றின் ஓசை கேட்கும் அடர்த்தியான காடுகள் தெரிகின்றன.

அதில் இறங்கி நடக்கத்தொடங்கினால், லேசான மழைத்தூறலுக்கே பாதைகள் வழுக்கத்தொடங்கிவிடுகின்றன. கெட்டியான செம்மண் பாதை. ஆங்காங்கே சின்ன சின்ன பாறைகள். மெதுமெதுவாக நடந்து காட்டை கடந்து சென்றால் அழகான சிகப்பு ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த இடத்திற்கு பெயர் சிறுகிணறாம். ஆதிவாசிகளின் குட்டி கோயில் ஒன்றும் இருந்தது. முழுக்க கூழாங்கற்களால் உருவாக்கியிருக்கிறார்கள். ஆற்றில் இறங்கினால் வெயில் காலத்திலும் ஐஸ்கட்டி போல இருக்கிறது. தம் கட்டி உள்ளே இறங்கி ஒரு உற்சாக நீச்சல் போட நேரம் நான்காகி விட்டது. அது மூலிகை நீராம். குளித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்குமென்றார் எங்களோடு துணைக்கு வந்த வன அலுவலர். நிஜமாகவே லிரில் புத்துணர்ச்சிதான். புரண்டு புரண்டு குளித்தோம். நீந்தினோம். உற்சாகத்தில் குதித்தோம். திடீரென போதும் போதும்.. கிளம்புங்க என்னும் குரல்வந்தது.

ஐந்து மணிக்கு மேல் காட்டுக்குள் இருப்பது ஆபத்து, யானைகள் தண்ணீருக்காக மலையிலிருந்து இறங்குகிற சமயம் என எச்சரித்து ஓடுங்க வூட்டுக்கு என அனுப்பிவைத்தனர். அங்கிருந்து கிளம்ப மழை பெய்யத்தொடங்கியது. மழையில் நனைந்தபடி பைக்கில் மலைப்பாதையில் பயணிப்பது கொஞ்சம் ஆபத்தானதாக இருந்தாலும் த்ரில்லிங்கான அனுபவமாக இருக்குமே என்கிற எண்ணத்தோடு பயணித்தோம். செல்லும் வழியில் எங்கோ யானைகளின் பிளிறலையும் மயில்களின் கொடூரமான சப்தங்களையும் கேட்டபடி மறக்க இயலாத ஒரு பயணத்தின் அற்புதமான நினைவுகளை மூட்டைகட்டிக்கொண்டு உற்சாகமாக கோவையை நோக்கி திரும்பினோம்!


சில தகவல்கள்

கட்டணம் - பெரியவர்களுக்கு 300 ரூபாய். பத்துவயதுக்கு குறைவானவர்களுக்கு – 200 ரூபாய்.

(படகில் செல்ல, மதிய உணவு, டிரக்கிங், மூலிகை குளியல் அனைத்தும் சேர்த்து)

இந்த சுற்றுலாவிற்கு சனி மற்றும் ஞாயிறு இரு தினங்கள் மட்டும்தான் அனுமதி , 40பேர் கொண்ட குழுவாக கேட்டால் மட்டுமே மற்ற தினங்களில் அனுமதி தரப்படும். அதுவும் ஒரு வாரம் முன்பாகவே வன அலுவலரை தொடர்புகொண்டு புக்கிங் செய்ய வேண்டும்.
விபரங்களுக்கு - வன அலுவலர் –ஆண்டவர் - +91 9047051011