Pages

22 June 2012

சப்பைக்கட்டு!உலகில் யாராக இருந்தாலும் எந்த தப்பு செய்வதாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே நல்ல வலுவான சப்பைக்கட்டு ஒன்றை தயார் செய்துவிடுவது நல்லது. ‘சப்பைக்கட்டு’ எந்த கடையிலும் கிடைக்காது அதை நாமேதான் நம்முடையவீட்டு வாணலியில் கிண்டி கிளறி தயாரித்து சமூகத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

தப்புகளுக்கு பிளான் பண்ணுவதை விடவும் அதிக முனைப்புடன் சப்பைக்கட்டுகளை உருவாக்குவதிலும் அவற்றினை கட்டமைப்பதிலும் திட்டமிட்டால் சமூகத்தின் கொடிய விமர்சனங்களிலிருந்து எளிதில் தப்பித்துவிடலாம்? ஒருவேளை உங்களுக்கு தண்டனை ஏதும் கிடைத்தாலும் தண்டனை காலம் முடியும்போது நீங்களும் தியாகியாகலாம். நாட்டை ஆளலாம். கொடியேற்றலாம். மிட்டாய் கொடுக்கலாம்.

கோடி கோடியாய் ஊழல் செய்யலாம், காட்டிக்கொட்டுக்கலாம், யாருக்கும் யாரையும்... ம்ம்ம்..ம்ம்ம்.. ஏன் கொலை கூட செய்யலாம். அடுத்தவனை வஞ்சகமாக அழிக்கலாம். இன்னொருவன் பண்ணின தப்பை மறைக்கிற வேலைகளையும் காசுக்காக செய்யலாம். (கற்பழிப்புகளுக்கு கூட உலக அளவில் பல புகழ்பெற்ற சப்பைக்கட்டுகள் சொல்லப்படுவதுண்டு).

இங்கே கவனிக்கப்படவேண்டியதும் கடைபிடிக்க வேண்டியதும், நாம் எப்பேர்ட்ட தப்புகளை செய்கிறோமோ அதற்கேற்ற வலுவான அறிவார்ந்த அறிவியல்பூர்வமான சப்பைக்கட்டினை நம்முடைய ஆதரவாளர் குழுவினை ஆலோசித்து உருவாக்க வேண்டும். எந்த அளவுக்கு சப்பைக்கட்டு பலமாக இருக்கிறதோ அதே அளவுக்கு நாமும் நம்முடைய தப்புகளை விரிவாக்கலாம்.

நல்ல அறிவார்ந்த உயர்ந்த சிந்தனை கொண்ட சப்பைக்கட்டுகள் நம்முடைய சமூக போராளி முற்போக்கு பிற்போக்கு இலக்கிய பின்நவீனத்துவ நடுநவீனத்துவ அரசியல் சமூக புரட்சிகர அந்தஸ்துக்கு பெரிய சேதம் உண்டாகாமல் நம்மை காக்கும் அபார வல்லமை கொண்டது.

உங்களுடைய சப்பைக்கட்டு முக்கியமாக அறிவுப்பூர்வமானதாவும் உலக இசங்கள். சிந்தனைகள், அறிஞர்களின் மேற்கோள்கள், விக்கிபீடியா ஆதாரங்கள், பெரியார் தொடங்கி சீமான் வரைக்கும் சமகால மனிதர்களின் வாழ்க்கை உதாரணங்கள் அடங்கியதாகவும் நான்குபேர் படித்தால் இரண்டரை பேர் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருத்தல் அவசியம்.

உங்களில் யாருடா உத்தமன்? நீ என்ன ஒழுக்க சீலனா? ஏய் சமூகமே நான் பசியோடிருந்த போது எனக்கு பன்னு வாங்கி தந்தாயா? காசுக்காக சோரம் போகாதவர் இங்கே யார்? என்பது மாதிரியான புரட்சிகர கேள்விகளை எழுப்பவும் தயங்கக்கூடாது. இதுமாதிரியான கேள்விகள்தான் எப்போதும் குற்றவாளிகளைப் போலவே உணர்ந்து திரியும் நடுத்தரவர்க்க கூட்டத்தின் வாயை எளிதில் அடைக்க உதவும்.

ஏதோ தெரியாம பண்ணிட்டேன் விட்டுடுங்க! நான் எதுவுமே பண்ணலை! ப்ளீஸ் க்ளீஸ் என்கிற மன்னிப்புக்கோரும் தொனியில் உங்கள் சப்பைக்கட்டு அமையுமேயானால் சமூகம் தன் கொடும் பற்களால் உங்களை மிட்நைட் டாக்ஸ் போல குதறிவிடும். பீ கேர் ஃபுல். ‘ஆமாய்யா பண்ணினேன்.. அதுக்கு இன்னான்ற! எனக்கு முன்னால் இருந்தவன் பண்ணலையா.. நீ ஒருத்தனுக்கு ஆதரவா பேசறியே அவன் இதை பண்ணலையா? என்று ஆரம்பித்தால் எதிர்ப்பவர்கள் பின்னாங்கால் பொடனியில் அடிக்க தெறித்து ஓடிவிடுவார்கள்! நாமும் ஈஸியாக ஜெயித்துவிடலாம்.

சப்பைக்கட்டினை தயார் செய்வதோடு உங்கள் வேலை முடிந்துவிடுவதில்லை. அதனை சந்தைப்படுத்துதலிலும் உங்களுக்கான ஆதரவாளர் வட்டத்தினை உருவாக்குவதிலும்தான் சவாலே இருக்கிறது. அரசியல்வாதியாக இருந்தால் இந்த சப்பைக்கட்டினை முட்டாள் தொண்டர்களிடம் ஒப்படைத்துவிட்டால் போதும் உங்கள் தப்பை சரியென்று வாதிட்டு உங்களை உத்தமராக்கிவிடுவார்கள். இலக்கியவாதிகளுக்கு வாசகர்கள் உண்டு! வட்டம் உண்டு. வாசகர்களே சேர்ந்து தப்பு செய்தாரா குஜிலியார் என்பதுமாதிரி புத்தகங்கள் வெளியிட்டு உங்களை காப்பாற்றிவிடுவார்கள். தொண்டரடிபொடிகள் இருக்கும் அனைவருக்கும் சப்பைக்கட்டினை சந்தைப்படுத்துதல் எளிதான காரியம்தான். உங்கள் சார்பு மீடியாவின் மூலமாகவும் சப்பைக்கட்டினை மக்களிடம் கொண்டு சேர்க்கலாம்.

தனிமனிதராக இருப்பவர்கள் நிலைதான் சிரமம். நீங்களாகவே ஒவ்வொருவருக்கும் நேரடியாக விளக்கித்தான் ஆகவேண்டும். அதற்கு சமூக வலைதளங்கள் பேருதவி செய்கின்றன. தப்பு செய்கிறவர்களை ரசிக்கிற மனிதர்களும் இவ்வுலகத்தில் இருப்பதால் விரைவில் உங்களுக்கும் ஆதரவாளர்கள் பெருகுவார்கள்.. மனதை தளரவிடவேண்டாம். உங்களுடைய சப்பைக்கட்டினைவிடவும் வலுவான சப்பைக்கட்டுகளை அவர்களே முன்மொழிய நேரிடலாம். டோன்ட் வொர்ரி! ஒரே விஷயம்தான் உங்களால் எந்த அளவுக்கு சப்பைக்கட்டினை சந்தைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கே தப்புகளை செய்யுங்கள்.

ஒருவழியாக உங்கள் சப்பைக்கட்டு உலகெங்கும் பரவி நீங்கள் செய்த தப்பைவிட உங்கள் சப்பைக்கட்டின் அரசியல் குறித்து ஆங்காங்கே யார் யாரோ விவாதம் செய்துகொண்டிருப்பார்கள். இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி அடுத்த தப்புக்கான சப்பைக்கட்டினை நீங்களே உருவாக்க முயற்சி செய்யலாம். அது உங்களுடைய எதிர்காலத்தினை பிரகாசமாக்க உதவக்கூடும். மக்களும் உங்கள் தப்பினை சில வாரங்களில் மறந்துவிட்டு மீண்டும் இயல்புவாழ்க்கைக்கு திரும்பிவிடுவார்கள்!

நீங்க செய்யப்போகிற தப்புக்கு நல்ல சுவையான சுவாரஸ்யமான சப்பைக்கட்டு கிடைக்கவில்லையே என மனம் தளர வேண்டாம். உலகின் எல்லா தப்புகளுக்கும் பத்தில் நான்குபேர் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு சப்பைக்கட்டு இருந்தே தீரும்.. முயற்சி திருவினையாக்கும்.