Pages

23 June 2011

பாட்டுத்தலைவன்
நீதிபதிகள் தீர்ப்பை சொல்லச் சொல்ல அவனுடைய பார்வையெல்லாம் அப்பாவை நோக்கியதாகவே இருந்தது. அவரோ தன் இரண்டு கைகளையும் முகத்துக்கு நேராக கோர்த்த படி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார். ஸ்ரீநாத் எலிமினேடட்! நீதிபதிகள் அறிவித்தனர். அப்பா அழுதுவிட்டார். அழுகை கோபமாக மாறியிருக்க வேண்டும். மனதிற்குள் ஸ்ரீநாத்துக்கு இனி பாடவேண்டாம் என்கிற மகிழ்ச்சி. சிரிக்க வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டான். டிவியில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த லட்சோபலட்ச ஜனங்களும் அழுதனர். பிண்ணனியில் சோக இசை வடிய... ‘ஆறுவயதிலேயே அசாத்திய திறமை கொண்ட இவர் போட்டியை விட்டு இப்போது வெளியேறினாலும் வைல்ட் கார்ட் சுற்றில் மீண்டும் பாடுவார்..’ பிண்ணனி குரல் ஒலிக்க நிகழ்ச்சி முடிந்தது.

இன்னும் இரண்டு வாரங்களில் எக்ஸலன்ட் சிங்கர் போட்டியில் வொய்ல்ட் கார்ட் ரவுண்ட். தோற்றவர்கள் கூடி பாடுவார்கள். அதில் இருவருக்கு இறுதி வாய்ப்பு. வெற்றிப்பெற்றே ஆகவேண்டும். அவனுக்கல்ல அவனுடைய அப்பாவுக்கு. அவர் வெறிபிடித்த மாதிரி அலைந்தார். பல இசை கலைஞர்களோடுப் பேசினார். எஸ்.எம்.எஸ் ஓட்டு மிக முக்கியம்.. ஏர்பெல் நிறுவனத்திலிருந்து உயர் அதிகாரியிடம் நிறைய ஓட்டுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு விலை பேசத் தொடங்கினார்.

கடைசி சுற்றுப்போட்டியில் அவனை எலிமினேட் செய்தபோது எப்படி அழுதான் தெரியுமா? அதை அவனால் மட்டுமே விவரிக்க முடியும். தோற்றதற்காக அவன் அழவில்லை. அவனுக்கு தோல்வியென்றால் தெரியாது. அவன் பிறந்ததிலிருந்து அப்பா அவனை அது போல திட்டினதே இல்லை. பின் மண்டையில் அடித்து அடித்துத் திட்டினார். சனியனே சனியனே! எத்தன வாட்டி பிராக்டீஸ் பண்ணே! அப்படி என்ன ஞாபக மறதி.. இனி நான் எப்படி ஆபீஸ்ல மொகத்த காட்டுவேன்..

ஒவ்வொரு சுற்றிலும் அவன் வெற்றி பெற்று முன்னேறும் போதும் அப்பா நிறைய பாராட்டுவார். சிரிப்பார். நண்பர்களுக்கெல்லாம் போன் போட்டு சார் ஸ்ரீநாத் ஜெயிச்சிட்டான். பாடகர் பாலா அசந்துட்டார். அப்படியே பையன அலேக்கா தூக்கிட்டார். பாடகி அனுசுயாஸ்ரீ எப்படி பாராட்டினாங்க தெரியுமா , வருங்காலத்துல பெரிய சிங்கரா வருவானு சொன்னாங்க.. தினமும் நிறைய ரசிகர்கள் போன் பண்றாங்க!

மகிழ்ச்சியில் சாக்லேட் வாங்கித்தருவார். அவன் சாக்லேட்டை வாங்கி ஆவலோடு பிரித்து வாயில் போடும் போது அதை பிடுங்கி விடுவார். பாதி உடைத்துக்கொடுப்பார். குரல் கெட்டுவிடுமாம். ஐஸ்கிரீம் அறவே கிடையாது. ஆனால் மடியில் வைத்துக்கொஞ்சுவார். அவன் என்றால் அவருக்கு உயிர். தன்னுடைய லட்சியம் கனவு எல்லாமே அவன்தான் என்று கருதினார். விளையாட்டாகத்தான் எக்ஸலன்ட் சிங்கரில் ஸ்ரீநாத் கலந்து கொண்டான். யாருமே எதிர்பார்க்கதது நடந்தது. அடுத்தடுத்த சுற்றுகளில் அவன் ஜெயிப்பதும், தொடர்ந்து அவனுக்கு வந்து விழும் பாராட்டும்.. அவையெல்லாம் அப்பாவை நோக்கியாதாய் மாறியதும் .. காலில் இறகு முளைத்து பறக்கத் தொடங்கினார். இத்தனை புகழை அவன் பரம்பரையில் யாருமே பார்த்ததில்லை.

இப்போதெல்லாம் அவன் ஹோம் வொர்க் செய்வதில்லை. ஸ்கூலுக்கு எப்போதாவதுதான் செல்கிறான். மிஸ் கூட அவனை திட்டுவதில்லை , எப்போதும் அடுத்த என்ன பாட்டு பாடப்போறடா செல்லம்? பாலா சார்கிட்ட ஒரு ஆட்டோகிராப் வாங்கித்தரீயா? மாதிரியான கேள்விகள்தான்! ஹோம் வொர்க் ஏபிசிடி பிரச்சனைகள் இல்லை.. அது ஒரு பக்கம் மகிழ்ச்சிதான்.

பூங்காவுக்கு போய் சறுக்கி விளையாட முடிவதில்லை. பூங்காவுக்குள் நுழைந்தாலே ஏ அங்கபாரு ஸ்ரீநாத் என்று கூட்டம் கூடி விடுகிறது. சிலர் ஆட்டோகிராப் கூட கேட்கிறார்கள். அவன் பெயரை அட்சர சுத்தமாக எழுத பழக்கிவிட்டிருக்கிறார் அப்பா. யாரோடும் விளையாடுவதில்லை. அவன் கத்திக்கொண்டு எங்காவது ஓடினால் பிடித்துக்கொள்வார். ஏன் இப்படி கதர்ற வாய்ஸ் என்னாவறது..

தன்னுடைய முழுநேர பிஸினஸைவிட்டுவிட்டு இப்போதெல்லாம் எப்போதும் ஸ்ரீநாத்தை கவனிப்பதையே முழுநேர வேலையாக செய்துகொண்டிருந்தார். அதில் அவனுடைய அம்மாவுக்கு கொஞ்சம் மகிழ்ச்சிதான். முன்னெல்லாம் அர்த்தராத்தியில் கதவு தட்டி விடிவதற்கு முன் விமானத்தில் பறப்பார். ஆனால் அப்பாவின் பாட்டுக்காரன் பயணம் அம்மாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதை சொன்னதற்கு சண்டையாகி சண்டை முற்றிப்போய் டைவர்ஸ் வாங்கிட்டு உங்கப்பன் வீட்டுக்கே போய்க்க்கோடி என்பதாக , அம்மா சரணடைந்து சமாதானத்திற்கு வர முடிவுற்றது.

மியூசிக் சேனல்களுக்கு இணையாக இருபத்திநான்கு மணிநேரமும் வீடுநிறைய பாட்டுதான். காலையில் நான்கு மணிக்கே எழுப்பி விடுவார் அப்பா. தூக்கம் தூக்கமாக இருக்கும். டிவிஎஸ் பிப்டி அதிர பாட்டு மாஸ்டரும் வந்துவிடுவார் , அப்பா பக்கத்திலேயே அமர்ந்த படி அவனையே பார்த்துக்கொண்டிருப்பார். அவன் அரைக்கண்ணில் தூங்கியபடி பாடுவான். மீண்டும் மீண்டும் ஒரே பாட்டை பாடுவான். மாஸ்டர் விடாப்பிடியாக வாயில் மாவா வழிய ‘பையன் நன்னா பாதறான் அந்னா இந்நுனும் கொந்தம் பிராக்திஸ் பந்தா சரியாபூதூம்.. ‘’ என்பார். மாவா வாசனை அவனுடைய ஏசி அறையில் நிரம்பி எங்கும் மாவா பொடி காற்றில் அலைவதாய் கற்பனை செய்து கொள்வான். அந்த பொடி தூளாகி வானில் பரவி , கோலங்களைப்போல விதவிதமான உருவங்களாய் மாறி மாறி ஓடி ஆடி வித்தைகள் காட்ட.. ‘’தே கந்ணா இன்னடா நீ காலைலயே தூங்கதே..’’ என்று பின்மண்டையில் தட்டி எழுப்பி விடுவார் அந்த மாவா மாஸ்டர்.

இவன் விழித்துக்கொண்டு மீண்டும் சாசச சாசச ரீரிரி என கத்துவான். பக்கத்துவீட்டிலிருப்பவர்களுக்கு கூட இவன் இன்ஸ்பிரேஷன் ஆகிப்போயிருந்தான். தங்களுடைய பிள்ளைகளுக்கு அவனை காட்டி காட்டி ‘பாரு அதுவும்தான் புள்ள! என்னாமா பாடி என்னமா ஜெயிச்சுண்டு வந்திருக்கு.. நீயும்தான் இருக்கியே சரியான மண்ணு.. உன் அப்பா மாதிரி , சரியான தத்தி’ என்று பேசுவது ஸ்ரீநாத்தின் ஏரியாவில் சாதாரணமாகிவிட்டது. அவனுடைய வீட்டு வேலைக்காரியின் பையன் குமாரும் எக்ஸலன்ட் சிங்கர் போட்டியில் கலந்து கொண்டான். ஒப்புக்கு சப்பானியாக பாடவைத்து முதல் சுற்றிலேயே அவனுடைய சாரீரம் சரியில்லை என விரட்டிவிட்டார்கள். அதில் ஸ்ரீநாத்துக்கு நிறைய வருத்தம். ஆனால் குமாருக்கு வருத்தமில்லை எப்போதும் போல அம்மாவோடு வந்து ஸ்ரீநாத் பாடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். அப்பா அவனோடு பேச விடுவதுமில்லை. பேசவிட்டால் நிறைய கதை சொல்லுவான்.. எல்லாமே அவனே சொல்லும் கதை. அவன் ஏரியாவில் கிடைக்கும் தேன்மிட்டாய் தருவான். ச்சே ஏன்தான் பாடுறேனோ! மீனாட்சிக்கு மகனா பொறந்திருக்கலாம் என்று நினைப்பான்.

இன்னும் மூன்று நாள்தான் இருந்தது. இவன் இதுவரைக்கும் அந்தப் பாடலை ஆயிரம் முறை பாடியிருப்பான். அவ்வளவும் பயிற்சி. சரணத்துல இன்னும் ஸ்பீட் வேணும்.. அந்த இடத்துல சங்கதி சரியில்ல.. பல்லவி பல் இளிக்குது மாதிரியான அப்பாவின் வசனங்கள் தூங்கும் போது கூட காதில் ரீங்காரமிடும். நேற்று தூங்கும் போது போட்டியில் இவன் தோற்பதாகவும் அப்பா அவனுடைய நாக்கை இழுத்து கத்தியால் அறுப்பதாகவும்.. ரத்தம் வருவதாகவும் கனவு கண்டான். அரை இரவில் விழித்தெழுந்து அழ ஆரம்பித்துவிட்டான். அப்பா எழுந்து வந்து அழக்கூடாது என்று அதட்டினார். அழுதாலும் சாரீரம் கெட்டுவிடுமாம். வாயைப்பொத்திக்கொண்டு விசும்பினான். அழாத அழாத.. என்று கையை ஓங்கிக்கொண்டு கண்கள் சிவக்க அப்பா நிற்பதைப் பார்த்து அம்மாவுக்கே லேசாக உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி படுத்து உறங்கினான். அடுத்த நாள் போட்டி.. தூக்கத்திலும் அந்த பாடலையே பாடிக்கொண்டிருந்தான். அம்மா நான் நாளைக்கு தோத்துட்டா அப்பா என்ன பண்ணுவாரு என்றான். அம்மாவும் பயத்தோடே இறுக்க கட்டியணைத்தபடித் தூங்கினாள்.

அடுத்த நாளில் அவன் பாடினான். நீதிபதிகள் கைத்தட்டினர். அனைவரும் பாராட்டினர். இறுதியில் முடிவு அறிவிக்கப்படும் நேரம் வந்தது. நீதிபதிகள் தீர்ப்பை சொல்ல சொல்ல அவனுடைய பார்வையெல்லாம் அப்பாவை நோக்கியதாகவே இருந்தது. அவரோ தன் இரண்டு கைகளையும் முகத்துக்கு நேராக கோர்த்த படி இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார். அப்பாவுக்கு அருகில் அமர்ந்திருந்த அம்மாவும் நினைத்துக்கொண்டாள்.. ‘’ஒருவேளை தோத்துட்டா அப்பா என்ன பண்ணுவாரு’’ திகிலாக இருந்தது. அவன் வெற்றிபெற்றான். அப்பா மகிழ்ச்சியில் அவனை தூக்கி கொஞ்சினார். சிரித்தார். கண்ணீர் விட்டு அழுதார். ஸ்ரீநாத்துக்கு எதுவுமே செய்ய தோன்றவில்லை. அவன் அப்பாவையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘’தோத்திருந்தா அப்பா என்ன செய்திருப்பாரு’’ என யோசித்துக்கொண்டேயிருந்தான்.

(நன்றி- சூரியகதிர்)