Pages

09 January 2012

மயில் ரக்க...
பாப்பாவுக்கு மூன்று நாளாக ரொம்பவே கவலையாகிவிட்டது. பள்ளிக்கூடத்தில் யாரோ கொடுத்த மயில்ரக்கையை கணக்கு புத்தகத்தில் வைத்திருந்தாள். அது குட்டிபோடும் என்கிற எதிர்பார்ப்புடன் காத்திருந்தும் அது குட்டிபோடாமல் இருந்ததே கவலைக்குக் காரணம்.

‘’அப்பா.. ரம்யாவோட மயில் ரெக்கை ரெண்டு குட்டி போட்டுடுச்சுப்பா.. என்னோட மயில் ரெக்கை எப்போ குட்டிப்போடும்’’ என ஒவ்வொரு நாளும் கேட்பாள். ராஜேஷும் ‘’நாளைக்கு குட்டிப்போட்டிடும்மா’’ என்று பொய்யான நம்பிக்கை தருவான். தினமும் காலையில் எழுந்ததும் ஓடிப்போய் கணக்கு புத்தகத்தை திறந்து பார்ப்பாள். அதில் அவள் ஏற்கனவே வைத்திருந்த அதே மயில் ரக்கை உறங்கிக்கொண்டிருக்கும். புத்தகத்தை பார்த்ததும் முகம் வாடிவிடும். கணக்கு புத்தகத்திலிருந்து தமிழ்புத்தகத்திற்கு வீடு மாற்றிப்பார்த்தாள் அப்போதும் குட்டிபோடவில்லை.

‘’அப்பா! நேத்து நைட்டு சொன்னியே நாளைக்குக் காலைல குட்டிப்போட்டிடும்னு.. ஏன்ப்பா இன்னும் குட்டிப்போடல, என்னை தூங்கவைக்கறதுக்காக பொய் சொன்னியா!’’ என கோபத்துடன் திட்டுவாள். பார்க்க பாவமாக இருக்கும்.

‘’மயில்ரக்கைலாம் குட்டிபோடாதுடா.. அதுலாம் சும்மா.. ரம்யா வீட்லருந்து இன்னொரு மயில் ரக்கைய எடுத்துட்டுவந்து புக்குக்குள்ள வச்சி உன்னை ஏமாத்திருப்பா.. அதெல்லாம் நம்பாத பாப்பா’’ என்று சொன்னாலும் விடமாட்டாள்.

‘’போப்பா! அதெல்லாம் கிடையாது நானும் உன்னையமாரியே ரம்யா கிட்ட கேட்டேன்பா.. என்னடி வீட்லருந்து வேற ரக்கை வச்சி எடுத்துட்டு வந்துட்டியானு.. ஆனா அவ நிஜமாவே குட்டிப்போட்டுச்சுனுதான் படிப்புமேல பிராமிஸ் பண்ணி சொன்னா, நம்முள்து நல்ல ரக்கை இல்ல போல.. உடம்பு சரியில்லையோ என்னவோ.. அதான் குட்டிப்போடல’’ என அவளுக்கான காரணங்களை அவளே கண்டுபிடிப்பாள்.

பார்க்கவே பாவமாக இருக்கும். பாப்பாவைப்போலவே ராஜேஷூம் இரண்டாம் வகுப்பு படித்தபோது  இதுபோல மயில் ரக்கைகள் வைத்து அது குட்டிபோடுமா என காத்திருந்து ஏமாந்துபோயிருக்கிறான். அப்போதெல்லாம் அவனுடைய நண்பன் வடிவேலுவின் புத்தகத்தில் இந்த மயில் ரக்கைகள் குட்டிப்போட்டதாக சொல்லி நிறைய காட்டுவான்.

அவனுக்கு இன்று வரை அதுவே புதிரான விஷயம்தான். சிலருடைய புத்தகங்களில் மட்டும் எப்படியோ இந்த மயில்ரக்கைகள் குட்டிப்போடுகின்றன.

பாப்பாவின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. தாயில்லாத குழந்தை. மனசு கேட்காமல் ஒருநாள் அலுவலகத்திலிருந்து வரும் வழியில் கோயில்வாசலில் ஒரு நல்ல ஃப்ரஷ்ஷான மயில்ரக்கையை வாங்கிக்கொண்டு வந்து அன்றைக்கு இரவே ராவோடு ராவாக பாப்பா உறங்கிய நேரம் பார்த்து அவளுடைய தமிழ் புத்தகத்தை திறந்து அதில் அந்த மயிலிறகை வைத்துவிட்டான். விடிந்தால் அதை பார்த்து குட்டிப்பாப்பா துள்ளிகுதித்து மகிழ்வாள் என்கிற கனவோடு தூங்கப்போனான். விடிந்தது. பாப்பா அந்த புத்தகத்தோடு டைனிங் டேபிளில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ராஜேஷிடம் வந்தாள்.

‘’அப்பா அந்த புக்குல மயில்ரக்கைய ஏன் வச்ச..?’’ என்றாள். ராஜேஷூக்கு திக்கென்றிருந்தது.

‘’நான் வைக்கல பாப்பா.. அது உன் ரக்கை போட்ட குட்டியா இருக்கும்.. ’’ என்றான்.

‘’பொய் சொல்லாத.. நீதான் வச்சிருக்க எனக்கு நல்லாத்தெரியும்’’ என உறுதியாக சொன்னாள்.

‘’ஏன் பாப்பா இப்படி சொல்ற.. அப்பா பொய் சொல்லுவேனா.. நான்தான் வைக்கலேனு சொல்றேனில்ல’’ என்றான்.

‘’ஏன்ப்பா இதுமாதிரிலாம் பண்ற.. பொய்வேற சொல்ற, பொய்சொல்றது ரொம்ப தப்பு! இங்கே பார் இது நான் வச்சிருந்த மயில் ரக்கை..’’ என அவளுடைய மயில் ரக்கையை காட்டினாள்.

‘’இது நீ வச்ச மயில் ரக்கை’’ என அவன் இரவு வைத்த மயில்ரக்கையையும் காட்டினாள். ராஜேஷுக்கு ஒன்றுமே புரியவில்லை. திருதிருவென முழித்தபடி பாப்பாவிடம் என்ன சொல்வது என யோசித்தான்..

‘’எங்கேயாச்சும் குட்டி அதோட அம்மாவை விட பெரிசா இருக்குமா! பாரு நீ வச்ச மயில் ரக்கை எவ்ளோ பெரிசா இருக்கு.. என்னோட மயில்ரக்கைய பாரு எவ்ளோ சின்னதா இருக்கு.. இதுகூட தெரியாம மயில்ரக்கையை கடைலருந்து வாங்கிட்டு வந்து வச்சதுமில்லாம பொய்வேற சொல்ற.. போப்பா..பேட் அப்பா.. இவ்ளோ பெரியவங்களா இருந்துட்டு பொய் சொல்லலாமா? பொய் சொல்லக்கூடாதுனு நீதான் எனக்கு சொல்லிக்குடுக்கணும்!’’ என பேசிவிட்டு எரிச்சலோடு அவன் வாங்கி வைத்த மயில்ரக்கையை டேபிளில் வைத்துவிட்டு பள்ளிக்கு கிளம்பினாள்.

விக்கித்துப்போய் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென குடிக்க ஆரம்பித்தான் ராஜேஷ்.

பாப்பாவின் அராஜகம் இப்படியாக அதிகமாகிக்கொண்டே சென்றது. ஒருநாள் மாலைநேரம் அலுவலகத்திலிருந்து வந்தவனிடம் தன் கணக்கு புத்தகத்துடன் ஓடிவந்தாள். ''அப்பா தோ பாரு என் மயில் ரக்க குட்டி போட்டிருச்சி!'' என்று காட்டினாள். ராஜேஷுக்கு புரியவேயில்லை. எடுத்துப்பார்த்தான் ஏற்கனவே பாப்பா வைத்திருந்த அதே மயில்ரக்கையின் ஜாடையில் இன்னொரு சின்ன மயில்ரக்கை!

''பாப்பா உண்மைய சொல்லு இது எப்படி வந்துச்சு..''

''அப்பா இது அந்த ரக்க போட்ட குட்டிப்பா.. பாரு எவ்ளோ அழகா இருக்குன்னு.. அவங்க அம்மா மாதிரி''

''மயில்ரக்கைலாம் குட்டிபோடாதும்மா! நீ நல்ல பாப்பா தானே பொய்சொல்லாத! இந்த குட்டி ரக்க எப்படி வந்துச்சு''

''அப்பா படிப்பு பிராமிஸ்! இது அந்த ரக்கை போட்ட குட்டிதான்ப்பா'' என்று அடித்து சத்தியமும் செய்தாள். ராஜேஷுக்கு குழப்பமாக இருந்தது. இன்னொரு முறை கணக்கு புத்தகத்தை பார்த்தான்..ஆமாம் இரண்டு மயில் ரக்கை இருக்கிறது.. ஆனால் எப்படி?

''அப்பா உனக்கு ஐஸ்க்ரீம் சாக்லேட் வீடியோகேம்ஸ்லாம் வாங்கித்தரேன்.. உண்மைய சொல்லும்மா''

''அப்பா இந்த மயில்ரக்கைய தமிழ் புக்குலருந்து எடுத்து கணக்கு புக்குக்குள்ள காலைல ஸ்கூலுக்கு போனதும் வச்சேனா! அப்புறம் ஈவ்னிங் எடுத்துப்பார்த்தா குட்டிப்போட்டிருக்கு! மயில்ரக்கை எப்படி குட்டிபோடும்னு இவ்ளோ பெரிய ஆளு உங்களுக்கே தெரியல.. நான் குட்டிப்பொண்ணு எனக்கு எப்படி தெரியும்! போப்போ ஒனக்கு ஒன்னுமே தெரியல!'' என்றாள் பாப்பா.

இந்தமுறையும் விக்கித்துப்போய் அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மடமடவென குடிக்க ஆரம்பித்தான் ராஜேஷ். இதற்குமேல் அவளை கட்டாயப்படுத்தி கேட்டால் அழத்தொடங்கிவிடுவாள்.. அவளை சமாதானப்படுத்தவே முடியாது. அதனால் இந்த பிரச்சனையை இத்தோடு நிறுத்திவிட்டு ''ஓக்கே பாப்பா! அது இன்னொரு குட்டிப்போட்டா எனக்கு ஒன்னு குடும்மா'' என்று சொல்லிவைத்தான்.

தன்னுடைய டைரியில் அன்றொரு நாள் பாப்பா வீசிச்சென்ற மயில்ரக்கையை பத்திரப்படுத்தி வைத்திருந்தான். அதை எடுத்துப்பார்த்தான். அது குட்டியெல்லாம் போடாமல் அமைதியாக டைரியின் பக்கங்களுக்குள் உறங்கிக்கொண்டிருந்தது.சிலருடைய புத்தகங்களில் மட்டும் எப்படியோ இந்த மயில்ரக்கைகள் குட்டிப்போடுகின்றன.


(நன்றி-வசந்தம்)