Pages

08 September 2011

எழுத்தாளர் ஜெயலலிதா

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெயலலிதா என்றொரு எழுத்தாளர் இருந்தார். அவர் எண்பதுகளில் கல்கியிலும் குமுதத்திலும் இரண்டு முழுநீள நாவல்களை எழுதியவர். சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியுள்ளாரா என்பது தெரியவில்லை.

திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று தமிழகம் அறிந்த நடிகையாக வாழ்ந்த நாட்களில் எழுதியவை அந்த இரண்டு நாவல்களும். பின்னாளில் அவர் புரட்சிதலைவியாகி தமிழக முதல்வர் ஆனதெல்லாம் வரலாறு. அவர் எழுத்தாளராக இருந்தார் என்பதுதான் ஆச்சர்யமான செய்தி. எழுத்தாளராகவே இருந்திருக்கலாம்!

ஜெ எழுதிய இந்நாவல் குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் அது புத்தக வடிவத்தில் இதுவரை பதிப்பிக்கப்படவேயில்லை. பழைய புத்தக கடைகளில் தேடியும் கிடைக்காத அந்த நாவல்களில் ஒன்று நண்பர் கிங்விஷ்வாவிடமிருந்தது (காமிக்ஸ் புகழ் கிங்விஸ்வா).
கல்கி இதழில் 80ஆம் ஆண்டு எழுதிய உறவின் கைதிகள் என்னும் அந்த தொடர்கதையை யாரோ புண்ணியவான் பைண்ட் பண்ணி வைந்திருந்திருக்கிறார். அதை எங்கோ பழைய புத்தகங்கள் விற்கும் கடையில் தேடிப்பிடித்து அதிக விலை கொடுத்து வாங்கிவைத்திருந்தார் விஸ்வா.

நமக்கு தெரிந்த ஜெயலலிதா சிறுவயது முதலே கல்வியில் சிறந்து விளங்கியவர், எதற்கும் அஞ்சாதவர்,கொஞ்சம் முரட்டுத்தனமான அதே சமயம் வீரமான பெண் என்பதாக இருக்க.. நாவலை வாசிக்க தொடங்கியதுமே நமக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிதான்! நமக்குத்தெரிந்த முரட்டு முதல்வர் அல்ல இதை எழுதியது! மனது முழுக்க காதலும் அன்பும் நிறைந்த ஒரு இளம்பெண்ணின் மனநிலையில் எழுதப்பட்டிருந்தது. காதலின் ஏக்கமும் தவிப்பும் காதலனுடனான அந்த நொடிகளின் உக்கிரமும் நாவலெங்கும் நிறைந்திருந்தது.

பெண்களை துச்சமென மதிக்கும் நடிகன், கல்லூரி மாணவி ஒருத்தியிடம் காதலில் விழுகிறான். அவளும் அவனை காதலிக்கிறாள்.. கர்ப்பமாகிறாள்.. பிறகுதான் இருவரும் தந்தை-மகள் என்பது தெரியவரை அதிர்ச்சியூட்டும் கிளைமாக்ஸ்! எண்பதுகளின் ஜெயகாந்தன் கதைகளினுடைய பாதிப்பில் எழுதப்பட்ட கதையாகவே இது இருக்கிறது. அப்படியே இருந்தாலும் இப்படி ஒரு அப்பா-மகள் உறவினை கேள்விக்குள்ளாக்குகிற கதையை எழுத முனையவே நிறையவே தைரியம் வேண்டும். அது ஜெவிடம் நிறையவே இருந்திருக்கிறது.
முதல் அத்தியாயத்தில் நடிகனின் அறிமுக காட்சியில் தொடங்கி இறுதிஅத்தியாயத்தில் அவனுடைய மரணம் வரை ஒரே மூச்சில் படித்துவிட முடியும். அவ்வளவு வேகமான எழுத்து நடை. படிக்கும் போது ஒருவேளை இதை அசோகமித்திரன் எழுதியிருப்பாரோ என்கிற ஐயமும் எழாமல் இல்லை. பல இடங்களில் கரைந்த நிழல்கள் சாயல்!

ஒரு அத்தியாயத்தில் நடிகன் மாணவியிடம் தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு வர.. அவள் அழைக்க.. அந்த அத்தியாயம் முழுக்க இருவருக்குமான தொலைபேசி உரையாடல் மட்டும்தான். உரையாடல் என்றால் வசனங்கள் இல்லாமல் இருவருக்குமான மௌனமே நிறைந்திருப்பது அருமை. எழுத்தில் மௌனத்தை கொண்டுவருவது மிகவும் கடினம் என்பார்கள். அதே போல காதலின் தவிப்பையும் ஏக்கத்தினையும் கூட நன்றாகவே எழுதியிருக்கிறார்.

இந்நாவல் அவருடைய வாழ்க்கையின் அடிப்படையில் எழுதப்பட்டத்தாக சிலர் கூறினாலும் அப்படி எதையும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு அழகான புனைவாகவே இது இருக்கிறது.

தொடர்கதை வடிவத்தில் எழுதப்பட்டிருந்தாலும் சுஜாதாவின் தொடர்கதைகளைப் போல ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் தேவையில்லாத டுவிஸ்ட்டோ அதிர்ச்சியோ இல்லாமல் மென்மையாக தொடர்ந்திருப்பது பிடித்திருந்தது. வாய்ப்புகிடைத்தால் அனைவருமே படிக்க வேண்டிய நாவல் இது. அம்மாவின் புகழ்பாடும் அதிமுகவினர் இதை புத்தகமாக கொண்டுவர முயற்சி செய்யலாம். கலைஞர் மட்டும்தான் எழுதுவாரா எங்க தலைவியும் இலக்கியம் படைச்சிருக்காங்க பாருங்க என மார்தட்டிக்கொள்ள உதவும். ஜெ குமுதத்தில் எழுதிய இன்னொரு நாவலை தேடிக்கொண்டிருக்கிறேன். உங்களிடமிருந்தால் கொடுத்து உதவலாம்.