Pages

28 November 2011

எஸ்ராவின் கதாகாலட்ஷேபம்!
முதலில் அந்த அறிவிப்பே காமெடியாகத்தான் இருந்தது. என்னது எஸ்ரா ஏழுநாள் பேருரை ஆற்றப்போகிறாரா? ஹிஹி செம்ம காமெடியா இருக்குமே! என்று நண்பர்களோடு பேசிக்கொண்டேன். அதிலும் உலக இலக்கியங்கள் குறித்து பேசுகிறார் என்றதும் சிரிப்புக்கு பஞ்சமே இல்லை. உலக இலக்கியங்களின் மீதான அச்சமும் எஸ்ரா குறித்து நான் அறிந்திருந்த தகவல்களும் அப்படியொரு எண்ணத்தை எனக்குள் ஏற்படுத்தியிருக்கலாம். எஸ்ராவின் புத்தகங்கள் எதையுமே பல காரணங்களால் என்னால் படிக்க முடியாமல் போயிருக்கிறது.

அந்த அறிவிப்பு எனக்கு சிறுவயதில் கேட்ட கதாகாலட்சேபங்களை நினைவூட்டியது. எங்கள் வீட்டருகே இருந்த கோவிலில் எப்போதுமே யாராவது பேசிக்கொண்டேயிருப்பதை பார்த்திருக்கிறேன். பெரியபுராண கதைகளை பல நாட்கள் பெரியவர் ஒருவர் மைக் வைத்து சொல்லிக்கொடுப்பார். முடிவில் சுண்டலும் பொங்கலும் கிடைக்கும் என்கிற காரணத்திற்காக பள்ளி முடிந்து அங்கே செல்வதை வழக்கமாக்கியிருந்தேன்.

ஆனால் சிலநாட்களில் அந்தப்பெரியவர் கதை சொல்லுகிற பாணியும் லாகவமும் சுவாரஸ்யமான கதைகளும் சுண்டல் பொங்கலை விடவும் சுவையாயிருந்தன. கதைகளுக்காகவே தினமும் பள்ளிமுடிந்ததும் விளையாடாமல் முகத்தை கழுவி திருநீர் போட்டுக்கொண்டு முதல் வரிசையில் அமர்ந்திருப்பேன். இன்னமும் அந்தப்பெயர் தெரியாத பெரியவர் சொன்ன கதைகள் அனைத்தும் நினைவிலேயே இருக்கிறது. எஸ்ராவின் பேச்சும் அப்படித்தான் இருந்தன. பல ஆண்டுகளுக்கு பிறகு திருநீரு பூசாமல் கையைக்கட்டிக்கொண்டு முதல்வரிசையில் அமர்ந்து ஆவென ஆச்சர்யத்தோடு கதை கேட்டு மகிழ்ந்தேன்.

எஸ்ராவின் பேச்சினை உலக இலக்கியங்கள் ஃபார் டம்மீஸ் என்று வைத்துக்கொள்ளலாம். ஏழுநாட்கள் பேச்சு என்றபோதும் என்னால் முதல்நாள் போகமுடியவில்லை. போகிற ஆர்வமும் இல்லை. ஃபேஸ்புக்கில் சிலர் எஸ்ராவின் பேச்சு பிரமாதம் என புகழ்ந்து தள்ளுவதைக்கேட்டு அப்படி என்னதான்யா இந்தாளு பேசறாரு பார்த்துபுடுவோம் என இரண்டாம் நாள் ரஷ்யன் கல்ச்சுரல் சென்டருக்கு சென்றேன். சாரு மாதிரியான புகழ்பெற்ற எழுத்தாளர்கள் கூட பேச்சைக்கேட்க வந்திருந்தனர்.

அரங்குநிறைந்து முப்பதுக்கும் மேல் வாசகர்கள் நின்றுகொண்டே பேச்சைக்கேட்டுக்கொண்டிருந்தனர். நாற்காலிகள் கிடைக்காத காரணத்தால் அரங்கின் ஓரத்தில் தரையில் அமர்ந்து கேட்கத்தொடங்கினேன். அன்றைக்கு பேச்சு தாஸ்தோவ்ஸ்கி பற்றியது. அந்தப்பெயரை இதற்குமுன் பகடி எழுத மட்டுமே பயன்படுத்தியதாக நினைவு. அவர் எழுதிய புத்தகங்களின் பெயர்களை மட்டுமே தெரிந்துவைத்திருந்தேன். தாஸ்தோவ்ஸ்கியின் குற்றமும் தண்டணையும் புத்தகம் குறித்து பேசத்தொடங்கினார் எஸ்ரா.

ரொம்ப மொக்கை போட்டா எழுந்து ஓடிடுவோம் என்கிற எண்ணத்துடன் ஓட்டப்பந்தய வீரனைப்போல தயாராயிருந்தேன். ஆனால் எஸ்ராவின் பேச்சு.. தகவல்கள்.. பகிர்ந்துகொண்ட விதம். அப்படியே இரண்டு கால்களையும் கட்டிப்போட்டு அமரவைத்தது. கிட்டத்தட்ட ஒன்னாம்ப்பு படிக்கும் பையனைப்போல சம்மணமிட்டு கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்து நான்மட்டுமல்ல ஒட்டுமொத்த அரங்குமே கேட்டுக்கொண்டிருந்தது.

தான் படித்த ஒரு புத்தகத்தினை தெரிந்துகொண்ட சில தகவல்களை நண்பனைப்போல பகிர்ந்துகொண்டார். ஒரு மந்திரவாதியினைப்போல தாஸ்தோவ்ஸ்கியின் வாழ்க்கையையும் அந்நாவல் ஏன் எழுதப்பட்டது,எப்போது எழுதப்பட்டது,எப்படி எழுதப்பட்டது , எது அவரை அந்நாவல் எழுத தூண்டியது. அந்நாவல் அதன் ஆசிரியருக்கு எப்படிப்பட்டது என தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்தில் தாஸ்தோவ்கியின் மீது ஒரு ஈர்ப்பையும் அவருடைய எழுத்துகளின் மீது ஒரு மரியாதையையும் உண்டாக்கினார் என்றுதான் சொல்லவேண்டும்.

எதைப்பற்றி பேசினாலும் அதோடு தொடர்புடைய திரைப்படங்கள்,நாடகங்கள்,கவிதைகள்,புத்தகங்கள்,வரலாற்று சம்பவங்கள் என எதையுமே விட்டுவைக்காமல் பகிர்ந்துகொண்டார். உதாரணமாக மேக்பெத் குறித்து பேசும்போது அக்கதையில் வருகிற மூன்று சூனியக்காரிகளுக்கு வரலாற்றை தெரிவித்தார். ஷேக்ஸ்பியரின் காலத்தில் சூனியக்காரிகள் வேட்டையாடிக்கொல்லப்பட்டதையும் கூறினார். இப்படி ஒவ்வொரு கதையில் வருகிற கதாபாத்திரங்களின் வேர்களையும் தேடியது அந்த உரை.

தனக்கு தெரிந்த அனைத்தையுமே பகிர்ந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்தை உணரமுடிந்தது. உலக இலக்கியங்களை மனிதர்களின் சமகாலவாழ்வியலோடு தொடர்பு படுத்தி பேசியது சிறப்பாக இருந்தது. அவர் பேசியதில் சில தகவல் பிழைகளிருப்பதாக நண்பர்கள் சுட்டிக்காட்டினர். இருந்துவிட்டுபோகட்டுமே. உலக இலக்கியங்கள் என்பதே பாகற்காயாக இருந்த எனக்கு அதையெல்லாம் படித்துவிடவேண்டும் , தேடிதேடி தாஸ்தோவ்ஸ்கியையும் டால்ஸ்டாயையும் பாஷோவையும் ஹோமரையும் ஷேக்ஸ்பியரையும் படிக்கவேண்டும் என்கிற ஆர்வத்தினையும் இரண்டு மணிநேரத்தில் உண்டாக்கியிருக்கிறாரே!

ஹோமரின் இலியட் பற்றி பேசியபோது அதை இந்தியாவின் புராணங்களோடு ஒப்பிட்டு கிட்டத்தட்ட இந்திய இலக்கியமாகவே மாற்றிக்காட்டினார். இலக்கியம் எதுவாக இருந்தாலும் எந்த நாட்டினுடையதாக இருந்தாலும் அவை அனைத்துமே மனிதர்களுக்கானவை என்பதே எஸ்ராவின் ஏழுநாள் உரையின் ஒரே கருத்தாக இருந்தது. நம் வாழ்வில் கதைகளின் முக்கியத்துவம் குறித்துப்பேசினார்.

ஏழு நாள் உரை அவர்மீது ஒருவித அன்பினை நட்பினை பிணைப்பை உண்டாக்கியது. எவ்வளவு இனிமையான மனிதர் இவர். புன்னகையோடு அனைத்தையும் நேசிக்கிறார். எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டுகிறார். ஒரு குழந்தையைப்போல ஆர்வத்துடன் விஷயங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். நிறையவே தெரிந்துகொள்கிறார். இன்னமும் அவருக்குள் ஒரு குழந்தைத்தன்மை மிச்சமிருப்பதையும் உணர முடிந்தது. மூன்றாம் நாள் ஹைக்கூ குறித்து பேசும் போது அது நிகழ்ந்தது. திருடன் விட்டுச்சென்ற ஜன்னல் நிலவு என்கிற ஹைக்கூ குறித்து பேசினார். அற்புதமான பேச்சு அது. ‘’மாஸ்டர் என்னை உங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளுங்கள்’’ என கத்திவிட வேண்டும் போல இருந்தது.

வாழ்க்கையை இயற்கையை மனிதர்களை குணங்களை கிட்டத்தட்ட அனைத்தையுமே அவர் நேசிக்கிறவராக இருப்பதை ஏழுநாள் உரைகளும் எனக்கு உணர்த்தியது. எதையுமே விலகிநின்று ரசிக்கிற தன்மையை உணர முடிந்தது. ஆனால் ஒருநாள் கூட ‘என்னுடைய அந்த புத்தகத்தில் அப்படி எழுதியிருக்கிறேன்.. இந்தக்கதையில் இப்படி எழுதியிருக்கிறேன்.. அதை வாங்கிப்படியுங்கள் அதுதான் இலக்கியம்.. ‘’ என்றெல்லாம் பெருமை பீத்தல்களில் அவர் இறங்கவேயில்லை. ஏழுநாட்களும் அரங்கு நிறைய அதுவே காரணமாக இருக்கலாம்.

உலக இலக்கியங்களை கரைத்துக்குடித்த பெரிசுகளுக்கு இந்த உரை சலிப்பூட்டக்கூடியதாகவும் மொக்கையாகவும் இருந்திருக்கலாம். என்னைப்போன்ற ஒன்னாம்ப்பு மாணவர்களுக்கு இதைவிடவும் சிறந்த இலக்கிய அறிமுகத்தினை இதற்குமுன் யாருமே கொடுத்ததில்லை. ஏற்பாடு செய்த உயிர்மைக்கு நன்றிகள்.

இந்த ஏழு நாள் உரையும் டிவிடி வடிவில் வெளியாகவுள்ளதாக தன்னுடைய இணையதளத்தில் எழுதியிருக்கிறார். அப்படி வெளியாகும்போது அனைவரும் நிச்சயமாக வாங்கி பார்க்கவேண்டும். மற்றபடி ஏழு நாட்களுக்கு பிறகு இன்றைக்கு மாலை எஸ்ராவின் உரையில்லை. என்பது ஒருவித ஏமாற்றத்தினை கொடுக்கிறது. டிசம்பர் 6 சாருவின் எக்ஸைல் வெளியீட்டு விழா வரைக்கும் காத்திருக்கவேண்டும். எஸ்ரா அன்றைக்கு பேசுகிறார்.