Pages

05 July 2011

அரும்புமீசை குறும்புபார்வை
அண்மையில் இத்தனை மோசமான படத்தை பார்த்ததாக நினைவில்லை. கொஞ்சம்கூட கதைக்கு ஒட்டாத நடிப்பு , மோசமான திரைக்கதை, அதைவிட மோசமான ஒளிப்பதிவு இசை எடிட்டிங் என சினிமாவில் இன்னும் என்னென்ன துறைகள் உண்டோ அத்தனையிலும் தோல்வியடைந்திருக்கிற படம் இது. படம் தொடங்கிய பத்து நிமிடங்களிலேயே அது புரிந்துவிடுகிறது. மெகாசீரியல்களில் கூட இதைவிடவும் நன்றாக படம்பிடிக்கிறார்கள்.. நடிக்கிறார்கள்..

இப்படிப்பட்ட படங்கள் பலவற்றை பார்க்க நேர்ந்தாலும் அதன் பின்ணனியில் இருக்கிற வலி மற்றும் முயற்சியை மதித்து அதை பற்றி விமர்சித்து எழுதுவதை பொதுவாக தவிர்த்தே வருகிறேன். சிறுமுதலீட்டுப்படங்களுக்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் சும்மா இருப்பதே சுகம்.

ஒவ்வொரு உதவி இயக்குனரும் தன் முதல் படத்தை முடித்து அதை ரிலீஸ் செய்வதற்குள் படுகிற பாடுகளை சமீபகாலமாக பழகுகிற சில உதவி இயக்குனர்களின் நெருக்கமான நட்பினால் அறிந்துகொள்ள முடிகிறது. அதையும் மீறி இப்படம் குறித்து எழுத நினைத்தது இப்படம் பேசுகிற அரசியல். படத்தின் இயக்குனர் அல்லது கதாசிரியர் அந்த துன்பத்தை அனுபவித்தவராக இருக்கலாம். அற்புதமான கதையை கையிலெடுத்துக்கொண்டு இத்தனை மோசமாகவும் படமெடுத்திருக்க வேண்டுமா என்கிற ஆதங்கமே எழுத தூண்டியது.

அரசு மாணவர்கள் விடுதி குறித்த நேரடி தகவல்களை இந்தப்படம் ஓரளவுக்கு காட்சிப்படுத்துகிறது. ஓரளவுக்குத்தான். அங்கே நடைபெறுகிற அக்கிரமங்களும் ஊழலும் அந்தமாணவர்கள் படுகிற அவஸ்தைகளும் வேதனைகளும் சொல்லிமாளாதவை. இதற்கு மத்தியில் படித்து முடித்து வெளியே வருகிற பையன்கள்தான் என்ன ஆவார்கள் என்கிற கேள்வியும் எழுகிறது. அண்மையில் கூட சென்னை நந்தனம் அரசு கல்லூரி விடுதி மாணவர்கள் , அவர்களுக்கு வழங்கப்படுகிற உணவு மோசமாக இருப்பதாகவும் வசிப்பிடம் சுகாதாரமில்லாமல் இருப்பதாகவும் கூறி சாலையில் இறங்கி மறியல் செய்ததை பத்திரிகைகளில் படித்திருக்கலாம். அதை கண்டித்து சிலர் ச்சே இந்த மாணவர்களுக்கு அறிவே இல்லையா என்று வியாக்கியானம் படித்ததும் நினைவுக்கு வருகிறது. நரகத்திலிருந்து வெளியேற துடிப்பவனின் குரல் அப்படித்தான் ஒலிக்கும். அவனுடைய எதிர்ப்பின் வேகமும் மூர்க்கத்தனமாகத்தான் இருக்கும்.

சமீபத்தில் மதுரைக்கு அருகிலிருக்கிற ஒரு கிராமத்திற்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த போது கூட அங்கிருக்கிற மாணவர் விடுதி பலான காரியங்களுக்கு பயன்படுத்தபடுவதாக ஊர் இளைஞர்கள் புகார் தெரிவித்தனர். அதைபற்றி ஊர்மக்களுக்கு தெரிவித்த போது ஊர்மக்களும் கூட ‘’சக்கிலயப்பயலுகளுக்கு என்ன சொகுசு..’’ என எகத்தாளமாக பேசியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட சில மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய கதைகளும் உண்டு. போலீஸில் புகார் செய்தும் அரசிடம் முறையிட்டும் ம்ஹூம்.. வாசலில் மேயும் மாடுகள், கஞ்சா அடிக்கும் இளைஞர்கள், பலான காரியங்கள் அரங்கேறும் விடுதி.. இதற்கு மத்தியில்தான் இந்த மாணவர்கள் படிக்கிறார்கள் என்பதை அறிந்தபோது கோபமும் ஆத்திரமும்தான் தொற்றிக்கொண்டது.

இந்த விடுதிகளுக்கு பின்னாலிருந்த சாதி அரசியல் மிக முக்கியமானது. இந்த இளைஞர்களின் வாழ்க்கை பாதைமாறிப்போவதற்கான உளவியல் காரணங்கள் முக்கியமானது. அதைப்பற்றியெல்லாம்தான் இப்படம் பேசியிக்க வேண்டும்... அதைப்பற்றி பேச ஓரளவு முயன்று... பாதை மாறி ஏதோ சொல்ல முயன்று ஏதேதோ சொல்லி கடைசியில் எப்படியோ ஏதோ ஒரு காதலுடன் சுபமாக முடிகிறது! ஆனால் அதற்குள் எருமையே கூட பொறுமையிழக்க நேரிடும்!

தவிர்க்கலாம்!