Pages

06 January 2012

கோடம்பாக்கம் கும்மி

நல்லபடங்களுக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் தோல்வியை தழுவுகிற துயரமெல்லாம் கலைஞர் ஆட்சியில் மட்டுமல்ல கருணை உள்ளம் கொண்ட அம்மாவின் ஆட்சியிலும் நடக்கிறது. குடும்ப ஆட்சி மாறினாலும் கண்ணீர்க்காட்சிகள் மாறவில்லை என கோடம்பாக்கம் வட்டாரங்கள் இப்போதே கூடிகூடி கும்மியடித்து அழத்தொடங்கிவிட்டனர். அதற்கு சரியான உதாரணம் அண்மையில் வெளியான மௌனகுரு மற்றும் மகான் கணக்கு. மௌனகுரு படத்தின் நாயகன் கலைஞரின் பேரன் அருள்நிதி என்பது நீதிக்கதைகளை உங்களுக்கு நினைவூட்டலாம்.


கடந்த ஆண்டில் வெளியான மிகச்சில நல்லபடங்களில் மௌனகுருவும் ஒன்று என விமர்சகர்களால் பரவலாக பாராட்டப்பட்ட படம். ராஜபாட்டை பார்த்து பேண்ட்டு சட்டையெல்லாம் கிழித்துக்கொண்டதிலிருந்து இனி தமிழ்படமே பார்ப்பதில்லை என சபதமேற்றிருந்தேன். ஆனால் நண்பர்கள் தொடர்ந்து மௌனகுரு நன்றாக இருப்பதாகவும் கட்டாயம் பார்க்கவேண்டிய படமென்றும் சொல்லி சொல்லி அதிர்ச்சியூட்டிக்கொண்டே இருந்தனர்.


மௌனகுரு படத்தின் நாயகன் அருள்நிதி , கலைஞர் அளவுக்கு பிரமாதமான திறமை கொண்டவரில்லை. இருந்தாலும் அவருடைய வம்சம் திரைப்படம் பசங்க பாண்டிராஜின் கதையால் எப்படியோ பிழைத்துக்கொண்டது. ஆனால் அவர் நடித்த உதயன் படத்தினை பார்த்து சரக்கடிக்காமலேயே வாமிட் பண்ணியிருக்கிறேன். அப்படி ஒரு படம் வந்தது கூட பலருக்கும் தெரிந்திருக்காது. படுபயங்கரமான திரைப்படம் அது. அதைபற்றி நினைக்கவே நெஞ்சு நடுங்குகிறது. அது ஒரு காரணம் என்றாலும் படம் பார்க்க தூண்டுகிற எந்த அம்சமும் இல்லாமல் இவ்வளவு மொக்கையாக கூட டிரைலர் வெட்ட முடியுமா என கீழத்தெரு கிச்சாகூட கேட்குமளவிற்கு வெட்டப்பட்ட ஒரு டிரைலரும் படம் பார்க்கிற ஆர்வத்தை வெகுவாக குறைத்தன. இருந்தும் நான் மௌனகுரு படம் பார்த்த சம்பவம் ஒரு விபத்தினைப் போல நடந்தேறியது!


படமெடுத்தவர் மிஷ்கினுக்கு தூரத்து சொந்தமாக இருக்கலாம், திரையில் வருகிற எல்லா காட்சிகளும் அச்சு அசல் மிஷ்கின் டைப். அதிலும் அந்த மஃப்டி போலீஸ்காரர்கள்,ஹாஸ்டல் காட்சிகள்,வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வுகள், பொறுமையாக நகரும் காட்சிகள் என எல்லாமே மிஷ்கினையே நினைவூட்டியது. அதுதான் இந்த படத்தின் குறையும் கூட. விருவிருவென வெறித்தனமாக ஹைவேஸில் பாய்கிற கார் போல சென்றிருக்க வேண்டிய படம் பொறுமையாக மெட்ரோ ரயில் பிராஜக்ட்டைப்போல சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் வேகம் தவிர்த்து குறையொன்றுமில்லை! சிறந்த திரைக்கதை, நல்ல கதை சொல்லும்பாணி, பாத்திரத்தேர்வு, ஒரளவு ஓக்கேவான இசை, நாடகத்தனமில்லாத எளிமையான வசனங்கள், இயற்கையான லைட்டிங்கில் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் என எல்லா விதத்திலும் சிறந்தபடம். எப்போதும் உம்மென எந்த ரியாக்சனும் இல்லாமல் கல்லுப்பிள்ளையார் போலவே நடிக்கும் அருள்நிதிக்கு அல்வா போல கேரக்டர்.


குடும்பம் என்கிற அமைப்பின் பிடிமானத்தில் வளர்க்கப்படுகிற ஒரு சாதாரண மாணவன் அதன் பிடியிலிருந்து விலக்கிவைக்கப்படுவதால் உண்டாகும் மன அழுத்தம் , அவன் அந்த சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என நீளும் கதையை எந்த பாசாங்கும் இல்லாமல் சிறந்த காட்சி அனுபவமாக உருவாக்கியிருக்கும் இயக்குனர் சாந்தகுமாருக்கு பாராட்டுகள். நிச்சயம் பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் மௌனகுருவும் இடம்பெறும்.
சென்ற வாரம் பார்த்த இன்னொரு உருப்படியான படம் மகான் கணக்கு. மொக்கை பிலிம் கிளப் சார்பில் பார்க்கிற எந்த படமும் உருப்படியாக இருந்ததாக சரித்திரமே இல்லை. மகான் கணக்கு மொக்கை படமாகவே இருந்தாலும் அது பேசுகிற காட்சிப்படுத்தியிருக்கிற விஷயம் தமிழ்சினிமாவுக்கு புதுசு. கிரடிட் கார்டு,பர்சனல் லோன் மாதிரியான சமாச்சாரங்களால் நாம் படுகிற துன்பங்களையும் அதற்கான தீர்வுகளை முன்வைக்கிற கரம் மசாலா படம்! அதிலும் லோன் வாங்கிவிட்டு அவதிப்படும் மனிதர்களை மிகச்சரியான காட்சிகளால் கண்முன் உலவ விட்டிருக்கிறார் இயக்குனர்.


அதிலும் வீட்டிற்கே வந்து மிரட்டுகிற வங்கி அதிகாரிகள் , அவர்கள் தரும் மன உளைச்சல் என நீளும் காட்சிகள் குலைநடுங்க வைக்கிறது. தியேட்டரிலேயே பலரும் பச்சை பச்சையாக பிரபல வங்கிகளை திட்டித்தீர்த்தனர்.


படத்தின் ஹீரோயின் தொடங்கி இசை,கேமரா என எல்லாமே சுமார்தான் என்றாலும் வங்கிக்கடன் குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் வகையில் சுவாரஸ்யமாக படமெடுத்த இயக்குனரை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். படம் பார்க்கும் அனைவருக்குமே இந்த தனியார் வங்கிகள் தருகிற கிரடிட் கார்டுகள்,பர்சனல் லோன் மாதிரியான ஏமாற்றுவேலைகளின் மேல் நிச்சயம் வெறுப்புண்டாகும் என்பது நிச்சயம். இனி எப்போதும் இந்த வங்கிகளில் எந்த கடனையும் வாங்க பத்துமுறை யோசிக்க தூண்டும். மிகப்பெரிய ஹீரோக்கள் நடித்திருக்க வேண்டிய படம், நடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் வங்கிக்கடன் குறித்த செய்தியை மக்களுக்கு கொண்டுபோயிருக்கலாம். படம் கோவையில் நடப்பதாக காட்டப்படுவதால் கூடுதல் உற்சாகம் தொற்றிக்கொள்ளுகிறது.


சொந்த ஊர் என்றாலே கொஞ்சம் பெருமிதமும் ஒரு சிலிர்ப்பும் உண்டாவது இயல்புதானே. அந்த வகையில் கோவையை சேர்ந்த சில இளைஞர்கள் ஒன்றுகூடி ‘’கோயம்புத்தூரா கொக்கா’’ என்கிற வீடியோ ஆல்பத்தினை உருவாக்கியுள்ளனர். பாடலில் ஆங்காங்கே கொஞ்சம் பீட்டர்த்தனம் தென்பட்டாலும் பாடலை காட்சிப்படுத்திய விதத்திலும் அது எழுதப்பட்டதிலும் கவர்கின்றனர். இதை பார்க்கிற ஒவ்வொரு கோயம்புத்தூர் காரவீகளுக்கும் ஒருநிமிஷம் ஒடம்பு சிலுத்துக்கும் நெஞ்சுமுடி நட்டுக்கும் என்பது நிச்சயம். கோவையின் சிறப்புகள் ஒவ்வொன்றையும் அதன் தன்மை மாறாமல் படம் பிடித்து சரியான அளவில் எடிட் செய்து அருமையாக கோர்த்துள்ளனர். இதை பார்க்கும் போது நிஜமாகவே நானும் ஒரு கோயம்புத்தூர்காரன்தானுங் என்கிற காலர் உயர்த்துதலின் சுயபெருமைத்துவம் வருவது இயல்புதான் என்றே நினைக்கிறேன். அதே நேரம் கோவையின் அழகே பச்சையும் பசுமையும்தான் அது வரவர மாமியா கழுதா மாறி ஆனாளாம் என்பதுபோல கோவையில் பச்சை என்கிற நிறமே இல்லாத அளவுக்கு கான்க்ரீட் காடாக மாறிக்கொண்டிருப்பதாகவும் ஒரு அச்சம்!


மரமில்லாத கோவைக்கும் மயிரில்லாத மண்டைக்கும் மரியாதை கிடையாது அதை கோவை வாசிகள் உணர்ந்து நிறைய மரம் நடுங்கப்பா!


கோயம்புத்தூரா கொக்கா வீடியோ

இந்தியாவே கொலைவெறி பிடித்து அலைந்த போதும் எனக்கு ஏனோ அந்தப்பாடல் மனதில் ஒட்டவேயில்லை. காரணம் இதையெல்லாம் கிமுவில் இளையராஜாவே செய்துவிட்டதாகவே கருகிறேன். அதுபோக இசைக்கோர்வையும் பாடல்வரிகளும் கொஞ்சம் கூட ஈர்க்கவேயில்லை. வில்பர் சற்குணராஜ் செய்யாத சாதனையை கொலைவெறி செய்துவிட்டதாக தெரியவில்லை. தனுஷ் போலவே இதுவும் பார்த்ததும் பிடிக்காதோ என்னவோ பார்க்க பார்க்க பிடிக்குதா என்று பார்க்கவேண்டும். ஆனால் அதே பாடலை ஹைதராபாதினை சேர்ந்த குட்டிப்பாப்பா ஒன்று பிரமாதமாக ரொம்ப அழகாக அசத்தலாக க்யூட்டாக பாடி அசத்தியிருக்கிறாள். இதை பார்த்தவுடன் எனக்கு ரொம்பவே பிடித்தது.


பாப்பா பாடும் பாட்டு..