Pages

16 March 2012

வெறும் சுவர் அல்ல... இரும்புக்கோட்டை!உள்ளூர் போட்டியொன்றில் எதிரணி பந்துவீச்சாளரின் அபாரமான பந்தில் போல்ட் முறையில் அவுட்டாகிவிட்டார் டிராவிட். அது அவ்வளவு முக்கியமான போட்டி இல்லை. டிராவிட் சரியாக விளையாடாத போதும் அவருடைய அணி வெற்றிபெறவே செய்தது. யாருமே ராகுல் டிராவிடை எந்தக்குறையும் சொல்லவில்லை.

மற்றவர்களைப்போல டிராவிட் இதை சாதாரண விஷயமாக நினைக்கவில்லை. அதற்காக ரூம்போட்டு அவுட்டாகிவிட்டோமே என்று கதறி அழவில்லை. மேட்ச் முடிந்த அன்று மாலைநேரத்தில் உத்தரத்தில் ஒரு பந்தினை கட்டித்தொங்கவிட்டு எந்த தவறான ஷாட்டினால் அவுட்டாக நேர்ந்ததோ அதே ஷாட்டினை பல ஆயிரம் முறை கைகள் வலித்தாலும் இரவெல்லாம் அடித்து அடித்து கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார்! அப்போது டிராவிட்டுக்கு வயது பதினைந்து.

விளையாட்டுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டு அதையே தன் உயிர்மூச்சாக நினைத்து விளையாடுகிறவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த சொற்ப மனிதர்களில் டிராவிட்டும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இடத்தை நிரப்ப போவது யார் என்கிற கேள்விகள் எழுந்தவண்ணமுள்ளன.. ‘’டிராவிட் இடத்தை டிராவிட்டால் மட்டும்தான் நிரப்பமுடியும்’’ என்கிறார் சச்சின்! அதுதான் நிதர்சனம்.

பதினாறு ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 95ரன்களில் தொடங்கியது. அப்போதிருந்தே எந்தவித பவுலருக்குமே டிராவிட் என்றால் கொஞ்சம் கிலிதான்.

1996க்கு முன்பு அந்நிய மண்ணில் டெஸ்ட் வெற்றியென்பதெல்லாம் எட்டாக்கனியாகவே இருந்த நிலையை மாற்றி ஆஸ்திரேலியாவிலும்,இங்கிலாந்திலும்,மேற்கிந்திய தீவுகளிலும்,தென்னாப்பிரிக்காவிலும் இந்திய அணி வெற்றிகளை குவிதத்தில் முக்கிய பங்கு டிராவிடுக்கு உண்டு!

டிராவிட் ரொம்ப கட்டை வைப்பாருப்பா? ரன்னே அடிக்க மாட்டாரு! செமபோரு என்று அவர் மீது பொதுவான விமர்சனங்கள் உண்டு. அதற்கெல்லாம் பதில் அவருடைய சாதனைபுத்தகங்களில் கொட்டிக்கிடக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 13288 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 10889ரன்கள்! கிரிக்கெட் ஆடுகிற எல்லா நாடுகளுக்கு எதிராகவும் இரண்டுக்கும் மேல் சதங்கள் அடித்தவர். அவர் ஆடிய 164டெஸ்ட் போட்டிகளில் 56போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 56போட்டிகளில் 15சதமும் 23அரை சதமும் அடித்திருக்கிறார். இந்த தகவல்களே சொல்லும் இந்திய அணியின் வெற்றிகளில் டிராவிடின் பங்கினை! தோற்கும் நிலையிலிருக்கிற ஆட்டங்களை டிராவாகவும் மாற்றிக்காட்டியிருக்கிறார் டிராவிட்.தடுப்பாட்டத்தில் மட்டுமல்ல அதிரடியாகவும் ஆடுகிற திறமையை கொண்டிருந்தவர். ஆனால் அதை அரிய தருணங்களில் மட்டுமே வெளிப்படுத்தினார்.

இந்திய கிரிக்கெட்டில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஒரே வேலை இந்திய அணியின் பேட்டிங் வரிசை தடுமாறும்போதெல்லாம் மைதானத்தில் தோன்றி ஆபத்பாந்தவனாக காப்பாற்ற வேண்டும்!. இந்திய அணியின் மிடில் ஆர்டர் டிராவிடை சுற்றியே இயங்கியது. அதனாலேயே அவரால் பல நேரங்களில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியாமல் போனதற்கான காரணமாக இருக்கலாம். டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் குவிப்பதை காட்டிலும் எத்தனை மணிநேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்கிறோம் என்பதுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். அது டிராவிடுக்கு கைவந்தகலையாக இருந்தது. அவருடைய விக்கெட்டை வீழ்த்துவது அத்தனை எளிதாக இருந்திருக்கவில்லை.

‘’அவரை நான் இந்திய கிரிக்கெட்டின் இரும்பு மனிதர் என்றுதான் அழைப்பேன்! ஆடுகளத்தில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்பேர்ப்பட்ட சிக்கலான நிலையையும் இந்திய அணிக்கு சாதகமாக மாற்றிக்காட்டியவர்’’ என புகழாரம் சூட்டுகிறார் கவாஸ்கர்.

உலகில் எந்த இடத்திற்கு சுற்றுப்பயணம் செய்யப்போவதாக இருந்தாலும் அதற்கு ஒருமாதம் முன்பே தன்னை தயாரிக்கத்தொடங்கிவிடுவார் டிராவிட். இங்கிலாந்துக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதல் வேலையாக இங்கிலாந்தின் எந்தெந்த பகுதிகளில் விளையாட இருக்கிறோம் என்கிற தகவல்களை தேடி எடுப்பார். அந்தப்பகுதியின் சீதோஸ்ன நிலை, மைதானங்களில் உள்ள ஆடுகளங்களின் தன்மை, எதிரணி பந்துவீச்சாளர்கள் யார் யார்? அவர்களுடைய பலம் என்ன? பலவீனம் என்ன? என்று சகலவிஷயங்களையும் தெரிந்துவைத்துக்கொள்வார். அதற்கு பிறகு தன் பயிற்சியை தொடங்குவார். பங்களாதேஷ் போனாலும் சரி கடினமான ஆடுகளங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி ஒரே அணுகுமுறைதான். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்யவேண்டும் என்கிற நோக்கம்தான் ராகுல் டிராவிட்.

1999ல் நியூஸிலாந்திலும், 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலும், 2002ல் இங்கிலாந்திலும், 2003ல் பாகிஸ்தானிலும், 2006ல் வெஸ்ட் இன்டீஸிலும் அவர் வெளிப்படுத்திய அபாரமான பேட்டிங் திறனை கொண்டாடாத கிரிக்கெட் ஆர்வலர்கள் இருக்கவே முடியாது. உள்ளூரில் மட்டும்தான் இந்தியாவின் பருப்பு வேகும்.. வெளிநாடுகளில் எப்போதும் இந்தியா சோப்ளாங்கிதான் என்கிற கம்பராமாயணகாலத்து பாட்டினை தவிடுபொடியாக்கியவர் டிராவிட். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல மிஸ்டர்.இந்தியன் கிரிக்கெட் சென்ற இடமெல்லாம் ரன்களை குவிக்கத் தவறியதேயில்லை.

உள்ளூர் போட்டிகளைவிட வெளிநாடுகளில்தான் டிராவிட் அதிக ரன்களை குவித்தார். சென்ற ஆண்டு இங்கிலாந்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரண்டர் ஆன டெஸ்ட் தொடரில் மூன்று செஞ்சுரிகள் அடித்து இளம்வீரர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தார் டிராவிட்.

‘’பாரின் டூர் போகும்போது அவருடைய சீருடைகள் தவிர்த்து இரண்டே இரண்டு செட் பேண்ட் ஷர்ட்டுகள்தான் அவருடைய பையில் இடம்பெறும். அதையேதான் மாற்றிமாற்றிப்போட்டுக்கொள்வார். என்னங்க ஒருமாசம் வெளியூர்ல இருக்கப்போறீங்க இரண்டுசெட் டிரஸ் போதுமா என்று கேட்டால்.. நான் என்ன ஊர் சுற்றிப்பார்க்கவா போறேன்.. விளையாடத்தானே.. இதுபோதும் என்பார். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறபோதெல்லாம் பயிற்சிக்கு மட்டும்தான் முழு நேரத்தையும் ஒதுக்குவாரே தவிர்த்து ஊர் சுற்றுவதை தவிர்க்கவே செய்வார்’’ என்று கூறுகிறார் டிராவிடின் மனைவி விஜிதா டிராவிட்.

அணியின் மிகமுக்கிய மூத்த வீரராக இருந்தாலும் இளம் வீரர்களோடு சகஜமாக உரையாடும் அவர்களுக்கு கற்றுத்தர நினைக்கிற வீரராக டிராவிட் அறியப்படுகிறார். இந்திய டெஸ்ட் அணியின் புதுவரவான அஜிங்க்ய ராஹானே ஒரு பேட்டியில் ‘’நான் பேட்டிங் செய்து முடித்ததும்.. டிராவிடிடம் என்ன எப்படி பேட்டிங் செய்தேன் என கேட்க நினைப்பேன்.. சங்கோஜமாக இருக்கும். அதனால் கேட்க மாட்டேன். ஆனால் டிராவிட் அவராகவே வந்து நான் எப்படி விளையாடினேன் எங்கே சரிசெய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிச்சொல்வார் எனக்கு புல்லரிப்பாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார்.

டிராவிட் தோல்விகளை சந்திக்காமல் இல்லை. பல நேரங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் தன் பேட்டிங்கால் மட்டுமே பதில் சொன்னவர் டிராவிட். ‘’நான் பல நேரங்களில் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ஒருநாளும் என் முயற்சிகளை கைவிட்டதில்லை’’ என்று தன்னுடைய ஓய்வு அறிவிப்பின்போது பேசினார் டிராவிட். பதினாறு ஆண்டுகள் நாம் பார்த்த டிராவிட் அப்படித்தான் விளையாடினார்.

தன் வாழ்நாள் முழுக்க அதீத விளம்பர வெளிச்சங்கள் இல்லாமல், பாராட்டு மழையில் நனையாமல் தன்க்கு பிடித்த வேலையை சமயங்களில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும் முழு ஈடுபாட்டுடன் செய்தே வந்திருக்கிறார் டிராவிட். சின்ன சின்ன சாதனைகளை செய்துவிட்டு உடனடி அங்கீகாரத்துக்கு ஏங்குகிற இளைஞர்கள் டிராவிடிடம் கற்றுக்கொள்ள அநேக விஷயங்களுண்டு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெற்றுவிட்டார் டிராவிட். அவருடைய சாதனைகளுக்கு முன்னால் நம்முடைய வார்த்தைகள் வலுவிழந்துபோகின்றன. எத்தனை பாராட்டினாலும் புகழ்ந்தாலும் ராகுல் டிராவிட்டின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் முன்னால் எல்லாமே தூசுதான்! சல்யூட் ஜாம்மீ!

(நன்றி- புதியதலைமுறை)