Pages

16 July 2012

பில்லாலங்கடி!


அஜித்குமார் மிகச்சிறந்த மனிதர். கடினமான உழைப்பாளி. நிறைய ஏழைகளுக்கு உதவிகள் செய்து வருபவர். பிரியாணியை தன் கையால் சமைத்து லெக்பீஸோடு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கும் தயாள குணங்கொண்டவர். சொந்தக்காலில் சுயமாக நின்று கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர். விபத்தில் அடிபட்டு உடல்நலங்குன்றி தேறிவந்து நடித்தவர். தோல்விகள் அவரை ஒன்றுமே செய்யாது. ப்பீனிக்ஸ் பறவைபோல தோல்விகளிலிருந்து குபுக் என குதித்து வந்தவர். உண்மை உலகில் நல்ல நல்லவராக வாழ்வதற்காகவே சினிமாவில் கெட்ட கெட்டவராக நடிப்பவர். இன்றைக்கு தமிழகத்தில் அப்துல்கலாமுக்கு பிறகு அஜித்குமார்தான் மிக மிக நல்ல நல்ல நல்லவர். அவரைவிட்டால் தமிழ்நாட்டிலேயே ஏன் இந்த இந்தியாவிலேயே வேறு நல்ல நல்லவர்கள் இருப்பதாக தெரியவில்லை. இப்படி தமிழகமே போற்றும் ஃபீல்குட் புராஃபைல் கொண்டவர் அஜித்குமார். அவரை மதிக்கலாம். பாராட்டலாம். விழா எடுக்கலாம். பீச்சாண்டை சிலைகூட வைக்கலாம்.

ஆனால் அதற்கொசரம் அவருடைய படம் கொடூர குப்பையாய் இருந்தாலும் அதை கொண்டாடும் அளவுக்கெல்லாம் எனக்கு பெரிய மனசு கிடையாது. அஜித் படங்களை முதல்நாளே பார்த்துவிட வேண்டும் என்று துடிக்கிற கோடானுகோடி உண்மையான உத்தம தமிழர்களுக்கு மத்தியில் உலகமயமாக்கலால் உண்டான பங்குசந்தை வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவால் அடியேன் இரண்டாம்நாள்தான் இத்திருக்காவியத்தை காணும் பாக்யம் வாய்த்தது.

தியேட்டரின் அருகினில் கூடிய கூட்டங்கள் கடலா கடல் அலையா..ஆஆஆஆஆஆஆ... என்று பிரமிக்கும் அளவுக்கு இளசுகள் எல்லாம் தலவெறி தலைக்கேறி கையில் டிக்கட்டோடு சுற்றிக்கொண்டிருந்தனர். சில தியேட்டர்களில் டிக்கட் விலை 750ஐ தாண்டியதாம். அதிகாலை நான்குமணிக்கே நகரின் முக்கிய சாலைகள் முடங்கும் அளவுக்கு தியேட்டர் வாசல்களில் கூட்டமாம். எத்தனை ஆயிரம் வேண்டுமானாலும் காசு கொடுத்து டிக்கட் வாங்க ரசிகர்கள் காத்திருந்தது தெரிகிறது. ப.சிதம்பரத்துக்கு இதெல்லாம் தெரிந்தால் விலைவாசியை இன்னும் கூட பத்துபர்சென்ட் ஏற்றிக்கொள்ளுவார் என்பதில் ஐயமில்லை! இந்த தியேட்டர் ப்ரீக்வல் புராணங்களை புறந்தள்ளிவிட்டு படத்தைப்பற்றி மட்டும் பார்ப்போமா?

முதல்காட்சியிலே அஜித்தை நான்குபேர் பிடித்துவைத்து துப்பாக்கி முனையில் அடித்து உதைத்து ரத்தம் வழியும் வாயோடு பஞ்ச் டயலாக் சொல்லவைக்கிறார்கள். அஜித்தும் வேறு வழியில்லாமல்.. ‘’டேய்ய்ய்ய்ய்ய்... என் வாழ்க்கைலெஏஏஏஏஏஏஏ.. ஒவ்வொரு நாளும்.ம்ம்ம்ம்ம்..’’ என்று இழுத்து இழுத்து டிரைலரில் பேசிய அதே பஞ்ச் டயலாக்கை பேசுகிறார். பேசிமுடித்ததும் பிக்காலி பயலுக டூமீல்னு சுடாம தல இன்னொரு பஞ்ச் பேசுவாரோ என காத்திருக்கிறார்கள்.. அந்த கேப்பில் அஜித்தின் மகத்தான இடுப்பு பிரதேசத்தில் யாரோ பத்திரமாக இருக்கட்டுமே என குத்தி வைத்திருந்த கூரான கத்தியை உருவி நான்குக்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு.. கீழே கிடக்கிற துப்பாக்கியை எடுத்து நம்மை நோக்கி சுடுகிறார்! அப்போதே நாம் உஷாராகி வெளியே ஓடிவந்திருக்க வேண்டும். இந்த விதிதான் விடாதே!

இலங்கையில் போர் நடக்கிறது. குடும்பம் கொல்லப்படுகிறது. அஜித் அநாதையாகி திருடனாகிறார்.(இதெல்லாம் பெயர் போடும்போதே போட்டோவில் காட்டிவிடுகிறார்கள்). அடுத்த காட்சியில் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் செல்லுகிற டெய்லி சர்வீஸ் (இரவு கிளம்பினால் காலையில் வந்துசேரும் போல) அகதிகள் எக்ஸ்பிரஸ் படகில் ஒரு பெட்டியோடு தொந்தியும் தொப்பையுமாக ஆந்திரா மெஸ்ஸில் இரண்டு ஃபுல்மீல் சாப்பிட்ட தெம்போடு இரண்டு மண்ணெண்ணெய் கேன் லூயி பிலிப்பி சட்டை சகிதம் நேராக ராமேஸ்வரம் கடற்கரையிலேயே வந்திருங்குகிறார்.

ஒவ்வொரு அகதியாக கூப்பிட்டு அழைத்து உட்காரவைத்து அரசு ஊழியர் ஒருவர் பெயர் ஊர் விபரமெல்லாம் கேட்கிறார். அதுபோல அஜித்தும் அழைக்கப்படுகிறார். விசாரிக்கப்படுகிறார். அவரும் தனக்கேயுரிய பாணியில் ‘’ப்பில்லா... ட்டேவிட் ப்பில்லா’’ என்கிறார். அந்த அலுவலரும் அஜித்தை மிரட்டி பஞ்ச் டயலாக் சொல்லவைக்கிறார் அஜித்தும் அந்த சிச்சுவேசனில் ஏதாவது சொல்லியாக வேண்டுமே என தீவிரவாதிக்கும் போராளிக்கும் இருக்கிற வித்தியாசத்தினை ஒருவரியில் சொல்லிவிடுகிறார்! உடனே அஜித் அகதிகள் முகாமில் நண்பர்களோடு டீ சாப்பிடுகிறார். போலீஸ்காரரை புரட்டி எடுக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அஜித்தை கட்டிவைத்து அடிக்கிறார்கள். கடத்தலில் ஈடுபடுத்துகிறார்கள். அஜித் கொலைசெய்யதொடங்குகிறார்!

ஆயிரம் பேர கொன்னாதான் அரைவைத்தியனாக முடியும் என்பது மாதிரி நூறு பேரையாவது கொன்றால்தான் முக்கால் கேங்ஸ்டர் ஆகமுடியும் என்று குவான்டீன் டாரன்டீனோவும் மார்ட்டீன் ஸ்கார்சீயும் மரியா புஜோவும் எழுதிவைத்திருக்கிறார்கள். டேவிட் பில்லா தனக்காக இல்லாவிட்டாலும் மேற்சொன்ன உத்தமமான மனிதர்களுக்காக நல்லவனோ கெட்டவனோ யாராக இருந்தாலும் அவர் வாழ்வதற்காக ரத்தம் கொட்ட கொட்ட கொன்று குவிக்கிறார்.

இலங்கை அகதியான அஜித்துக்கு சென்னையில் பிரவுன் சுகர் விற்கும் இடம் தொடங்கி ‘’டேன்ஸ் வித் மீ’’ மாதிரியான ஆங்கிலப்பாடல்கள் கூட தெரிந்திருக்கிறது. இங்கிலீஸில் பொழந்துகட்டுகிறார். அன்பார்சுனேட்லி அவர் இலங்கைத்தமிழர் என்பதால் புறத்தால என்கிற தமிழ்வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் போகிறது. அந்த க்ஷணத்தில்தான் அஜித் இலங்கையிலிருந்து வந்த அகதியா அல்லது இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்று நாடுதிரும்பியவரா என்கிற சந்தேகமே உருவாகியது! அதைவிடுங்க.. இப்படியாக ஒருவழியாக டாக்டர் அஜித் பல ஆபரேஷன்கள் செய்து சின்ன டானாக மாறுகிறார். கொதிக்கும் வெயிலில் குளுகுளு கோட்டும், கடுமையான இருட்டு நேரத்திலும் டார்க் கூலர்ஸும் போட்டுக்கொள்கிறார். (எனக்கென்னவோ அஜித் டான் ஆவதே இந்த கோட்டு போடவும் கூலிங் கிளாஸ் மாட்டவும்தானோ என்றுகூட தோன்றுகிறது).

பிட்வீன் தன்னுடைய அக்காவை சர்ச்சில் சந்திக்கிறார். சில காட்சிகளுக்கு பிறகு அக்கா செத்துப்போகிறார் (படத்தில் இயற்கையாக செத்துப்போகும் ஒரே ஆள் அவர்தான்). நெட்டையாக இருப்பவரும் சர்ச்சில் பாட்டு பாடும் அடக்க ஒடுக்கமான அக்கா பெண்ணை அழைத்துக்கொண்டு கோவா போய் தங்கவைக்கிறார். அஜித்தை ஆசையாக மாமா மாமா என்று அழைக்கும் அந்தபெண்ணுக்கு குடிப்பழக்கம் உண்டாகி அது வேறு யாரோடோ பார்ட்டியில் டேன்ஸ் ஆடும் அளவுக்கு எல்லைமீற கடுப்பாகும் அஜித் பத்துபேரின் மண்டையில் பாட்டில் உடைக்கிறார்.. சூப்பர் ஃபைட். (க்ளைமாக்ஸில் அந்தபெண்ணை கொன்றுவிடுகிறார்கள்) இதற்கு நடுவில் இன்டர்வெல் விட்டாக வேண்டும் என டைரக்டருக்கு திடீரென தோன்றிவிட்டது போல ஓடிப்போய் வில்லன்களை பிடித்து கூட்டிவந்து நிற்க வைக்கிறார் அஜித் பஞ்ச்டயலாக் பேசுகிறார்! நடக்கிறார் இன்டர்வெல்!

முதல் பாதியில் நாம் நிறைய எழுதுகிற அளவுக்கு மேட்டர் இருந்ததில்லையா? இரண்டாம் பாதியில் அதுமிகவும் குறைவு. ரஷ்யாவில் இருக்கிற ரஷ்ய டானோடு அஜித் மோதுகிறார். அஜித் அவனிடமும் பஞ்ச் டயலாக் பேசிவிட்டு முதலமைச்சரை கொன்று நீதிபதியை மிரட்டி சிறையிலிருந்து திரும்பி புராவியோவோ என்னவோ உலகமேப்பில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய நாட்டுக்கு இரட்டை ஆளாக (அஸிஸ்டென்ட்டோடு) போய் அட்ரஸ் தேடி கண்டுபிடித்து மாபெரும் டானின் ஆயுதகிடங்கில் அவர்களுக்கே தெரியாத இடங்களில் குண்டுவைத்து அழித்து, ஒரே ஒரு துப்பாக்கியின் உதவியோடு பல நூறுபேரை கொன்றுகுவித்து தர்மத்தை காக்கிறார். அதோடு இயக்குனர் வேறு வாடகைக்கு ஒரு ஹெலிகாப்டரையும் எடுத்துவிட்டதால், அஜித்தை டூப்பில்லாமல் தொங்கவிடுகிறார். ஹெலிகாப்டரில் தொங்கும்போது கூட ‘’டேய்ய்ய்ய்ய் நான்...’’ என்று தொடங்கும் ஏதாவது ஒரு பஞ்ச் டயலாக்கை பேசிவிடுவாரே என்கிற அச்சத்தோடே படம் பார்க்கும் துர்பாக்கிய நிலை வேறு பயமுறுத்தியது. அந்த இடத்தில் பஞ்ச் வைக்காத வசனகர்த்தாவின் திசைபார்த்து கும்பிடுகிறேன்.. நன்றி தலைவரே!

இப்படியாக பலபேரை கொன்று டான் ஆகிறார் அஜித் (இதுதான் படத்தின் ஒன்லைன்). நல்லவேளையாக இரண்டுமணிநேரத்திலேயே அவர் டான் ஆகிவிட்டது நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியமாக இருக்கலாம்.

அஜித் பில்லா முதல் பாகத்தில் இருந்ததை விடவும் இதில் நிறையவே வயதானவராக தெரிகிறார். மேக்கப் கொஞ்சம் ஏற்றியிருக்கலாம். இது ஏதோ பின்னவீனத்துவ ப்ரீக்வல் போல! டெக்னிக்கலாக அப்படி! மேக்கிங் இப்படி! கேமராவ பார்த்தியா.. இசைய நீயும் கேட்டியா.. என்றெல்லாம் எதை சொன்னாலும் படத்தில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. அஜித்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் போல! அஜித் ரசிகர்கள் அவர் நடந்தாலே கைதட்டுவார்கள். இதில் நிறைய நடக்கிறார், பஞ்ச் டயலாக் பேசுகிறார். கைத்தட்டி மகிழலாம்.

வெறும் தொழில்நுட்பமும் ஸ்டைலும் மட்டுமே முழுமையான திரைப்படமாகாது. உணர்வு என்கிற ஜந்துவே இல்லாத ஒரு திரைப்படத்தை பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். என்னதான் மொக்கை மசாலா படமாக இருந்தாலும் அதன் பலம் திரைக்கதையின் சுவாரஸ்யத்தில்தான் இருக்கிறது. புளித்துப்போன தீ,ரங்கா காலத்து காட்சிகள். கொஞ்சமும் புத்திசாலித்தனமில்லாத ட்விஸ்ட்டுகள். அதிலும் வில்லனை காட்டும்போதெல்லாம் அவர் இடுப்பில் துண்டோடு முதுகில் மிதிக்கும் மசாஜ் பெண் என்கிற ஐடியாவை எங்கிருந்து பிடித்தார்களோ கொடுமை. ஓவர் வன்முறை, மொக்கையான செக்ஸ் அடங்கிய ஒரு ஹைபட்ஜெட் ஸ்டைலிஷ் 'சுறா!தான் இந்த பில்லா 2.

எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்வேன்.. ஒரு விஷயம்தான் கடைசிவரை உறுத்தியது. எப்படித்தான் இரண்டு ஆண்களுக்கு பிகினியெல்லாம் மாட்டிவிட்டு ஹீரோயின்கள் என்று சொல்ல முடிந்ததோ இந்த மனசாட்சியே இல்லாத இயக்குனருக்கு!