Pages

04 October 2011

சாமியார் மகிமை


‘’நாம ஏன் சாமியார் ஆகிடக் கூடாது...!’’ முடிவெடுத்துவிட்டார் அரங்கசாமி. அவர் முடிவெடுத்தால் எடுத்ததுதான். அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார்.

இந்த இன்ஸ்டன்ட் முடிவுக்கு தீர்க்கமான ஒரு காரணம் இருந்தது. அது.. பிரபலசாமியார் டிவிபுகழ், நடிகைகள்புகழ், வார இதழ்கள்புகழ், கோர்ட்டு புகழ், புழல் புகழ்... நடிகைகள் புகழ்.. மூச்சு முட்ட இன்னும் பல புகழ்கள் அடங்கிய ஸ்ரீஸ்ரீ ஸ்ரீலஸ்ரீ கம்புஸ்டஸ்ரீ ஜம்புஷ்டஸ்ரீ அற்புதமகா மகாப்ரக்ஞான இன்னும் ஏதேதோ பஜ்ஜிமுகத்தானந்தா.

சாமியாரின் தாடியைப்போல அவருடைய பெயரும் கொஞ்சம் நீளம்.. எப்போது சொன்னாலும் முதல் ஸ்ரீயில் தொடங்கி ஒரு ஸ்ரீயும் விடாமல் மொத்தமாய் சொல்லிவிட்டுத்தான் மூச்சுவிடுவார் அரங்கசாமி. சாமியார் மேலே அத்தனை பக்தி!

அவர் எழுதியதாக சொல்லப்படுகிற அனைத்து புத்தகங்களையும் படித்து அவர் அரைத்தொண்டையில் முக்கால்த்தமிழில் டிவியில் பேசிய பேட்டிகளையும் தவறாமல் பார்த்துவிடுவார் அரங்கசாமி. வார இதழ் ஒன்றில் வெளியான ‘’மனசே நீ என்ன மாங்கொட்டையா?’’ தொடரில் வெளியான சாமியாரின் தத்துவங்கள் அனைத்துமே அரங்கசாமிக்கு அத்துப்படி.. எல்லாமே விரல்நுனியில். கண்ணைமூடிக்கொண்டு மனப்பாடமாக ஒப்பிப்பார்.

டிவி நிகழ்ச்சியில் துறவறம் குறித்து எப்போதும்போலவே அன்றைக்கும் பேசிக்கொண்டிருந்தார் சாமியார். ‘’சாமியாராக வேண்டுமா என்னிடம் வாங்க.. தங்குமிடம்,உணவு,கூட்டு பஜனை,அமைதியான சூழல்.. டிவி ஃப்ரிட்ஜ்,ஏசி தொடங்கி அனைத்து வசதிகளும் உண்டு. உங்களுக்காக காத்திருக்கிறேன்! கூட்டாக சேர்ந்து ஆன்மீக ஜோதியில் குதூகலிப்போம், அனைத்தையும் துறந்து என்னிடம் வாருங்கள்.. ஆன்மீகத்துக்கு நான் கியாரண்டி!’’ என்றார்.

சாமியார் தினமும் காலை மாலை இரண்டு வேளையும் டிவியில் இதையே சொன்னாலும் இன்றைக்குத்தான் அதைக்கேட்டுக் கொண்டிருந்த அரங்கசாமிக்கு மூளைக்குள் ‘டாங்’ என மணி அடித்தது. குடித்துக்கொண்டிருந்த காஃபியை சுவைக்க சுவைக்க தன்னை போதிசத்துவராக உணரத்தொடங்கி ஞானம் பிறந்து உண்மை உணர்ந்து... காஃபியில் சக்கரை கொஞ்சம் கம்மி என்பதை அறிந்து கோபம் வந்து முடிவெடுத்துவிட்டார். ‘’கமலா சக்கரை!’’ , அதோடு இந்த சக்கரை இல்லா காஃபியை குடிப்பதற்கு சாமியார் ஆகிவிட வேண்டியதுதான்! பெயர் கூட தேர்ந்தெடுத்துவிட்டார் அரங்கானந்தா!

****

இரவு மணி 11.55. புத்தர்கூட இப்படித்தான் ஒரு மிட்நைட்டில்தான் துறவறம் கிளம்பினார் என அரங்கசாமி கடைசியாக படித்த அஞ்சாங்கிளாசில் படித்திருக்கிறார். மிட்நைட்டில் துறவியானால் புத்தரைப் போலவே உலக புகழ் பெற முடியுமென நம்பினார்.

படுக்கையிலிருந்து எழுந்தார். மனைவியை பார்த்தார். கா.....ர்ர்ர்ர்ர் என விண்ணுக்கு செல்லும் ராக்கெட்டைப்போல குறட்டையுடன் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள். 25வருட பிரச்சனை. இன்றோடு விடுதலை. பாத்ரூமிற்கு சென்றார். முகங்கழுவினார். ‘’ச்சே! முன்னாடியே பிளான் பண்ணி ஷேவ் பண்ணாம விட்டிருந்தா ஓரளவுக்கு தாடியாச்சும் முளைச்சிருக்கும்’’ . ஒரு சாமியாருக்கு தாடிதான் எத்தனை முக்கியமானது!

ஐயப்ப மலைக்கு சிலமுறை மாலை போட்டதுண்டு. அதற்காக வாங்கின துளசி மாலை இரண்டும் கறுப்பு வேட்டி சட்டையும் ஒரு துண்டும் இருந்தது. ச்சே எல்லாமே கருப்பு! காவி வேட்டி வாங்கியிருக்கலாம். யூஸாகிருக்கும்! வெள்ளை வேட்டி சட்டையோடு துளசி மாலையை எடுத்துக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தார்.

நெற்றி நிறைய விபூதி இட்டுக்கொண்டார். உடல் சிலிர்த்து பக்திமணம் பரவுவதை உணர்ந்தார். துளசி மாலையை மாட்டிக்கொண்டார்.

கழுத்தில் மாலையை போட்டதும் பழக்க தோசத்தில் சாமியே..சரணம்.. என்று அலறத்தொடங்கியவர்..ச்சேச்சே என்று பிரேக்கடித்து நிறுத்தினார். யாராச்சும் முழிச்சிட்டா... வெளியே பூனைபோல நடந்துசெல்ல கண்ணாடியில் ஒரு பயங்கர உருவம் நகர்வதைப்பார்த்து மிரண்டுபோய் திரும்பிப்பார்த்தால்... அது அவரேதான்!
அவருக்கே அவரை பார்த்தால் பக்திவந்துவிடும்போல இருந்தது. டேய் நீ சாமியாராகிட்டடா என்று காலரை தூக்கிவிட்டுக்கொள்ளவேண்டும் போல இருந்தது. அரங்கசாமியானந்தா.. அசத்திட்டடா?

மொபைல் போன் எடுத்துக்கொள்ளலாமா? அவசர ஆத்திரத்திற்கு உதவுமே.. பணம்? பர்ஸை எடுத்து வேட்டியில் முடிந்துகொண்டார். மாடிப்படிகளில் இறங்கி பொறுமையாக நடந்தார். மாடிப்படிகளின் கைப்பிடி தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ரொம்ப காஸ்ட்லி! பெருமூச்சு விட்டார். ஷோபா,3டி எல்சிடி டிவி,ஹோம்தியேட்டர் என பார்த்து பார்த்து வாங்கிய எல்லா பர்னிச்சர்களுக்கும் நூறு கோடி ரூபாய் சொத்துக்கும் ஓட்டும்மொத்தமாக சேர்த்து வைத்து தொப்பையிலிருந்து காற்றைதிரட்டி ஒரு பெரிய மூச்சுவிட்டார்.

வாசலில் சுப்ரமணி உறங்கிக்கொண்டிருந்தது. உயர்ந்த ஜாதி நாய்தானே என கேட்டு கன்பார்ம் செய்தபின்தான் வாங்கியது. நாயாக இருந்தாலும் சாதி முக்கியமில்லையா? தன் மனைவியைவிடவும் அரங்கசாமிக்கு அளவில்லா ப்ரியமும் அன்பும் அந்த நாய்மீதிருந்தது.. அவர் நில்லென்றால் நிற்கிற உட்காரென்றால் உட்காருகிற ஒரே ஜீவன் அந்த வீட்டில் அதுமட்டுந்தான். அதைபார்த்து பெருமூச்சு மட்டுமல்ல ஒரு துளி கண்ணீரையும் சிந்தினார்.
சுப்ரமணி என் செல்லமே உன்னை பிரிஞ்சு நான் எப்படீடா இருக்கப்போறேன் என்று அதை கட்டிப்பிடித்து கண்ணீர்வடித்து கதறி அழவேண்டும் போல் இருந்தது. அடக்கிக்கொண்டார். துறவியான பின் அழக்கூடாது.. இதுவும் ‘’மனமே நீ என்ன மாங்கொட்டையா’’ தொடரில் சாமியார் சொன்னதுதான்.

தெருவில் இறங்கினார். நடக்கத்தொடங்கினார். தன் மொபைலை எடுத்தார்.. மெசேஜ் வந்திருந்தது. நாளை நடக்கும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கட்டும் டெல்லி போய்வர ஃபிளைட் டிக்கெட்டும் தயார் என மேனேஜர் மெசேஜ் அனுப்பியிருந்தான். ச்சே இரண்டு நாள் கழிச்சி சாமியாராகிருக்கலாம்.. இப்பயும் ஒன்னும் கெட்டுப்போகல யாரும் பாக்கல வீட்டுக்கே ஓடிரலாமா என நினைத்தாலும்.... சாமிகுத்தமாகிடுச்சின்னா.. அரங்கசாமியானந்தாவாக ஆனதுக்குபிறகு இப்படிலாம் யோசிக்கறதே தப்பு என கன்னத்தில் போட்டுக்கொண்டார்!

*****

நகரத்திலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அரிய வகை மரங்கள் அடர்ந்திருந்த காட்டுப்பகுதியில் பாதியை அழித்து தரைமட்டமாக்கி பஜ்ஜிமுகத்தானந்தா ஆஸ்ரமம் கட்டியிருந்தார். பஸ் வசதி பகலில்தான்.

இந்த நேரத்தில் எப்படி போவது என யோசித்தார் அரங்கசாமி. ‘’ஸ்ரீஸ்ரீ... நிறைய ஸ்ரீ பக்சிமுகத்தானந்தா எனக்கு வாகனம் ஒன்னு ஏற்பாடு செய்யப்பா..’’ என கன்னத்தில் போட்டுக்கொண்டார். தூரத்தில் ஒரு ஆட்டோ வரும் சப்தம் கேட்டது. ஆஹா உன் மகிமையே மகிமை என இன்னொரு முறை கன்னத்தில் போட்டுக்கொண்டார். கைகாட்டி நிறுத்தினார்.

தாடி வைத்த ஆட்டோக்காரர் தலையை வெளியே நீட்டி ‘எங்க சார்’ என்றார்.

‘’அஞ்சு மலை போகணும்’’

‘’அவ்ளோ தூரமா.. லேட்நைட்டு.. முடியாது சார்’’ என்றபடி மீண்டும் ஆமை போல தலையை க்விங்க் என ஆட்டோவிற்குள் இழுத்துக்கொண்டான். தன் பர்ஸை திறந்து பார்த்துவிட்டு.. எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கோ.. அர்ஜன்டா அஞ்சுமலை போகணும் என்றார் அரங்கசாமி.

‘’சரி ஏறுசார், செவன் பிப்ட்டி ஆவும் ஓகேவா’’

‘’என்னப்பா ஒரேடியா இவ்ளோ கேக்கற.. எழுநூறு வாங்கிக்கோ..’’

பேரம் பேசிமுடித்து... ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ கிளம்பியது. வண்டி குலுங்கி குலுங்கி செல்ல தனக்கு அருகில் ஏதோ இருப்பதாக உணர்ந்தார்.. அய்ய்ய்யோ அலறினார்.

‘’இன்னா சார் இன்னா சார்’’ ஆட்டோக்காரனும் வண்டியை பிரேக் அடித்து நிறுத்தி அலறினான். அரங்கசாமிக்கு அருகில் அவருடைய சுப்ரமணி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்திருந்தது. வண்டி நின்றது. ஆட்டோக்காரர் திரும்பி பார்த்தார். அரங்கசாமி தன் நாயோடு பேசிக்கொண்டிருந்தார்.

‘’சுப்ரமணி நீ ஏன்டா வந்த? எப்படி வந்த..’’ , அது அவரை நிமிர்ந்து சோகமாக பார்த்தது. அதன் கண்கள் கலங்கியிருந்தன. முகம் வாடியிருந்தது. அந்த ஜாதி நாய்களுக்கு வாய் எப்போதுமே தொங்கிப்போய் சோகமாகத்தான் இருக்கும்.

‘’சுப்ரமணி செல்லம்.... அப்பா.... சாமியாரா போறேன்டா, உன்னை அங்க கூட்டிட்டு போகமுடியாதுடா’’ என்று இழுத்து இழுத்து கஷ்டப்பட்டு சிவாஜிபோல சோகமாக பேச முயற்சித்தார். தெருநாயாக இருந்தால் அவர் இதுபோல பேசியதற்காகவே கடித்துவைத்திருக்கும். சுப்ரமணி க்விங்க் க்விங்க் என்று கத்தியபடி அவர் மேல் பாய்ந்து சோகத்தில் புரண்டது.

‘’இன்னா சார் நாயான்ட பேசிட்டிருக்க.. போலாமா வேண்டாமா, லேட்நைட்டுசார்’’ எரிச்சலில் கத்தினான் ஆட்டோக்காரன்.

‘’இருப்பா’’

‘’சுப்ரமணி கோ.. கோ..’’ அது அப்படியே இருந்தது. ‘’ப்ளீஸ் வீட்டுக்கு போ’’, அந்த தம்த்தூண்டு நாய் அவருடைய மடியிலேயே அமர்ந்துகொண்டு அவரைபார்த்துக்கொண்டேயிருந்தது. அரங்கசாமிக்கு இளகின மனசு. அதை அணைத்துக்கொண்டார். ரெண்டு துளி கண்ணீரோடு ‘’வண்டி எடுப்பா..!’’ என்றார்... ஆட்டோ இர்ர் விட்டு கிளம்பியது.


****

‘’இன்னா சார்.. சாமியாரா நீங்கோ’’

‘’ஆமாம்ப்பா’’ கொஞ்சம் பெருமையும் பெருமிதமும் கலந்த த்வனியில் சொன்னார்.

‘’எங்க பஜ்ஜிமோத்தாதானந்தா ஆஸிரமத்துக்கா போறீங்கோ’’ ஹேன்டில் பாரை பிடித்தபடியே தலையை லேசாக திருப்பி பேசிக்கொண்டே வந்தான்.

‘’அது பஜ்ஜிமோத்தாதானந்தா இல்லப்பா.. ஸ்ரீஸ்ரீ..ஸ்ரீ பக்ஷிமுகத்தானந்தா..அதாவது பறவையைபோன்ற முகம் கொண்டவர்ன்ற மாதிரி அர்த்தம்’’

‘’பஜ்ஜிமோத்தானாந்தாதானே நானும் சொன்னேன்’’

‘’இல்லப்பா அது பக்..சி , பக்...சி பக்சி.. மு...கத்தனாந்தா’’

‘’சார், ஊருல எல்லாருமே அப்பிடித்தான சொல்றாங்கோ’’

மனதுக்குள்ளாகவே அற்பசிறுவன் ஆன்மீகம் அறியாதவன் என நினைத்து சிரித்துக்கொண்டார். லேசாக புன்னகைத்தார். சாமியாராகிட்டோம் இனிமே இப்படித்தான் லைட்டா பல்லு தெரியாம தெய்வீகமா புன்னகைக்க பழகிக்கணும். சுப்ரமணி தூங்குடா குட்டி..!

‘’இன்னா சார் இந்த நேரத்துல ஆஸ்ரமம் போற.. நைட்டு நேரம், அங்க வேற ஒரே சினிமா நடிகைகள் கசமுசா ப்ளூபிலிம்னு மேட்டர் படம் அது இது ன்றாங்கோ’’ சிரித்துக்கொண்டே கேட்டான்.

‘’தம்பி வண்டிய மட்டும் ஓட்டுங்க’’ என்றவர் பல்லைக்கடித்துக்கொண்டு அப்படியே ஆட்டோவின் சைடு கம்பியை இறுக பிடித்து கோபத்தை கட்டுப்படித்தி கொண்டார்.
இருள் அப்பியிருந்த காட்டுப்பகுதியில் காட்டுயானை போல குண்டுங்குழியுமாய் இருந்த ரோட்டில் பின்பக்கத்தை ஆட்டி ஆட்டி நகர்ந்து கொண்டிருந்தது ஆட்டோ. ஆஸ்ரமத்தின் பிரமாண்ட கேட்டுக்கு அருகே ஆட்டோ நின்றது. ஆட்டோவில் இருந்து இறங்கி பணத்தை எச்சில் தொட்டு எண்ணி எண்ணிக் கொடுத்தார் அரங்கசாமி.

தன் கையிலிருந்த வாட்ச்சை கழட்டினார், பாக்கெட்டிலிருந்த மொபைலை எடுத்தார், செல்போன்களிலேயே லேட்டஸ்ட் மாடல் விலை உயர்ந்ததாக பார்த்து பார்த்து வாங்கியது, தன் பர்ஸையும் எடுத்தார் , ஆட்டோவை திருப்பிக்கொண்டிருந்தவனை அழைத்தார். தம்பி இங்க வாங்க.. இது இனிமே எனக்கு இது தேவைப்படாது, இதையெல்லாம் நீங்களே வச்சிக்கங்க என்று பெருமிதமாக, கிட்டத்தட்ட தில்லானா மோகனாம்பாள் சிவாஜியைப்போல உதட்டை பிதுக்கி புருவங்களை உயர்த்தி கண்களில் பெருமிதம் பொங்க சோகமாக நாதஸ்வரம் வாசிப்பவர் போலவே கொடுத்தார்.

வாட்சை வாங்கிப்பார்த்தான் ஆட்டோக்காரன். ‘’இன்னாசார் பர்மா பஜாரா? ஷோக்கருக்கே!’’ என்றான். அரங்கசாமிக்கு உள்ளுக்குள் மீண்டும் எரிமலை பொங்கியது. தானம் குடுத்த மாட்டின் எதையோ பிடித்து பார்த்தமாதிரி.. ச்சே..அற்ப சிறுவன் ஆன்மீகம் அறியாதவன். அடேய்..! அடக்கிக்கொண்டார்.

‘’அது டேக்வர்யா..உனக்கு எங்க அதுலாம் தெரியபோவுது.. விடு.. பத்திரமா வச்சிக்கோ’’ என்று உள்ளே கடுப்பும் வெளியே புன்னகையுமாக பேசினார்.. அவருக்குள் தூங்கிக்கொண்டிருந்த மிருகம் எந்த நேரத்திலும் விழித்துக்கொள்ளுகிற வாய்ப்பு இருந்தது. மடியில் சுப்ரமணி வேறு தூங்கிக்கொண்டிருந்தது. எத்தனை கடை ஏறி இறங்கி வாங்கிய வாட்ச்சு.. இந்த ஆட்டோவை விடவும் விலை அதிகமாச்சே!

ஆஹா இப்போது கையில் எதுவுமே இல்லை.. எல்லாத்தையும் துறந்தாச்சி. இனிமே நாமளும் புத்தர் மாதிரி ஆகிடலாம். கேட்டை நோக்கி நடந்தார். பின்னாலேயே அந்த நாயும் நடந்து வந்தது. மொபைல் விளம்பரம் மாதிரியே!

****

ஆஸ்ரமத்தின் அதிபிரமாண்டமான கேட்டின் முகப்பில் இரண்டு செக்யூரிட்டிகள் கையில் மிஷின் கன்னோடு நின்றனர். இவரை பார்த்ததும் ‘’க்யா’’ என்றனர். இருவரும் இரண்டு மாமிச மலைகளை போல் இருந்தனர். ஒருவருக்கு மீசை இல்லை.. பார்க்க கொடூரமாக இருந்தான். இன்னொருவனுக்கு நல்ல வேளையாக பெரிய மீசை இருந்தது, ஆனால் அவன் மற்றவனைவிடவும் மோசமான சைக்கோ கொலைகாரன் போல இருந்தான். லேசாக மனதிற்குள் பயமிருந்தாலும்.. முகத்தை சிரித்தது போலவே வைத்துக்கொண்டார்.

‘’நான் துறவியாகலாம்னு வந்திருக்கேன். மை நேம் இஸ் அரங்கசாமி.. வான்ட்டூ பிக்கம் துறவி ஹியர்’’ என்றார்.

‘’க்யா.. க்யா.. ஹிந்தி மே போலோ’’ என்றது ஒரு மிஷின் கன். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்துகொண்டு எவ்வளவு போராடிருக்கேன். எத்தனை அடி வாங்கிருக்கேன்.. ‘’எனக்கே ஹிந்தியா அடேய் ஹிந்திக்காரா’’ என்று பாய்ந்து அவன் தலைமுடியை பிடித்து நாலு ஆட்டு ஆட்டி.. நெஞ்சுலயே நாலு மிதி மிதிக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் துறவியாகிட்டாரே அரங்கசாமி..

புன்னகையோடு ‘’மீ அரங்கசாமி.. ஐம் ஹயிர் ட்டூ ஜாய்ன்..சாமியார்.. துறவி’’ என கை ஜாடைகளால் புன்னகையோடு உணர்த்த முயன்றார். ஒழுங்கா படிச்சிருக்கலாம். அவர்களுக்கு புரியவில்லை. அருகில் நின்றுகொண்டிருந்த சுப்ரமணி அவர்களை பார்த்து க்விங்க் க்விங்க் என்றது. அதனை நோக்கி தன் துப்பாக்கியை நீட்டினான் மீசையில்லாத செக்யூரிட்டி. ‘’சாரி சாரி.. திஸ் மை டாக்.. சுப்ரமணி.வெரி குட் டாக்.. .ச்சூ.. குட் டாக்.. சிட்.’’ என்று அதை அதட்டினார்.

அரைமணிநேரம் பேசியும் தான் வந்த காரியத்தை விவரிக்க முடியாத அரங்கசாமி சோர்ந்து போய் கேட்டுக்கு எதிரிலிருந்த ஏதோ ஒரு மரத்தடியில் போய் உட்கார்ந்து கொண்டார். அவர் நடக்க நடக்க அவர்பின்னாலேயே அந்த நாய்க்குட்டியும் சென்றது.

மரத்தடியில் உட்கார்ந்தவர் அப்படியே உறங்கிவிட.. ஓரளவு விடிந்திருந்தது. டைம் என்ன இருக்கும்? கையில் வாட்சை காணோம். தான் துறவியாக கன்வர்ட் ஆனது உடனே புரிந்தது. இன்னும் சூரியன் உதித்திருக்கவில்லை. ஓரளவு வெளிச்சம் இருந்தது. இரண்டு மண்டோதரன்களும் வலப்பக்கமும் இடப்பக்கமுமாக ஆளுக்கு ஒரு சேர் போட்டு அமர்ந்தபடி இவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். சாவகாசமாக எழுந்து சுப்ரமணியை தேடினார்.. அது அருகிலிருந்த மரத்தில் உச்சாப்போய்க்கொண்டிருந்தது.

கேட்டுக்கு பக்கத்தில் ஒரு தமிழ் செக்யூரிட்டி.. ஆகா சுவாமி உங்கள் மகிமையே மகிமை.. தமிழ் செக்யூரிட்டியிடம் பேசி விளக்கினார். ஆஸிரமத்தின் உள்ளே நுழைந்தார்.

****

அருமையான சந்தன வாசனை வீசியது. ஆஹா..! தெய்வீக மணம். உள்ளே குறுக்கும் நெடுக்குமாக நாலைந்து சாமியார்களும் அழகான சாமியாரினிகளும் மொட்டையும் ருத்ராட்ச கொட்டையுமாக அலைந்துகொண்டிருந்தனர். நாளைலருந்து நாமளும் இங்கதான்.. என்ன மொட்டையடிச்சிகிட்டா கிளாமர் போயிடும்.. பிரச்சனையில்ல, லேடீஸே மொட்டையாதான் சுத்தறாங்க என மனதை தேற்றிக்கொண்டார்.

ஆசிரமத்தின் பிரதான கட்டிடத்திற்கு நுழைந்தவருக்கு லேசாக கிருகிருத்தது. ஐடி நிறுவனங்களின் அலுவலகம் போல பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்த வராண்டாவில் வளைத்துப்போட்டதுபோல ஒரு டேபிள். அதற்குள் அழகான இளம் தேவதை. அந்தப்பெண்ணும் சாமியார்தான்போல, மொட்டையடித்திருக்கவில்லை. என்னா அழகு. ‘’எச்சூஸ்மீ நான் இங்க துறவியாகலாம்னு வந்திருக்கேன், அதுக்கு என்ன பண்ணனும்’’

‘’ப்ளீஸ் வெயிட் , அங்கே உட்காருங்க’’ என்றவர், போனை எடுத்து டிக்டிக் என தட்டி ஏதோ சொல்ல.. அவரும் சுப்ரமணியமும் அருகில் போட்டிருந்த பெரிய சைஸ் ஷோபாவில் அமர்ந்தனர். ‘’சார் கீழே’’ என்று சைகை காட்டி புன்னகைத்தாள் பெண்.
அவர் கிழே இறங்கி உட்கார்ந்துகொள்ள முயன்றார்... ‘’சார் யுவர் டாக்.. கீழே’’ என்றாள் அழகி. ச்சே!

இன்னொரு அழகான வெள்ளையுடை பெண் சாமியார் வந்தார். ‘’எஸ் சார்.. ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ’’ என்றாள் ஆங்கிலத்தில். சாமியாருங்கன்னா வேற மாதிரில பேசுவாங்கன்னு சொன்னாய்ங்க என திருதிருவென விழித்தவர். கொஞ்சம் சுதாரித்து ‘’நான் துறவியாகறதுக்காக வந்திருக்கேன்’’ என்றார்.

‘’குட், எப்போ புக் பண்ணீங்க.., உங்க கிட்ட புக்கிங் நம்பர் இருக்கா? அப்ளிகேஷன் டேட் என்ன?’’

‘’அப்படி ஏதும் நான் பண்ணலீயே’’

‘’சாரி சார், அப்படீனா உங்களுக்கு இப்போதைக்கு துறவறம் கிடைக்காது, இப்ப நீங்க ரிசர்வ் பண்ணினா எப்படியும் இரண்டு வருஷம் ஆகிடும், வீ காட் ஆல்ரெடி எனஃப் அப்ளிகேஷன்ஸ்’’

‘’ஆனா டீவில சுவாமிகள் சொல்றாரே வாங்கோ வாங்கோனு’’

‘’அது பெய்ட் அட்வர்டைஸ்மென்ட் சார்’’

‘’என்ன விளம்பரமா... அது பராவல்லைங்க, ஆனா நான் இப்ப சாமியாராகனும்னு ஆர்வவெறியோட வந்திருக்கேன் இப்போ நான் என்ன பண்றது’’

‘’நோ ப்ராப்ளம், சார்’’ என்றவள், தன்னுடைய ஃபைலிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து முகத்து நேராக நீட்டினாள்.

‘’இந்த அப்ளிகேஷன் ஃபில் பண்ணி, உங்களுக்கு எந்த விதமான துறவியாகணும்னு விருப்பமோ அதுக்கேத்த அளவு பணம் கட்டிடுங்க..’’ , அரங்கசாமிக்கு லேசாக தலைசுற்றியது. ‘’என்னது ரேஞ்ச்சா..?’’

‘’த்ரீஸ்டார்னா.. நார்மல் சாப்பாடு, உங்க ரூம் நீங்கதான் க்ளீன் பண்ணனும், ஃபேன் கிடையாது, சுவாமிகள் உங்களோடலாம் பேசமாட்டார்.. நாங்க எந்த வேலை குடுத்தாலும் பார்க்கணும், ருப்பீஸ் ஃபிப்ட்டி தவ்சன்ட் ஒன்லி.. ஃபார் லைஃப் டைம், டாக்ஸஸ் எக்ஸ்ட்ரா.

ஃபோர் ஸ்டார்னா , டூ டேஸ் ஸ்பெஷல் சாப்பாடு, ரூம் க்ளீனிங் நாங்க பார்த்துப்போம், ஃபேன் உண்டு அதுவும் காலைல பத்துமணிக்கு ஆஃப் பண்ணிடனும்.. தோட்ட வேலை மட்டும் பார்க்கணும், ருப்பீஸ் ஒன்லேக் ஃபார் லைஃப் டைம், டாக்ஸஸ் எக்ஸ்ட்ரா, ஃபைவ் ஸ்டார்னா.. எந்த வேலையும் செய்யத்தேவையில்ல, ஏசி ரூம்ஸ், வாட்டவர் யூ வாண்ட் யூ கேன் ஆஸ்க், யூ கேன் டாக்ட்டூ சுவாமி எனி டைம் , நோ நீட் டூ வொர்க்.. அதுக்கு ரூப்பீஸ் டென் லேக் ஃபார் லைஃப் டைம்’’ என்று மூச்சு திணற திணற சொல்லி முடித்தார். சுப்ரமணி க்விங்க் க்விங்க் என கத்தியது.

‘’பெட் அனிமல்ஸ் வச்சிக்க நாங்க அலோ பண்றதில்ல, நான் வச்சிப்பேனு அடம்பிடிச்சீங்கன்னா, ஃபைவ் ஸ்டார் துறவறம்ல சேர்றதோட, உங்க பெட் அனிமல்க்கும் தனியா அடிஷனலா பே பண்ணனும், அதோட மெயின்டனென்ஸ்க்கு மாசா மாசம் ட்வென்ட்டி தவ்சன்ட் கொடுக்கணும், இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டா ஒரு ஸ்பெஷல் அக்ரிமென்ட் இருக்கு.. அதுல சைன் பண்ணனும்’’ என்று சொல்லிக்கொண்டே போனாள் அந்தப்பெண். அரங்கசாமிக்கு கடுப்பு தலைக்கேறியது. வாய்க்குள்ள துப்பாக்கி வச்சிருப்பாளோ!

‘’நான் சாமியார்கிட்ட நேரடியா பேசலாமா.. நான் அவரோட நெடுநாள் பக்தன், அவரு எங்கூருக்கு வந்தப்ப நான்தான் அவருக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினேன்’’, என்றார்.

‘’சாரி சார், சாமியார் சாரை பாக்கணும்னா இரண்டு வாரம் முன்னாடியே அப்பாய்ன்ட்மென்ட் வாங்கிருக்கணும்..அதுக்கு டென் தவ்சன்ட் பிளஸ் டாக்ஸஸ், அதர்வைஸ் சாமியார் சார் வில் பீ வெரி ஆங்கிரி’’ என்றாள்.

சுற்றிப்பார்த்தார். ஆங்காங்கே வெள்ளையுடை சாமியார்கள் மந்திரித்துவிட்ட கோழிகள் போல மொட்டைத்தலையும் வெள்ளையுடையுமாக அலைந்து கொண்டிருந்தனர். ஒரு மொட்டைத்தலை தரையை சுத்தமாக மாப் போட்டு அழுத்தி தேய்த்து சுத்தப்படுத்திக்கொண்டிருந்தது. மொட்டையை பார்க்க பாவமாய் இருந்தது , யார் பெத்த புள்ளையோ சின்ன வயசு என நினைத்தவர், அந்தப்பெண்ணிடம் ‘’ஓகே ரொம்ப நன்றிம்மா, நான் ஒரு ஃபோன் பண்ணிக்கலாமா?’’ என்றார்.

‘’நோ சார், நோ கால்ஸ் ஃபார் விசிட்டர்ஸ்’’ முகத்தில் அடித்தது போல சொன்னாள். நீண்ட மௌனம். அரங்கசாமிக்கு சுறுக் என்று இருந்தது. கண்கள் சிவந்தது.

இதற்குமேலும் அடக்கிக்கொண்டிருக்க முடியாது.. ‘’ஹேய்.. நான் யார் தெரியுமா.. என் ஸ்டேடஸ் என்ன தெரியுமா? ரங்கா இன்டஸ்ட்ரீஸ் முதலாளி அரங்கசாமின்னா ஊரே நடுங்கும்.. இன்னைக்கும் வேட்டிய மடிச்சி கட்டிட்டு ஒத்தையாளா அம்பது பேர சமாளிப்பேன்.. இன்னைக்குதான் நான் தொழிலதிபர் , ஒருகாலத்துல நான் எவ்ளோ பெரிய ரவுடி தெரியுமா..

என்னோட சொத்து மதிப்பு என்ன தெரியுமா.. ஐந்நூறு கோடி, ஏன்டி ஒரு போன் பண்ணகூடாதா நானு?

நானும் சாமியாராகிட்டமே இனிமே கோவப்படகூடாதேனு அடங்கி அடங்கி போனா என்னங்கடி ஓவரா பேசறீங்க... ஏரோப்ளேன் தெரியுமா ஏரோப்ளேன் இரண்டு இருக்கு.. ஒரு போன்கால்ல்ல உங்க ஆஸ்ரமத்தையே மூடிடுவேன்.. யார்னு நினைச்சீங்க’’ என்று வேட்டியை மடிச்சிகட்டிக்கொண்டு சிங்கம்போல சீறினார். அவருக்கே பெருமையாக இருந்தது.. எனக்குள்ளயும் ஒரு மிருகம் தூங்கிட்டிருந்திருக்கு பாரேன் என நினைத்துக்கொண்டார்.

அந்தப்பெண்ணோ புன்னகை மாறாமல் கோபமேயில்லாமல் அமைதி தவழ.. ‘’சார் கோபப்படாதீங்க! கூல்! எங்க சாமியாரோட கம்பேர் பண்ணும்போது நீங்க பரம ஏழை, அவருக்கு தனியா ஒரு தீவே சொந்தமா இருக்கு, அவர் அமெரிக்கா போனா அமெரிக்கன் பிரசிடென்ட்டே க்யூல நின்னுதான் தரிசனம் செய்வாரு.. மொத்த சொத்தமதிப்பு ஐம்பதாயிரம் கோடிகளை தாண்டும்.. சாமியார் நினைச்சா கவர்மென்ட்டையே மாத்திடுவாரு, நிலவுல கூட அவருக்கு ஏக்கர் கணக்குல நிலம் இருக்கு.. செவ்வாய்க்கு போய் தியானம் பண்ண ஆல்ரெடி நாசால ரெண்டு டிக்கட் புக் பண்ணி வச்சிருக்காரு.. தயவு செஞ்சு இடத்தை காலிபண்றீங்களா ப்ளீஸ்ஸ்’’ என்றாள். பேயறைஞ்சதுபோல இருந்தது அரங்கசாமிக்கு! அவருக்கு பின்னால் அந்த கடோத்கஜன்கள் கையில் கன்னோடு நின்றுகொண்டிருந்தனர்.

அவளிடம் ஏதும் பேசாமல், தொங்கிய தலையோடு ‘’உங்க டாய்லெட்டயாச்சும் யூஸ் பண்ணிக்கலாமா? இல்ல அதுக்கும் துட்டு கேப்பீங்களா’’ என்று பாவமாய் கேட்டார். தன் அழகிய மென்மையான விரலை நீட்டி கழிவறை இருந்த பகுதியை காண்பித்தாள். சுப்ரமணியும் அவர் பின்னாலேயே ஓடியது.

அரங்கசாமியானந்தா அரைமணிநேரத்தில் துறவறம் துறந்து தொழிலதிபர் அரங்கசாமியாகவே மீண்டும் மாறிவிட்டிருந்தார். ‘’மவனுங்களா.. மாட்டமயா போகப்போறீங்க.. அன்னைக்கு இருக்குடா உங்களுக்கு, ஏதோ துப்பாக்கி வச்சிருக்கீங்களேனு சும்மா விடறேன்’’ என வெறியோடு தன் வீட்டை நோக்கி கிளம்பினார்.. ‘’சுப்ரமணி அப்பாவ தப்பா நினைக்காத துப்பாக்கிக்கு தெரியுமா என் வீரம்..என்ன இருந்தாலும் நம்ம கமலா அளவுக்கு வராது!’’ என ஆறுதலாக பேசியபடி நடந்தார். பின்னாலேயே சுப்ரமணியும் க்விங்க் க்விங்க் என குலைத்தபடி சென்றது!